வன ஊழியர்களை காக்கும் சுழல் நாயகன்!

0

ஜம்போ தி கிரேட்!

அனில் கும்ப்ளே- பேட்ஸ்மேன்களை தன் விரல் வித்தையால் நடுங்கச் செய்தவர். இந்தியாவின் பெஸ்ட் பவுலர்களுள் ஒருவர். ஆனால் கிரிக்கெட்டர் என்பதைத் தாண்டி இவருக்கு வேறு சில முகங்களும் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று - காடுகள் மேல் அவர் கொண்டுள்ள காதலும் அவற்றை காக்க அவர் செய்யும் களப்பணிகளும். வெறுமனே காடுகளை சுற்றிப் பார்ப்பதோடு இவர் நின்றுவிடவில்லை. காடுகளையும் அதன் ஊழியர்களையும் காப்பாற்றுவதற்காகவே தன் செல்லப்பெயரைக் கொண்டு ‘ஜம்போ நிதி’ திரட்டிவருகிறார் அனில். இந்த நிதி, காடுகளை பேணிக் காக்கும் வனத்துறை ஊழியர்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் போன்றவர்களின் வாழ்க்கைநிலை உயர உதவுகிறது. ஆனால் ஒரு தொண்டு நிறுவனத்தை தனியொருவனாய் நடத்துவது அவ்வளவு சுலபமில்லை என்பதை அவரும் ஒப்புக்கொள்கிறார். நிதி பற்றாக்குறை ஏற்படும் தருணங்களில் தன் சொந்தப் பணத்தை கொண்டு திட்டங்களை செயல்படுத்துகிறார்.

காடுகள் மேல் இவர் கொண்டிருக்கும் காதலை அறிந்த கர்நாடக அரசு, 2009ல் இவரை மாநில வனஉயிர் பாதுகாப்பு குழுவிற்கு துணைத்தலைவராக நியமித்தது. வனஉயிர் பாதுகாப்புச் சட்டம் 1972-ன் படி கட்டமைக்கப்பட்ட இந்தக் குழு வனம் மற்றும் அது சார்ந்த உயிரினங்களின் பாதுகாப்பிற்காக அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் குழுவாகும். தன் தலைமையின் கீழ் அந்தக் குழு கர்நாடக மாநில காடுகளின் பரப்பளவை அதிகரித்தது எனப் பெருமையோடு கூறுகிறார் அனில். பிற மாநிலங்கள் எல்லாம் காடுகளை அழித்து கான்கிரீட் மேடைகள் ஆக்கிக்கொண்டிருந்த சமயத்தில் கர்நாடக அரசும், இந்தக் குழுவும் அவற்றின் பரப்பளவை அதிகரித்து சாதனை புரிந்தனர். பல்வேறு தடைகளைத் தாண்டி உறுதியோடும் ஊக்கத்தோடும் செயல்பட்டு காடுகளின் பரப்பளவை அதிகரித்தது பற்றி பெருமையோடு நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இந்த ஸ்பின் ஹீரோ.

ஜம்போ ஃபவுண்டேஷன் உருவான கதை!

எனக்கு பேரையும் புகழையும் அளித்த இந்த சமூகத்திற்கு என்னாலானதை திருப்பித் தர விரும்பினேன். வனஉயிர் பாதுகாப்பின் வழியே அதைச் செய்யலாம் எனத் தோன்றியது. ஆனால் அதை எடுத்தேன் கவிழ்த்தேன் என செய்ய முடியாதே. அதனால் நானும் என் மனைவி சேத்தனா கும்ப்ளேயும் இணைந்து 2009ல் கும்ப்ளே ஃபவுண்டேஷனையும் ஜம்போ நிதியையும் தொடங்கினோம்.

வனஉயிர் பாதுகாப்பும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதும்தான் இந்த ஃபவுண்டேஷனின் முக்கிய நோக்கங்கள்.

புகழ்பெற்ற தொழிலபதிரான கிரன் மஜும்தார் ஷாவின் உதவியோடு வனத்தையும் அதன் உயிர்களையும் அர்ப்பணிப்பு உணர்வோடு பேணிக்காக்கும் வனத்துறை அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கினோம்.

அடுத்த முயற்சியாக நான்கு சிறந்த வனத்துறை அலுவலர்களை தேர்ந்தெடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பினோம். அவர்கள் அங்குள்ள காடுகள், சரணாலயங்கள் ஆகியவற்றிலிருக்கும் சவால்கள், அவற்றை எதிர்கொள்ளும் முறைகள் ஆகியவற்றை கற்றுத் திரும்பிவந்தார்கள். காயம்பட்ட விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள், மயக்க மருந்து உபயோகம் பற்றிய தெளிவான அறிவு, மனித-விலங்கு மோதலை தடுப்பதற்கான வழிகள் ஆகியவை அதில் அடக்கம்.

எங்கள் ஃபவுண்டேஷன் வனஉயிர் தொடர்பான ஆராய்ச்சிகளையும் திட்டங்களையும் வரவேற்கிறது. எங்களின் சமீபத்திய ஆய்வு அந்தமான் தீவுகளில் மனிதர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தாவரங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியது.

இப்போது அடுத்தகட்டமாக, பிற மாநில வனஉயிர்கள் மீதும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளோம். கலை, கலாச்சாரம், ஆன்மீகம் பற்றி ஆராய்ந்தறியவும் எங்கள் ஃபவுண்டேஷன் உதவுகிறது.

நிதி திரட்டுவதில் இருக்கும் சவால்கள்!

நிதி திரட்டுவது அவ்வளவு சுலபமில்லை. சில நேரங்களில் பணம் போதாமல் என் சொந்த பணத்தையும் செலவழித்திருக்கிறேன். ஆனால் பிரபலமாக இருப்பதால் நான் சொல்வதும், செய்வதும் கவனிக்கப்படுகின்றன. எனவே எளிதாக விழிப்புணர்வை ஏற்படுத்த முடிகிறது. கிரிக்கெட் பல தரப்பினரையும் ஒன்றாக்கும் வலிமை கொண்டது. அதன்வழியே என்னால் சில நல்ல விஷயங்களை செய்ய முடிகிறது என்பதை நினைக்கும்போது பெருமையாக உணர்கிறேன்.

கர்நாடக வனஉயிர் பாதுகாப்புக் குழுவின் துணைத்தலைவராக இருந்தபோது, கிரிக்கெட்டின் மூலம் நான் சம்பாதித்த புகழ் எனக்கு மிகவும் உதவியாய் இருந்தது. தொண்டு நிறுவனங்கள் தொடங்கும் எண்ணமுடையவர்கள் கண்டிப்பாக அதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும். இந்தியா போன்ற நாட்டில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகப்பெரிய தாக்கத்தை உண்டுபண்ணும் வலிமையுடையது. இதனால் அத்தகைய அடியை முன்னெடுக்கும் ஒவ்வொருவரும் பாராட்டப்பட வேண்டும், ஊக்குவிக்கப்பட வேண்டும்.

வனஉயிர் பாதுகாப்பிற்காக அனில் வகுத்த கொள்கைகள்!

எனக்கு வாய்ப்பளித்த கர்நாடக அரசிற்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன். அது ஒரு பொற்காலம். அந்தக் காலத்தில் நான் முன்னெடுத்த சில திட்டங்களுக்காக பெருமைப்படுகிறேன்.

3.8 சதவீதமாக இருந்த காடுகளின் பரப்பளவை 5.2 சதவீதமாக உயர்த்தினோம். இதன் மூலம் காடுகள் பரப்பளவை உயர்த்திய ஒரே மாநிலம் என்ற பெருமையை பெற்றது கர்நாடகா. மேலும் மேலும் பரப்பளவை அதிகரித்ததன் மூலம் சரணாலயங்கள், வன உயிர் பூங்காக்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆகியவற்றுக்கு அதிக இடம் தர முடிந்தது.

வனத்துறையிலிருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதென்பது அதுநாள் வரை சவாலான விஷயமாய் இருந்தது. என் பதவிக்காலத்தில் அத்தனை பணியிடங்களையும் நிரப்பினோம்.

இப்படி அந்த ஒட்டுமொத்த அனுபவமும் மகிழ்ச்சியளிப்பதாய் இருந்தது. நான் எப்போதும் ஒரு வேலையால் ஏற்படும் சங்கடங்களை கருத்தில் கொள்ளமாட்டேன். அந்த வேலையால் நடக்கும் நன்மைகள் மட்டுமே என் கண்ணுக்குத் தெரியும். அதனால் அரசாங்க ஊழியர்களோடு இணைந்து பணியாற்றிய அந்தக் காலம் எனக்கு மகிழ்ச்சியளிப்பதாய் இருந்தது.

வனஉயிர் சுற்றுலா- வரமா? சாபமா?

வனத்துறையின் முக்கிய வேலை வனத்தையும் அதில் வாழும் உயிரினங்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதுதான். ஆனால், இப்போது வனஉயிர் சுற்றுலாவுக்காக கணிசமான நேரத்தை வனத்துறை ஊழியர்கள் செலவழிக்க வேண்டியதாக இருக்கிறது. எனவே, சுற்றுலாவுக்கென தனியாக, திறமையான ஒரு குழு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது என் கருத்து. அதேசமயம், சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த அனுபவம் மறக்க முடியாததாய் இருக்கவேண்டும். சுற்றுலாப் பயணிகளால் வன பாதுகாப்பிற்கு ஆபத்து இருக்கிறது என்பது உண்மைதான். எனவே அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை. இவற்றை எல்லாம் செய்ய சுற்றுலாவிற்கென தனியாக குழு அமைத்தால்தான் முடியும்.

உங்களுக்குப் பிடித்த தேசியப் பூங்கா?

ஒன்றை மட்டும் சொல்வதென்பது கஷ்டம்தான். பந்திப்பூர், கபினி ஆகிய இரண்டு பூங்காக்களுக்கும் என் வீட்டிற்கு அருகில் இருப்பதால் அவை இரண்டையும் அதிக முறை பார்த்திருக்கிறேன். கன்ஹா தேசியப் பூங்காவும் எனக்குப் பிடிக்கும். சுருக்கமாக சொல்வதென்றால், காடுகள் எங்கிருந்தாலும் எனக்குப் பிடிக்கும்.

குடும்பம், வனம், கிரிக்கெட்!

குடும்பத்தோடு நாங்கள் செல்லும் இடங்களில் பெரும்பான்மையானவை வனஉயிர் பூங்காக்கள்தான். விடுமுறை என்றாலே அப்பா நம்மை பூங்காவிற்குத்தான் அழைத்துச் செல்வார் என என் குழந்தைகள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனக்கு சமமாக அவர்களும் வனங்களை காதலிப்பதால் எங்களின் ஓய்வுநேரம் முழுவதையும் காடுகளில் செலவிடவே விரும்புகிறோம்.

ஆக்கம்- பஹர் தத் | தமிழில்- சமரன் சேரமான்