#MeToo இயக்கம் வெளிக் கொண்டுவரும் தமிழ்நாட்டின் பிற்போக்கு முகம்! 

4

ஹாலிவுட்டில் ஹார்வி வெயின்ஸ்டின் எனும் திரைப்படத் தயாரிப்பாளர் மீது வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டில் இருந்து தொடங்கியது #me_too. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் பெண்கள், தங்கள் அனுபவத்தை இந்த இயக்கத்தின் வழியே பகிரத் தொடங்கினார்கள். அது நடந்த சமயத்தில், இந்தியாவில் பெரும் தாக்கத்தை #MeToo இயக்கம் உண்டாக்கியிருக்கவில்லை. ஆனால், சமீபத்தில் நானா படேகர் மற்றும் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரிக்கு எதிரான தனுஸ்ரீ தத்தாவின் குற்றச்சாட்டு, அலோக் நாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளின் வழியே, இந்தியாவில் #me_too இயக்கம் ஆரம்பம் ஆனது.

தனுஸ்ரீ தத்தாவிற்கு ஆதரவாக ரிச்சா சட்டா, பரினீத்தி சோப்ரா போன்றவர்கள் பேசியிருந்த நிலையில் அமிதாப் பச்சன் அமிர் கான் போன்ற மூத்த நடிகர்கள் இதுகுறித்து பேச மறுத்திருக்கின்றனர். தொடர்ந்து, யூட்யூபின் ஏ.ஐ.பி சேனல் ஒன்றின் நிறுவனர் உத்சவ் சக்ரபர்த்தி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வெளிச்சத்திற்கு வந்தன. ஊடகத்துறையில் கௌதம் அதிகாரி, அனுராக் வர்மா, மயங்க் ஜெயின் ஆகியோரின் பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகளும், எழுத்தாளர்கள் சேத்தன் பகத், கிரன் நாகர்கர் மற்றும் புகைப்படக் கலைஞர் பாப்லோ பார்த்தோலேம்யூ ஆகியோரின் பெயரும் வெளியானது.

பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவிற்கு குறித்து தெரிவித்த குற்றச்சாட்டில் தொடங்கிய தமிழ்நாட்டு #MeToo அடுத்து கர்நாடக இசைத் துறைக்கு திரும்பியிருக்கிறது. இந்நிலையில், ஃபேஸ்புக் முழுக்க சின்மயியை தனிப்பட்ட முறையில் அவமதித்தும், தங்களுடைய அரசியல் சார்புகளை நியாயப்படுத்திக் கொள்ள, பாதிக்கப்பட்டவர்களை விக்டிம்-ப்ளேமிங் செய்தும், ##MeToo-வை பகடி செய்தும் போடப்படும் பதிவுகள் முற்போக்கு மாநிலமாக கட்டமைக்கப்படும் தமிழகத்தின் உண்மையான பிற்போக்கு முகத்தை காட்டுவதாக இருக்கிறது.

சம்பவம் நடந்து ஏன் இத்தனை வருடங்கள் இது பேசப்படவில்லை? இப்போது எதற்காக பேசுகிறாய்? சம்பவம் நடந்த போது நீ ஏன் கிளர்ந்து எழவில்லை? எனும் தொனியில் பல பதிவுகளை ஃபேஸ்புக்கில் பார்க்க முடிகிறது. 

##MeToo-விற்கு பின் இருக்கும் நோக்கம், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களின் உளவியல் குறித்த விழிப்புணர்வு தமிழகத்திற்கும் அவசியமாக இருப்பதும், அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கிறது.

Perks of being a wallflower எனும் ஒரு ஹாலிவுட் படத்தின் க்ளைமாக்ஸில் ஹீரோவும் ஹீரோயினும் நெருக்கமாக இருக்கும் காட்சி ஒன்று வரும். ஹீரோயினின் ஒரு தொடுகையினால், தனக்கு சின்ன வயதில் நடந்த பாலியல் வன்கொடுமை ஹீரோவுக்கு நினைவு வரும். இந்த சம்பவம் நடந்த நினைவே இல்லாமல் இருந்தால் கூட, ஹீரோ பெரும் மனச்சோர்வோடு தான் வாழ்க்கையை எதிர்கொள்வார்.

‘எ ஸ்டார் இஸ் பார்ன்’ படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார் பிரபல பாடகி லேடி காகா. அவரிடம் ##MeToo குறித்து கேட்கப்படும் போது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருவரின் மூளை எப்படி செயல்படும் என்று அவர் இப்படி விளக்குகிறார்.

“ஒருவர் தாக்கப்படும் போது, அல்லது அவர் பெரும் அதிர்ச்சியை அனுபவிக்கும் போது, அவர்கள் மாறுவார்கள் என்பது அறிவியல் ரீதியான விளக்கம் இருக்கிறது. அவர்களுடைய மூளையின் இயல்பு மாறுகிறது. அது, அந்த அதிர்ச்சி சம்பவத்தை ஒரு பெட்டிக்குள் போட்டு அடைத்துவிடுகிறது, அந்த நபர் வலியை கடந்து வர வேண்டும் என்பதற்காக அந்த சம்பவத்தை மூளை மறக்கடிக்கிறது.”

மேற்சொன்ன திரைப்படமும் இதைத் தான் விளக்க முயற்சிக்கிறது. ஆனால், இந்தியாவின் பெண்கள் தங்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை மறக்க, இந்த அறிவியல் செயல்பாடு மட்டுமே காரணம் கிடையாது. ஒரு சராசரி இந்தியப் பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக உணர்ந்து அதை வெளியே சொல்லும் போது, முதலில் அதைப் பற்றி மறந்துவிட்டு வாழ்க்கையை பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறாள். 

பாலியல் தொல்லை செய்தது அவளுடைய கணவனாக இருக்கும் பட்சத்திலோ, வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரியாக இருக்கும் பட்சத்திலோ, ‘கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுமாறு’ அறிவுறுத்தப்படுகிறாள். நிலைமை வேறு விதமாக இருந்தால், ‘ உன்னோட பிஹேவியர் தான் சரியில்லை’ என் விக்டிம்-ப்ளேமிங்குக்கு ஆளாகிறாள். அல்லது , ‘ எதுக்கு இப்போ அநாவசியமாக ஒரு சீன் க்ரியேட் பண்ணனும்’ எனும் கேள்வியினால் முடக்கப்படுகிறாள். இது நிச்சயமாக எல்லா பெண்களுக்குமே நடந்திருக்கும்.

இப்படி , வலிந்து மறக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களையும், மூளை மறக்கச் செய்யும் பாலியல் துன்புறுத்தல்களையும் பெண்கள் நினைவு கொண்டு பேசத் தொடங்குவது என்பது அதிகாரத்தை கைப்பற்றவோ, ஆண் இனத்தை பழிவாங்கவோ, பொழுதுபோக்கிற்காகவோ கிடையாது. பாதுகாப்பு, மன-நலன் எனும் அடிப்படை தேவைகளுக்காக தான்.

இதை தமிழகத்தின் பெரும்பாலான ஆண்களால் ஏற்றுக் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முடிவதில்லை. காரணம், குற்றவுணர்வு மற்றும் குற்றவுணர்வினால் உண்டாகும் பதட்டம். இப்படி குற்றவுணர்வில் உழலும் ஆண்கள் ##MeToo-வை பகடி செய்கிறார்கள்; ‘ஏன் சம்பவம் நடந்து 20 வருஷம் கழிச்சு சொல்றாங்க’ என்றும் ‘வைரமுத்து உண்மையிலேயே சின்மயியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியிருந்தால் பிறகு எதற்கு சின்மயியின் திருமணத்திற்கு வைரமுத்து வரவேற்கப்பட்டார்’ என்றும் கேள்விகள் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நியூஸ் மினிட் தளத்தின் ஆசிரியரான தன்யா ராஜேந்திரன் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவொன்றில் இதற்கான பதிலை அளித்திருக்கிறார்.

“சின்மயி வைரமுத்துவை திருமணத்திற்கு அழைத்தது ஏன் இவ்வளவு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது? பெண்கள், எல்லா இடங்களிகும், யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தங்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவர்கள்; உயிர் பிழைத்திருக்கவும், வேலை செய்யவும், வாழவும் செய்கிறார்கள். பாலியல் துன்புறுத்தலை மறந்துவிட்டு, வேதனையை விழுங்கிவிட்டு, மனதை பூட்டிவிடுகிறார்கள். அவர்களால் அதை சிறப்பாகவும் செய்ய முடியும் பெரும்பாலான ஆண்களால் இதை புரிந்து கொள்ளவே முடியாது. பக்கத்தில் இருக்கும் பெண்ணை கேட்டுப்பாருங்கள். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது மேலதிகாரியாகவோ, அதிகாரம் கொண்டவராகவோ, உறவினராகவோ, சகோதரராகவோ, அப்பாவாகவோ இருந்தாலும், ஒன்றுமே நடக்காதது போல பெண்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். வேறு வழியில்லாமல், நீதி கேட்காமல், அவர்கள் வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்தால் போதும் என நினைப்பார்கள்...” என்று தன்யா எழுதியிருக்கிறார்.

#MeToo ஹாலிவுட்டில் பரவிய அதே சமயத்தில் #Not_all_men எனும் ஹேஷ்டேக்கும் பரவியது. அதாவது, ஆண்கள் அத்தனை பேரும் தவறு செய்தவர்கள் கிடையாது என்பதை பிரச்சாரமாக்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டது. ஏறத்தாழ இதைப் போன்ற மனநிலை தான் தமிழகத்திலும் இருக்கிறது. ஆனால், இங்கே உரக்கச் சொல்லப்பட வேண்டிய விஷயம்,

‘ஒரு ஆணாக நீங்கள் யாரையும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியிருக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு சாதரணமாக ஆண். அவ்வளவே. அதற்காக உங்களுக்கு பரிசுகளும், பாராட்டுக்களும் வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். பெண்கள் பேச முயற்சிக்கும் போது, இடையே வந்து மீண்டும் உங்கள் புகழ் பாடாதீர்கள். காலம் காலமாக இதை மட்டுமே தான் செய்கிறீர்கள்’ என்பது தான்.

##MeToo-வை பயன்படுத்தி தங்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவர்களை அம்பலப்படுத்தும் பெண்களுக்கு,

ஆண்களிடம் மட்டுமே அதிகாரம் இருக்கும் புவி இது. இங்கு எல்லாக் கதைகளும் ஆண்கள் வழியே தான் சொல்லப்பட்டு வருகின்றன. திடீரென சத்தமாக ஒலிக்கும் பெண்களின் கூட்டு குரல், ஆண்களுக்கு அச்சுறுத்தலைத் தான் உண்டாக்கும். அதனால், அவர்கள் நம்மை சிறுமைப்படுத்த முயற்சிப்பார்கள். #MeToo-வை கிண்டல் செய்தும், உங்கள் அனுபவத்தை நிராகரித்தும், உங்கள் நடத்தையை குறி வைத்தும் உங்களை நிலை குலைய செய்ய முயற்சிப்பார்கள். இவ்வளவு பெரிய உலகில் தனியே போராடுவது போன்ற பிரம்மையும் உருவாகலாம். ஆனால், தொடர்ந்து சத்தம் போட வேண்டியது நம் கடமை. நமக்கான உரிமைகளை நாமே எடுத்துக் கொள்வோம்.