குழந்தைகளின் ரத்த புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை!

கடந்த 15 ஆண்டுகளில் 700க்கும் மேற்பட்ட குழந்தைகளை ரத்த புற்றுநோயின் கோர பசிக்கு இரையாகாமல் காப்பாற்றியுள்ளார், கோவையைச் சேர்ந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர் குகன். 

0

கேமராவைப் பார்த்தவுடன் அக்கா, என்னை போட்டோ எடுங்க. அக்கா இந்துசாவும் நானும் பிரண்ட்ஸ். எங்களையும் போட்டோ எடுங்க என துருதுருவென சுற்றித்திரிந்து கொண்டிருந்த 16 மழலைப்பூக்கள் நிரம்பிய அறை. உண்பதற்கும், உறங்குவதற்கும் குறைவில்லாத இடம். காகிதக் கப்பல் செய்வதற்கும், ஓடிப்பிடித்து விளையாடுவதற்குமான மைதானமும் அது தான். 

இப்படிப்பட்ட ஒரு இடத்தில் நீங்கள் இருந்தால் அவர்களை ரசிப்பீர்கள் அல்லது அவர்களுடன் சேர்ந்து நீங்களும் விளையாடுவீர்கள். ஆனால் நமக்கோ மனதில் ஒரு மென்சோகம் கசிந்து கொண்டிருந்தது. காரணம், அக்குழந்தைகள் அனைவரும் ரத்தப்புற்று நோய்க்கு இரையாக்கப்பட்டவர்கள்.

குழந்தைகளுக்கு, யூனிபார்ம் மாட்டி பள்ளிக்கு அனுப்பி விட்டு, அவர்களுக்கான கனவுகளையும் சேர்த்துக்காண வேண்டிய பெற்றோர்கள், மருந்து மாத்திரைகளை ஊட்டிக் கொண்டிருந்தார்கள், அதுவும் மருத்துவமனையிலேயே தங்கி. சாதாரண தலைவலி காய்ச்சல் என்றாலே மளிகைக்கடை பில் மாதிரி நீளும் மருத்துவ செலவு வைக்கும் ஹைடெக் ’ரமணா ஸ்டைல்’ மருத்துவமனைகள் நிறைந்த நம் தேசத்தில், புற்றுநோய் சிகிச்சை என்றால் செலவுக்கு கேட்கவா வேண்டும்?

ஆனால், கோவையில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில், குழந்தைகளுக்கு தேவையான மருந்துகள், உணவு, தங்குமிடம் என பெற்றோர்களுக்கும் சேர்த்து அனைத்தும் இலவசமாகவே கிடைக்கின்றது. கூடவே அன்பும், அரவணைப்பும்.

கோடைக்காலம், குளிர்க்காலம் என எல்லா காலங்களும் இவர்களுக்கு மருந்து காலம் என்பதால் முடி அதிகமாக கொட்டிவிடுகிறது. அதனால் சிகிச்சையின் போதே மொட்டை அடித்து விடுகிறார்கள். ஒரு வயது குழந்தைக்கு அவள் அம்மா செர்லாக்கை ஊட்டி விடும்போதே, ஒரு கையில் மருந்து, மற்றொரு கையில் ஊசி என உடம்பு முழுவதும் குழாய்கள் சொருக்கபட்டு இருந்தாலும், குழந்தையை அள்ளி அணைத்து, திருஷ்டி சுற்றிப் போடுகிறார் அக்குழந்தையின் தாய்.

“ஒவ்வொரு படுக்கையிலும் இருக்கும் மொட்டுக்கள், நிச்சயம் பூக்கும், கவலை வேண்டாம் என நம்பிக்கை தெறிக்கப் பேசுகிறார், இந்த மையத்தின் அஸ்திவாரமும், புற்றுநோயியல் துறையின் சிறப்பு நிபுணருமான  டாக்டர்.குகன்.“

"முன்பெல்லாம் கேன்சர் சிகிச்சைனாலே, சென்னை அடையாறுக்கு போங்கன்னு சொல்வோம். அப்படித்தான் 12 வருடங்களுக்கு முன்னாடி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் குழந்தைக்கு, அடிப்படை சிகிச்சைகளை கொடுத்துட்டு, மேல் சிகிச்சைக்காக அடையாறைக் கைக்காட்டிய போது, என்னை மாதிரி ஏழைகளுக்கு இங்கே வருவதே பெரிய விஷயம், அடிக்கொரு முறை சென்னை போக என்கே வசதி. எல்லா சிகிச்சையையும் இங்கேயே பண்ணக் கூடாதான்னு பரிதாபமாக, அவர் கேட்ட வார்த்தைகள் தான், இந்த இலவச புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கான பிள்ளையார் சுழி.

ஆரம்பத்துல மருந்துக்கு மட்டும் பணம் வாங்கிட்டு இருந்தோம். அப்புறம், எதிர்பாக்காத அளவுக்கு நல்ல மனிதர்களின் உதவிக்கரம் நீண்டுகிட்டே போச்சு. என்கிட்ட சிகிச்சை பெற்ற முத்துசாமி நாயுடுகிறவரு, 2003 ஆம் ஆண்டு 50 லட்சத்தை நன்கொடையா கொடுத்தார். அவரோட நினைவாக தான் இந்த வார்டுக்கு அவருடைய பெயரையே வைச்சோம்,” என்கிறார் குகன். 

அதே போல் இங்குள்ள குழந்தைகளுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் அருமையான உணவை தர பல முன்னணி ஹோட்டல் நிர்வாகமும் முன் வந்துச்சு. இப்படி பலர் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம உதவி செய்றாங்க என்றபோது, அவரையறியாமல் அவரது கண்களில் கண்ணீர் வெளியே எட்டிப் பார்த்தது.

Acute Lymphocytic Leukemias (ALL), Chronic Lymphocytic Leukemias (CLL), Acute Myelogenous Leukemias (AML), Chronic Myelogenous Leukemias (CML) என நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ள ரத்த புற்றுநோயில் ALL, AML வகைப் புற்றுநோய் தான் குழந்தைகளை அதிகமாக தாக்குகின்றது. இந்நாள் வரை இந்நோய்க்கான மருந்து கண்டுப்பிடிக்கப்பபடாததும் மருத்துவ விந்தையாகவே உள்ளது. 3 - 5 ஆண்டுகள் தொடர் சிகிக்சை எடுத்தால் இந்நோய் குணமாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில நேரங்களில் குணமாகி விட்டது என்று மருந்துகளை நிறுத்தி விட்டோமேயானால் சில மாதங்களோ, சில ஆண்டுகளோ கழித்து மீண்டும் இந்நோய் தாக்கும் அபாயமும் உள்ளது.

எங்களுக்கு ரொம்ப வசதியெல்லாம் இல்லை. எங்க ஒரே பையன் சஞ்சய் தான் எங்களுக்கு எல்லாமே. அவனும் முடியாம வந்து படுத்துருக்கான். இந்த மாதிரியான சிகிச்சையை வெளியே பெற 2 .5 -3 லட்ச ரூபாய் ஆகுமாம். அந்த அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை. ஆனால் இந்த மருத்துவமனையை பத்தி கேள்விப்பட்டு ஈரோட்டில் இருந்து வந்து ஆறு மாசமகிறது. எங்கள மாதிரி இருக்கவங்களுக்கெல்லாம் இந்த மருத்துவமனை தான் கோயில் என்கிறார், சிறுவனின் தந்தை ஜீவானந்தம்.

டாக்டர். குகன்
டாக்டர். குகன்

“கோவை, ஊட்டி, வங்காளதேசம், திருப்பூர், தஞ்சாவூர் என பல ஊர்களில் இருந்து எங்களை நம்பி நிறைய பேர் சிகிச்சைக்கு வராங்க. கடந்த 15 ஆண்டுகளில் எங்க மையத்தின் மூலமாக 700 குழந்தைகளை குணப்படுத்தியுள்ளோம். 

“இன்னும் நிறைய குழந்தைகள் சிகிச்சைக்காக காத்துகிட்டு இருக்காங்க. அப்படி காத்திட்டு இருக்கிற, ஒவ்வொரு நாளும் அவங்க ஆயுள் நாட்கள் குறைஞ்சிட்டே வருது. இப்படி உள்ள சூழ்நிலையை உடைச்சி, ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களின் உலகத்தை மீட்டு தரவேண்டும் எனபது தான் எங்களின் நோக்கம் என்கிறார், டாக்டர்.குகன்.”

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாமல் இருக்கும் மாணவன், கையில் பொம்மைகளுடன் ஓடித்திரிய வேண்டிய வயதில், பேண்ட்டேஜ்களுடன் குளுக்கோஸ் ஊசிகளுடன் இருக்கும் சுட்டிகள் என அந்த அறை கல்நெஞ்சையும் கரைத்து விடும். அக்குழந்தைகளின் பெற்றோர்களிடம் பேசிய போது, ஆரம்ப காலகட்டங்களில் இருந்த பயம் நீங்கி, இப்போது நம்பிக்கை நாற்று முளைவிட்டிருப்பது தெரிந்தது.

புற்று நோய் ஏழை, பணக்காரர்கள் என்று பார்த்து வருவதில்லை. அப்படியே வந்தாலும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. உடனடியாக சிகிச்சையை மேற்கொண்டால் குணப்படுத்த முடியும். கோவை ஸ்ரீ ராம கிருஷ்ணா மருத்துவமனையில் குழந்தைகளுக்கு, ரத்த புற்று நோய்க்கான இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவையைச் சுற்றி உள்ள ஊர்களில் இருப்பவர்கள் இந்த மருத்துவமனையை தொடர்பு கொண்டால், முறையான சிகிச்சையை இலவசமாக பெறலாம் .

பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள் அவர்களுடைய இடத்தில் இருந்து இக்குழந்தைகளுக்கு உதவட்டும். இதை வாசிக்கின்ற நாம் அக்குழந்தைகளுக்கு செய்ய வேண்டியது ஒன்றிருக்கிறது. அது, அவர்கள் குணமடைய மனமுருகிய பிரார்த்தனை மட்டுமே...

Related Stories

Stories by Jessica