62 வயதான நினா நாயக், இந்த உலகை குழந்தைகளுக்கு ஏற்ற இடமாக மாற்றியது எப்படி?  

0

நினா நாயக், ஒரு கலகலப்பான 62 வயதான பெண்மணி. அவருக்கு வயதைத் தாண்டிய அனுபவம். சமூக ஆர்வலர் மற்றும் குழந்தைகள் உரிமைக்கான போராளி. குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் தலைவர். நாட்டின் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்புடைய சட்டங்கள் மற்றும் கொள்கைகள் மாற்றுவதற்காக அழுத்தமான குரல் எழுப்பியவர்.

குழந்தைகள் உரிமைகள் மற்றும் முன்னேற்றத்திற்காக கடந்த 30 ஆண்டுகளாக உழைத்துவரும் அவர், அந்த துறையில் ஒரு அறிவுப்பெட்டகம். மேலும், அந்த துறைக்குள் நிறைய மாற்றங்களுக்கான பங்களிப்பையும் நினா செய்திருக்கிறார்.

“என்னைப் போல ஒரே கருத்துடையவர்களுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். குழந்தைகள் உரிமைகளுக்கான அங்கீகாரத்திற்காக, கொள்கை வகுப்பதற்காக, மத்திய அரசு அமல்படுத்துவதற்காக நாங்கள் உழைத்திருக்கிறோம்” என்று கூறுகிறார் நினா.

2000ம் ஆண்டில் இளம்சிறார் நீதிச் சட்டம் மற்றும் 2012ம் ஆண்டில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் (பிஓசிஎஸ்ஓ) இயற்றப்பட முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனாலும், இதுபோன்ற சட்டங்களை அமல்படுத்துவதில் நீண்டதூரம் செல்லவேண்டியிருப்பதாகவும், சமூகத்தை குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக மாற்றவேண்டும் எனவும் நினா நம்புகிறார்.

கடந்த ஆண்டுகளில் பல பொறுப்புகளை அவர் வகித்திருக்கிறார். குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய கமிஷன் உறுப்பினர், குழந்தைகள் நலத்துக்கான இந்திய கவுன்சில் துணைத் தலைவர், மூன்று முறை குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான கர்நாடக மாநில கமிஷன் தலைவர் மற்றும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான கர்நாடாக மாநில கமிஷன் தலைவராக இருந்தபோது, தத்தெடுத்தலில் வெளிப்படையான நடைமுறைகளைக் கொண்டுவந்தார். உதவிகள் தேவைப்படும் குழந்தைகளையும் கண்டறிந்தார்.

ஒரு நெருக்கமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பால்யகால நினைவுகள் நினாவுக்கு இருக்கின்றன. அவரது தந்தையார் இந்திய குடிமைப் பணியில் இருந்ததால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் படிக்கவேண்டியிருந்தது. அவருடைய தந்தையார் தமிழ்நாட்டில் டிஜிபியாக இருந்து ஓய்வுபெற்றார். செல்லமாக வளர்ந்த சூழல் நினாவுக்கு. ஆனாலும் அவர் சிறுமியாக இருந்த காலத்திலேயே ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்திருந்தார்.

பள்ளியில் படிக்கும்போது ஒருமுறை வகுப்பில் ஆங்கிலோ இந்தியன் குழந்தையை தவறுதலாகப் பேசிய ஆசிரியை மீது பெரும் கோபம் கொண்ட நினா, அதுபோல பேசியது தவறு என்று அவருக்கு உணர்த்தினார். உடனே நினாவின் வீட்டுக்கு வந்த அந்த ஆசிரியை, வகுப்பில் அவர் கோபப்படுவதாகக் புகார் கூறினார். வீட்டிலேயே இரக்கக் குணத்தை அவர் கற்றுக்கொண்டார். சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் பிரச்சினைகளை தந்தையாரிடம் கூறுவதை அவர் பார்த்து வளர்ந்திருக்கிறார். தன்னால் முடிந்த அளவுக்கு பொருளாதார உதவிகளை நினாவின் தந்தை செய்துள்ளார்.

இருபது வயதில் சமூகப் பணியில் முதுகலை படித்து முடித்தார். குடும்பம் மற்றும் குழந்தைகள் நலனை சிறப்புப் பாடமாக எடுத்திருந்தார். வசதி வாய்ப்பற்ற குழந்தைகளின் முன்னேற்றத்தில் பேரார்வம் காட்டினார். “நீங்கள் இளமையாக இருக்கும்போது உலகத்தையே மாற்றவேண்டும் என்று நினைப்பீர்கள். எதுவும் உங்களை தடைசெய்யமுடியாது என்றும் நினைப்பீர்கள்” என்று சிரிக்கிறார்.

சென்ட்ரல் அடாப்ஷன் ரிசோர்ஸ் அத்தாரிட்டி (சிஏஆர்ஏ) யின் கீழ் குழந்தை தத்தெடுத்தலை மையப்படுத்தும் நடைமுறைகள் நடப்பது சரியான முயற்சி என நினா நினைக்கிறார். சிஏஆர்ஏ என்பது மத்திய மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பு. அது உள்நாடு மற்றும் மற்ற நாடுகளுக்கு இடையிலான தத்தெடுத்தல் தொடர்பான ஹேகு மாநாட்டின் பரிந்துரைகள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு செய்கிறது.

தனியார் நிறுவனங்களும், தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் தத்தெடுத்தலை கையில் எடுத்துக்கொள்வது சட்டத்திற்குப் புறம்பானது. அங்கீகாரம் பெற்ற தத்தெடுக்கும் அமைப்புகள், நம்பிக்கை அளிக்கும் தத்தெடுக்கும் பெற்றோரை கண்டறிந்து, குழந்தைகளுக்கு ஏற்ற சூழலைப் பற்றிய ஆய்வை மேற்கொள்ளும். .

இதுபோன்ற மாற்றங்கள் தகுதியற்ற நபர்கள் குழந்தைகளை தத்தெடுத்தல் தடுக்கப்படும். மேலும், ரகசிய குழந்தை கடத்தலையும் தவிர்க்கமுடியும். நிச்சயமாத இன்னும் நிறைய தூரம் பயணிக்கவேண்டிருக்கிறது. உதாரணத்திற்கு கர்நாடக மாநிலத்தின் 30 மாவட்டங்களில் 22 தத்தெடுக்கும் அமைப்புகள் மட்டுமே பதிவு செய்திருந்தன. மற்ற மாவட்டங்களில் இருந்து வரும் குழந்தைகளின் விவரம் இந்த முறையில் தெரியாமல் இருக்கிறது.

நினா, இரண்டு குழந்தைகளை தத்தெடுத்திருக்கிறார். திருமணம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவரும் அவரது கணவரும் 7 மாதமான பெண் குழந்தையை தத்தெடுத்தார்கள். அப்போது அந்த குழந்தை 3 கிலோ எடையில் இருந்தது. இன்று அவருடைய மகள் ஓவிய ஆசிரியை, இரண்டு குழந்தைகளின் தாயாக இருக்கிறார். ஆரம்பத்தில் எல்லோரையும்போல அவருடைய மாமனார் மாமியார் தத்தெடுத்தலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. பிறகு அவர்களை சமாதானப்படுத்தி சம்மதிக்கவைத்ததாகக் கூறுகிறார் நினா.

சில ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தா சென்றிருந்தபோது, அங்கே ஒரு ஆண் குழந்தையைக் கண்டார். அந்தக் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது. நோயுற்ற குழந்தைகளை யாரும் தத்தெடுக்க விரும்பமாட்டார்கள். அந்தக் குழந்தையையும் அவர் தத்தெடுத்துக்கொண்டார். ஒரு அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு அவன் ஆரோக்கியமாக வளர்ந்தான். அந்தச் சிறுவனுக்கு பேட்மிண்டனும் ஸ்குவாசும் விளையாடப் பிடிக்கும். இன்று இளைஞனாகி மனைவியுடன் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்.

குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக நிதிநிலை அறிக்கையில் வெறும் 3 சதவீதம் மட்டும் நிதி ஒதுக்கீடு செய்வது பற்றி கவலைப்படுகிறார் நினா. செலவழிக்கப்படாமல் பெரும் தொகை மீதியாக இருக்கிறது. “கேந்திரிய வித்யாலயா போன்ற அரசு நடத்தும் பள்ளிகளில் மிகச்சிறந்த கல்வி அளிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு இணையான கல்வி அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் வழங்கப்படுவதில்லையே ஏன்” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

நினாவுக்கு ஆம் ஆத்மி (ஏஏபி) கட்சியில் ஈடுபாடு. ஆனால் பெங்களூரு தொகுதியில் நின்று தோல்வி கண்டார். இளைஞர்களும் படித்தவர்களும் அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவருடைய ஆசை. “இன்று எங்கும் ஊழலைப் பார்க்கிறோம். படித்த நடுத்தர வர்க்கம் அரசியலுக்கு வராமல் தனியார் மற்றும் அரசுப் பணிகளை அவர்களும், அவர்களது குழந்தைகளும் தேர்ந்தெடுப்பதே காரணம்” என்று கருதுகிறார்.

இன்றைய இளம் தலைமுறைக்கு அவர் இதைத்தான் சொல்கிறார்: “உங்களுடைய ஆர்வத்தை பின்பற்றுங்கள், ஒரு மாற்றத்துக்காக முயற்சி செய்யுங்கள். சமூகத்தில் பிரிவினையற்ற சமமான நிலையை ஏற்படுத்துங்கள்.”

ஆக்கம்: SHARIKA NAIR   தமிழில்: தருண் கார்த்தி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல் 

தொடர்பு கட்டுரைகள்:

பெண்கள் உரிமைக்காக போராடும் ஹைதராபாத்தை சேர்ந்த ருக்மிணி ராவ்

'காஷா கி ஆஷா': பாண்டிச்சேரியில் பெண்களுக்காக பெண்களால் ஒரு கலை முயற்சி!