'வடிவமைப்பு' காட்சி ஊடகத்தின் புது மொழி!

0

"கேன்வா" நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மெலானி பெர்கின்ஸ், வடிவைப்புதான் காட்சி ஊடகத்தின் புது மொழி என்கிறார்.

அணுக எளிதான, அழகான, மென்மையான குணம் கொண்ட அவர், யாரேனும் இது முடியாது எனச் சொன்னால் இரும்பு மனுஷியாக மாறி விடுகிறார். "எதையேனும் முடியாது, இதை யாரும் செய்ததில்லை, இதைச் செய்வது கடினம் எனச் சொன்னால், நான் அதை செய்ய வேண்டும் என உத்வேகம் கொள்கிறேன்".

அந்த எண்ண ஓட்டம்தான் இணைய வரைகலை வடிவமைப்புத் தளமான கேன்வாவின் நிறுவனரான மெலானியின் வாழ்வில் உந்து சக்தியாக இருந்திருக்கிறது.

வடிவமைப்பையே வாழ்க்கையாகவும் மூச்சாகவும் கொண்ட, ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை பூர்வீகமாகக் கொண்ட மெலானி இரண்டு, பல இலட்சம் மதிப்புள்ள நிறுவனங்களின் நிறுவனர். ஹெர்ஸ்டோரி அவரிடம் ஆஸ்திரேலியாவின் புது நிறுவனம் துவங்கும் சூழலையும், வடிவமைப்பில் அவருக்குள்ள ஈடுபாட்டையும் இந்தியாவில் கேன்வாவின் துவக்கத்தையும் பற்றிப் பேட்டி கண்டது.

வரைகலை வடிவமைப்பு பயிற்றுவித்தல்

மெலானி எந்த வடிவமைப்பு சார்ந்த படிப்பும் படிக்கவில்லை. ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்புப் பற்றி படிக்கையில் தான் அவர் வடிவமைப்பின் மீதான தன் காதலைக் கண்டுகொள்கிறார். அவருடைய திறமையைக் கண்ட பல்கலைக்கழகம் அடுத்த வருடம் அவரை வடிவமைப்பு பற்றிய பாடம் எடுக்க அழைத்து. அப்படித்தான் அவர் இந்தத் துறைக்குள் வந்தார்.

2007ல் மாணவர்களுக்கு வடிவமைப்பும் போட்டோஷாப்பும் நடத்துகையில் மாணவர்கள் சிரமப்படுவதை கவனித்தார். வடிவமைப்பில் நல்ல எதிர்காலம் உள்ளதை கவனிக்கும் அவர் அதை எளிமையாக, அனைவரையும் சென்று சேரும்படியாக மாற்ற க்ளிப் ஆப்ரெட்ச் உடன் சேர்ந்து 'ப்யூஷன் புக்ஸ்' என்னும் நிறுவனத்தை ஆரம்பித்தார். அது பள்ளிக்களுக்கான ஆண்டிதழ்கள் தயாரிக்க உதவும் கருவி. அது இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்கிறார்.

மெலானியும் அவருடைய ப்யூஷன் புக் இணை நிறுவனரும், பெர்த் நகரின் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பாளருக்கான விருது வழங்கும் விழாவில்தான் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த மாய்த்தாயின் நிறுவனரும், முதலீட்டாளருமான பில் தாயைச் சந்திக்கிறார்கள். பில் அவர்களை சான் பிரான்சிஸ்கோவிற்கு வந்தால் சந்திப்பதாகச் சொன்னார். "நான் விமானம் ஏறி அங்கு சென்றேன். மூன்று மாதம் நிறுவனம் தொடங்குதல் பற்றி தெரிந்து கொண்டேன். என்று சிலிக்கன் பள்ளத்தாக்கு அனுபவங்களை நினைவுகூர்கிறார்.

அங்கு இருக்கையில் கூகுள் வரைபடங்களின் இணை நிறுவனரான லார்ஸ் ராஸ்முசேனைச் சந்தித்து கேன்வா பற்றிய விவரங்களைச் சொல்லி முதலீட்டாளர்களுக்கும் பொறியாளர்களுக்கும் விளக்கினார்.

2013ல் முப்பது லட்சம் டாலர் முதலீட்டில் முதல்நிலையில் கேன்வா அடியெடுத்து வைத்தது. லார்ஸ், பில் மற்றும் மேட்ரிக்ஸ் ஆகியோர் முதலீட்டாளர்களில் சிலர். 2014ன் தொடக்கத்தில் ஆப்பிளின் முன்னாள் நிர்வாகியான கய் கவாசகி கேன்வாஸின் பரப்பாளராகச் சேர்ந்தார்.

மேலோங்கும் வடிவமைப்பு

மெலானியைப் பொறுத்தவரை வடிவமைப்புத் துறை காலங்காலமாக மாறிக்கொண்டே வந்திருக்கிறது. இன்று தனி மனிதனில் இருந்து நிறுவனங்கள், சமூக வலைதளங்கள்; என அனைவரும் வடிவமைப்பில் கவனம் செலுத்தத் தொடக்கி விட்டனர். நிறுவனங்கள் விளம்பரங்களிலும் சந்தைப்படுத்துதலிலும் வரைகலை வடிவமைப்பை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

வடிவமைப்பாளரின் படைப்புகள் பார்க்கையிலே செய்தி சொல்ல வேண்டும். இது எல்லோருக்கும் இருக்க வேண்டிய ஒரு திறன். அதற்காகத்தான் கேன்வா சந்தைக்கு வந்தது.

நிதியுதவி

நிறைய புது நிறுவனங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு தர முயலாமல் நிதி சேகரித்தல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன.

அவருடைய இந்தப் பயணம் ரோஜாக்களின் படுக்கையாக இல்லை. 

"ஒவ்வொரு புது அடி எடுத்து வைக்கும் போதும் சில ஏமாற்றம் வந்து சேரும். நிறுவனத்தின் வளர்ச்சியில் ஏமாற்றங்கள் ஒரு அங்கம்" என்கிறார் மெலானி.

கேன்வா குழு

மெலானியின் காதலர் தான் நிறுவனங்களின் இணை நிறுவனரும் ஆவார். இருவருக்கும் ஊக்கமும், ஆற்றலும் இருப்பதால் வலுவான குழுவாக இருக்க முடிகிறது. "நாங்கள் எல்லாவற்றையும் பற்றி நிறையப் பேசுவோம். அது ஒரு பந்தத்துக்கு முக்கியமானது" என்கிறார். ஒரு வருடத் தேடுதலுக்குப் பின் கேமரூன் ஆடம்ஸை தொழில்நுட்ப இணை நிறுவனராக 2012ல் சேர்த்துக் கொண்டனர்.

ஆஸ்திரேலியாவில் தொழில் முனைவோர்

ஆஸ்திரேலியாவில் தொழில்முனைவோர் கலாச்சாரம் பற்றிக் கேட்கையில். "2007ல் நான் நிறுவனம் தொடங்குகையில் எனக்கு இதைப்பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் இன்று பலருக்கு இதைப்பற்றித் தெரிந்திருக்கிறது. பொதுவெளியிலும், ஊடகங்களிலும் நிறைய பேர் இதைப்பற்றிப் பேசுகிறார்கள். அனேகர் இதை ஒரு வாழ்க்கைப் பாதையாக எடுக்க எத்தனிக்கிறார்கள். பெண்கள் மத்தியிலும் இதைப்பற்றி ஒரு விழிப்புணர்பு ஏற்பட்டு வருகிறது" என்றார்

இந்தியாவில் கேன்வா

நவம்பர் மாதம் கேன்வா இந்தியாவில் துவங்கப்பட்டது. இந்திய பயனர்களின் எண்ணிக்கை கேன்வாவில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியர்கள் கேன்வாவின் மூலம் ஏற்கனவே பத்து இலட்சம் வடிவமைப்புகள் செய்து விட்டார்கள்.

மேலும் மிகப்பெரிய நிறுவனங்களின் சந்திப்பு என்பதால் மெலானி இந்தியாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். கேன்வா இந்தியாவின் செயல்பாடுகளில் ஆர்வமாக இருக்கிறது மேலும் இந்தியாவில் அதன் வளர்ச்சி நம்பிக்கை தருவதாக இருக்கிறது.

இந்திய விழாக்களுக்கான வடிவமைப்புகளையும் இந்தியை எழுத்துருவாகவும் அவர்கள் வைத்துள்ளார்கள். இந்தியாவில் இருந்து வடிவமைப்பாளர்களின் பங்கேற்பை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

2016ல் இந்தியப் பயனர்களின் எண்ணிக்கையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளார்கள். அக்டோபர் 2015ல் ஹாலிவுட் நடிகர்கள் ஓவன் வில்ஸன், வூடி ஹேரல்ஸன் உட்பட பலரிடம் இருந்து 15 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டி உள்ளனர்.

சுமார் 165 மில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனத்தின் நோக்கமாக மெலானி சொல்வது "வடிவமைப்புத் துறைக்கு வலுசேர்த்து அவர்கள் தளத்தை உலகம் முழுதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான்.

ஆங்கிலத்தில்: தன்வி துபே | தமிழில்: சௌம்யா சங்கரன்