'சந்தை மோசமாக இருப்பினும் சிறப்பாக செயல்பட்டால் கவனத்தை ஈர்க்கமுடியும்'– கேட்டலிஸ்ட் ப்ராபர்டீஸ் அஞ்சன் ரங்கராஜ்!

0

குதிரை பந்தய ஆர்வலர்கள் பெங்களூரு டர்ஃப் க்ளப்பின் வருடாந்திர விண்டர் டெர்பிக்கு வரும்போது கேட்டலிஸ்ட் ப்ராபர்டீஸ் நிறுவனர் மற்றும் சிஇஓ அஞ்சன் ரங்கராஜை சந்திக்கச் செல்வார்கள். 44 வயதான இந்த தொழில்முனைவர் அவரது ப்ராபர்டி மார்கெட்டிங் ஆலோசனை நிறுவனத்தின் மூலம் ’கேட்டலில்ஸ்ட் ப்ராபர்டீஸ் பெங்களூரு டெர்பி’ என்கிற நிகழ்விற்கு ஸ்பான்சர் செய்கிறார்.

”வேலை செய்த பிறகு பொழுதுபோக்கு அல்லது ஒரு விளையாட்டில் ஈடுபடுவது மனதை லேசாக்கும். குதிரை பந்தயம் வெறும் விளையாட்டு மட்டுமல்ல. 2018 விண்டர் டெர்பி நிகழ்விற்கு ஸ்பான்சர் செய்வதன்மூலம் நிகழ்விற்கு நான் அழைத்த பில்டர்கள் சமூகத்தினிடையே கேட்டலிஸ்ட் ப்ராபர்டீஸ் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்த முடியும். இந்த விளையாட்டின் மீது எனக்குள்ள ஆர்வத்தால் இந்த நிகழ்வை நடத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.

தொழில்முனைவிற்கான அடித்தளம்

அஞ்சன் 20 ஆண்டுகளாக தொழில்முனைவில் ஈடுபட்டுள்ளார். ”நான் மருத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவன். நானும் மருத்துவத் துறையில் செயல்படவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. மேலாண்மை பாதையை தேர்வு செய்து தொழில்முனைவோர் ஆவது குறித்து என் பெற்றோரை சம்மதிக்க வைப்பது கடினமாக இருந்தது. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால் ஒரு சில வாரங்களிலேயே மருத்துவத்துறை எனக்கானதல்ல என்பதை உணர்ந்தேன்,” என்று நினைவுகூர்ந்தார்.

அதன் பிறகு மேலாண்மை படிப்பு மேற்கொள்ள வெளிநாடு சென்றார். அப்போதிருந்து அவரது முடிவிற்காக அவர் வருந்தியதில்லை. 

“நான் துணிந்து ஆபத்தை எதிர்கொள்ளும் சுபாவம் உடையவன். இந்தியா திரும்பி என்னுடைய சொந்த வணிகத்தை உருவாக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். எம்பிஏ முடித்ததும் இந்தியா திரும்பி என்னுடைய முதல் நிறுவனத்தைத் துவங்கினேன். அப்படித்தான் என்னுடைய தொழில்முனைவு பயணம் துவங்கியது,” என விவரித்தார்.

ஆரம்பத்தில் அஞ்சன் பல்வேறு துறைகளில் ஈடுபட்டார். Belle Vue Diversified என்கிற முதல் ஸ்டார்ட் அப்பை 1998-ம் ஆண்டு துவங்கினார். இந்த பொறியியல் நிறுவனத்தைத் துவங்கியபோது அவரது வயது 24.

”இங்கு நாங்கள் விவசாயக் கழிவுகளை தொழிற்சாலை பயன்பாடுகளுக்காக எரிபொருளாக மாற்றினோம். அதன்பிறகு Cedilla Communications என்கிற விளம்பர ஏஜென்சியை அமைத்தேன். நாங்கள் முன்னணி நிறுவனமாகவே கருதப்பட்டோம். நாங்கள் அதிகளவிலான ரியல் எஸ்டேட் க்ளையண்டை கையாண்டோம். Belle Vue Assets என்கிற என்னுடைய மற்றொரு நிறுவனம் ப்ராபர்டி டெவலப்மெண்ட் பிரிவில் செயல்படுகிறது. மற்றொரு நிறுவனமான Cedilla Business Solutions இந்திய நிறுவனங்கள் மியான்மரில் கடை அமைக்க உதவுகிறது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் Cedilla Group of Companies-ன் கீழ் இயங்குகிறது,” என்றார்.

பொறியியல் நிறுவனம், விளம்பர ஏஜென்சி போன்றவற்றில் துவங்கிய இவரது தொழில்முனைவுப் பயணம் எப்படி ஒரு ப்ராபர்டி மார்கெட்டிங் ஆலோசனை வழங்கும் நிறுவனமாகவும் முன்னெடுத்தது?

2006-ம் ஆண்டு அஞ்சன் தனது விளம்பர ஏஜென்சியின் ரியல் எஸ்டேட் க்ளையண்டுகளை சந்தித்த தருணமே இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. 

”இந்த க்ளையண்டுகள் குடியிருப்புப் பிரிவில் கவனம் செலுத்தி வந்தனர். என்னுடைய விளம்பர ஏஜென்சி அதிக வணிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக அவர்கள் பாராட்டினர். ஆனால் மார்கெட்டிங் சிறப்பாக இல்லை எனவும் தெரிவித்தனர். அவர்கள் தங்களது ஒட்டுமொத்த மார்கெட்டிங் நடவடிக்கைகளையும் எங்களிடம் அவுட்சோர்ஸ் செய்வதற்காக வாய்ப்பு இருப்பதை உணர்ந்தேன்,” என்று நினைவுகூர்ந்தார்.

இந்தத் தேவையை உணர்ந்து 2008-ம் ஆண்டு சென்னையில் கேட்டலிஸ்ட் ப்ராபர்டீஸ் துவங்கினார். குடியிருப்புகளை வாங்குவோருக்கு விரிவான நவீன ரியல் எஸ்டேட் ஆலோசனை சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் இந்நிறுவனம் துவங்கப்பட்டது. 

“தனித்துவமாக செயல்படவேண்டும் என்பதற்காக ஏற்கெனவே இருந்த தேவையுடன் ஒப்புறுதி (underwriting) கான்செப்டையும் இணைத்துக்கொண்டு வணிக வாய்ப்புகளை உருவாக்குவதிலும் முதலீடு செய்தேன்,” என்றார்.

இந்தியாவின் முதல் ப்ராபர்டி ஒப்புறுதி நிறுவனங்களில் ஒன்றான கேட்டலிஸ்ட் சந்தையில் செயல்படும் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் வேறுபட்டதாகும். 

“எங்களது ப்ராபர்டி ஒப்புறுதி சேவை தனித்துவம் வாய்ந்ததாகும். உலகளவில் செயல்படும் நிறுவனங்கள் போலல்லாது நாங்கள் வணிக வாய்ப்புகளை உருவாக்குவதில் முதலீடு செய்கிறோம். வழக்கமாக டெவலப்பர்கள் சாத்தியக்கூறுகள் நிறைந்த வாய்ப்புகளில் முதலீடு செய்வார்கள். நாங்கள் சாத்தியக்கூறுகள் நிறைந்த வாய்ப்புகளை உருவாக்குவதில் முதலீடு செய்கிறோம்,” என அஞ்சன் விவரித்தார்.

கேட்டலிஸ்ட் நிறுவனம் சாத்தியக்கூறுகள் நிறைந்த வாய்ப்புகளை உருவாக்குவதில் டிஜிட்டல் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு வகைகளில் வாய்ப்புகளை உருவாக்கினாலும் சுமார் 30 சதவீத விற்பனை டிஜிட்டல் மீடியம் வாயிலாகவே நடக்கிறது என்கிறார். 

“எங்களது சொந்த ப்ராபர்டி போர்டலை உருவாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓராண்டாக இந்த பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த போர்டல் தனித்துவமாகவும், வெளிப்படையாகவும் தொகுக்கப்பட்ட விதத்திலும் அமைந்திருக்கும். இந்த வகையில் குடியிருப்பு பிரிவில் காணப்படும் ஒழுங்கற்ற தன்மையை நீக்க விரும்புகிறோம்,” என்றார்.

தற்போதைய கவனம்

தற்போது இந்த மார்கெட்டிங் மற்றும் ஆலோசனை நிறுவனம் ஒப்புறுதி சேவை வாயிலாக குடியிருப்புப் பிரிவைக் கையாள்கிறது. Cedilla Group of Comapnies ஒரு பகுதியாக துவங்கப்பட்ட காலம் முதல் 3,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

இந்த குழுமத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் சமீபத்தில் பெங்களூருவில் செயல்படத் துவங்கியுள்ள கேட்டலிஸ்ட் நிறுவனத்தில் அஞ்சன் தீவிரமாக செயல்படுகிறார். 

“தற்போது சந்தை சற்று மந்தமாகவே உள்ளது. ஆனால் இந்தச் சந்தையில் நுழைந்து சிறப்பிக்கத் தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளலாம் என்பதால் இதில் நன்மையும் இருப்பதாகவே கருதுகிறேன்,” என்றார்.

மேலும், “நான் சென்னையைச் சேர்ந்தவன் என்றாலும் நான் உண்மையில் பெங்களூருவிலேயே இருக்கிறேன். நான் சந்தையைப் புரிந்துகொண்டு பெங்களூருவில் உள்ள ரியல் எஸ்டேட் சமூகத்துடன் எப்போதும் தொடர்பில் இருப்பேன்,” என்றார்.

”எங்களது தற்போதைய கவனம் முழுவதும் குடியிருப்புப் பிரிவில் உள்ளது. பெங்களூருவில் எங்களை நிலைநிறுத்திக்கொள்ள விரும்புகிறோம். சந்தை மோசமாக உள்ளபோதும் சிறப்பாக செயல்பட்டால் கவனத்தை ஈர்க்கமுடியும். அதே நேரம் ரியல் எஸ்டேட் கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சி சட்டம் 2016 (RERA) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சந்தையில் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு எடுத்துச்செல்லக்கூடிய முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்றார்.

கார்னர்ஸ்டோன் நிறுவனம் கேட்டலிஸ்ட் நிறுவனத்தின் ஈக்விட்டி பார்ட்னராக இணைந்துகொண்டபோது இந்த வென்சர் சாத்தியமானது. “கார்னர்ஸ்டோன் நகரின் மிகப்பெரிய நில வங்கி நிறுவனமாகும். அவர்களது உதவியுடன் இங்கு செயல்பாடுகளை அமைத்தோம். ஏற்கெனவே முழுவீச்சில் செயல்படத் துவங்கிவிட்டோம்,” என்றார்.

பெங்களூருவாக இருந்தாலும் சென்னையாக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் வாங்குவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அஞ்சனுக்கு முக்கிய சவாலாக இருந்தது. “கேட்டலிஸ்ட் ப்ராபர்டிகளை தொகுப்பதால், நாங்கள் நம்பும் விஷயத்தை மட்டுமே சந்தைக்கு கொண்டு செல்கிறோம்,” என விவரித்தார்.

“சரியான ப்ராஜெக்டைக் கண்டறிவதும் டெவலப்பர்களுடன் ஒப்பந்தம் போடுவதும் சவாலாக இருந்தது. நாங்கள் நடுநிலையாக இருந்து சிறப்பான விலையுடன் நல்ல ப்ராஜெக்டுகளை தொகுக்கிறோம். அனுபவமில்லாத இரண்டாம் வகை டெவலப்பர்களிடம் இருந்து ப்ராஜெக்டுகளை சந்தைக்கு எடுத்துச் செல்கிறோம். விற்பனை செய்ய இயலாத பல நில உரிமையாளகளுக்கும் சேவை அளிக்கிறோம்,” என்றார்.

”பாதகமான சூழலிலும் எப்போதும் வாய்ப்பு இருக்கும் என நான் நம்புகிறேன்,” என்றார் அஞ்சன்.

ரியல் எஸ்டேட் துறையில் நிலவும் இன்றைய பாதகமான சந்தையானது ப்ராபர்ட்டி வாங்குபவர்கள் சிறப்பான டீல் பெற சரியான நேரம் என்பதே அவரது கருத்து. இதற்கு முன்பு உடனடியாக குடியேறும் வகையிலான வீடுகளை மக்கள் வாங்குவது என்பது கேள்விப்படாத ஒன்றாகும். வீடுகள் ஆரம்பகட்டத்திலேயே விற்கப்படும். ”ஆனால் இன்று உடனடியாக குடியேறும் வகையிலான வீடுகள் விற்கப்படுகிறது. இதில் அதிக வெளிப்படைத்தன்மை உள்ளது. வாங்குபவர்கள் பணி முழுவதும் நிறைவு செய்யப்பட்ட வீடுகளை தேர்வு செய்யமுடிகிறது. எதற்காக பணம் செலுத்துகிறோம் என்பதை வாங்குபவர்கள் தெரிந்துகொண்டுள்ளனர்,” என்றார்.

தற்சமயம் அஞ்சன் கேட்டலிஸ்ட் ப்ராபர்டீஸ் நிறுவனத்தில் அதிக கவனம் செலுத்துகிறார். இவரது மற்ற நிறுவனங்களை சரியான நபர்கள் பொறுப்பேற்று நடத்தி வருவதாக தெரிவிக்கிறார். 

”என்னுடைய மற்ற நிறுவனத்தில் பல ஆண்டுகளாக எங்களுடன் இணைத்திருக்கும் தலைவர்கள் பொறுப்பேற்றுள்ளனர். நான் மற்ற பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகையில் இவர்களே வணிகத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்ததால் இவர்களே என்னைக் காட்டிலும் எங்களது வணிகத்தை சிறப்பாக புரிந்துகொண்டவர்கள்,” என விவரித்தார்.

பல தொழில்முனைவு முயற்சிகளில் ஈடுபட்டிருந்தாலும் எப்போதும் தனது பொழுதுபோக்கிற்காக நேரம் ஒதுக்குகிறார். குதிரைப் பந்தயத்தில் ஆர்வம் இருப்பதால் சொந்தமாக பந்தயக் குதிரைகள் வைத்துள்ளார். பழங்காலத்து பைக்குகள், பீர் குவளை, நாணயங்கள் போன்றவற்றை சேகரிக்கிறார். 

”இவை மட்டுமின்றி கோல்ஃப், கடற்பயணம், வான்வழிப் பயணம் போன்றவற்றில் எனக்கு ஆர்வம் அதிகம். நீண்ட நேரம் பணிபுரிந்த பிறகு பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டிற்கு நேரம் ஒதுக்குவது ரிலாக்ஸ் செய்துகொள்ள உதவும்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : ரிஷப் மன்சூர் | தமிழில் : ஸ்ரீவித்யா