'துயரங்களை துரத்திவிடு'- ஆனந்தா சங்கர் ஜெயந்த்

0

ரயில்வேயின் முதல் பெண் அதிகாரி, பத்மஸ்ரீ விருது பெற்றவர் எல்லாவற்றிற்கும் மேலாக புற்றுநோயுடன் போராடி வென்றவர் என்ற பல அடையாளங்கள் உண்டு டாக்டர். ஆனந்தா சங்கர் ஜெயந்துக்கு.

அவர் வாழ்வில் பல்வேறு வெற்றிக் கொடிகளை நிலைநாட்டியிருக்கிறார். அதே வேளையில் அவரது சாதனைகளையும், சந்தோஷங்களையும் கவர்ந்து கொள்ள மிகப் பெரிய சவால்கள் அவர் வழியில் வந்திருக்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி தொடர்ந்து மிளிர்ந்து கொண்டிருக்கிறார் ஆனந்தா சங்கர் ஜெயந்த். அவர் வாழ்வில் ஆனந்தத்துக்கும், வெற்றிகளுக்கும் குறைவே இல்லை என்றே சொல்ல வேண்டும்.

அவரது வாழ்வின் முதல் முப்பது ஆண்டுகளில் ஆனந்தம் மட்டுமே தவழ்ந்தது. அவர் நடனக்கலைக்கு அறிமுகமானார். பிரதிபலனாக அந்தக் கலை அவரை மகிழ்ச்சிக்கு அறிமுகப்படுத்தியது. ஆம், பரதக் கலையை அவர் அறிந்து கொண்டது தற்செயலாகவே. ஆனால், பின்நாளில் அதுவே அவருக்கு நித்திய புன்னகை வழங்கும் துறையாக மாறியது. ஆடல் கலையை தான் அறிந்து கொண்டது குறித்து ஆனந்தா கூறும்போது, "என் தாயும், பரதமும் என்னுடைய சிறு வயது முதலே என்னுள் வியாபித்துவிட்ட இரண்டு விஷயங்கள்" என்றார்.

கலாக்ஷேத்ரா எனும் மிகப்பெரிய கலைக்கூடத்தில் 6 ஆண்டுகள் பரதக் கலை. பரதக் கலையில் தேர்ச்சி பெற்றதோடு நிறுத்திக் கொள்ளவில்லை ஆனந்தா. அதனுடன் வீணை வாசிப்பு, நடன வடிவமைப்பு, நட்டுவாங்கம், தத்துவ ஞானம் என கலைகள் பலவற்றில் தேர்ச்சி பெற்றார்.

பசுமார்த்தி ராமலிங்க சாஸ்திரியிடம் குச்சிப்பிடி நடனம் பயின்றார். "எனக்கு 18 வயது இருக்கும். நான் அப்போதுதான் ஒரு நாட்டியக் கலைஞராக துளிர்விட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, நான் பரதம் பயில இந்திய அரசின் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அதுவரை எனது திட்டங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை" என்றார் ஆனந்தா.

ஆரம்பத்தில் என்னிடம் பரதம் பயில சேர்ந்தது 6 பெண் குழந்தைகள் மட்டுமே. அத்தருணத்தில் எனது கலைத் தொழிலை மேலும் வலுப்படுத்த முறையான படிப்பு தேவை என அறிந்துகொண்டேன். அப்போது என் நண்பர்கள் சிலர், உன் ஆர்வத்தின் பின்னால் செல் பிற்காலத்தில் உனக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தை நோக்கி பயணிக்காதே என்றனர்.

ஆனால், நான் அவர்களிடம் சொன்னேன். "எனது ஓய்வுகாலம் இனிமையாக இருக்கும் என்பதை உறுதி செய்துவிட்டேன் என்றால், என்னால் எனது லட்சியப் பாதையில் வெற்றிகரமாக பயணிக்க முடியும்" என்று.

இந்நிலையில், ஆனந்தா வணிகவியலில் இளங்கலையும், வரலாறு, கலாச்சாரம் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்பும் படித்து முடித்தார். அப்போது அவருக்கு யுபிஎஸ்சி தேர்வுகள் பரிச்சியம் ஆகின. பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பிடித்து ஜொலித்த கையோடு யுபிஎஸ்சி தேர்வையும் எதிர்கொண்டார். அதிலும் அவருக்கு வெற்றியே. பலன், தெற்கு மத்திய ரயில்வே வாரியத்தில் பணி கிடைத்தது. அது மட்டுமல்ல ரயில்வே துறையில் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையையும் பெற்றுத் தந்தது.

எல்லோருக்கும் பெரும் மகிழ்ச்சி என் அன்னையை தவிர. அவர் என்னிடம் கேட்டார், "எதற்காக நீ இதெல்லாம் செய்து கொண்டிருக்கிறாய்? இவை உன்னுடைய நடனக்கலை மீதான ஆர்வத்தை சிதைத்துவிடும். நீ நடனத்தை ஒதுக்கிவைக்கவா நான் இவ்வளவு தியாகங்களையும் செய்தேன்" என்றார்.

அப்போது என் தாயிடம் நான் ஒரு வாக்குறுதியைத் தந்தேன், "எந்தச் சூழலிலும் நான் பரதக்கலையில் இருந்து விலகி நிறக்மாட்டேன்" என்றேன்.

ரயில்வே துறையில் முதல் பெண் அதிகாரியாக பல்வேறு அனுபவங்கள் எனக்குக் கிடைத்தன. நான் ஒரு பெண் என்பதாலேயே என்னை பலராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் அதிகாரி என்பதால் என்னை சார் என்றே அழைத்தனர். ஒரு ஆணின் வேலையை பெண் செய்வதா என்ற பார்வையே சக ஊழியர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது. எனது அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்புகள் வரும். அப்போது எனது குரலை கேட்டவுடன் மறுமுனையில் இருக்கும் சிலர் ஏதோ வேறு எண்ணுக்கு அழைத்துவிட்டோமோ என்ற ஐயத்தில் இணைப்பை துண்டித்துவிடுவர். 

என்னை அலுவலகத்தில் முதன் முதலில் பார்ப்பவர்கள், நான் உயரதிகாரியின் மகளாக இருக்க வேண்டும் என்று அவர்களே முன்முடிவுக்கு வந்துவிடுவர். எல்லாம் பாலின பாகுபாட்டின் எதிர்ஒலி. இப்படியாக என் அலுவலகப் பணி நடந்தது.

ஆனால், நான் எப்போதும் பெண் என்ற பாலின பாகுபாட்டை அனுமதித்ததில்லை.

அதேபோல், அலுவல்களுக்கு இடையே எனது பரதக் கலையை நான் விட்டுவிடவில்லை. தினமும் மூன்று மணி நேரமாவது பரதம் பயில்வேன்.

வார இறுதி நாளில் கூடுதல் நேரம் பரதத்துக்காக செலவழிப்பேன். தேர்ந்த பயிற்சியின்பின் சில சிறந்த கலை ஆக்கங்களை கலை உலகத்திற்கு தந்தார் ஆனந்தா. ஸ்ரீ கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும், புத்தம் சரணம் கச்சாமி, தியாகராஜ ராமாயணம், தல பத்ரா, சிருங்கார தர்ப்பணம், ஸ்ரீ ராம நாமம், எந்த ருச்சி ரா ஆகியன அவரது நாட்டிய நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

பாலின பிரச்சனைகளை பறைசாற்றும் 'வாட் அபவுட் மீ '(What about me) என்ற நிகழ்ச்சி அவருக்கு புதிய அடையாளத்தைப் பெற்றுத்தந்தது.விருதுகளும், செய்திக் கட்டுரைகளும் ஆனந்தா வாழ்க்கையின் அன்றாட நிகழ்வாகிப் போகின. புகழ் அவரை உச்சியில் உயர்த்தியது. பத்மஸ்ரீ விருது அவரை கவுரவித்தது. இது இந்தியாவின் 4-வது மிகப்பெரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. நடனக்கலைக்கு அவரது சேவையை, பங்களிப்பை பாராட்டி பத்மஸ்ரீ வழங்கப்பட்டது.

அத்தருணத்தில் தான் அந்த பேரிடி செய்தி வந்தது. ஆம், ஆனந்தா அமெரிக்கா செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அவர் அப்போது அவரது மார்பகத்தில் ஏதோ கட்டி இருப்பதுபோல் உணர்ந்தார். சற்றும் தாமதிக்காமல் மேமோகிராம் செய்தார். அந்த பரிசோதனை முடிவுகளைப் பெறுவதற்கு முன்னதாகவே அமெரிக்கா சென்றுவிட்டார். 

அமெரிக்க பயணத்துக்குப் பின் நடந்ததை அவர் விவரிக்கும்போது, "இரண்டு வாரங்களுக்குப் பின் நான் இந்தியா திரும்பினே. ஆனால், வழக்கத்துக்கு மாறாக என் கணவர் மும்பை விமான நிலையத்துக்கே வந்திருந்தார், என்னை அழைத்துச் செல்வதற்காக. அப்போது நான் அவரிடம் கேட்டேன் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த காதல் எங்கிருந்து வந்தது என்று. ஆனால், என் உள் உணர்வு சொல்லியது ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்று. 

அவரிடம் மெல்லிய குரலில் கேட்டேன் என்னவாயிற்று என்று? அவர் சொன்னார் உன் மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்துவிட்டது. நீ, அதில் சற்று அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றார். நான் கேட்டேன், எனக்கு புற்றுநோய் வந்துவிட்டதா என்று? அவர் சொன்னார் நீ வேண்டாம் என நினைத்தால் இப்போதுகூட அது உனக்கு இல்லை என்று. அவரை இறுக்கமாக தழுவிக் கொண்டேன். எனக்குள் மூன்று வாசகங்களை சொல்லிக் கொண்டேன்.

1.புற்றுநோய் என் வாழ்க்கையின் ஒரு சிறு அத்தியாயம். அது முழு வாழ்க்கைப் புத்தகம் அல்ல.

2.புற்றுநோயை நான் விரட்டுவேன். அது என்னை விரட்டவிட மாட்டேன்.

3. எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்ற கேள்வியை ஒருபோதும் கேட்க மாட்டேன்"

இந்த மன உறுதியோடு மருத்துவ சிகிச்சையை எதிர்கொண்டார் ஆனந்தா. ஆனால், மருத்துவர்களோ கீமோதெரபி போன்ற சிகிச்சையை மேற்கொள்ளும்போது நடனக் கலையையும் சேர்ந்தே செய்வது சாத்தியமற்றது. உடல் மிகவும் சோர்வடைந்துவிடும் என்றனர். ஆனால், "நடனம் ஆடாவிட்டால் நான் வெறும் சவம்" என்றேன். அதேபோல், எனது மருத்துவரிடம் பல முறை கேட்டிருக்கிறேன், "நாளை எனக்கு ஒரு நடனக் கச்சேரி இருக்கிறது. அதனால், சிகிச்சையை இன்னொரு நாள் வைத்துக் கொள்வோமா" என்று.

2009-ல் எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஆபரேஷன் தியேட்டருக்கு செல்லும் முன் அழகுநிலையத்துக்குச் சென்றேன். என்னை அலங்கரித்துக் கொண்டேன். நடன மேடைக்குச் செல்வதுபோலவே அறுவை மேடைக்கும் புன்னைகையுடன் சென்றேன். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மெல்ல, மெல்ல என் வாழ்வில் இயல்பு நிலை திரும்பியது. நடனம் மட்டும் இல்லை என்றால் என் வாழ்க்கையை புற்றுநோய் நரகமாக்கியிருக்கும்.

அதேபோல், நோயை வெல்ல பெருந்துணையாக இருந்தவர் எனது கணவர். வேதனைமிகு கீமோதெரபியை நான் மேற்கொள்ளும்போதெல்லாம், என் கணவர் எனக்கு உற்ற துணையாக இருந்தார். என் மகன் அம்ரித்தை நினைத்துக் கொண்டால் வேதனை தெரியாது என்பார். நானும் அவ்வாறே செய்வேன்.

அதுமட்டுமல்லாமல் கீமோதெரபி மேற்கொள்ளும் போதெல்லாம் நான் துர்க்கை அம்மனை நினைத்துக் கொள்வேன். நடனக் கலையில் துர்க்கையை போற்றி நிறைய நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். 18 கரங்களுடன் துர்க்கை அன்னையை என் நினைவில் நிறுத்துவேன். எனது நலன் விரும்பிகளான, மருத்துவர், ரேடியாலஜிஸ்ட், கணவர், நாய்க்குட்டி, நடனக்கலை....எல்லாவற்றிற்கும் மேலாக சிம்ம பலமாக இருக்கும் எனது தன்னம்பிக்கை என எல்லாவற்றையும் நினைத்துக் கொள்வேன்.

எந்த சூழலிலும் எனது நகைச்சுவை பண்பை நான் இழக்கவில்லை. ஒரு முறை என்னை அலுவலகத்தில் பார்த்த என் உயர் அதிகாரி மொட்டை அடித்திருக்கிறீர்க்ளே திருப்பதியா என்றார்? நான் சற்றும் அசராமல் சொன்னேன் "இல்லை இது கீமோதெரபி" என்று.

கேன்சரில் இருந்து மீண்டு அவர் அளித்த பேட்டி இந்தியாவிலேயே ஒரு புற்றுநோய் போராளியின் சிறந்த பேட்டியாக பார்க்கப்படுகிறது. இன்று ஆனந்தா சங்கர் ஜெயந்த் புற்றுநோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளார். ரயில்வே துறையில் ஆண்கள் அலை ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் சிறந்த பெண் நிர்வாகியாக ஜொலிக்கிறார். 

நடனத்தை இன்னமும் கைவிடவில்லை. இவற்றையெல்லாம் நம்மிடம் பகிர்ந்து கொண்ட போதும்கூட அவரிடம் ஆரோக்கியமும், தன்னம்பிக்கையும் ததும்பியது.