வேலூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் மார்ச் 27 முதல் பாஸ்போர்ட் சேவை மையம் தொடக்கம்! 

0

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பயனடையும் வகையில் வேலூரில், அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம் வேலூர் அண்ணா சாலையின் ஆபிசர்ஸ் லைன்னில் அமைந்துள்ள வேலூர் தலைமை அஞ்சலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாஸ்போர்ட் சேவை மையம் மார்ச் 27 முதல் செயல் பட துவங்கும். 

இது சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் ஆட்சி வரம்புக்குள் செயல்படும். பாஸ்போர்ட் விண்ணப்பிக்க விரும்பும் நபர் முதலில் www.passportindia.gov.in என்ற இணைய தளத்தில் தங்களுக்கென ஒரு லாகின் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும். பின் அதனை பயன்படுத்தி உள்நுழைந்து விண்ணப்பத்தை நிரப்பி பின் அதற்கான கட்டணத்தை செலுத்தவேண்டும். பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கியின் இணையை வங்கி மூலமாகவோ, கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலமாகவோ செலுத்த முடியும். இணையத்தில் மட்டும் அல்லாது பாரத ஸ்டேட் வங்கியின் படிவத்தை கொண்டு நேரடியாக வங்கியிலும் பணத்தை செலுத்தலாம். கட்டணம் செலுத்தப்பட்டதை வங்கி ஊர்ஜிதம் செய்து அதற்கான ரசீது வழங்கும். 

அதன் பிறகு விண்ணப்பதாரர்களுக்கு கணிணி மூலம் சந்திப்பு முன் அனுமதி நேரம் ஒதுக்கப்படும். அதன் பிறகு ஒதுக்கப்பட்ட அந்த நேரத்தில் விண்ணப்பதாரர் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும். செல்லும்போது, சந்திப்பு முன் அனுமதி ரசிது மற்றும் அனைத்து அவங்களில் அசல் மற்றும் நகலை கொண்டு செல்ல வேண்டும். வங்கியில் பணம் செலுத்தியவர்கள் வங்கி ரசிதையைம் சேர்த்து எடுத்து செல்ல வேண்டும். மேலும், வெள்ளை நிற பின்னணிச்சூழலில் எடுக்கப்பட்ட இரண்டு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தை எடுத்து வர வேண்டும். 

ஆள்மாறாட்டத்தை தவிர்ப்பதற்காக பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பதாரர்களின் நிழற்படம் எடுக்கப்படும். கைவிரல் ரேகைகளும் பதிவு செய்யப்படும். சாதாரண முறையிலான புது மற்றும் மறுபதிப்பு பாஸ்போர்ட்களுக்கான விண்ணப்பங்கள் மட்டுமே வேலூர் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.

அதிவேக (தகல்) முறையிலான விண்ணப்பங்களுக்கு விண்ணப்பதாரர்கள் சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்தையே அணுக வேண்டும். காவல்துறை தடையின்மை சான்றிதழ் போன்ற சேவைகளுக்கு சென்னையில் உள்ள ஏதாவதொரு பாஸ்போர்ட் சேவை மையத்தை அணுகலாம்.

வேலூர் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தில் சந்திப்பு முன் அனுமதி பெற விரும்பும் பொது மக்கள் www.passportindia.gov.in என்ற இணைய தளத்தில் 22 மார்ச், 2017 (வியாழக்கிழமை) முதல் பதிவு செய்யலாம்.