பொது பிரச்சனைகளுக்கு களத்தில் இறங்கி தீர்வு காணும் சென்னை தன்னார்வலர் மீனா!

தெரு விளக்கு எரியவில்லை, தண்ணீர் தேக்கம், சாலையில் குழி என எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் வரை விடாப்பிடியாக உழைக்கும் மீனா. 

0

நாம் வசிக்கும் வீதியில் அல்லது நாம் செல்லும் தெருக்களில் சாலைகள் சரி இல்லை, தெரு விளக்கு எரியவில்லை, தண்ணீர் தேங்கியுள்ளது என்ற பொது பிரச்சனைகளை சந்தித்தால் அரசாங்கத்தை அந்த சாலையை கடக்கும் வரை குறைக் கூறிவிட்டு அடுத்த வேலைக்கு சென்று விடுவோம். இது நம் வாழ்வின் தினசரி சூழலாக மாறிவிட்டது. ஆனால் என்றாவது இதை சரி செய்ய புகார் அளிக்க வேண்டும் என நமக்குத் தோன்றியது உண்டா?

அராசங்கமும் அரசு அலுவலகமும் நமக்கு சேவை செய்ய தான் இருக்கின்றது என்று பொது சிக்கல்களை தீர்க்க பெருநகர சென்னை மாநகராட்சியில் புகார் அளிக்க 30 நாள் சேலஞ்சு ஒன்றை துவங்கி முடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த மீனா சத்யமூர்த்தி.

நான்கு வருடத்திற்கு முன் அவர் வசிக்கும் தெருவில் இருக்கும் பிரச்சனையை சரி செய்ய புகார் கொடுத்துள்ளார், ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகாரைப்பற்றி தெரிந்துகொள்ள அதிகாரிகளை அணுகினால் ‘நாங்கள் உங்கள் வீட்டில் வேலை செய்பவரா’ என அலட்சியமாக கேட்டதாக தெரிவிக்கிறார் மீனா.

“அந்த கேள்விக்கு பிறகு தான் அவர்கள் பப்ளிக் சர்வன்ட், நமக்காக பணிப்புரியத்தான் ஒவ்வொரு அரசு அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தேன். அங்கிருந்து முதலமைச்சர் அலுவலகத்தில் துவங்கி சென்னை மாநகராட்சி வரை அனைத்திலும் புகார் அளித்துளேன்,” என்கிறார்.

தெரு ஆக்கரமிப்பு, சாக்கடை அடைப்பு, தண்ணீர் பிரச்சனை, சாலை அமைப்பு என தான் தினமும் சந்திக்கும் சிக்கல்களுக்கு அன்றைக்கே புகார் அளிப்பதோடு நிறுத்திவிடாமல் அந்த பிரச்சனை தீரும் வரை அந்த புகாரை பின்பற்றுகிறார் மீனா. இவரோடு இது நின்றுவிடக் கூடாது என்பதற்காக 30 நாள் சேலஞ்சு அறிமுகம் செய்து தினமும் ஓர் பிரச்சனையை புகார் அளித்துள்ளார், முகநூல் மூலம் இதைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது நண்பர்களை இதில் ஈடுபடச் செய்துள்ளார் மீனா.

30 நாள் சேலஞ்சில் இதுவரை 28 புகார்கள் அளித்துள்ளார் மீனா, அதில் 18 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதம் உள்ள புகார்கள் நெடுஞ்சாலை பகுதியில் உள்ளதால் சீரமைக்க நாட்கள் ஆகிறது; அதை பின்பற்றி கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார். அதோடு இவருடன் இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டுள்ள தனது நண்பர்களையும் ஊக்குவித்து வருகிறார்.

“பொது பிரச்சனைகளுக்கு புகார் அளித்தால் நமக்கு சிக்கல் வந்துவிடும் என பலர் பயப்படுகிறார்கள். உண்மையில் நாம் முறையாக புகார் அளித்தால் அவர்கள் வேலை செய்ய பெரும்பாலும் தவறுவதில்லை,” என்கிறார்.

அதிலும் இப்பொழுது புகார் அளிப்பது மிகவும் சுலபமாக உள்ளது; இதைச் செய்ய நேரமில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார். ஒரு பெண் தொழில்முனைவராக இருந்துகொண்டு தன்னால் இதை செய்ய முடிகிறது என்றால் நிச்சயம் அனைவராலும் முடியும் என குறிப்பிடுகிறார் மீனா.

“இரண்டு நிமிடம் செலவழித்தால் போதும்; 1913 என்ற எண்ணுக்கு அழைத்து தெரு மற்றும் வார்ட் எண்ணை தந்தால் போதும் நமது புகார் ஏற்றுக்கொள்ளப்படும். சொன்ன நேரத்தில் பிரச்சனை சரி செய்யப்பட்டதா என்பதை தெரிந்துக்கொள்ள நமக்கு மீண்டும் அழைப்பு வரும். இல்லை என்றால் உயர் அதிகாரிகளுக்கு புகார் போகும்.”

தான் அளித்த பெரும்பாலான புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. சரி செய்ய முடியாமல் போன புகார்களுக்கு முக்கியக் காரணம் சென்னை மாநகராட்சியில் போதுமான நிதி இல்லை. அதிகாரிகள் இதற்கான நிதி இன்னும் எங்களுக்கு வந்து சேரவில்லை என சில சிக்கல்களை தீர்க்க தாமதித்தனர். இது போன்ற புகார்களுக்கு அதிக நேரமும், பின்பற்றலும் தேவை என்கிறார்.

இது மட்டுமின்றி, அறப்போர் இயக்கம், உறவுகள் அமைப்பு என மற்ற அரசு சாரா சமூக அமைப்பில் தன்னார்வலராக ஈடுப்பட்டிருக்கும் இவர், இதை செய்வதை தனது கடமையாக பார்க்கிறாரே தவிர சிரமமாக இல்லை. மேலும் உறவுகள் அமைப்பு மூலம் ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதி மரியாதை செய்து புதைக்கவும் தனது உதவிக் கரங்களை நீட்டியுள்ளார்.

“பெண்கள் கல்லறைக்கு செல்லக்கூடாது, அதிலும் மாதவிடாய் காலங்களில் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என பலர் அறிவுரைக் கூறுகின்றனர். ஆனால் எனக்கு பிடித்த மன அமைதி தரக்கூடிய சமூக சேவையில் நான் ஈடுபட்டுக் கொண்டுதான் இருப்பேன்...” என்கிறார்.

அதனால் குடிமக்கள் முக்கியமாக மக்கள் எதற்கும் அஞ்சாமல் துணிந்து செயலில் இறங்க வேண்டும். நமக்கு மாற்றம் வேண்டும் என்றால் நாம் முதல் அடி எடுத்து வைத்தாலே முடியும் என முடிக்கிறார் இந்த சமூக ஆர்வலர். 

Related Stories

Stories by Mahmoodha Nowshin