உள்ளூர் மொழி உள்ளடக்கத்திற்கு பிரகாசமான எதிர்காலம்! 

0

இந்தியர்கள் பாலிவுட்டை நேசிக்கின்றனர், அதோடு பாலிவுட் போக்குகள் போல இந்தியர்களின் விருப்பங்கள் மற்றும் மாறும் மனநிலையை வேறு எதுவும் திறம்பட பிரதிபலிப்பதில்லை. ஆல்ப்ஸ் மலை, வெளிநாட்டு இடங்களுக்கு பதிலாக சிறிய மற்றும் பழைய நகரங்களின் குறுகிய தெருக்கள் காணப்படுகின்றன. ஹாலிவுட் படங்களை நகலெடுப்பதற்கு பதில் தேசியத்தன்மை வாய்ந்த படங்களை உருவாக்க முயற்சிக்கப்படுகிறது. 

2018 ம் ஆண்டின் அதிக மற்றும் ஐந்தாவது அதிக வருவாய் ஈட்டிய பாலிவுட் படங்களான டங்கல் மற்றும் சுல்தான், ஹரியானாவில் சிறிய நகரப்பகுதியை மையமாகக் கொண்டு, ஹரியானா சொல்வழக்கில் உள்ளூர் கதையை அழகாக சித்தரித்தன. இந்தியா அனைத்து வகையான பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொடர்பில் பிராந்திய மற்றும் உள்ளூர் மொழியின் மீதான நேசத்தை கொண்டிருக்கிறது. மற்றவற்றைவிட டிஜிட்டல் பரப்பில் இது அதிகமாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் இந்த போக்கை கவனத்தில் கொண்டாக வேண்டும்..

சிந்தனைக்கு சில விவரங்கள் இதோ: எங்களுடைய சமீபத்திய அறிக்கையான (கே.பி.எம்.ஜியுடன் இணைந்து), #இந்தியா போக்குகள் 2018; டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கும் போக்குகள்’ தரும் தகவல் படி, இந்தியாவில் தற்போது 512 மில்லியன் இந்தி மொழி பேசுபவர்கள் மற்றும் 500 மில்லியன் இந்திய மொழி பேசுபவர்கள் உள்ளனர். இந்தியாவில் ஆங்கில மொழி பேசுபவர்கள் 125 மில்லியன் இருந்தாலும் அவர்களில் 0.3 மில்லியன் பேரே அதை முதல் மொழியாக பேசுபவர்கள். மற்றவர்கள் 22 பிராந்திய மொழிகளில் ஒன்றை பேசுபவர்களாக இருக்கின்றனர். 

இந்தியாவில் 460 மில்லியன் இணைய பயனாளிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2021ல் 635.8 மில்லியனாக உயர உள்ள நிலையில், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய ஆன்லைன் சந்தையாக இருக்கிறது. பரந்த அளவிலான இணைய பயனாளிகள் டிஜிட்டல் பயன்பாடு மற்றும் வருவாயை பெருக்க உதவி வரும் நிலையில், இந்தியர்களின் தேவையை இனியும் நிராகரிக்க முடியாது.

கே.பி.எம்.ஜி இந்தியா மற்றும் கூகுள்–ன் அண்மை ஆய்வு இரண்டு முக்கிய விஷயங்களை தெரிவிக்கிறது:

1. இந்திய மொழி இணைய பயனாளிகள் ஆண்டு விகித அடிப்படையில் (CAGR) 18 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கில மொழி பயனாளிகளில் இது 3 சதவீதம் தான்.

2. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 10 புதிய பயனாளிகளில் 9 பேர் இந்திய மொழி பயனாளியாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்திய வளர்ச்சிக்கதை மெட்ரோக்களில் இருந்து முதல் மற்றும் இரண்டாம் அடுக்கு நகரங்களுக்கு மாறியிருக்கிறது. இந்த மக்கள்தொகை ஆங்கிலத்தைவிட பிராந்திய மொழிகளை விரும்புகிறது. இந்திய மொழி பயனாளிகளில் 99 சதவீதம் பேர் மொபைலில் இணையத்தை அணுகும் நிலையில், சிறிய நகரங்களில் வசிக்கும் இந்தியர்கள் குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் மற்றும் மலிவு டேட்டா திட்டங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். 

அதிகரிக்கும் உபரி வருமானம், விருப்பங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மேம்பட்டுள்ள டிஜிட்டல் அறிவு, இந்திய மொழி உள்ளடக்கத்தை அணுகும், அரசு சேவைகள், வரி விளம்பரங்கள், செய்திகள், பரிவர்த்தனை சேவைகள் ஆகியவற்றை பிரதானமாக இணையத்தில் பெரும் புதிய இந்திய பிறந்திருக்கிறது.

எண்ணிக்கையில் உள்ள வலுவை அங்கீகரிக்கும் யுவர்ஸ்டோரி.காம் நிறுவனர் மற்றும் சீப் எடிட்டர் ஷரத்தா சர்மா,

“உயர்ந்து கொண்டே இருப்பதுதான் ஒரே வழி. ஏற்கனவே ஆங்கிலம் பயன்படுத்தாதவர்கள் இணையத்தில் பெரிய அளவில் உள்ளனர். ஸ்மார்ட்போன்கள் மேலும் வாங்கக் கூடியதாக மாற உள்ள மற்றும் டேட்டா பண்டமாக மாறும் நிலையில், இணைய கட்டணம் இந்த அளவு மலிவாக இருந்ததில்லை. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே செய்யும். அதே நேரத்தில், மேலும் பல சேவைகள் டிஜிட்டல்மயமாகி வருகின்றன- டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நிதிச்சேவைகள் மேலும் எண்ணற்ற மக்களை நிறுவனமய பொருளாதாரத்திற்குள் கொண்டு வரும் என்பதால், அனைவரையும் உள்ளடக்கிய நிதிச்சேவைகளுக்கும் பெரிய ஊக்கமாக அமைகிறது. டிஜிட்டல் சேவைகள் வளர்ச்சி அடைய, பயனாளிகளை அவர்கள் மொழியில் சென்றடைய வேண்டும்,”என்கிறார்.

88 சதவீத இந்திய மொழி பயனாளிகள் ஆங்கிலத்தைவிட உள்ளூர் மொழிகளில் டிஜிட்டல் விளம்பரங்களால் ஈர்க்கப்பட உள்ள நிலையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகரிக்கும் இந்திய மொழி உள்ளடக்க தேவையை பூர்த்தி செய்ய முயன்று வருகின்றன. கூகுள் நிறுவனம் ஏற்கனவே கூடுதலாக 8 இந்திய மொழிகளில் குரல் வழி தேடல் வசதியை அறிமுகம் செய்துள்ளது. 15 இந்திய மொழிகளில் இமெயில் முகவரி ஆதரவை அளிப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. 

இந்தியாவில் தனது பிராண்ட் உத்தியை மாற்றியுள்ள அமேசான் இந்தியா, மூன்று இந்திய மொழிகளில் விற்பனையாளர்களுக்கான ஆதரவை அறிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 17 மொழிகளில் நிகழ்ச்சிகளை தயாரிக்க இந்திய ஸ்டுடியோவையும் துவக்கியுள்ளது. இந்தியாவில் உண்மையான வளர்ச்சி என்பது பிராந்திய மொழி இணைய பயனாளிகளிடம் தான் அமைந்துள்ளது என்பது தெளிவாகியுள்ளது.

சமூக வலைப்பின்னல் மேடைகள் மற்றும் தரமான பிராந்திய மொழி உள்ளட்டகத்திற்கான தேவைக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப, ஆர்வமுள்ள இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நாட்டின் வெகுமக்களை சென்றடைய பிராந்திய மொழிகளை நாடுகின்றன. பின்னர் மொழி சேவையை சேர்ப்பதற்கு பதில் துவக்கத்தில் இருந்தே உள்ளூர்மயமாக்கப்பட்டதாக செயலிகள் மற்றும் சேவைகள் உருவாக்கப்படுகின்றன.

உள்ளுர் மொழி உள்ளடக்கம் மற்றும் சமூக வலைப்பின்னல் வசதியை வழங்கும் செயலியான ’ஷேர்சேட்’ 2015 ல் கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகமானது முதல் 10 மில்லியன் டவுண்லோடை எட்டியுள்ளது. இதே போல வீடியோ பகிர்வு செயலியான கிளிப் ஆப்பும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு வருகிறது. பல உள்ளூர் மொழிகளில் செயல்படும் இந்த செயலி பயனாளிகள் சிறிய வீடியோ கிளிப்களை உருவாக்கி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.

உள்ளூர் மொழிகளில் சேவைகளை உருவாக்குவதற்காக, கேஸ்டார்ட்டில் நாங்கள், வர்த்தகத்திற்கான பல மொழி செயற்கை நுண்ணறிவு சேவையான Vernacular.ai- ல் முதலீடு செய்துள்ளோம். ஏ.ஐ/ என்.எல்.பி மேடையை அடிப்படையாக கொண்டு, வெர்னாகுலர் வர்த்தகங்கள் பல்வேறு கட்டங்களில் பல மொழி வாசகர்களுடம் தொடர்பு கொள்ள தேவையான பொருட்கள் மற்றும் திரவுகலை குரல் மற்றும் அரட்ட ஊடகமாக கொண்டு வழங்க உள்ளது.

இது பற்றி விவரிக்கும், Vernacular.ai, இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ சவுரப் குப்தா, 

“நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்கள் சிலவற்றை வாடிக்கையாளராக கொண்டுள்ள நிலையில், மேலும் அதிக மொழிகளுக்கு ஆதரவு அளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். உலக உள்ளூர் மொழிகளுக்கான உள்ளூர் மொழி இயந்திரமாக விளங்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். உள்ளூர் பயனாளிகளுக்கு உண்மையான தீர்வு அளிக்க, வர்த்தகங்கள் பயனாளிகள் போல பேச வேண்டும், இதற்கு புதிய மொழிகளுக்கான ஆதரவு மட்டும் போதாது, மொழி மாற்றம், மொழி கலப்பு ஆகியவற்றோடு உச்சரிப்புகள், சொல்வழக்குகள் ஆகிய சவால்களும் இருக்கின்றன,”என்கிறார்.

கலாரி கேபிடலில், எங்களுடைய ஆதரவு பெற்ற நிறுவனங்கள் –யுவர் ஸ்டோரி, பாப் எக்ஸோ, ஸ்கூப்வூப் – தங்கள் உள்ளடக்கத்தை உள்ளூர் மொழிகளில் விரிவாக்கம் செய்துள்ளன. உள்ளூர் மொழி வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது பற்றி, பாப் எக்சோ நிறுவனர் மற்றும் சி.இ.ஓ பிரியங்கா கில், 

”இந்தியில் நல்லவளர்ச்சி பெற்று வருகிறோம். இந்த மொழியில் மூல உள்ளடக்கத்தை உருவாக்குகிறோம். ஆங்கில பயனாளிகள் பற்றி அறிந்த பல விஷயங்கள் இந்தி பயனாளிகளுக்கு பொருந்துவதில்லை. இந்த அமைப்பு தொடரும் என நினைக்கிறேன். எதிர்காலத்தில் பயனாளிகள் உருவாக்கும் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்த விரும்புகிறோம். உள்ளூர் மொழி பயனாளிகளுடன் ஈடுபாட்டை எற்படுத்திக்கொள்ள இது சிறந்த வழி,” என்கிறார்.

ஷ்ரத்தா சர்மா, நெல்சன் மண்டேலாவை மேற்கோள் காட்டுகிறார்: “ஒரு மனிதரிடம் அவருக்கு புரிந்த மொழியில் பேசினால், கருத்துகள் அவரது தலைக்குள் செல்கிறது. அவரது மொழியில் பேசினால், அவரது இதயத்திற்கிள் செல்கிறது.”

“இந்தியா முழுவதும் உள்ள வாசகர்கள் மற்றும் நேயர்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் மொழியில் கதைகளை உரக்க பேசுவதே யுவர் ஸ்டோரியில் எங்கள் இலக்காக கொண்டுள்ளோம்,”என்கிறார் அவர்.

ஸ்கூப்வூப் இணை நிறுவனர், சி.இ.ஓ சாத்விக் மிஸ்ரா, “இப்போது நாம், ஆங்கிலம், இணைய சொல்வழக்குகள், ஹாஷ்டேக், உள்ளூர் மொழி, இமோஜி ஆகியவற்றை பயன்படுத்தி வருவதாக துணிந்து கூறலாம். ஆக மொழியே பல அடுக்குகள் கொண்டதாக மாறியுள்ளது. உள்ளூர் மொழி அல்லது உள்ளூர்மொழியாக்கப்பட்ட ஆங்கிலம் உரையாடலுக்கான பிரதான மொழியாக உருவாகும் நிலை உள்ளது,” என்கிறார். ஸ்கூப்வூப் அடையாளம் காணும், புதிய கலாச்சார அடையாளத்தை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்திய மொழி பயனாளிகள் மத்தியில் இணைய ஏற்பு தொடர்பாக போக்குகள் தெளிவாக உள்ளன. 42 சதவீதத்தில் தமிழ் அதிக இணைய ஏற்பை கொண்டுள்ளது. மராத்தி, வங்காளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகள் இந்திய இணைய பயனாளிகளில் 30 சதவீதம் கொண்டதாக இருக்கும். பாரதத்தில் உள்ள 100 கோடி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில் துரிதம் தேவை. பெரும்பாலான குரல் தேடல் மொழிபெயர்ப்பில் காணாமல் போகின்றன. அல்லது தவறான முடிவுகள் வருகின்றன. மொழியை மாற்றாமல் மகாராஷ்டிராவில் உள்ளவர் வங்காளியுடன் தகவல் பகிர இடைமுகம் இல்லை.

ஆங்கில விசைப்பலகையில் பெரிய சவால்கள் உள்ளன. தொழில்நுட்ப முன்னேற்றத்தில், பயனர் நோக்கில் இடைவெளி உள்ளன.

“உருவாக்குவதற்கும், சொல்வழக்குகள், உள்ளூர் பிரயோகங்களை புரிந்து கொள்ளவும், எழுதப்பட்ட வார்த்தைகள் தான் மிகப்பெரிய சவால். மேலும் உள்ளூர் மொழிகளில் எழுத சரியான திறமைகளை கண்டறிவது செலவு மிக்கதாக இருக்கிறது என்கிறார் சாத்விக்.  வீடியோ உள்ளடக்கத்தில் பெரிய வாய்ப்பு இருப்பதை கூறும், சாத்விக்,

“கல்லாமை மற்றும் மொழி புலமை தூக்கி வீசப்படும் குரல் மற்றும் வீடியோ சேவைகளில் தான் உண்மையான வாய்ப்பு உள்ளது,” என்கிறார் அவர்.

இந்த கருத்தை ஷ்ரத்தா ஆதரிக்கிறார். “மூல உள்ளடக்கம் உள்ளூர் அளவில் உருவாக்கப்பட வேண்டும் என்றாலும், மொழி காரணமாக விநியோக வரம்பு அதை செயலிழக்க வைக்கிறது. டிஜிட்டல் உள்ளடக்கத்தை சிறந்த முறையில் பயன்படுத்த புத்திசாலித்தனமான இயந்திர மொழி பெயர்ப்பு முக்கியம். உள்ளூர் மொழிகளில் பயனர் பழக்கவழக்கங்கள் தொடர்பாக பெரிய அளவில் தரவுகள் இருந்தால் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திர கற்றல் சிறந்த பலனை அளிக்கும். அதுவரை விநியோகம் முக்கியம்.”

உள்ளூர் மொழிகள் என்பது மிகப்பெரிய சவால் தான். இதற்கான வழியை பிரியங்கா விளக்குகிறார். 

“உள்ளுர் மொழி சவால் எல்லோருக்கும் பொருந்தும் ஒரு தீர்வால் எதிர்கொள்ள முடியாது. விவரங்கள் மற்றும் நுணுக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். நிறைய விஷயங்களில் ஏற்கனவே கற்றதை மறக்க வேண்டும். உள்ளூர் மொழி பயனாளிகள் பரப்பு மற்றும் அவர்கள் பிரச்சனைக்கான தீர்வுகளில் ஆழமான புரிதல் தேவை”.

22 மொழிகள், 1,600 + அதிகமாக மொழி வழக்குகள், என இந்தியா உண்மையில் பலமொழிகள் கொண்ட நாடாக இருக்கிறது. தண்ணீர் சுவையை போலவே இந்தியாவில் ஒவ்வொரு சில கிலோமீட்டருக்கும் பேசப்படும் மொழிகள் மாறுகிறது எனும் வாசகம் இதை சரியாக உணர்த்துகிறது. உள்ளூர் மொழி மற்றும் டிஜிட்டல் இந்தியாவின் சாத்தியங்களை பயன்படுத்திக்கொள்ள, உள்ளூர் மொழி இடைமுகம் மற்றும் உள்ளடக்கம் மூலம் இணைய பயன்பாடு மற்றும் டிஜிட்டல் அதிகாரமளிப்பதை மேற்கொள்ளூம் இந்திய இணைய சூழலை உருவாக்க வேண்டும். நீங்கள்பேசும் மொழியில் தானே நீங்கள் அதிகம் இயல்பானவர்களாக இருப்பீர்கள். 

இந்தியாவில் உள்ளுர் மொழிகளில் உள்ள வாய்ப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆங்கில கட்டுரையாளர்: வாணி கோலா, பெங்களூருவை தலைமையகமாக கொண்ட கலாரி கேபிடல் நிர்வாக இயக்குனர். தமிழில்: சைபர்சிம்மன் 

பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரை, ஆசிரியரின் சொந்த எண்ணங்களை பிரதிபலிப்பது, கேஸ்டார்ட் அல்லது கலாரியின் கருத்துக்கள் அல்ல. கலாரி தற்போதும் யுவர் ஸ்டோர், பாப் எக்ஸோ, ஸ்கூப்வூப்பில் முதலீடு செய்துள்ளன. கேஸ்டார்ட் Vernacular.ai. முதலீடு செய்துள்ளது. இக்கட்டுரை மீடியம் வலைப்பதிவில் முதலில் வெளியானது.

(பொறுப்பு துறப்பு: கட்டுரையில் தெரிவிக்கப்படும் கருத்துகள் அதன் ஆசிரியருடையவை, யுவர்ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை.)