தமிழக வெள்ளத்தில் மக்களை மீட்பதில் சாமானியர்களுக்கும் சிறப்பிடம்!

0


தமிழகத்தில் இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்பைத் தாங்குவதில் முதன்மையாகவே விளங்குகிறது கடலூர். சுனாமி, தானே புயல் தாக்குதல்களுக்குப் பின்னர், கடலூரை புரட்டிப் போட்டிருக்கிறது, சமீபத்தில் பெய்து தீர்த்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை.

மாநிலம் முழுவதும் மழை காரணிகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, அதிகாரபூர்வமாக 169 (நவ.23 நிலவரப்படி) ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கடலூரைச் சேர்ந்தவர்கள் என்பது கவலையை இன்னும் கூட்டும் தகவல்.

10,000-க்கும் அதிகமான குடிசைகள் முற்றிலும் சேதம், நூற்றுக்கணக்கான கால்நடைகள் இழப்பு, பல்லாயிர ஹெக்டேர் பயிர்கள் நாசம், பல இடங்களில் சாலைகள் மோசமான வகையில் சேதம் என ஒட்டுமொத்தமாக கலங்கியது கடலூர்.

யாரும் எதிர்பாராத விதமாக, நவம்பர் 8 நள்ளிரவு முதல் மறுநாள் 9-ம் தேதி வரை பலத்த காற்றுடன் கூடிய பெருமழைதான் கடலூரில் உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம். சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாத குக்கிராமங்களுக்குள் மீட்புப் படையினர் செல்வதற்கு முன்னரே வெள்ளத்தில் மக்கள் அடித்துச் செல்லப்பட்டது பெருந்துயரம்.

எனினும், அந்த வெள்ளத்தில் சிக்கிய மக்களில் பலரையும், தன் உறவுகளோடு சேர்த்து காப்பாற்றிய உள்ளூர்வாசிகள் பலரும் அன்றைய தினம் மீட்பர் அவதாரம் எடுத்தது உண்மை. தன் உயிரையும் பொருட்படுத்தாத குடிமக்கள் சிலர் தண்ணீரில் நீந்தி பல உயிர்களைக் காத்திருக்கிறார்கள். அதனால், பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்தது என்பதே மறுக்க முடியாத உண்மை என்கின்றார், கடலூரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நேரில் பார்வையிட்ட சமூக ஆர்வலர் சதீஷ் தர்னாஸ்.

அந்த வகையில், கடலூரின் பெரியக்காட்டுப்பாளையம் என்ற ஊரில் 11 பேரை காப்பாற்றியவர் ரவிச்சந்திரன். அன்றைய தினத்தின் அசாதாரண சூழலை பகிர்ந்துகொண்ட அவர், "அதிகாலையில் இருந்தே மழை கொட்டிக்கொண்டிருந்தது. நாங்கள் குழந்தைக்காக சமைத்துக் கொண்டிருந்தோம். ஒன்பது மணியளவில் சூறைக்காற்றுடன் கூடிய மழையில் எங்கள் குடிசை வீடு ஆட்டம் காண ஆரம்பித்தது. எங்கள் பகுதியில் உள்ள ஓடையிலும் தண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது.

வீட்டிலேயே இருந்துவிட்டால் அவ்வளவுதான் என்று உடனடியாக என் மகனையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு பக்கத்துத் தெருவில் உள்ள கான்கிரீட் வீடு ஒன்றில் அடைக்கலம் ஆனோம். இதேபோல், பலரும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர். நாங்கள் இருந்த வீட்டில் கண்ணன் என்பவரும், 5 குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர் இணைந்துகொண்டனர். மழை அதிகமாகத் தொடங்கியது. மதியம் 2 மணியளவில் எங்கிருந்துதான் அப்படி ஒரு வெள்ளம் வந்தது என்று தெரியவில்லை. பெரிய ஓடையிலும் சின்ன ஓடையிலும் தண்ணீர் நிரம்பி, ஊரையே வெள்ளம் துவம்சம் செய்தது" என்றார். அந்தத் தந்தை மேலும் விவரித்தவை...

"நாங்கள் இருந்த வீடும் மூழ்கத் தொடங்கியது. ஒரு வழியாக நானும் கண்ணனும் சேர்ந்து ஒவ்வொருவருவாக தண்ணீரில் நீந்தி அழைத்துக்கொண்டு வீட்டின் மேற்கூரையில் பத்திரமாக அடைக்கலம் ஆனோம். அப்போது, பக்கத்து வீட்டில் ஒருவர் குரல் எழுப்பினார். அங்கு பார்த்தபோது, அவர் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். ஒரு பெரிய புடவை மூலம் அவரை இழுத்து பத்திரப்படுத்தினோம். எங்களைப் போலவே பலரும் மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். பலரும் காப்பாற்றப்பட்டனர். அப்படி இருந்தும் அன்றைய தினமே 10 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்ததை நினைத்தான் இப்போதும் மனம் கனக்கிறது."

மீட்புப் பணியில் சாமானியர்கள்...

தமிழகத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், மாவட்ட நிர்வாகத்தினர் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.

வருவாய் துறையினர், காவல் துறையினர், தீயணைப்புப் படையினர், பொதுப்பணித் துறையினர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகங்களும் முடுக்கிவிடப்பட்டன. இத்துறை அதிகாரிகளுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவற்படை வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மத்தியப் படைகளும் நன்றிக்குரியவர்கள்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, மீட்புப் பணிகளில் ரவிச்சந்தின் போன்ற சாமானியர்களின் பங்களிப்பு மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில், வானிலை ஆய்வு மையத்தின் வழக்கமான கனமழை எச்சரிக்கைதான் என்று நினைத்து சற்றே அலட்சியம் காட்டப்பட்ட நிலையில், தாழ்வானப் பகுதிகளை அடித்து நொறுக்கியது மழையும் காற்றும். அது தொடர்பான தகவல் மீட்புப் படையினருக்குச் சென்று முழு வீச்சில் பணிகள் முடுக்கிவிடுவதற்குள் களமிறங்க வேண்டிய நிலை. அந்தச் சூழலில்தான் ரவிச்சந்திரன் போன்றோர் தங்கள் உயிரையும் துச்சமென கருதி நேரடி மீட்புப் பணியில் இறங்கினர்.

குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் வெள்ளத்தில் மூழ்கிய இடங்கள் ஆயிரக்கணக்கான மக்களை மீட்பதற்கு மீனவர்கள் உறுதுணை புரிந்துள்ளனர். அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, காவல் துறையினருக்கும் தீயணைப்புப் படையினருக்கும் மீனவர்கள் கடைசி வரை துணைநின்று மக்களை மீட்டனர்.

அத்துடன், மீட்புப் பணிகளுக்கு இடையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நிவாரண உதவிகளை அளிப்பதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பெரும்பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

படங்கள், தகவல் உதவி: சதீஷ் தர்னாஸ்

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்