இந்திய கிராமப்புறங்களின் மேம்பாட்டில் பங்களிக்கும் ஸ்டார்ட் அப்கள்!

0

இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால் இந்த வளர்ச்சி நகர்புறங்களில் மட்டும்தான் காணப்படுகிறதா? நகர்புறங்களைக் காட்டிலும் கிராமப்புறங்கள் ஜிடிபி, வேலை வாய்ப்பு, கல்வியறிவு, சுகாதாரம் என ஒவ்வொரு அம்சங்களிலும் தொடர்ந்து பின் தங்கியே காணப்படுகிறது. 

நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் காணப்படும் பிரிவினைகளை அகற்ற அரசு சாரா நிறுவனங்களும் அரசாங்கமும் முயற்சிகள் எடுக்கும் நிலையில் சமூக ஸ்டார்ட் அப்களும் பின்தங்கியவர்களுக்கு உதவி வருகிறது.

இந்திய கிராமப்புறங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஏழு ஸ்டார்ட் அப்களை யுவர் ஸ்டோரி பட்டியலிட்டுள்ளது.

நிறமை (Niramai)

பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவ தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்பான ’நிறமை’ கீதா மஞ்சுநாதா, நிதி மாதூர் ஆகிய நிறுவனர்களால் 2016-ம் ஆண்டு நிறுவப்பட்டது. ’நிறமை’ என்கிற சமஸ்கிருத வார்த்தைக்கு ’நோயிலிருந்து விடுபடுவது’ என பொருள்படும். 

இந்த ஸ்டார்ட் அப் தொடர்பு ஏற்படாத வகையில் கதிர்வீச்சு இல்லாத பாதுகாப்பான முறையில் புற்றுநோய் ஸ்கிரீனிங் செய்யும் மென்பொருளை உருவாக்கியுள்ளது

Niramai என்பது Non-Invasive Risk Assessment with Machine Intelligence ஆகும். இதில் மார்புப் பகுதியை ஸ்கேன் செய்ய அதிக தெளிவான வெப்ப உணர்திறன் சாதனம் பயன்படுத்தப்படுகிறது. படங்களை ஆய்வு செய்ய க்ளௌட் சார்ந்த பகுப்பாய்வு தீர்வுகள் பயன்படுத்தப்படுகின்றன. மார்பக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய SaaS தீர்வுகள் (செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல்) பயன்படுத்தப்படுகிறது.

டிஜிட்டல் மேமோகிராஃபி 3,500 ரூபாய் ஆகும் நிலையில் நிறமை பயன்படுத்தி ஸ்கேன் செய்ய 1,000 ரூபாய் மட்டுமே ஆகும். இதனால் இந்தத் தீர்வு சிறு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் ஏற்றதாக உள்ளது. ஸ்கிரீனிங் முகாம்களை ஏற்பாடு செய்து கிராமப்புறங்களில் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த இந்த ஸ்டார்ட் அப் லாப நோக்கமற்ற நிறுவனங்களுடனும் அரசு ஏஜென்சிக்களுடனும் இணைந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேமோகிராஃபி 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே எடுக்கப்படும். அவ்வாறின்றி இவர்களது தீர்வு எந்தவித பக்கவிளைவுகளுமின்றி அனைத்து வயதுப் பெண்களுக்கும் இருக்கும் கட்டிகளைக் கண்டறியும் என்கின்றனர் ’நிறமை’ நிறுவனர்கள். 

மருத்துவமுறை ஆய்வுகளில் கண்டறியப்படும் கட்டிகளைக் காட்டிலும் ஐந்து மடங்கு சிறிதாக இருக்கும் கட்டிகளையும் இந்த மென்பொருள் கண்டறியும்.

2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறமை நிறுவனம் ஃப்ளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சல், Pi Ventures, ஆக்சிலர் வென்சர்ஸ், 500 ஸ்டார்ட் அப், அன்கூர் கேப்பிடல் ஆகியோரிடம் இருந்து சீட் நிதியாக வெளியிடப்படாத தொகையை உயர்த்தியுள்ளது.

Gaatha

அஹமதாபாத்தைச் சேர்ந்த Gaatha ஒரு மின்வணிக தளம். இதில் பாரம்பரியமான இந்திய கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் மாணவர்கள் மூன்று பேரின் ப்ராஜெக்டாக 2009-ம் ஆண்டு துவங்கப்பட்ட முயற்சி இது. 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுமிரன் பாண்டே, ஷிவானி தர், ஹிமான்ஷு கர் ஆகியோரால் Gaatha நிறுவப்பட்டது.

குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், காஷ்மீர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கைவினைஞர்களால் வடிவமைக்கப்பட்ட ஆடைகள், ஆபரணங்கள், ஓவியங்கள், ஸ்டேஷனரி போன்றவை இந்தத் தளத்தில் கிடைக்கிறது. மூங்கில், மரம், தோல், இழைகள், நகர்புறக் கழிவுகள் உள்ளிட்ட மறுசுழற்சிக்குட்பட்ட பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். 

கைவினைஞர்களும் வாடிக்கையாளர்களும் இணைய உதவும் இந்நிறுவனர்கள் கைவினைப் பொருட்களை பொருளாக மட்டும் அல்லாமல் அது குறித்த தகவல்களையும் வெளிப்படுத்த உதவுகின்றனர்.

ஒரு மாதத்திற்கு 450-600 ஆர்டர்கள் பெறுவதாக இந்த ஸ்டார்ட் அப் தெரிவிக்கிறது. ஒவ்வொரு பிரிவிற்கும் ஏற்ப பொருட்களின் விலை மாறுபடுகிறது. ஸ்டேஷனரி பொருட்களின் ஆரம்ப விலை 250 ரூபாய். ஓவியங்களின் ஆரம்ப விலை 10,000 ரூபாய் வரை ஆகும். மத்திய அரசாங்கத்திடம் இருந்து 2009-ம் ஆண்டு 10 கோடி ரூபாய் நிதியுதவி பெற்ற NID அஹமதாபாத் நிறுவனத்தால் இன்குபேட் செய்யப்பட்ட மூன்று நிறுவனங்களில் Gaatha Handicrafts Pvt Ltd நிறுவனமும் ஒன்றாகும்.

ரோஜ்கர் தாபா

சாய் பாயிண்ட் கண்டு உந்துதல் பெற்ற வினோத் பாண்டே 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷீஹோர் மாவட்டத்தில் ‘ரோஜ்கர் தாபா’ நிறுவினார். 

தேநீர் மற்றும் சிற்றுண்டி வகைகள் விற்பனை செய்யப்படுவதுடன் ரோஜ்கர் தாபா வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்கள் பரிமாறப்படும் மையமாகவும் செயல்படுகிறது.

வேலை வாய்ப்புகளைத் தேடி வருவோரும் தங்களது பொருட்களை விற்பனை செய்ய விரும்புவோரும் இந்த ஸ்டாலில் தகவல்களைக் காட்சிப்படுத்தலாம். அதேபோல் பணியிலமர்த்துவோரும் தங்களது தேவைகளை காட்சிப்படுத்தலாம். ரோஜ்கர் தாபா உள்ளூர் விற்பனையாளர்கள் மற்றும் பணியிலமர்த்துவோரிடம் இருந்து தகவல்களை சேகரித்த பிறகு அரசு ஏஜென்சிகள், திறன் மையங்கள், அரசு சாரா நிறுவனங்கள், மாவட்ட வேளாண் மையங்கள், சிறு உள்ளூர் வணிகங்கள் போன்றவற்றுடன் வேலை தேடுவோரை இணைக்கிறது. கிராமத்தைச் சேர்ந்த பத்து பேர் தாபாவிலேயே பணியிலர்த்தப்பட்டுள்ளனர்.

தேநீர் மற்றும் சிற்றுண்டி வகைகளின் விற்பனை, பணியிலமர்த்துவோர் மற்றும் வேலை தேடுவோர் காட்சிப்படுத்தும் விளம்பரங்கள் ஆகியவற்றின் மூலம் ரோஜ்கர் தாபா வருவாய் ஈட்டுகிறது. இரண்டு ரோஜ்கர் தாபாவுடன் வினோத்தின் வணிகம் சுயநிதியில் இயங்கிவருகிறது. ஒரு மாதத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவையளிப்பதாக இந்நிறுவனர் தெரிவிக்கிறார். கடந்த ஒன்பது மாதங்களில் வேலை வாய்ப்பு தொடர்பான 20 கண்காட்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் ஐந்து வகையான விவசாய உற்பத்திகளை விற்பனைக்கு காட்சிப்படுத்தியுள்ளது.

வினோத் தனக்குக் கிடைத்த லாபம் அனைத்தையும் கிராமங்களின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்துவதாக தெரிவிக்கிறார். தற்போது ரோஜ்கர் தாபாவிற்கு பெண்கள் வருகையை அதிகரிக்கச் செய்ய பெண்களை பணியிலமர்த்த திட்டமிட்டுள்ளார்.

மாத்ரித்வா (Maatritva)

நாசிக் சேர்ந்த மொபைல் ஹெல்த் தளமான மாத்ரித்வா 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரித்தீஷ் அகர்வால், அபிஷேக் வெர்மா, கரிமா தோசர் ஆகியோரால் நிறுவப்பட்டதாகும். இந்தத் தளம் பேறுகால உதவியாளர்களுக்கானதாகும். 

கர்ப்பிணிப் பெண்களுக்கு நேரும் சிக்கல்களைத் தவிர்த்து அதிக ஆபத்து நிறைந்த கர்ப்பங்களைக் கண்டறிந்து கண்காணித்து பாதுகாப்பான பிரசவத்தை உறுதி செய்வதே இந்த தளத்தின் நோக்கமாகும்.

2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி மஹாராஷ்டிராவில் உள்ள அம்போலி என்கிற பழங்குடி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் முதல் சோதனை முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் பிராந்திய மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொபைல் நெட்வொர்க் இணைப்பு இல்லாத சில பகுதிகளில் இணைய வசதி இன்றி பயன்படுத்தவும் முடியும். பேறுகால உதவியாளர்கள் சோதனைக்கு பிறகு கர்ப்பிணிப் பெண்களின் மருத்துவ தகவல்களை பதிவு செய்ய இந்தத் தளத்தை பயன்படுத்துகின்றனர். 

இதில் கிடைத்த வரவேற்பு காரணமாக மாத்ரித்வா வளர்ச்சியடைந்தது. தற்போது இதில் 1,000 பயனர்களும் 500 பேறுகால உதவியாளர்களும் இணைந்துள்ளனர். 13,000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸ்கீரினிங் செய்தப்பட்டுள்ளது. மாத்ரித்வா ஆஷா பணியாளர்களையும் இணைத்துக்கொண்டுள்ளது. இவர்கள் கர்ப்பிணிப் பெண்களின் வீடுகளுக்குச் சென்று பார்வையிடுவார்கள். அதிக ஆபத்து நிறைந்த கர்ப்பம் என கண்டறியப்படும் பெண்கள் சிறப்பு மருத்துவரிடம் பரிந்துரைக்கப்படுவார்கள்.

நிறுவனர்கள் மூவரும் பரிந்துரைக்கான மாட்யூல்கள், தகவல்களை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லுதல், மகப்பேறுக்கு தயார்படுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்களை இணைக்க விரும்புகின்றனர்.

உறவு லேப்ஸ்

ஹைதராபாத்தைச் சேர்ந்த உறவு லேப் 100 சதவீதம் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலைப் பயன்படுத்தி காற்றில் இருந்து தண்ணீரை எடுக்க பல்வேறு தயாரிப்புகளை உருவாக்கியுள்ளது. 25 வயது ஸ்வப்னில் ஸ்ரீவஸ்தவ் நிறுவிய உறவு லேப்ஸ் புதிய வகை பரவலாக்கப்பட்ட நீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.

உறவு லேப்ஸ் தயாரிப்புகளில் ஒன்றான SWAG வளிமண்டல காற்றில் இருந்து நீராவியை திரவமாக்கும் முறையில் குடிநீரை சேகரிக்கிறது. காற்று வடிகட்டிகளில் இந்த தயாரிப்பு இணைக்கப்படும். இந்த காற்று வடிகட்டி மூன்று நிலை சுத்திகரிப்பு செயல்முறை மூலம் தூசுத் துகள்கள் வடிகட்டப்படும். தினமும் 200 லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்வதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது. EVA என்கிற அக்வா பேனல் சூரிய சக்தி மூலம் தண்ணீரை சேகரிக்கிறது. காப்புரிமை நிலுவையில் உள்ள தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு வறண்ட பகுதிகளிலும் பயன்படுத்தக்கூடிய எளிய சாதனம் என இந்நிறுவனத்தின் நிறுவனர் குறிப்பிடுகிறார்.

சுத்தமான நீருக்கான மாற்றை வழங்குவதையும் இந்திய கிராமப்புறங்களில் நீர் பாதுகாப்பை அதிகப்படுத்துவதையும் ஸ்வப்னில் நோக்கமாகக் கொண்டுள்ளார்.

கோகூப் (GoCoop)

பெங்களூருவைச் சேர்ந்த கோகூப் ஆன்லைன் சமூக சந்தைப்பகுதியாகும். இது கூட்டுறவுகளையும் சமூகம் சார்ந்த நிறுவனங்களையும் நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களுடன் இணைக்கிறது. இந்த ஸ்டார்ட் அப் 2005-ம் ஆண்டு சிவ தேவிரெட்டி அவர்களால் நிறுவப்பட்டது.

கோகூப் கைவினை விநியோக சங்கிலியின் வெளிப்படைத்தன்மையை வழங்குகிறது. மொத்த வியாபாரிகள், சில்லறை வர்த்தகர்கள், ப்ராண்டுகள் போன்றோர் கைகளால் பின்னப்படும் நார்களை நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்க உதவுகிறது. இதனால் விலை சமன்படுத்தப்பட்டு விற்பனையாளர்களும் வாங்குவோரும் பலனடைகின்றனர். 

கோகூப் வலைதளத்தில் 30,000 தயாரிப்புகள், 15,000 பதிவு செய்யப்பட்ட பயனர்களும், 250-க்கும் அதிகமான விற்பனையாளர்களும், 4,500-க்கும் மேற்பட்ட கூட்டுறவுகளும் இணைந்துள்ளது.

2016-ம் ஆண்டு இன்ஃபோசிஸ் இணைநிறுவனர் க்ரிஸ் கோபாலகிருஷ்ணன், சாஹா ஃபண்ட், யூனிடஸ் சீட் ஃபண்ட், இண்டியன் ஏஞ்சல் நெட்வொர்க் ஆகியோரிடமிருந்து கோகூப் தளம் சீரிஸ் ஏ நிதியாக அறிவிக்கப்படாத தொகையை உயர்த்தியுள்ளது.

Chikitsak

2014-ம் ஆண்டு மிலிந்த் நாயக் துவங்கிய Chikitsak பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவ தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்பாகும். ஆரம்ப சுகாதார பராமரிப்பை அணுகமுடியாத கிராமப்புற மக்களுக்கு ஹெல்த்கேர் தீர்வுகளை வழங்கும் நோக்கத்துடன் இந்த ஸ்டார்ட் அப் செயல்படுகிறது. Chikitsak சிறியளவிலான எளிதாக பயன்படுத்தக்கூடிய மருத்துவ ஸ்கிரீனிங் கிட்டை தொழில்நுட்பத்துடன் இணைத்து தீர்வளிக்கிறது. முழுமையான திறன் பெறாத ஹெல்த்கேர் ஊழியர்கள் வாயிலாக இந்த தீர்வு வழங்கப்படுகிறது.

இந்த ஸ்டார்ட் அப் பெரும்பாலும் தொற்று அல்லாத நோய்களில் கவனம் செலுத்தி விலை மலிவான ஸ்கிரீனிங் வசதியை வழங்குகிறது. இதை நோயாளிகள் தங்களது வீட்டிலேயே பயன்படுத்தலாம். இதன் விலை 200 ரூபாய்க்குள் அடங்கிவிடும். நோயாளியின் உயரம், உடல் எடை, நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, பார்வை சோதனை போன்ற அடிப்படை தகவல்கள் நேரடியாக பதிவு செய்யப்படும். இதனால் மனித தலையீட்டினால் ஏற்படக்கூடிய தவறுகள் தவிர்க்கப்படுகிறது. 

க்ளௌட் சார்ந்த எலக்ட்ரானிக் மெடிக்கல் ரெகார்ட் சிஸ்டமில் சேமிக்கப்பட்ட தரவுகள் அச்சுகளாகவும் மொபைல் வாயிலாகவும் கிடைக்கும்.

இந்த ஸ்டார்ட் அப் மூன்று நாள் பயிற்சி பட்டறையில் ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கிறது. அதன் பிறகு இவர்கள் இந்த கிட்டை மக்களிடம் எடுத்துச்செல்ல தயாராகிவிடுவார்கள். மக்களிடையே நோய் தடுப்பு அணுகுமுறையை அறிமுகப்படுத்துவதற்கு இந்த ஊழியர்கள் உதவுவதாக மிலிந்த் தெரிவிக்கிறார்.

கர்நாடக அரசாங்கத்தால் இன்குபேட் செய்யப்பட்ட இந்நிறுவனம் இதற்கு முன்பு பெங்களூருவின் NASSCOM Startup Warehouse-ல் செயல்பட்டு வந்தது.

ஆங்கில கட்டுரையாளர் : தெபோலினா பிஸ்வாஸ் | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL