உத்வேக 'வெள்ளி'த்திரை | நம்மில் பலரது பார்வையை மாற்றும் 'குக்கூ'!

0

"மச்சி, நேத்து ஒரு மேட்டர் படம் பார்த்தேன். செம்மையா இருந்துச்சு."

"அப்டியாடா? டேய்.. சொல்றா, சொல்றா..."

"........ இதான் கதை. அதுல ஒரு சீன். ............ செமயா பின்னியிருப்பாங்க."

"சூப்பர்டா"

பி.ஏ. ஆங்கில இலக்கியம் வகுப்பின் இடைவெளியில் எனக்கும் மூர்த்திக்கும் இடையே நடக்கும் உரையாடல்களின் பிட்டுதான் இது.

மூர்த்தி... பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவன். என் வகுப்பில் இருந்த எல்லா நண்பர்களுமே அவனிடம் ஈடுபாடு காட்டுவார்கள். வலிந்து சென்று பேசுவார்கள். உதவிகளால் திணறிடிப்பார்கள். அவ்வப்போது பண உதவிகளும் செய்வது உண்டு. ஆனால், இதுபோன்ற அணுமுறைகளைப் பின்பற்றாத என்னிடம்தான் மூர்த்தி நெருக்கமாக இருந்தான். உண்மையில், என் செலவுக்கு அவன் பாக்கெட்டில் இருந்து உரிமையுடன் பணத்தை எடுத்துக்கொண்டு, "அப்புறம் தரேண்டா மச்சி" என்று சொன்ன நாட்கள்தான் அதிகம்.

என் மீது அவன் எல்லாரையும் விட கூடுதல் நெருக்கம் காட்டவைத்ததே இந்த அணுகுமுறைதான் என்பது பின்னர்தான் தெரியவந்தது. ஆம், அவன் மீது மற்றவர்கள் பகிர்ந்த அன்பில் இரக்கம் மட்டுமே தூக்கலாக இருந்தது. நான் மட்டும்தான் அவனை இயல்பானவாக கருதிப் பழகினேன். எனது மற்ற நண்பர்களை எப்படிப் பார்த்தேனோ, அவர்களுடன் எப்படிப் பழகினேனோ அப்படியே அவனிடமும் பழகினேன். அதுதான் அவனுடனான நெருக்கத்தை வெகுவாக கூட்டியது. என்னை அவனது நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் அழைத்துச் சென்றது.

இலக்கியம் பகிர்ந்தோம். கதைகள் பகிர்ந்தோம். சினிமா பகிர்ந்தோம். எல்லாவற்றையும் விட இளம்பருவ நட்புக்கே உரிய பல அந்தரங்கங்களை பகிரங்கமாக பகிர்ந்தோம். ஒரு கட்டத்தில், என்னை அவன் கலாய்ப்பதுக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் பெருகியது. இன்னமும் அவனைப் போல் மிகுதியாக கலாய்க்கப்படும் ஆனந்தத்தை எந்த நண்பரும் எனக்குத் தரவில்லை!

குக்கூ. பத்திரிகையாளர் ராஜுமுருகனின் முதல் திரைப் படைப்பு. எழுத்தின் மூலம் வாசகர்களை வசீகரிக்கத் தெரிந்த வித்தையை திரை மூலம் பார்வையாளர்களுக்குக் கடத்த நினைத்து, அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றார். அவரது பின்புலம்தான் வழக்கமான மசாலாக்களில் இருந்து விலகி, சாதாரண மனிதர்களின் இயல்பு வாழ்க்கையோடு கூடிய சினிமாவை கொடுக்க வைத்திருக்கக் கூடும்.

நாம் அனுப்பிய வாட்ஸ்ஆப் தகவலில் இரட்டை டிக்-கிலும் நீலச் சாயம் பூசப்பட்டுவிட்டதா என்று கூட கவனிக்க நேரமின்றி பரபரப்புக்கும் நகர வாழ்க்கையில், ரயில் நிலையங்களில் சின்னச் சின்ன வியாபாரம் செய்தும், பாட்டுப் பாடியும் பிழைக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை கவனிக்க முடியாமல் போவதை யாரையும் குறை சொல்ல முடியாததுதான். ஆனால், அவர்களின் வாழ்க்கையை இயன்றவரையில் யதார்த்தமாக பதிவு செய்ய முற்பட்ட விதத்தில் 'குக்கூ' எனும் சினிமா இனிக்கிறது.

அப்படி, சென்னை ரயில் நிலையங்களில் வியாபாரம் செய்து பிழைப்பதுடன், பாட்டுக் கச்சேரிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் பாடகர் தமிழ். சுயமரியாதையை எந்தச் சூழலிலும் விட்டுத் தராத கல்லூரி மாணவி சுதந்திரக்கொடி. கண்பார்வை இல்லாத இவ்விருவரின் காதலும் காதல் நிமித்தமுமே குக்கூ-வின் அடித்தளம்.

பெரும்பாலான இளம் காதலுக்கே உரிய மோதல் துவக்கமும், அன்பின் வெளிப்பாடுகளும் கொண்ட இந்தக் காதல் அத்தியாயத்தில் பிரச்சினைகளும் அதையொட்டிய போராட்டங்களும் உள்ளன, வழக்கமான சினிமா காதல் போலவே. ஆனால், இங்கே கதாபாத்திரங்களும், அதையொட்டிய காட்சி அமைப்புகளும்தான் தனித்துவத்தையும் புது அனுபவத்தையும் நமக்குப் பகிர்கின்றன.

பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், சாலையோரங்கள் என பல பொது இடங்களிலும் 'காணவில்லை' சுவரொட்டியை நம்மில் பலரும் கடக்கிறோம். அந்தச் சுவரொட்டியில் உள்ள புகைப்படத்தைக் கூட நாம் சரியாக கவனிக்க மாட்டோம். அந்தக் காணாமல் போன மனிதர் யார்? அதனால் பதறும் மனிதர்கள் யாவர்? என்றெல்லாம் நாம் பெரும்பாலும் கவனித்திருக்க வாய்ப்பு இல்லை. நேரமும் இல்லை.

அந்தச் சாதாரண போஸ்டருக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மனித வலிகளைத் தேடிய ஒரு பயணத்தில் சுவாரசியமானதும் கொண்டாட்டங்கள் நிறைந்ததுமான கதையைச் சொல்லத் தொடங்கிய விதத்திலேயே கூக்கூ மீது கவனம் குவிய ஆரம்பித்தது.

சாதாரண மனிதர்களின் அசாதாரண வாழ்க்கை முறை, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் உலகம், நம் சமூகத்தையும் அரசியலையும் அவர்கள் பார்க்கும் கண்ணோட்டம் முதலானவற்றை எந்தச் சிக்கலும் இல்லாமல் மிக எளிதாக விவரிக்கிறது திரைக்கதை.

உண்மையான சமூக ஆர்வம் என்பது? ஆர்வக்கோளாறால் தோன்றும் சமூக ஆர்வம் என்பது என்ன என்பதை ரீடர், ஸ்கிரைப் மூலம் குக்கூ ஜாலியாகவே நமக்கு அடையாளம் காட்டும். பார்வையற்ற மாணவர்களுக்காக புத்தகத்தை வாசிப்பவர் ரீடர்; தேர்வு எழுதும் சிரமத்தை போக்க ஒருவர் உதவுபவர் ஸ்கிரைப்.

இன்று ரீடர், ஸ்கிரைப் சேவைகளுக்கு உண்மையான ஆர்வத்துடன் பல சமூக அமைப்புகளும், இளம் மாணவர்களும் அர்ப்பணிப்புடன் பங்களிப்பதைப் பார்க்க முடிகிறது. ஒரு பார்வையற்ற மாணவருக்கு ரீடராக இருக்கும் ஒருவர், அந்த மாணவர் தனது படிப்பை முடித்து கிடைக்கும் பலன்களைவிட, அவருக்கு ரீடராக இருப்பவர் அடையும் நன்மைகள் அதிகம் என்றால் அது நம்பத்தகுந்த வியத்தகு உண்மையே.

ஆனால், எல்லா ரீடருமே பார்வையற்ற மாணவர்களின் நெருங்கிய வட்டத்துக்குள் எளிதில் சென்றுவிட முடியாது. எனக்குத் தெரிந்து ஒரு லெக்சரர், ஒரு மாணவருக்கு ரீடராக இருந்தார். அந்த மாணவர் படித்து முடித்து வேலைக்கும் போய்விட்டார். இன்றும் இருவரும் தொடர்பில் உள்ளனர். எல்லா ரீடருக்குமே இது எளிதில் சாத்தியம் ஆகாது. இதுபோன்ற உன்னத உறவுகள் எப்படி வலுப்பட்டது என்று சற்றே ஆழமாக யோசித்துப் பார்த்தால் கிடைக்கும் ஒரே விஷயம்... இயல்பாக அணுகுதல். ஆம், அந்த மாணவரை அந்த ரீடர் இயல்பாக அணுகினார். இயல்பாக நட்புடன் பழகினார். அதுவே உறவை வலுப்படுத்தியது.

கமல்ஹாசனின் முக்கியமான படங்களுள் ஒன்றான 'ராஜபார்வை' தொடங்கி, இயக்குநர் மணிவண்ணனின் எழுத்துப் பங்களிப்புடன் பாராதிராஜா இயக்கிய 'காதல் ஓவியம்' வரை பார்வையற்றவர்களை முக்கியக் கதாபாத்திரமாகக் கொண்ட படங்கள் வந்துள்ளன. அந்தப் படங்களைப் பார்க்கும்போது, நம்மை அறியாமல் அதிகரிக்கும் உணர்வுகள்... இரக்கம், பரிவு, பரிதாபம். பல முக்கியப் படைப்பாளிகளின் படைப்புகளில் உறுதுணைக் கதாபாத்திரங்களிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வந்திருக்கின்றனர். ஆனால், அந்தக் கதாபாத்திரங்கள் அனைவருமே பார்வையாளர்களுக்கு 'உச்'சு கொட்டவே பயன்படுத்தப்படுகின்றனர்.

இந்த மேம்போக்கு அணுமுறையை உடைத்தது குக்கூ. முழுக்க முழுக்க மாற்றுத்திறனாளி கதாபாத்திரங்களையே அதிக எண்ணிக்கையில் கொண்ட இந்தப் படத்தில், ஒரு சீனில் கூட அவர்கள் மீது எனக்கு பரிதாப உணர்வே வரவில்லை. பார்வையாளர்கள் மீது பரிதாப உணர்வைத் திணிக்காத வகையில், 'பார்வையற்றவர்களின் உலகம் துயரம் மிகுந்தது அல்ல' என்ற நிஜத்தைச் சொன்னது இந்தப் படம்.

ஆரம்பத்தில் இருந்தே தமிழையும் சுதந்திரக்கொடியையும் இயல்பானவர்களாகே நாம் பார்க்கத் தொடங்குகிறோம். அப்படித்தான் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களின் கொண்டாட்டங்களின் போது குதூகலம் அடைகிறோம். காதலை ரசிக்கிறோம். பிறகு, அவர்களின் பிரச்சினைகளைப் பார்க்கும்போது, நமக்கு பரிதாபம் வருவதில்லை. மாறாக, அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதன் மீதே கவனம் செலுத்துகிறோம். சாதாரண ஹீரோ, ஹீரோயின்களைப் போலவே அவர்களையும் பார்க்கிறோம். ஒரு கட்டத்தில் அவர்கள் பார்வையற்றவர்கள் என்ற விஷயத்தையே நாம் மறந்துவிடும் அளவுக்குப் போகிறது.

இதுதான் கூக்கூ-வை தனித்துப் பார்த்திட காரணமான முக்கிய அம்சம். பார்வையாளர்களின் பரிதாபத்தைக் காசாக்கக் கூடிய எத்தனையோ சாத்தியங்கள் இருந்தாலும், பார்வையற்றவர்களின் வாழ்க்கையும் இயல்பானதுதான் என்ற உண்மையைச் சொல்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சிரத்தைகள் பாரட்ட வைக்கிறது.

மீபத்தில் ஓர் இடத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்தேன். அங்கே ஒரு பார்வையற்ற இளைஞர் அவசர அவசரமாக வந்தார். தான் செல்லும் இடத்தைச் சொல்லி, "இப்போது பஸ் வருமா?" என்று கேட்டார். "நானும் அந்த இடத்துக்குதான் போகணும். பஸ் அடிக்கடி வராது" என்றேன்.

"அய்யோ அரை மணி நேரத்துல அங்க போகணுமே... ஆட்டோ எவ்ளோ கேப்பாங்க?"

"சரி, ரெண்டு பேரும் போலாம். ஃபேரை ஷேர் பண்ணிக்கலாம்" என்றேன்.

அந்த இளைஞர் உற்சாகமானார். இருவரும் பயணித்தோம். பேசினோம். இடம் வந்தது. இறங்கினோம். ஆட்டோ டிரைவர் 120 ரூபாய் கேட்டார்.

என்னிடம் அப்போது ஓரளவு பணம் இருந்தது. ஆனால், 60 ரூபாயை அந்த இளைஞரிடம் கேட்டு வாங்கி, டிரைவரிடம் காசை கொடுத்தேன்.

இப்போதும் அந்த இளைஞர் என்னுடன் தொடர்பு இருக்கிறார்.

ஆம், அந்த இளைஞரை சக மனிதராக மட்டுமே பார்த்து, 'நீ கொடுக்க வேண்டிய 60 ரூபாயை எடு' என்று கேட்ட இயல்பான அணுகுமுறைதான் எங்களை நண்பர்களாக்கியது.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையின் இயல்பான பதிவும், அவர்களை நாம் இயல்பாக அணுக - மறைமுகமாகச் சொல்லிக் கொடுக்கும் பாடமாகவும் அமைந்த குக்கூ-விலும் சினிமா விமர்சகர்கள் சில பல குறைகளைச் சொல்வது உண்டு. அது, சினிமா மொழி சார்ந்த குறைபாடுகள். அதில் முக்கியமான ஒரு குறை, படத்தின் நீளம் அதிகம் என்பது.

ஆனால், குக்கூவில் நான் விரும்பியது, அந்த நீளத்தைதான். கூடுதலாக அரை மணி நேரம் நம்மால் ஒரு பார்வையாளராகக் கூட பொறுமை காக்க முடியாத வகையிலான வாழ்க்கையைக் கொண்ட மனிதர்கள், எவ்வளவு இயல்பாக ஒவ்வொரு நொடியையும் ரசித்து அனுபவித்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை முழுமையாக உணர்வதற்கு இந்நீளம் உதவியது.

ம்... இன்னொரு விஷயம்.

பார்வையற்ற மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் படம் முழுக்க முழுக்க வசீகர வண்ணங்களுடனும் வெளிச்சத்துடனும் படமாக்கப்பட்டிருக்கும். குறிப்பாக, பாடல் காட்சிகளில் கொள்ளை அழகுக் காட்சிகளைப் பார்க்கலாம்.

"எங்கள் வாழ்க்கை வெளிச்சமும் வண்ணமும் நிரம்பியதாகவே இருக்கிறது. எங்கள் வாழ்க்கையை நீங்கள் இருந்து பார்க்கும் இடம்தான் இருட்டு" என்று இருள் சூழ்ந்த திரையரங்கில் அமர்ந்திருந்த பார்வையாளர்களிடம் குக்கூ கதாபாத்திரங்கள் சொல்லாமல் சொன்னதாக உணர்கிறேன்.

                                                                        *******

உத்வேக வெள்ளித்திரை இன்னும் விரியும்...

முந்தைய பதிவு: உத்வேக 'வெள்ளி'த்திரை |'பிசாசு'வை நேசிக்க வைத்த மிஷ்கினின் மாற்றுப் பாதை!

செல்வாவுக்கு பெண்கள் மீது அப்படி ஒரு 'மயக்கம் என்ன'?

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்