வெள்ளம் சூழ்ந்த சென்னையில் படகுகள் மூலம் மீட்பு பணியில் ஓலா!

0

சென்னையில் மழை - வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் மக்கள் பலரையும் மீட்கும் பணியில் ராணுவமும் விமானப் படையும் தீவிரமாக ஈடுபட்டுள்ள வேளையில், தாழ்வான பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கு 'ஓலா' (Ola) போன்ற நிறுவனங்களும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

தொழில்ரீதியிலான படகு ஓட்டுநர்கள் மற்றும் மீனவர்களை நியமித்து, சென்னையில் உள்ள ஓலா குழு, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் படகுகள் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், அவரச உதவிகள் தேவைப்படும் இடங்களுக்கு படகுகள் அனுப்பப்படுகிறது.

அத்தியாவசிய தேவைகள் மிகுதியாக உள்ள பகுதிகளுக்கு இந்தப் படகுகள் மூலம் உணவுப் பொருட்களும், குடிநீரும் கொண்டுசெல்லப்பட்டு வருகிறது. இரண்டு படகு ஓட்டுநர்களைக் கொண்டு இயக்கப்படும் ஒவ்வொரு படகிலும் தலா ஒரு சுற்றுக்கு ஐந்து முதல் ஒன்பது பேர் வரை பயணிக்க முடியும். படகு ஓட்டுநர்களுக்கு மழைகோட்டுகளையும், மீட்கப்படும் மக்களுக்கு குடைகளையும் ஓலா வழங்கி வருகிறது. படகு ஓட்டுநர்கள் மற்றும் மீனவர்களைக் கொண்டு மீட்புப் பணிகள் மேற்கொள்வதற்காக, உள்ளூர் மீனவர்களும், சென்னை ஸ்போர்ட்ஸ் ஃபிஷ்ஷிங் நிறுவனமும் துணைபுரிகின்றனர்.

இந்தப் படகு சேவை அடுத்த மூன்று நாட்களுக்குக் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. எனினும், நகரில் வெள்ள பாதிப்பு தொடர்ந்தால், இந்தச் சேவை நீட்டிக்கப்படும் என்று ஓலா குழு தெரிவித்துள்ளது. இந்த மீட்பு நடவடிக்கை சீராக மேற்கொள்வதற்கு, ஓலா ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் படகு ஓட்டுநர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

ஒலா நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவு வர்த்தகத் தலைவர் ரவி தேஜா கூறும்போது, "சென்னையில் பெய்த கனமழை காரணமாக, குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு, தங்களால் இயன்ற வழிகளில் மீட்பதற்கு உதவுவது என எங்கள் குழு முடிவு செய்தது. நகரில் போக்குவரத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதுதான் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்றார்.

தமிழகத்தில் நவம்பர் 9-ம் தேதியில் இருந்து கனமழை தொடர்பான சம்பவங்களில் 71 பேர் உயிரிழந்தனர். தாம்பரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் இன்னமும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அங்கு 2000-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கித் தவிக்கும் நிலை நீடிக்கிறது. விமானப் படையின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ராணுவமும் படகுகள் மூலம் மக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

யுவர்ஸ்டோரி பார்வை

இயற்கைப் பேரிடர் காலங்களில் தொழில் நிறுவனங்களும் சமூகப் பொறுப்புகளைத் தன் தோளில் சுமப்பது என்பது இது முதல் முறை அல்ல. முன்னதாக, கடந்த 2013 ஜூலையில் உத்தராகண்ட் வெள்ளப் பேரிடரின்போது, ஏர்பிக்ஸ் டான் இன் (airpix.in) போன்ற தொழில் நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வான்வழி கண்காணிப்பு மற்றும் மருந்துகள் வழங்கும் பணிகளுக்காக சிறிய வகை தானியங்கி விமானங்களை வழங்கியது.

நேபாள பூகம்பத்தின்போது, பிரதமரின் நிவாரண நிதிக்கு ஓலா நிறுவனம் தனது ஓலா மணியில் இருந்து ஒரு பகுதி தொகையை அளித்தது. பே-டிம், ஃப்ரீசார்ஜ், ஃபிளிப்கார்ட், கெட்டோ, ஜோம்பே, ஷாப்க்ளூஸ் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு உதவி புரிந்தன. இத்துடன், பண உதவிக்காக மிஸ்டு கால், தினசரி பரிமாற்றங்களில் ஒரு சதவீதம், ஆலோசனை அறைகள் ஏற்பாடு, சிறிய வகை தானியங்கி விமான வசதிகள், மருத்துவர்களை அனுப்புவது மற்றும் இதுபோன்ற பல வழிகளிலும் உதவிகள் வழங்கப்பட்டன.

ஓலாவின் இந்த நடவடிக்கை, ஒரு நல்ல சமூக நோக்கம் கொண்டதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேவேளையில், மிகச் சரியான தருணத்தில் சந்தைப்படுத்தும் வித்தை என்றும் இதைச் சொல்லலாம். நாடு முழுவதும் ஓலா எனும் பிராண்ட் மீது நேர்மறை எண்ண ஓட்டம் பரவச் செய்யும் செயல் இது.