’ப்ளூம் எனர்ஜி’ நிறுவனர் டாக்டர்.ஸ்ரீதரை சந்தித்த கமல் ஹாசன்: தமிழகத்தின் எதிர்காலத்தை வளமாக்க ஆலோசனை!

1

நடிகர் கமல் ஹாசன் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தில் உள்ளார். ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் வரும் 10-ம் தேதி சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டுள்ளார். பெரும் மதிப்புமிக்க ஹார்வர்ட் பிசினஸ் பள்ளியில் இரண்டாவது முறை கமல் ஹாசன் சிறப்புரை ஆற்ற்வுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை ஹார்வர்ட் பல்கலையில், தமிழ்நாடு மற்றும் மாநிலத்தில் தற்போதுள்ள பிரச்சனைகள் பற்றி பேசவுள்ளார். 

”தமிழ்நாடு என்ற தலைப்பில் பேசவுள்ளேன். நான் இந்த தலைப்பை தேவையின் காரணமாக தேர்ந்தெடுத்தேன். நம் மாநிலம் மிகவும் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. அது என்னை ஒரு மனிதனாக மட்டுமின்றி ஒரு தமிழனாக பெரிதும் பாதித்துள்ளது,” என்றார்.

அண்மைக் காலமாக அரசியலில் ஈடுபட்டும், தமிழ்நாட்டில் நிலவிவரும் பிரச்சனைகள் குறித்தும் ஆழமாக பேசிவரும் கமல் ஹாசன், அவற்றை மக்களிடையே பெரிய அளவில் எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் அவர்களுக்கு உண்மை நிலைமை தெரியவேண்டும் என்றும் எண்ணுகிறார். 

”என் மாநிலம் உயர்ந்த இடத்தை அடையவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என் மாநிலத்தின் வளர்ச்சி, என் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும். நம் நாட்டின் நலந்தா பல்கலைகழகத்தைப் போன்று ஹார்வர்ட்; கற்றலுக்கான ஒரு சிறந்த இடம்,” என்றார். 
ப்ளூம் எனர்ஜி நிறுவனர் Dr.ஸ்ரீதர் உடன் கமன் ஹாசன்
ப்ளூம் எனர்ஜி நிறுவனர் Dr.ஸ்ரீதர் உடன் கமன் ஹாசன்

இதை அடுத்து அவர் அமெரிக்காவில் வசிக்கும் பல்வேறு பிரபலங்களையும், முக்கிய பிரமுகர்களையும், சாதனையாளர்களையும் சந்தித்து வருகிறார். அந்த வகையில், கலிபோர்னியா மாகாணம் சன்னிவேலில், தமக்குத் தேவையான மின்சாரத்தை தாமே தயாரித்துக் கொள்ளும் ’ப்ளூம் எனர்ஜி’ Bloom Energy என்ற நிறுவனத்தை நிறுவிய டாக்டர்.கே.ஆர்.ஸ்ரீதரை சந்தித்தார் கமல். 

’ப்ளூம் பாக்ஸ்’ தொழில்நுட்பத்தின் உதவியோடு சொந்தமாக மின்சாரம் தயாரித்து வழங்குவது பற்றி ஸ்ரீதரிடம் கேட்டு அறிந்தார். தமிழ்நாட்டில் அதைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதித்தனர். 

‘ப்ளூம் எனர்ஜி’ நிறுவனம் நிறுவுவதற்கு முன், டாக்டர்.ஸ்ரீதர், அரிசோனா பல்கலைகழகத்தின் விண்வெளி தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தின் தலைவராக இருந்தார். மார்ஸ் ஆக்சிஜன் எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தில் சுத்தமான ஆக்சிஜன் தயாரிக்கும் திட்டத்திற்கு தலைமை தாங்கி அதற்கான பிரத்யேக கூடமும் உருவாக்கியவர். 

நாசா, மார்ஸ்-2011 திட்டத்தை கைவிட்டதும், டாக்டர் ஸ்ரீதர், ஆக்ஸிஜனையும்  ஹைட்ரஜனையும் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில் ஈடுபட்டார். இதுவே ’ப்ளூம் எனர்ஜி’ உருவாகக் காரணமாகியது.

இந்தச் சந்திப்பு குறித்து பேசிய டாக்டர் ஸ்ரீதர், ப்ளூம் எனர்ஜி ஆராய்ச்சிக்கூடத்தில் கமல் ஹாசனை வரவேற்பதிலும் தங்கள் நிறுவனத்தைச் சுற்றிகாட்டியதிலும் பெரும் மகிழ்ச்சி கொள்வதாக கூறினார். மேலும், 

“உலகத்தின் பிற நாடுகளிலும் இந்தியாவிலும் மின்சாரம் உருவாக்குதல் குறித்த எங்கள் குறிக்கோளை அவருடன் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. கமல் ஹாசன் எங்கள் திட்டத்தை தமிழகத்தின் கிராமப்பகுதிகளுக்கு கொண்டு செல்வது குறித்து உடனடியாக ஆலோசிக்க  பரிந்துரைத்தார். இந்தச் சந்திப்பும் அதன் மூலம் விவாதிக்கப்பட்டவையும் எதிர்காலத்தில் இத்தகைய திட்டங்களை வகுத்து செயல்படுத்த வழிவகுக்கும் என நம்புகிறேன்,” என்றார்.

இந்தச் சந்திப்பு குறித்து கமல் ஹாசன் குறிப்பிட்டபோது, ’ப்ளூம் எனர்ஜி’ குறித்து தான் தெரிந்து கொண்டதற்கு மகிழ்ச்சி மற்றும் நன்றி என்றார். மேலும் இந்த பெருமுயற்சியின் ஒரு பகுதியாக ப்ளூம் எனர்ஜியின் குறிக்கோள் பற்றி அறிந்ததிலும் தனக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்றார்.

”தமிழ்நாடும் இத்தகைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதன்மை நுகர்வோராக மாறும் எதிர்காலத்தை என்னால் கணிக்க முடிகிறது. தமிழ்நாட்டை உங்களின் இந்தத்  திட்டத்தை வெளிக்கொணரும் தளமாக ஆக்கி உலகம் முழுவதும் விழிப்புணர்வு பெற வழிசெய்யுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். இதனால் இந்தியாவும் தமிழகமும் பெருமையுறும்,” என்று கமல் ஹாசன் கேட்டுக்கொண்டார்.