சங்கீத சாம்ராட் பண்டிட் ஜஸ்ராஜ் வாழ்க்கை போராட்டத்தின் அறியப்படாத சரிதம்!

0

(இளம் வயது ஜஸ்ராஜ் தெற்கு கொல்கத்தாவில் இருந்து மத்திய கொல்கத்தா வரை தன்னுடைய தாயாருக்கான மருந்துக்காக தேடியலைந்த கதை…)

எந்த வெற்றிக்குப் பின்னணியிலும் திரைமறைவில் ஒரு நெடுங்கதை ஒளிந்திருக்கும். வாழ்க்கையில் ஒருவர் சந்திக்கும் போராட்டங்கள் பற்றிய கதைகள் யாருக்காவது, எப்போதாவது தெரிய நேரிடும். ஆனால் சில நேரங்களில் அந்தப் போராட்டங்களின் கதைகள் அல்லது அவை தொடர்பான சம்பவங்கள் குறித்த வரலாறு அந்த மனிதர் அடைந்த வெற்றி என்னும் திரைக்குப் பின்னால் மறைந்து போகின்றன. என்றாவது ஒருநாள் திரையானது விலகி அந்த மனிதர் சந்தித்த வாழ்க்கை போராட்டங்கள் குறித்து உலகம் அறியாத பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன...

ஹிந்துஸ்தானி இசை வானில் கதிரவனைப் போல நீண்ட நெடிய காலம் ஜொலித்து வரும் இசைக்கலைஞர் 'பண்டிட் ஜஸ்ராஜ்' முதிர்ந்த கலைஞராக நம்மிடையே திகழ்ந்து வருகிறார். ஆண்டு முழுதும் எங்கிருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும நவம்பர் மாத இறுதி வாரத்தில் ஹைதராபாத் நகருக்கு அவர் கண்டிப்பாக வருவார். எப்போது அவர் அங்கு வந்தாலும் அவருடைய வாழ்க்கையில் அவர் கடந்து வந்த பாதைகள் மற்றும் போராட்டங்கள் குறித்த நினைவலைகளும் அவரை சூழ்ந்து வரும். ஹைதராபாத் நகரில் தன் கடந்த கால நினைவுகளை மனப்பரப்பில் புதுப்பித்துக் கொள்ளும் வகையில் அவருக்கு ஒரே ஒரு இடம்தான் உள்ளது. அது அவருடைய தந்தையாரின் சமாதி. அங்கு மணிக்கணக்கில் அமர்ந்து சங்கீத உலகில் தன்னுடைய தந்தையிடம் இருந்து வரமாக தனக்கு கிட்டிய இசை என்னும் தானத்தை நெடிய நேரத்துக்கு அசை போட்டு அனுபவித்துக் கொண்டிருப்பார்.

நான்கு அல்லது ஐந்து வயது என்பது ஒன்றும் ஒருவனுக்கு பெரிய வயது அல்ல. அந்த வயதில் தந்தையை இழப்பது என்ற வலியை அதனை கடந்து வந்தவர்களால்தான் உணர முடியும். இந்த சம்பவம் தான் அவருடைய வாழ்க்கை போராட்டத்தின் துவக்கப்புள்ளியாக அமைந்தது.

ஹைதராபாதின் அம்பர் பேட்டில் தந்தையாரின் சமாதிக்கு எதிரில் அமர்ந்து நண்பர் டாக்டர் அர்விந்த் யாதவிடம் மேற்கொண்ட அந்தரங்க உரையாடலில் பல கதைகளையும் சம்பவங்களையும் பண்டிட்ஜி பகிர்ந்து கொண்டார். தன்னுடைய மாபெரும் வெற்றிக்குப் பின்புலத்தில் மறைந்துள்ள தத்துவங்கள் குறித்து மிகவும் தெளிவாக பகிர்ந்து கொண்டார். அவருடைய போராட்டம் இன்றும் தொடர்கிறது என்றும் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு கணத்தையும் தன்னுடைய போராட்டத்தின் தொடர்ச்சியாகவே கருதுகிறார்.

இன்று நாங்கள் கூறப்போகும் இந்தக் கதையானது கொல்கத்தாவில் தனது அன்னைக்கான மருந்துகளை வாங்குவதற்கு தெருத்தெருவாக அலைந்து திரிந்த ஜஸ்ராஜின் கதையாகும். அந்த நாட்களின் நினைவுகளை புதுப்பித்துக் கொள்கிறார். பண்டிட் ஜஸ்ராஜ் அவர் கூறுகையில், “தந்தைக்கு எந்த வகையிலும் பணிவிடைகள் செய்ய இயலாத நிலையில் அன்னையும் நோய்வாய் பட்டிருந்தார், அவரை புற்றுநோய் வதைத்துக் கொண்டிருந்தது. மருத்துவ வசதிகள் மிகவும் குறைந்த 50-களில் புற்றுநோய் எத்தனை கொடிதாக இருந்தது என்பதை இன்று உள்ள வசதிகளுடன் ஒப்பிட முடியாது. மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்துகளை தெற்கு கொல்கத்தாவில் இருந்து மத்திய கொல்கத்தா வரை நடந்து தேடி அலைந்தேன். அந்த நேரத்தில் பல மருந்துக் கடைகளில் அவருக்கு தேவையான மருந்துகள் இருப்பில் இல்லை. இறுதியாக ஒரு கடையில் அந்த மருந்துகள் கிடைத்தபோது அவற்றை வாங்குவதற்கு தேவையான பணம் கையில் இல்லை. அந்த மருந்துகள் அத்தனை விலை உயர்ந்தனவாக இருந்தன. “என் பாக்கெட்டில் இருந்த பணம் அத்தனையும் எடுத்துக்கொடுத்து மீதிப் பணத்தை பிறகு தருகிறேன் என்று கூறினேன். அதற்கு அந்த விற்பனையாளர், “எந்த மருந்து கடையிலாவது எப்போதாவது கடன் தருவார்கள் என்பதை எங்காவது கேள்வி பட்டிருக்கிறாயா? என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

ஆனால் அந்த நேரத்தில் யாரோ ஒருவர் என் தோளின் மீது கையை வைத்து கடைக்காரரிடம் கூறினார்- “இவனிடம் எத்தனை பணம் இருக்கிறதோ அதனை வாங்கிக் கொள். அவன் கேட்கும் எல்லா மருந்துகளையும் கொடு. மீதி பணத்தை என்னுடைய கணக்கில் எழுதிக் கொள்“ என்றார்.

அந்த மனிதர், அந்தக் கடையின் உரிமையாளர். அவருக்கு என்னை எப்படி தெரியும் என்று எனக்கு தெரியவில்லை.

போராட்டம், உழைப்பு, சாதகம் ஆகிய அத்தனையும் வாழ்க்கையில் மிகவும் அவசியமானவை. இவை அனைத்தும் இருந்து, உடன் ஆண்டவனின் கருணையும் இருப்பது மிகவும் அவசியமானதாகும். இறைவன் மட்டுமே நம்முடைய போராட்டங்களில் நம்முடன் எப்போதும் துணை நிற்கிறார், பண்டிட்ஜி தன்னுடைய வாழ்க்கையில் பல்லாயிரக்கணக்கானோருக்கு வழிகாட்டியாக திகழ்ந்திருக்கிறார். பலருக்கும் புதியதொரு பாதையை காட்டுவது போல அமைந்துள்ள பல கதைகள் அவருடைய வாழ்வில் கொட்டிக் கிடக்கின்றன.

மற்றொரு சம்பவத்தை நினைவு கூர்கையில- “தாயாருக்காக மருந்துக்கான ஏற்பாடுகள் செய்தாகிவிட்டது. ஒரு நாளைக்கு இருமுறை ஊசி போடவேண்டும் என்று டாக்டர் கூறினார். இதற்காக வீட்டுக்கு வர ஒரு வருகைக்கு 15 ரூபாய் வேண்டும் என்று கேட்டார். ஒரு நாளைக்கு முப்பது ரூபாய் புரட்டுவது என்பது என்னால் இயலாத காரியமாக இருந்தது, ஆனால் அம்மாவுக்காக என்பதால் நான் டாக்டர் கேட்ட தொகைக்கு ஒப்புக்கொண்டேன். டாக்டர் என் வீட்டில் இருந்து கிளம்பியபோது அவரிடம் நான் கேட்டுக்கொண்டேன்- “இன்று மாலை தயவு செய்து ஆல் இந்தியா ரேடியோ கேளுங்கள். அதில் என்னுடைய பாட்டை ஒலிபரப்புகிறார்கள் என்றேன். அதற்கு அவர் இசையில் எல்லாம் எனக்கு எந்த ஆர்வமும் கிடையாது என்றார். இது தவிர, என் மருமகள் இன்று மாலையில் ஏற்பாடு செய்துள்ள விருந்தில் கலந்து கொள்ள நான் அவசியம் போகவேண்டும். பாட்டு கேட்பதற்கு எல்லாம் எனக்கு நேரமிருக்காது என்றார். மிகவும் விரக்தியடைந்தேன், ஒருமாதிரி சோர்வடைந்தேன்.

ஆனால் மறுநாள் டாக்டர் என் வீட்டுக்கு வந்த போது அவருடைய மனநிலை சற்று மாறியிருந்தது. அவர் என்னிடம், “நான் உன்னுடைய பாட்டை நேற்று கேட்டேன். உனக்கு தெரியுமா? என் மருமகள் வீட்டில்தான் கேட்டேன். அவள் கூறினாள், இந்தப் பாட்டை பாடுகிற ஆள் பாவம். அவனிடம் இசை இருக்கிறது, ஆனால் செல்வம் அவனிடம் தங்கவில்லை என்றாள்.

அந்த மருமகள் பெயர் கீதா ராய். பின்னாளில் கீதா தத் என்ற பெயரில் மிகவும் பிரபல பாடகியாக திகழ்ந்தவர் அவர்.

“அந்த நாளைக்கு பிறகு அந்த டாக்டர் ஒவ்வொரு வருகைக்கும் பெயருக்காக வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே என்னிடம் இருந்து வாங்கிக்கொண்டார். என்னுடைய வாழ்க்கையில் நான் எதற்காவது போராட நேர்ந்த போதெல்லாம் இப்படித்தான் எனக்கு நேர்ந்தன. வாழ்க்கையில் போராட்டங்களால் எப்போதுமே வெற்றி கிடைக்கின்றன” என்கிறார் பண்டிட் ஜஸ்ராஜ்.

அதே நேரத்தில் அந்த வெற்றிகளை தான் என்ற அகந்தையுடன் யாரும் அணுகக் கூடாது. மனிதனுக்கு தன்மீதே அகம்பாவம் தோன்றும் போது அவன் அதோடு முடிந்து போகிறான். அவனுடைய போராட்டத்தின் நோக்கமும் தொலைந்து எங்கோ போகிறது.

பண்டிட் ஜஸ்ராஜ் சில நாட்கள் ஹைதராபாத் நகரின் சிறிய சந்து ஒன்றில் தன்னுடைய இளம் பிராயத்தை கழித்திருக்கிறார். கோலி குடா, சமன், நாம்பள்ளி போன்ற பல இடங்களில் பண்டிட்ஜியின் இளம்பிராயத்து நினைவுகள் தவழ்ந்து கொண்டிருக்கின்றன.

சிறுவயதில் பள்ளிக்கு செல்லும் வழியில் அங்கு இருந்த அந்த ஓட்டலும் அவருக்கு நினைவில் உள்ளது, அந்த ஓட்டலுக்கு வெளியில் சிறிது நேரம் நின்று கொண்டு பேகம் அக்தருடைய கஜல் –

தீவானா பனானாதோ தீவானா பனாதே

வர்னா தக்தீர் தமாஷா நா பனாதே

(பித்தனாக்க வேண்டும் என்றால் பித்தனாக்கு இல்லை தலையெழுத்தை மற்றவர்க்கு வேடிக்கையாக்காதே.

இந்த கஜலை அங்கேயே நின்று கேட்டுக் கொண்டிருப்பார் ஜஸ்ராஜ். இந்த கஜல் அவருடைய பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

பிறகு தபலா வாசிக்கத் துவங்கினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு லாகூரின் மேடை ஒன்றில் பிரதான பாடகராக தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டார்.

பண்டிட்ஜி மிகவும் ஆழமாக நம்புவது- இந்த நீண்ட வாழ்நாளில் ஏதாவது உத்வேகம் வேண்டும் என்றால், நம்முடைய காரியத்தை செய்து கொண்டே இருக்கவேண்டும். இசையில் ஆர்வம் இருந்தால் இசையை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இசையை அசை போட்டுக்கொண்டே இருக்க வேண்டும், இறைவனின் பெருங்கருணைக்காக எப்போதும் காத்திருக்க வேண்டும்.

சந்திப்பு மற்றும் கட்டுரையாளர்: Dr.Arvind Yadav

தமிழில்: ராகவன் தம்பி