இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் 6-வது இடத்தில் திருச்சி!

1

மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டுள்ள தூய்மை கணக்கெடுப்பு – 2017 பட்டியலின்படி இந்தியாவின் தலை சிறந்த தூய்மை நகரங்கள் பட்டியலில் திருச்சி 6-வது இடத்தை பிடித்துள்ளது. முதல் பத்து தூய்மை நகரங்களில் முதல் இரண்டு இடங்களை மத்திய பிரதேசத்தை சேர்ந்த இந்தோர் மற்றும் போபால் நகரங்கள் முறையே பிடித்துள்ளன. அதேபோல் மூன்றாம் இடத்தை ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த விசாகப்பட்டினமும், நான்காம் இடத்தை குஜராத் மாநிலத்தை சேர்ந்த சூரத்தும் ஐந்தாம் இடத்தை கர்நாடகாவின் மைசூர் நகரமும் பிடித்துள்ளன.

தூய்மைக் கணக்கெடுப்பு பட்டியலில் முதல் 50 இடத்தை பிடித்துள்ள நகரங்களில் நான்கு நகரங்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் திருச்சிராப்பள்ளி 6-வது இடத்திலும், கோயம்புத்தூர் 16-வது இடத்திலும், கும்பகோணம் 37-வது இடத்திலும், ஈரோடு 42-வது இடத்திலும் உள்ளன.

வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்தல், அதனை பிரித்தெடுத்தல் மற்றும் அப்புறப்படுத்துதல், திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாதநிலை உள்ளிட்ட திடக் கழிவு மேலாண்மை, மக்களின் கருத்து, சுயேட்சையான கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் இந்த தூய்மை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த கணக்கெடுப்பினை இந்திய தரக் குழு இந்தியாவின் 434 நகரங்களில் 17,500 இடங்களில் இந்த சோதனைகளை 421 மதிப்பீட்டாளர்களைக் கொண்டு நடத்தியது. மேலும் இந்த கணக்கெடுப்பினை 55-பேர் அன்றாட அடிப்படையில் கண்காணித்தனர்.

தமிழ் நாட்டில் இந்த கணக்கெடுப்பு மேலே குறிப்பிட்ட நான்கு நகரங்கள் உட்பட 28 நகரங்களில் நடைபெற்றது. இந்த நகரங்களின் தரவரிசை வருமாறு:

மதுரை – 57, தாம்பரம் - 62, திருப்பூர் - 68, ஓசூர் - 82, வேளாங்கண்ணி - 84, திண்டுக்கல் - 106, வேலூர் - 108, காரைக்குடி - 110, புதுக்கோட்டை - 113, ராஜபாளையம் - 125, காஞ்சீபுரம் - 127, சேலம் - 135, பல்லாவரம் - 155, ஆவடி - 169, நாகர்கோவில் - 174, நாகப்பட்டினம் - 185, திருநெல்வேலி - 193, தஞ்சாவூர் - 198, தூத்துக்குடி - 223, பெருநகர் சென்னை - 235, திருவண்ணாமலை - 238, கடலூர் - 250, ஆம்பூர் - 267, ராமேஸ்வரம் – 268.

நகர்ப்புறங்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு தூய்மைப்படுத்தும் திட்டங்களை கண்காணித்து அதனை மேம்படுத்துவதற்காகவும், இந்தத் திட்டப்பணிகளை அங்கீகரிக்கும் விதமாகவும் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.