கூகுள் பிளே ஸ்டோரில் புதிய கட்டுப்பாடு: இனி ஸ்விக்கி, ஜியோ, பேடிஎம் செயலிகள் தொடர்பு விவரங்களை கேட்க முடியாது! 

0

கூகுள் ப்ளஸ் சேவை மூடப்படும் அறிவிப்புக்குக் காரணமான, பாதுகாப்பு குளறுபடியை அடுத்து கூகுள் தனது பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான கட்டுப்பாட்டை தீவிரமாக்கியுள்ளது.

கூகுள் + சேவை தொடர்பான பெரியதொரு பாதுகாப்பு குளறுபடியை அடுத்து இந்த சமூக ஊடக மேடையை மூடுவதாக அறிவித்த கூகுள், பயனாளிகள் தகவல்கள் கசிவதை தடுக்கும் வகையில் பிளே ஸ்டோர் கொள்கையில் மாற்றத்தை அறிவித்துள்ளது.

இன்று முதல், பிளே ஸ்டோரில் கால் லாக் விவரம் மற்றும் எஸ்.எம்.எஸ் தகவல்களை பயனாளிகளிடம் இருந்து கேட்கும் செயலிகள் அவர்கள் சாதனத்தில் டீபால்ட் போன், எஸ்.எம்.எஸ் அல்லது உதவியாளர் சேவை செயலிகளாக இருக்க வேண்டும். இதற்கு முன், பல செயலிகள் பயனாளிகளிடம் இருந்து இத்தகைய தகவல்களை கோரின. பயனாளிகள் அனுமதி மறுத்தால், சேவையில் கட்டுப்பாடு விதிக்கப்படும்.

இந்தியாவில் பிரபலமான பேமெண்ட் செயலிகளான மொபிகுவிக், பேடிஎம், டிக்கெட் சேவை செயலிகளான புக்மைஷோ, கோஇபிபோ, பொழுதுபோக்கு மற்றும் ஓ.டி.டி செயலிகளான ஜியோடிவி, சோனிஎல்.ஐ.வி, உணவு டெலிவரி சேவைகளான ஸ்விக்கி, ஜோமேட்டோ, ஷாப்பிங் செயலிகளான அமேசான், பேடிஎம்மால் போன்றவை இந்த பிரிவின் கீழ் வருகின்றன.

இது தொடர்பாக கூகுள் தனது ஆண்ட்ராய்டு டெவலப்பர்ஸ் வலைப்பதிவில் கூறியுள்ளது:

“இனி வரும் காலங்களில், இந்த வகை அனுமதியை கோரும் கூகுள் பிளே கட்டுப்படுத்தும். அழைப்பு அல்லது எஸ்.எம்.எஸ் சேவைக்காக பயனாளியின் டீபால்ட் செயலியாக தேர்வு செய்யப்பட்டுள்ள செயலி மட்டுமே கால் லாக் மற்றும் எஸ்.எம்.எஸ் விவரங்களை பெற முடியும்”.

இதன் பொருள், அழைப்பு, மேசேஜிங் அல்லது குரல் சேவையை பிரதான செயல்பாடாக கொண்டிராத செயலிகள் கால் அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ் தகவல்களை பெறுவதை கூகுள் விரும்பவில்லை. இந்த புதிய கொள்கைக்கு உடன்பட டெவல்ப்பர்களுக்கு கூகுள் 90 நாள் அவகாசம் கொடுத்திருக்கிறது.

“இந்த செயலிகளை மாற்றி அமைத்து அப்டேட் செய்ய போதிய அவகாசம் அளித்தும் டெவலப்பர் பங்குதாரர்களோடு இணைந்து செயல்படுவோம் மற்றும் 90 நாட்களுக்கு பிறகு இவற்றை அமல் செய்வோம் என கூகுள் தெரிவித்துள்ளது.

இதற்கு விதிவிலக்கை அனமதிக்கவும், பிரதான செயல்பாடாக கால் அழைப்பு அல்லது எஸ்.எம்.எஸ் தேவைப்படும் டெவலப்பர்களுடன் இணைந்து செயல்படுவோம் என கூகுள் தெரிவித்துள்ளது. ட்ரூகாலர், டெக்ஸ்ட்ரா மற்றும் கால் அழைப்பு பதிவு சேவைகள் இதில் அடங்கும்.

2019 , ஜனவரி 6 ம் தேதிக்கு பிறகு இந்த கொள்கைக்கு உடன்படாத டெவலப்பர்கள் தங்கள் செயலிகளை பிளே ஸ்டோரில் முன்னிறுத்த முடியாது. எனினும் அவர்கள் அமேசான் ஆப்ஸ்டோர் அல்லது ஆண்ட்ராய்ட் அமைப்பில் இந்த தகவல்களை கோர முடியும்.

கூகுள் + சேவை பாதுகாப்பு மீறலை அடுத்து தனது அனைத்து நுகர்வோர் பொருட்கள் தொடர்பான பாதுகாப்பை கூகுள் தீவிரமாக்கியுள்ளது.

“வரும் மாதங்களில், மேலும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்து, பல்வேறு பொருட்கள் மற்றும் சேவை மேடைகள் தொடர்பான கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கையை அறிவித்து, உங்களுடன், டெவலப்பர்களுடன் செயல்பட்டு இந்த மாற்றத்தை மேற்கொள்ள வழி செய்வோம். பயனாளிகளின் நம்பிக்கை மிகவும் முக்கியம், நாம் இணைந்து மேலும் பாதுகாப்பான ஆண்ட்ராய்டு சூழல உருவாக்குவோம்,” என கூகுள் பிளே, பிராடக்ட் மேனேஜ்மெனட் இயக்குனர் பால் பாங்க்லாண்ட் கூறினார்.

உலகில் அதிக ஆண்ட்ராய்டு பயனாளிகளை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. முன்னணி நுகர்வோர் மற்றும் சேவை செயலிகள் இந்த புதுப்பிக்கப்பட்ட கொள்கையை எப்படி நிறைவேற்றுகின்றன மற்றும் பயனாளிகளின் செயலி பயன்பாடு மீது இவற்றின் தாக்கம் என்ன என்பது சுவாரஸ்யமான கேள்வியாக இருக்கும்.

ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில்: சைபர்சிம்மன்