இந்திய பாரம்பரிய முறையை பயன்படுத்தி குறைந்த விலை தண்ணீர் வடிகட்டியை உருவாக்கிய இந்திய ஆராய்ச்சியாளர்கள்!

இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கு முக்கியக் காரணமாக விளங்கும் வயிற்றுப்போக்கிற்கு தீர்வுகாண்பதற்காக சுத்தமான பாதுகாப்பான குடிநீரை வழங்குகிறது TamRas.

2

53 வயதான பத்மா வெங்கட் பெங்களூருவைச் சேர்ந்த ட்ரான்ஸ்டிசிப்ளினரி பல்கலைக்கழகத்தின் (TDU) ஆய்வாளர்கள் அடங்கிய குழுவுடன் இணைந்து குறைந்த வருவாய் ஈட்டும் பிரிவினருக்கு கிடைக்கும் வகையில் மலிவான விலை தண்ணீர் ப்யூரிஃபையரை உருவாக்குவதற்கான வழிகளை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார். 1.8 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அசுத்தமான குடிநீரை அருந்துவதாகவும் அதற்கான தீர்வை கண்டறிவதன் மூலம் இந்த எண்ணிக்கையை 45 சதவீதத்திற்கும் மேல் குறைக்க வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. உலகளவில் ஒவ்வொரு நாளும் 4,000 குழந்தைகள் வயிற்றுப்போக்கின் காரணமாக உயிரிழக்கின்றனர். இதில் ஐந்தில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்த குழந்தையாகும்.

திட்டம் மற்றும் ஆராய்ச்சி

தண்ணீரின் மூலம் பரவக்கூடிய நோயான வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கு அசுத்தமான தண்ணீரை குடிப்பதுதான் காரணம். வளர்ந்து வரும் நாடுகளில் குழந்தைகளின் இறப்பிற்கு இந்த நோய் முக்கியக் காரணமாக விளங்குவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்சனையை தடுக்க ஒரு நிலையான மலிவான தயாரிப்பை உருவாக்குவதற்கான தேவை இருப்பதை உணர்ந்தார் பத்மா. 

“பாதுகாப்பான குடிநீர் என்பது இந்தியாவில் மிகப்பெரிய சிக்கலாகவே இருந்து வருகிறது. இதற்கான நிலையான தீர்வு நம்மிடம் இல்லை. தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட பல தீர்வுகள் உள்ளன. ஆனால் அதற்கான தேவை அதிகமுள்ள பிரிவிற்கு அந்த தீர்வுகள் சென்றடைய முடிவதில்லை.” என்கிறார் பத்மா.

”செம்பு அல்லது வெள்ளி பாத்திரங்களில் தண்ணீரை சேமித்து வைப்பதே இந்தியாவின் பாரம்பரிய வழக்கமாகும். இதிலிருந்துதான் TamRas உருவாக்கும் எண்ணம் தோன்றியது. உள்ளூர் சுகாதாரத்திற்கு பாரம்பரிய முறையில் புத்துயிர் அளிக்கும் ஃபவுண்டெஷன் (The Foundation for Revitalization of Local Health Traditions) இந்திய மருத்துவ மரபில் கவனம் செலுத்துகிறது. எனவே இந்த வழிமுறைகளை மலிவான ஹெல்த்கேர் தீர்வுகளுக்காக எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சிந்தித்தேன்.” என்றார்.

”ஆரோக்யத்திற்கு செம்பினால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆயிர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் மனிதனின் பல்வேறு உடல் சார்ந்த நடவடிக்கைகளுக்கு செம்பு அவசியமான முக்கிய நுண் பொருளாகும். எனவே சுத்திகரிப்பு முறையில் சிறிதளவு செம்பு தண்ணீரில் கலப்பது நன்மை பயக்கும்.” என்றார்.

ஆய்வு முடிந்ததும் க்ராண்ட் சேலஞ்சஸ் கனடா அளித்த உதவியுடனும் McGill பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களின் உதவியுடனும் அவரும் அவரது குழுவினரும் தயாரிப்பை பரிசோதனைக்கு உட்படுத்தினர். ரோட்டாவைரஸுக்கு எதிராகவும் பாக்டீரியாவிற்கு எதிராகவும் செம்பின் தன்மைகள் செயல்பட்டு அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்த சோதனை கென்யா மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டது. தண்ணீரில் பாக்டீரியா கணிசமான அளவு குறைந்திருப்பதை பார்க்கமுடிந்தது. மேலும் கென்யாவில் வசிப்போருக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு பிரச்சனையை அவர்கள் கண்காணித்தனர். இதில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப்போக்கு பாதிப்பு 37 சதவீதம் குறைந்தது.

அதன் பிறகு மூன்று முன்னணி அறிவியல் இதழ்களில் இந்த ஆராய்ச்சி வெளியிடப்பட்டது.

ப்யூரிஃபையர் எவ்வாறு பணிபுரிகிறது?

இந்த தண்ணீர் ப்யூரிஃபையர் 15 லிட்டர் கொள்ளளவு கொண்டது. செம்பினால் செய்யப்பட்ட இந்த பாத்திரம் எட்டு முதல் பத்து மணி நேரத்தில் தண்ணீரை சுத்தப்படுத்தும். இதன் விலை 1,500 ரூபாய். இது சந்தையில் கிடைக்கும் மற்ற ப்யூரிஃபையர்களைவிட விலை குறைந்ததாகும். 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட செம்பு பானையை வாங்குவதாக இருந்தாலும் 4,000 ரூபாய் செலவழிக்க நேரிடும். பாக்டீரியா மற்றும் தொற்றுகளால் ஏற்படக்கூடிய நோய்களை செம்பு அதன் தன்மையினால் நீக்கி குடிக்கும் தண்ணீரை பாதுகாப்பாக மாற்றுகிறது.

இந்த ப்யூரிஃபையருக்கு எரிபொருளோ அல்லது மின்சாரமோ தேவையில்லை. பராமரிப்பு செலவுகள் இல்லை. மற்ற சமையலறை பாத்திரங்களைப் போலவே இந்த செம்பு பானையை சுத்தம் செய்யவேண்டும். RO ப்யூரிஃபையரின் விலை 8000 ரூபாய். அதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்த தொடர் செலவுகளும் உள்ளது. வீட்டுப் பயன்பாட்டிற்கு TamRas சிக்கனமான தேர்வாகும்.” என்றார் பத்மா.

அது மட்டுமல்லாது மொத்தமாக 1500 ரூபாய் செலுத்தமுடியாதவர்களுக்காக மாதத் தவணை வசதியும் உண்டு. ” TamRas-ன் ஒரே கட்டுப்பாடு அதன் இலக்கு நுண்ணுயிர் தொற்றுக்கள் மட்டுமே. இயற்பியல் மற்றும் வேதியியல் அசுத்தங்களை இதனால் அகற்றமுடியாது.” என்றார் பத்மா

வணிக மாதிரி

தற்போது TamRas-க்கு டாடா ட்ரஸ்டிலிருந்து நிதி கிடைக்கிறது. இந்த சுற்றுக்குப் பிறகு நேரடி விற்பனை மாதிரியை பின்பற்ற உள்ளனர். இதில் அவர்கள் அணுகும் அந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சமூக தொழில்முனைவோராக மாறுவதற்கான பயிற்சியளிக்கப்படும். தயாரிப்பை நேரடியாக மக்களிடமே எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஏனெனில் சில கிராமங்கள் உட்பகுதியில் அமைந்துள்ளதால் பாரம்பரிய முறையில் அவர்களைச் சென்றடைவது கடினமாகும்.

இப்படிப்பட்ட தொழில்முனைவோரை கண்டறிந்து அவர்களுக்கேற்றவாறு பயிற்சியளிப்பதற்காக தாம்ராஸ் பல அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்தது. தற்போது ராய்சூர், எச்டி கோட், எம் எம் ஹில்ஸ் ஆகிய மூன்று பகுதிகளில் 25 முதல் 30 சமூக தொழில்முனைவோர் செயல்பட்டு வருகின்றனர். இந்த சமூக தொழில்முனைவோர் தயாரிப்பின் விற்பனைக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் கிராமப்புற பகுதிகளில் வசிப்போருக்கு சுத்தமாக குடிநீரை அருந்துவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துவார்கள்.

ப்யூரிஃபையர் யூனிட்கள் தற்போது கோயமுத்தூர் சார்ந்த ஒரு ஸ்டார்ட் அப்பால் தயாரிக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த வணிக மாதிரி நிலைத்திட சமூக தொழில்முனைவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதனால் பத்மா மற்றும் அவரது குழுவினர் நேரடியாக ஈடுபடாதபோதும் இந்த தயாரிப்பானது தொடர்ந்து சந்தைப்படுத்தப்படும்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த ப்ராஜெக்டில் இணைந்த TDU-வின் துணை வேந்தரான 51 வயதான பாலகிருஷ்ணன் ப்ராண்டிங்கிலும் பல்வேறு சந்தைகளில் ப்ராஜெக்டை அறிமுகப்படுத்துவதிலும் பங்களித்து வருகிறார். “சத்தீஸ்கரில் மே மாதம் அறிமுகப்படுத்திய பிறகு உள்ளூர் மக்களிடமிருந்து கிட்டத்தட்ட 6,000 யூனிட்களுக்கான ஆர்டர்களை பெற்றுள்ளோம்.” என்றார்.

சந்தித்த சவால்கள்

தொழில்நுட்பத்தை கொண்டுவருவது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக தெரிவிக்கிறார் பத்மா. ”கண்டுபிடிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு விடாமுயற்சி அவசியம். பல்வேறு பங்குதாரர்களை தொடர்பு கொள்ளுதல், ப்ராண்டிங், லோகோ, ப்ராடக்ட் வடிவமைத்தல், அழகுபடுத்துதல் போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியதாகும். ஒரு விஞ்ஞானியாக பல்வேறு துறைகளை ஒன்றிணைக்கும் இந்தப் பணியை மேற்கொள்வது சவாலாக இருந்தது.” என்றார்.

போதுமான யூனிட்களை தயாராக வைத்திருப்பதுதான் சவாலாக இருந்ததாக தெரிவிக்கிறார் பாலகிருஷ்ணன். ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற இ-காமர்ஸ் வலைதளங்களில் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்.

”இது வணிக நோக்கத்துடன் செயல்படும் நிறுவனமும் அல்ல தயாரிப்பை சந்தைப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் மானியத்தை சார்ந்திருக்கும் நிறுவனமும் அல்ல. நாங்கள் ஒரு தனித்துவமான மார்கெட்டிங் மாதிரியை உருவாக்க முயற்சிக்கிறோம்.” என்றார் பாலகிருஷ்ணன்.

எதிர்கால திட்டங்கள்

இவர்களது தயாரிப்பு தற்போது குடிசைப் பகுதிகளில் எவ்வாறு நீடித்து நிலைக்கிறது என்பதை பத்மா மற்றும் அவரது குழுவினர் பார்க்க விரும்புகின்றனர். கொல்கத்தாவில் காலரா மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் நிலவிவரும் குடிசைப் பகுதிகளில் செயல்பட திட்டமிட்டுவருகிறார் பத்மா.

”பழக்கத்தினால் எப்படி ஒவ்வொரு நாளும் ஒருவர் பல் துலக்குகிறாரோ அதே போல சுத்தமான தண்ணீர் ஒருவருக்கு நிச்சயம் கிடைக்கவேண்டும் என்பதையும் பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும்.” என்றார்.  

ஆங்கில கட்டுரையாளர் : Mehr Gill