23 ஆண்டுகளாக சைக்கிளில் வலம் வந்து சாலையோரம் வகுப்பு எடுக்கும் லக்னோ மனிதர்!

0

கடந்த 23 ஆண்டுகளாக லக்னோவைச் சேர்ந்த ஆதித்யா குமார் மொபைல் வகுப்பறையுடன் தனது சைக்கிளில் லக்னோவை வலம் வருகிறார். நலிந்த பிரிவைச் சேர்ந்த எண்ணற்ற மாணவர்களுக்கு ஆசானாக விளங்கும் இவர் லிம்கா ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார்.

கல்வி கற்பிக்கவேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளதால் இவர் தனது வகுப்புகளுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. பெரும்பாலான நாட்களில் முன்னேற்பாடுகள் ஏதுமின்றி பொதுவெளியில் வகுப்பெடுக்கிறார். இவர் 1995-ம் ஆண்டு முதல் லக்னோ முழுவதும் சைக்கிளில் சுற்றியவாறே மொபைல் வகுப்பறைகளைக் கொண்டு பாடம் எடுத்து வருகிறார். உத்திரப்பிரதேச ஆளுநர் ராம் நாயக் மற்றும் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஆகியோரிடம் பாராட்டுகள் பெற்றுள்ளார்.

ஏஎஃப்பி உடனான உரையாடலில் அவர் குறிப்பிடுகையில்,

"இந்த குழந்தைகளுக்கு வகுப்பறையின் அமைப்புகூட தெரியாது. நான் அவர்களை சந்திக்கும் வரை அவர்கள் பள்ளிக்குச் செல்லவேண்டிய அவசியத்தையே உணராமல் இருந்தனர்."

46 வயதான இவர் எந்தவித பாடதிட்டத்தையோ அல்லது பாடபுத்தகங்களையோ பின்பற்றவில்லை. ஆங்கிலம் மற்றும் கணிதம் கற்றுக்கொடுக்கிறார்.

ஆதித்யா உத்திரப்பிரதேசத்தின் ஃபரூகாபாத் மாவட்டத்தின் சலீம்பூர் என்கிற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். ஏழை தொழிலாளிக்கு மகனாகப் பிறந்தார். அவரது அப்பா அவருக்கு உதவ வற்புறுத்தியதால் பதின்ம வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் வசித்து வந்தார். ஒரு ஆசிரியர் அவரைக் கண்டு கல்லூரி படிப்பை மேற்கொள்ள உதவியுள்ளார். அவர் தினமும் 200 குழந்தைகளுக்கு வகுப்பெடுப்பதாகக் கூறுகிறார்.

’டெலிகிராஃப்’ உடனான உரையாடலில் அவர் குறிப்பிடுகையில்,

”நான் பயணிக்கும் இடங்களில் உள்ள மக்கள் அனைவரிடமும் கல்வி கற்காமல் இருப்பது ஒரு சாபக்கேடு என்றும் கல்வி ஒருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எடுத்துரைப்பேன். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு பெற்றோரிடம் கூறுவேன். என் அப்பா ஏழை தொழிலாளி, என்னுடைய குழந்தைப் பருவத்திலேயே என்னையும் வருமானம் ஈட்ட வற்புறுத்தினார். ஆனால் நான் படிப்பதற்காக லக்னோவிற்குச் சென்றேன். அதிர்ஷ்ட்டவசமாக படிக்கவேண்டும் என்கிற என் விருப்பதிற்கு உந்துதலளித்த ஆசிரியரை சந்தித்தேன். நான் பட்டப்படிப்பை முடிக்க அவர் உதவினார். அப்போதுதான் குடிசைப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு கல்வியின் அவசியத்தை எடுத்துரைக்கத் தீர்மானித்தேன்,” என்றார்.

ஆதித்யா நடைபாதையில் படுத்துறங்கி நாடோடி வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாக ’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ அறிக்கை தெரிவிக்கிறது. லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அவரை கௌரவிக்க விரும்பியபோது அவருக்கு நிரந்தர முகவரிகூட இல்லை. அவரது நலம்விரும்பி ஒருவரின் இடத்திற்கு அவரது சான்றிதழ் அனுப்பிவைக்கப்பட்டது.

கட்டுரை : THINK CHANGE INDIA