ஓலா ஓட்டுநர் ஓம் ராணுவ அதிகாரி ஆன சுவாரசியக் கதை!

0

ஓலா நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றிய ஒருவர் தனது காரில் பயணித்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவரின் ஆலோசனையை பின்பற்றியதால் இந்திய ராணுவ அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார். இது குறித்து அவரது குடும்பத்தினர் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர்.

25 வயதான ஓம் பைத்தேன் புனேவின் தொண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் முன்பு கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அதிகாரிகளை குறுகிய கால சேவைக்கு (Short Service Commission) பயிற்சியளிக்கும் சென்னையிலுள்ள ராணுவ பயிற்சி அகாடமியில் தற்போது தேர்ச்சி பெற்றுள்ளார்.

“நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் கனவு நிறைவேறுவது போல் உள்ளது,” 

என்று இந்திய ராணுவத்தில் சேர ஆயத்தமாகி வரும் ஓம் பேட்டியில் குறிப்பிட்டார். இந்திய ராணுவத்தில் இணைவதற்கான அவரது பயணம் ஓம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எளிதாக அமைந்துவிடவில்லை. ஆனால் இதற்கான உந்துதல் அவரது பயணிகளில் ஒருவரான பக்‌ஷி என்கிற ஓய்வு பெற்ற கர்னலிடமிருந்தே துவங்கியது.

”கர்னல் பக்ஷி அவர்கள்தான் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆயுத படைகள் மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை (CDS) பிரிவில் இருக்கும் வாய்ப்புகள் குறித்து கூறினார். மேலும் ஆயுதப் படை அதிகாரிகளின் தேர்வு தொடர்பான AFOSOP-யில் அப்போதைய இயக்குநராக இருந்த லெப்டினென்ட் கர்னல் கணேஷ் பாபு அவர்களது அறிமுகத்தையும் ஏற்படுத்தினார்.”

அதன் பிறகு ஓம் ஆறு மாதங்கள் கார் ஓட்டினார். பின்னர் 2016-ம் ஆண்டு சிடிஎஸ் தேர்வுகள் எழுத தீர்மானித்தார். முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு ஓடிஏ-வில் ஒரு வருட கால பயிற்சியில் இணைவதற்காக போபாலில் சேவைகள் தேர்வு ஆணையம் (SSB) தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

”எங்களைப் போன்ற ஒரு எளிய குடும்பத்திற்கு இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த போராடி வரும் பலருக்கு இது ஒரு உந்துதலாக அமையும்,” என்றார் அவரது சகோதரர் ஆதிநாத்.

ஓமின் தந்தை உத்தம் பைத்தேன் கிட்டத்தட்ட முப்பதாண்டுகளாக ஓட்டுநராக பணியாற்றினார். அவரது முழங்காலில் பிரச்சனை ஏற்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மூட்டுகளுமே மாற்றப்படவேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒரு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும் துரதிர்ஷ்டவசமாக அடுத்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தோல்வியடைந்தது. இதனால் அவர் அசைவற்று போனார். வேறு வழியின்று புனேவில் செக்யூரிட்டி பணியில் சேர்ந்தார். எனினும் இல்லத்தரசியான ஓம்-ன் அம்மா சுஷீலா, திருமணமான அவரது சகோதரி மோனிகா என மொத்த குடும்பமும் ஓமின் சாதனையை ஊடகங்களில் வெளியிடப்படுவதைக் கண்டு மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஓம் வாழ்க்கையும் அவரது ஆளுமையும் ஒட்டுமொத்தமாக மாறியுள்ளது. மக்கள் அவரையும் அவரது சீருடையையும் மரியாதையுடன் பார்க்கின்றனர். சீருடையை அணிவதில் அவர் பெருமை கொள்கிறார். இருப்பினும் அவரை ஒவ்வொரு கட்டத்திலும் வழிநடத்திய கர்னல் பக்ஷி அவர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் நன்றியுள்ளவராக இருக்கிறார் என ஆதிநாத் குறிப்பிடுகிறார்.

பைத்தேன் குடும்பம் பீட் மாவட்டத்திலுள்ள லிம்பருய் கிராமத்தைச் சேர்ந்தது. உத்தம் பைத்தேனுக்கு தொண்டல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் ஓட்டுநராக பணி கிடைத்தது. இங்கிருந்த ஊழியர்கள் குடியிருப்பில் வசித்தனர். உள்ளூர் பள்ளியில் குழந்தைகள் படித்தனர்.

ஓம் ஜில்லா பரிஷத் பள்ளியில் படிப்பை முடித்ததும் நியூ இங்கிலீஷ் பள்ளியில் படித்தார். அதன் பிறகு புனே கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் இளங்கலை படிப்பை மேற்கொண்டார்.

கட்டுரை : THINK CHANGE INDIA