பட பட பட்டாசு வெடிக்கலாம் சத்தமில்லாமல்... மாசில்லாமல்...  

தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவில் 7 முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கியுள்ளது. 

0

இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனைக்குத் தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்களிக்க வேண்டும் என சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்களும் வழக்கு தொடர்ந்தனர். தமிழகத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள 2 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களின் நலன் கருதி, இவ்வழக்கில் தமிழக அரசு தன்னையும் ஒரு எதிர்வாதியாக இணைத்துக் கொண்டது. 

பல தரப்பு வாதங்களுக்கு பின், கடந்த மாதம் 23ம் தேதி சில நிபந்தனைகளுடன் தீர்ப்பை வழங்கியது உச்சநீதிமன்றம். அதன்படி, 

தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், குறைவான மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது. மேலும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.
பட உதவி: indian express
பட உதவி: indian express

கடந்த மாதம் 23ம் தேதி நீதிமன்றம் தெரிவித்த நிபந்தனைகள்:

1. தீபாவளி நேரத்தில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம்.

2. புத்தாண்டு சமயத்தில் இரவு 11.55 முதல் 12.30 வரை பட்டாசு வெடிக்கலாம்.

3. இணையம் மூலம் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது.

4. சரவெடிகள் கூடாது. பட்டாசு தயாரிப்பில் பேரியம் உப்பு பயன்படுத்துவதற்கு தடை.

5. அதிக மாசு விளைவிக்கும் பட்டாசுகள் ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்டிருந்தாலும் அவற்றை விற்பனை செய்யக்கூடாது.

6. தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனை செய்யாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் மீறப்பட்டால், மீறல் நடைபெற்ற இடத்தின் காவல் நிலைய அலுவலர் பொறுப்பாக்கப்படுவார்.

இந்நிலையில், பட்டாசுகளை வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அளித்த இரண்டு மணி நேரம் போதாது என்பதால் கூடுதலாக இரண்டு மணி நேரம் கோரிய தமிழ்நாடு அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தது. தீபாவளியன்று இரண்டு மணி நேரத்திற்கு மேல் பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்க இயலாது எனவும், அந்த 2 மணி நேரத்தை தமிழ்நாடு அரசே தீர்மானித்துக் கொள்ளலாம் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவில் 7 முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கியுள்ளது.
பட உதவி: indian express
பட உதவி: indian express

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ள முக்கிய மேற்கோள்கள்:

1. தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும், தீபாவளிக்கு முன்பு ஏழு நாட்களும் தீபாவளிக்கு பின்பு ஏழு நாட்களும் மொத்தம் 14 நாட்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் காற்றின் தரத்தை அளவீடு செய்யும்.

2. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

3. உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்த அந்த பகுதிகளில் உள்ள நலசங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்.

4. அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

5. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதிகாக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

6. குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பட உதவி:  indian express
பட உதவி:  indian express

விபத்தில்லா மற்றும் காற்று மாசு அடையாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் வரவேற்கதக்கவையாக இருந்தாலும், பட்டாசு தொழிலை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிளார்களின் வாழ்வாதரத்தையும், பட்டாசு விற்பனை சரிவால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 

கட்டுரையாளர்: ஜெயஸ்ரீ