உச்சநீதிமன்ற நீதிபதியாக நேரடியாக தேர்வான முதல் பெண் வழக்கறிஞர்!

0

இந்து மல்ஹோத்ரா உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்று வரலாறு படைத்துள்ளார். இவர் இந்தியாவிலேயே வழக்கறிஞராக இருந்து நேரடியாக உயர் பதவிக்கு பதவி உயர்வு பெற்றுள்ள முதல் பெண்ணாவார். 

உச்ச நீதிமன்ற காலேஜியம் முறையில் நியமிக்கப்பட்டுள்ள இவர் இந்தப் பதவியில் நியமிக்கப்படுவதற்கான இறுதி ஒப்புதலை குடியரசுத் தலைவர் அளித்துள்ளார். தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான மூத்த அனுபவசாலிகளான ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு 14 வார தீவிர ஆய்விற்குப் பிறகு தங்களது பரிந்துரைகளை முன்வைத்தது.

பெங்களூருவில் 1956-ம் ஆண்டு பிறந்த இந்து மல்ஹோத்ரா பிரபல வழங்கறிஞர்களைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் டெல்லியில் உள்ள கார்மெல் கான்வெண்டில் பள்ளிப்படிப்பை முடித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் லேடி ஸ்ரீராம் கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றார். டெல்லி பல்கலைக்கழகத்தின் மிரந்தா ஹவுஸ் கல்லூரி மற்றும் விவேகானந் கல்லூரியில் சிறிது காலம் பேராசிரியையாக இருந்தார். 

1979-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தார். உச்சநீதிமன்றத்தில் அட்வகேட் ஆன் ரெக்கார்டாக தகுதி பெறுவதற்கான தேர்வில் 1988-ம் ஆண்டு முதலிடம் வகித்து இந்த சாதனைக்காக முகேஷ் கோசுவாமி நினைவுப் பரிசு பெற்றார்.

இவருக்கு முன் நீதிபதி லீலா செத் 1977-ம் ஆண்டு மூத்த வழக்கறிஞராக பணியாற்றினார். அதன் பிறகு அந்தப் பதவி வகித்த இந்து பொதுவர் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர். பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கான நீதிமன்ற தண்டனை, திரைப்படத் துறையில் மகளிர் ஒப்பனைக் கலைஞர்களுக்கான பாதுகாப்பு, இந்தியாவில் குட் சமாரிட்டன் சட்டத்திற்கான வழிமுறைகளை வரையறுத்தல், சாலை விபத்து நேரிட்டால் பாதிப்படைந்தவர்களுக்கு உதவ முன்வரும் பார்வையாளர்கள் நலன் போன்ற பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கான பொது நல வழக்குகளைக் கையாண்டுள்ளார்.

இதற்கு முன்பு 24 நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் நீதிபதி ஆர் பானுமதி மட்டுமே ஒரே பெண்ணாவார். 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்ட இவர் இந்தப் பதவி வகிக்கும் ஆறாவது பெண் ஆவார். 1989-ம் ஆண்டு நீதிபதி ஃபாத்திமா பீவி இந்தப் பிரிவில் நிலவியிருந்த தடைகளைத் தகர்ந்தார்.

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜால் ஷா | தமிழில் : ஸ்ரீவித்யா