2017-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் விவாதங்கள் ஒர் அலசல்

0

2017-ம் ஆண்டு நாடு முழுவதும் பல குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்கா தனது 45-வது தலைவரைத் தேர்ந்தெடுத்தது. வடகொரியா ரகசியமாக அதிக அணு ஆயுதங்களை வாங்கியது. உலக வெப்பமயமாதல் குறித்து தொடர்ந்து சூடான விவாதங்கள் நடந்தன. மியான்மர் பகுதியிலிருந்து உலகிலேயே மிகவும் துன்பப்படும் சமூகத்தினரான ரோஹிங்கியா முஸ்லீம்கள் இன ஒழிப்பிலிருந்து தப்பி ஓடினர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கத்திலிருந்து மீண்டு வர இன்னமும் போராடிக்கொண்டிருக்கும் இந்தியாவின் நிகழ்வுகள் எவ்வாறு உள்ளது? 2017-ம் வருடத்தை இந்தியா எவ்வாறு கடந்து வந்தது என்பதை விவரிக்கக்கூடிய பத்து முக்கிய நிகழ்வுகள் மற்றும் விவாதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது

அரசாங்கத்தின் பல்வேறு வரிகளுக்கு மாற்றாக 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது. இந்த வரியை அமல்படுத்துவதாக பல மாதங்களாக நடைபெற்ற பல்வேறு விவாதங்களைத் தொடர்ந்து இறுதியாக விலை உயர்வு, வரி ஏய்ப்பு போன்ற பிரச்சனைகளை சமாளிக்க வரி சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

ஜிடிபி-யின் வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி மத்திய மற்றும் மாநில அரசால் விதிக்கப்பட்டும் பதினைந்திற்கும் அதிகமான வரிகள் மற்றும் ’செஸ்’ போன்ற வரிகளுக்கு மாற்று வரியாக மாறியது.

2. புதிய குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் இந்தியா தனது 14-வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுத்தது. முன்னாள் குடியரசுத் தலைவரான பிரனாப் முகர்ஜி உடல் நலம் குன்றிய காரணத்தால் மறுபடி தேர்தலில் போட்டியிடவில்லை. இதைத் தொடர்ந்து 71-வயதான ராம் நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மீராகுமார் அவர்களை எதிர்த்து போட்டியிட்டு வென்றார் பாஜகவைச் சேர்ந்த கோவிந்த். மீரா குமார் மக்களவையின் முன்னாள் சபாநாயகராவார்.

மேலும் 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளரான கோபால்கிருஷ்ண காந்தியை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் எம் வெங்கய்யா நாயுடு தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 13-வது குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3. இந்தியாவில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை

பதினேழு வயதுக்குட்பட்டோருக்கான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி அக்டோபர் 6-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற்றது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டி முதல் முறையாக இந்தியாவில் ஆறு நகரங்களில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் 24 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டை வீழ்த்தி இங்கிலாந்து அணி கோப்பையைக் கைப்பற்றியது.

4. அதிக எண்ணிக்கையிலான ரயில் விபத்துக்கள்

2017-ம் ஆண்டு நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையான ரயில்வேக்கு சிறப்பான ஆண்டாக அமையவில்லை. ஜனவரி மாதம் ஹிராகந்த் விரைவு ரயில் தடம் புரண்டது முதல் ஆகஸ்ட் மாதம் நடந்த காலிங்கா உத்கால் ரயில் சம்பவம் வரை 2017-ம் ஆண்டு முழுவதும் பல அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்ததுள்ளது அடிக்கடி நடந்த பல ரயில் விபத்துக்கள்.

ஆகஸ்ட் மாதம் மட்டுமே உத்கால் விரைவு ரயில் மற்றும் கைஃபியாத் விரைவு ரயில் ஆகியவை அடுத்தடுத்து தடம் புரண்டது. முன்னாள் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பாபு இந்தத் தொடர் விபத்திற்கு முழுப்பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

5. இஸ்ரோ தொடர்ந்து இந்தியாவைப் பெருமைப்படுத்தியது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) 104 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

ஃபிப்ரவரி மாதம் 15-ம் தேதி 714 கிலோ எடையுள்ள கார்டோசாட்-2 செயற்கைக் கோளை மேலும் 103 செயற்கைக் கோள்களுடன் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இஸ்ரோ அடுத்த இரண்டாண்டுகளில் சந்திராயன் 2 மற்றும் ஆதித்யா எல் 1 விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

6. பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான இராணுவ தாக்குதல்கள்

தொடர் எல்லைச் பிரச்சனைகளைத் தொடர்ந்து மேற்கு பூடானின் டோக்லாம் பீடபூமி விவகாரம் உலகில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட இரு நாடுகளுக்கிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. இந்தப் பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள முயல்வதன் காரணமாக இந்தியா இருமுனைப் போருக்கு தயாராகும் நிலை வரை சென்றுள்ளது.

சீனாவுடன் பத்து வாரமாக பதற்றம் நீடிக்கும் சூழலில் இந்திய இராணுவ ஜெனரல் பிபின் ரவாட் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எச்சரிக்கை விடுத்தார். இந்தச் சூழலை பாகிஸ்தான் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது. மிகப்பெரிய மோதல்களாக உருவாக வாய்ப்பிருப்பதால் மோதல்களுக்கு இந்தியா தயாராக இருக்கவேண்டும் என எச்சரித்தார்.

7. விவசாயிகள் போராட்டம்

வறட்சி மற்றும் பருவமழை பொய்த்துப் போனதால் பயிர்கள் நாசமாயின. இதனால் இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த எண்ணற்ற விவசாயிகள் செய்வதறியாது தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். 2017-ம் ஆண்டு அவ்வாறு மன உளைச்சலுக்கு ஆளான பல விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இவர்கள் இழப்பீடு மற்றும் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியின் சாலைகளில் போராட்டம் செய்தனர்.

சமீபத்தில் நவம்பர் மாதம் 21-ம் தேதி நடந்த போராட்டத்தில் 180 வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகரில் ஒன்றிணைந்தனர். விவசாயத்திற்கான உள்ளீடு செலவுகள் குறைத்தல், விளைச்சல்களுக்கு நியாயமான விலை நிர்ணயம், கடனில்லாத நிலையை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசாங்கம் தீர்த்துவைக்க வலியுறுத்தினர்.

8. #MeToo பிரச்சாரம்

இந்த ஆன்லைன் பிரச்சாரம் கதாநாயகி அலிசா மிலானோவால் அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.

பெண்கள் தாங்கள் சந்தித்த பிரச்சனைகளை பல்வேறு சமூக ஊடக தளங்களில் #MeToo என்கிற ஹேஷ்டேகில் விவரித்தனர். விரைவில் பல்வேறு விதங்களில் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இது ஒரு இயக்கமாகவே மாறியது.

9. கௌரி லங்கேஷ் படுகொலை

பெங்களூருவைச் சேர்ந்த முன்னணி பெண் பத்திரிக்கையாளரான கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் முடக்கபடுவதை சுட்டிக் காட்டியது.

கௌரி லங்கேஷ் செப்டம்பர் 5-ம் தேதி மாலை வேளையில் அவரது வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பத்திரிக்கையாளர் மற்றும் ஆர்வலரான கௌரி கர்நாடகாவில் கௌரி லங்கேஷ் பத்திரிக்கை என்கிற வாரந்திர செய்தித்தாளை நடத்தி வந்தார்.

10. இந்திய நகரங்களில் அதிகரித்து வரும் மாசு அளவு

இந்த வருடமும் டெல்லியில் நச்சுப்புகை காரணமாக காற்று அதிகளவில் மாசுபட்டுள்ளது. இந்தியாவின் பல நகரங்களில் மாசு அபாய அளவைத் தாண்டியுள்ளது. காற்றை மாசுபடுத்தும் கொடிய பொருட்கள் அதிகப்படியாக கலந்துள்ள பட்டியலில் முன்னணியில் உள்ளது தேசிய தலைநகர் பகுதி (NCR).

எனினும் உலகிலேயே அதிக மாசுபட்ட நகரமாக கருதப்படும் டெல்லி இந்த வருடம் சுத்தமான தீபாவளியைக் கொண்டாடியது. இதற்கு NCR-ல் பட்டாசுகள் விற்பனையை தடைசெய்த உச்ச நீதிமன்ற உத்தரவுதான் காரணம்.

அக்டோபர் மாத துவக்கத்தில் டெல்லி மற்றும் NCR-க்கு உட்பட்ட பகுதிகளில் தீபாவளி பட்டாசுகள் விற்பனைக்கு டெல்லி காவல்துறை வழங்கிய உரிமத்தை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக தடை செய்தது. இதனால் மாசில்லாத சுற்றுச்சூழலை சாத்தியப்படுத்தத் தேவையான சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கக்கூடும்.

ஆங்கில கட்டுரைகள் : அமூல்யா ராஜப்பா