மனம் விரும்பும் தொழிலை செய்யுங்கள்: 'கிரியா' நிறுவனரின் அறிவுரை!

1

"புதிதாக தொழில் தொடங்கும் ஒருவர், தான் விரும்பும் தொழிலை பூரண உத்வேகத்துடன் தொடர வேண்டும். அதன்மூலம் அந்நிறுவனம் சந்தையில் அடையாளம் பெறுதல் தானாக நடைபெற வேண்டும்" என்று கூறுவார் கூகுளை சேர்ந்த கவுதம் காந்தி.

கிரியா நிறுவனத்தின் (Krya Sustainable Goodies) ப்ரீதியும், ஸ்ரீநியும் கூகுளின் கவுதம் காந்தி சொன்ன யோசனைகளையே தங்கள் புது தொழில் முயற்சிக்கான தாரக மந்திரமாக கொண்டிருந்தனர்.

ஒரு பெருநகரத்தில் புது தொழில் முயற்சி தொடங்கும்போது இருக்கும் ஆதாயங்களை இருவரும் நன்றாகவே அறிந்திருந்தனர். அதாவது, நகர வாழ்க்கையின் சவுகரியம், பரபரப்பு, மக்கள் தொகை ஆகியன புது தொழில் முயற்சிக்கு உதவியாக இருக்கும் என்பதை சரியாக கணித்திருந்தனர்.

அதேவேளையில், ஒரு சிறு பகுதியில் அதிக மக்கள் இருப்பதால் தங்கள் நிறுவன படைப்புகளை நீண்ட காலத்துக்கு அவர்களிடம் மட்டுமே எடுத்துச் செல்ல முடியாது என்ற நகர வாழ்வின் கட்டுப்பாட்டையும் தெரிந்துவைத்திருந்தனர்.

தங்களது தொழில் குறித்து கிரியா நிறுவனத் தலைவர் ஸ்ரீநி கூறும்போது, "எங்கள் வாழ்வில் நிலையான தன்மைக்கான தேடல் இருந்தது. அந்த தேடலுக்கான விடையாகவே 2010-ல் கிரியா உருவாக்கப்பட்டது" என்றார். இதற்காகவே கார்ப்பரேட் நிறுவனங்களில் செய்துவந்த வேலையை ப்ரீத்தியும், ஸ்ரீநியும் துறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று கிரியா நிறுவனம், நகர வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை வெற்றிகரமாக மக்கள் மத்தியில் விற்பனை செய்யும் ஒரு நிறுவனமாக உருப்பெற்றுள்ளது. கிரியாவின் பிரதான விற்பனைப் பொருள் (லாண்ட்ரி டிடெர்ஜென்ட்) அதாவது துணிதுவைக்கும் சலவைப் பவுடர். இது முழுக்க முழுக்க அங்கீகரிக்கப்பட்ட இயற்கை பொருட்களை மூலப் பொருட்களாக கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதே இதன் சிறப்பம்சகாகும்.

"சலவைப் பவுடர் என்ற பெயரில் நம் வீடுகளில் அலமாரியில் வைத்திருக்கும் நச்சுத் தன்மை வாய்ந்த வேதிப் பொருளுடன் ஒப்பிடும்போது, கிரியாவின் தயாரிப்ப்பு சுற்றுசூழல் நட்பானது மட்டுமல்ல அதை பயன்படுத்துபவர்களுக்கும் இயற்கை பொருளை பயன்படுத்துகிறோம் என்ற ஆத்ம திருப்தியைத் தரும்" எனக் கூறுகிறார் ஸ்ரீநி.

கிரியாவின் இயற்கை சலவைப் பவுடரின் பின்னணியில் உள்ள மந்திரம் என்ன? கிரியாவின் ஸ்ரீநி அதுகுறித்து விளக்கமளிக்கும்போது, "சோப்பெர்ரி எனும் வேளாண் உற்பத்திப் பொருளே முகிய மூலப் பொருள். இந்தியாவிலும், சீனாவிலும் பண்டையகாலத்தில் இவையே பயன்படுத்தப்பட்டன. ஏன், பல்வேறு ஆசிய நாடுகளிலும் சலவைக்கு சோப்பெர்ரி பயன்படுத்தப்படுகிறது. 1000 வருடங்களுக்கு மேலாக புழக்கத்தில் இருக்கும் ஒன்றை புதிதாக தொழில் முயற்சியில் புகுத்தும்போது நிச்சயம் வெற்றிகிட்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். 

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தோட்டங்களில் பயிரிடப்பட்ட சோப்பெர்ரிக்களை கொள்முதல் செய்தோம். அவற்றை நன்றாக உலர்த்தி பொடியாக திரித்து அதில் இயற்கை கேல்சியம் கார்ப்பனேட்டை சேர்த்து சலவைப் பவுடரை உருவாக்கினோம்" என்றார். "கிரியா தயாரித்த சலவைப் பொடியை நீங்கள் வாங்கும்போது உங்கள் கிடைக்கும் நன்மையைக் காட்டிலும் அதை வாங்குவதால் விலக்கப்படும் தீமையை அளவிட்டுப் பாருங்கள்.

கிரியா தயாரிப்பை வாங்குவதன் மூலம் பெட்ரோலிய பொருட்கள், ஃபில்லர்கள், ப்ளீச்சுகள் போன்ற கடினமான வேதிப்பொருட்களை வீட்டுக்கு எடுத்துச் செல்வதை நீங்கள் தவிர்க்கிறீர்கள். ஆம், இந்த வேதிப்பொருட்கள் நீர் ஆதாரங்கள், உங்கள் தோல் மற்றும் மண் வளத்திற்கு பெரும் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது" என கிரியாவின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கிறார் ஸ்ரீநி.

கிரியா சலவைப்பொடியை பயன்படுத்துவதில் மற்றுமொரு நன்மை என்னவென்றால், சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்வதோடு உங்கள் உடல்நலத்தையும் பேணுகிறீர்கள். மேலும், சலவைக் கழிவை நீங்கள் உங்கள் தோட்டத்தில்கூட பாய்ச்சலாம். அதனால், தாவரங்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது என உறுதியாகச் சொல்கிறார் ஸ்ரீநி.

சூழல் நட்பு சலவைப் பவுடரை மக்கள் மத்தியில் வெற்றிகரமாக எடுத்துச் சென்ற கிரியாவின் அடுத்தகட்ட தொழில் முயற்சி பாத்திரம் கழுவுவதற்கு பயன்படுத்தும் பொடி, தரை துடைக்க உதவும் திரவம் ஆகியவற்றையும் சூழல் நட்பு சார்ந்ததாக உருவாக்க வேண்டும் என்பதே. 

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், "வேதிப்பொருட்கள் நிறைந்த வீட்டு உபயோகப் பொருட்கள் இல்லாத இல்லங்கள் உருவாக்குவதே கிரியாவின் எண்ணம்". அந்த வகையில் அடுத்த இரண்டு பொருட்களையும் உருவாக்குவது சவால் நிறைந்ததே எனக் கூறுகின்றனர் ப்ரீத்தியும், ஸ்ரீநியும்.

நீங்கள் விரும்பும் தொழிலை செய்தால் வெற்றி நிச்சயம் என்ற தொழில் யுத்தியை நீங்கள் எப்படி நிரூபணம் செய்வீர்கள்?

இது மிகவும் எளிது. எங்கள் மனம் விரும்பும் தொழிலை நாங்கள் தொடங்கும்போது அதற்கான நிதி முதலீட்டை நாங்களே செய்தோம். முதலீடு என்ற பெயரில் அந்நிய தலையீடு இல்லாததால் எங்களால் இதை சாத்தியப்படுத்த முடிந்தது. தொழில் முனைவருக்கான ஆதார ஸ்ருதி 'ஆர்வம்'. அந்த ஆர்வமும், முழு ஈடுபாடும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். நாங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு பொருளை சந்தைப்படுத்த தயாரனபோது அதை முதலில் மக்கள் மத்தியில் நிலை நிறுத்த வேண்டும் என்பதையே முதன்மை கொள்கையாகக் கொண்டிருந்தோமே தவிர ஒருபோதும் லாபம் ஈட்டுவதை முதன்மைப்படுத்தவில்லை.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், அடுத்த 5 ஆண்டுகளுக்காவது லாபம் பற்றி சிந்திக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். எனவே, நீங்களும் உங்கள் மனம் விரும்பும் ஒரு தொழிலை முன்னெடுப்பதற்கு முன்னதாக அடுத்த 5 வருடங்களுக்காவது லாபம் பற்றி யோசிக்காமல் இருக்க முடியுமா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

ஒரு தொழிலை ஆர்வத்துக்காவும், ஆத்ம திருப்திக்காகவும் செய்வதற்கும் லாபத்துக்காக மட்டுமே செய்வதற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இவ்வாறு பதிலளித்தார் ஸ்ரீநி.

அவர் மேலும் கூறும்போது, "உங்கள் நிறுவனத்தை சந்தையில் ஐ.பி.ஓ. அடையாளம் பெறுவதற்காகவும் லாபத்துக்காகவும் உருவாக்குகிறீர்களா? இல்லை அதை உங்கள் வாரிசுகளுக்கு பின்நாளில் வழங்க உருவாக்குகிறீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். என்னைப் பொருத்தவரை எனது இந்த தொழிலை எனது குழந்தைகளிடம் விட்டுச் செல்லவே விரும்புகிறேன். இது ஒரு குடும்ப நிறுவனமாக இருக்கும். அந்நிய முதலீடு இருக்காது. இதனால் எங்களின் கொள்கை நீடித்து நிலைத்திருக்கும்" என்றார்.

ஸ்ரீநி, ப்ரீத்திக்கு இப்போது இருக்கும் ஒரே எதிர்பார்ப்பு அவர்களது மகளுக்கும் கிரியாவின் சூழல் நட்பு தயாரிப்புகள் மீது அதே ஆர்வம் ஏற்பட வேண்டும் என்பதே.

இணையதள முகவரி: Krya