அரசியலை அடுப்படிக்கு கொண்டு வரும் சீட்டாட்டம்...

0

'மானிஃபெஸ்டோ' 'Manifesto'- விஷன் இந்தியா ஃபவுண்டேஷனால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு விளையாட்டு. அரசின் கொள்கைகள் மற்றும் விவகாரங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கமாகும்.

பல்வேறு ஐஐடி-யில் பணிபுரிந்து வந்த ஆசிரியர்கள், மற்றும் படித்து வந்த மாணவர்களாலும் ஐஐடி டெல்லியில் நவம்பர் 2014-ல் ’விஷன் இந்தியா ஃபவுண்டேஷன்’ உருவாகப்பட்டது. அரசில் தகுதி வாய்ந்தவர்கள் அதிகம் இருக்க வேண்டும், மேலும் இளைஞர்களின் ஆற்றலை ஒருமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு துவங்கப்பட்டது இதுவாகும். ஐஐடி டெல்லியில் பேராசிரியராக உள்ள நோமேஷ் போலியா(36) இந்த யோசனையின் சொந்தக்காரர். அவர் கூறுகையில், 

“தற்போது உள்ள நிலைமையை பார்த்தால், அரசில் உள்ள வேலைகளுக்கு சரியான ஆட்களை நியமிப்பதில் பிரதம மந்திரி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையை மாற்றி அமைப்பதே எங்கள் நோக்கம். இதற்காக நம் நாட்டின் இளைஞர் மீது முதலீடு செய்கின்றோம். அரசின் கொள்கைகள், ஆட்சி முறை, நிறுவன கட்டமைப்புகள் மேலே கவனம் செலுத்துவதன் மூலம் முறையான, தொலைநோக்கு பார்வை கொண்ட சீர்திருத்தங்கள் அமையும் என்று நம்புகின்றோம்.”

அனைவருக்குமான பொதுக் கொள்கைகள் :

இந்த அமைப்பு நம்புவது என்னவென்றால், நமது நாட்டின் கொள்கைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை கொணர இயலும் என்பதே...” 

”குறைவான பொறுப்புகள் மற்றும் அதிகமான வாய்ப்புகள் உள்ளவற்றையே இன்றைய இளைஞர்கள் விரும்புகின்றனர். அப்படி இருக்க அவர்களுக்கு கொள்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஆட்சிமுறை பற்றிய விஷயங்கள் அவர்களுக்கு தெரிவதுடன், நம் நாட்டிற்கும் சரியான தலைவர்கள் அமைவதற்கு வாய்ப்புகள் இருக்கும்” என்கிறார் நோமேஷ்.

மானிஃபெஸ்டோ சீட்டாட்டம் அந்த திசையில் பயணிப்பதற்கான முதலடியாகும். இதனை விளையாடுவதன் மூலம் தேர்தல் அரசியல் தொடர்பான பலவிஷயங்களும், அதன் முடிவை பாதிக்கும் காரணிகளும் நமக்கு புலப்படும்,” என்கிறார் அவர்.

அரசியலுக்கான மோனோபோலி

சோபித் மதூர் (35) VIF-ன் நிர்வாக இயக்குனர் மற்றும் சாஹில் அகர்வால் (26) இயக்குனர் மோனோபோலி விளையாடிய போது இந்த எண்ணம் அவர்கள் மனதில் உதித்தது. தொழிலை வைத்து ஒரு விளையாட்டு உள்ளபோது, அரசியலை வைத்து ஒரு ஆட்டம் ஏன் இருக்ககூடாது? எனவே அவர்களது கனவான அரசியல் கொள்கைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரு வழியாக இதனை உருவாக்கினர்.

2016 ஜூன் மாதம் ஷோபித் மற்றும் சஹில் இருவரும் மேலும் இதனை பற்றி நிறுவனத்தின் இயக்குனர்கள் அமன் குப்தா (25), குமார் சுபம்(23) மற்றும் சௌமியா அகர்வாலோடு(25) விவாதித்தனர். அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதில் அவர்களுக்கு இருந்த தெளிவு மற்றும், பற்று இரண்டும் முதலில் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தந்தது. ஆனால் சுவாரஸ்யமான அதே சமயம் சிக்கலாக இல்லாத ஒரு விளையாட்டை உருவாக்குவது கடினமாக இருந்தது. எனவே இதனை சமாளிக்க எளிதாக உள்ள விதிகளை உருவாக்கினர். மேலும் விளையாட்டின் கருவிற்கு ஏற்ப பெயர்களைச் சூட்டினர்.

“கிரியேட் க்ளஸ்டர், எங்களது வடிவமைப்பாளர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். காரணம் இந்த சீட்டாடத்தில் அனைத்து தகவலும் அனைத்து கோணங்களில் இருந்து தெளிவாக தெரியவேண்டும். கண்களை கவரும் வண்ணம் இருத்தல் வேண்டும். ஆனால் புதிதாக செய்யவேண்டும், அதே சமயம் மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்ற எங்கள் எண்ணம் தடைகளை தாண்டி வர எங்களுக்கு உதவியது எனலாம். எங்களது அணியும் எங்களது சுற்றமும் இதில் உள்ள சிக்கல்களை கண்டறிந்து எங்களுக்குத் தேவையான விமர்சனங்களை தந்தனர்,” என்கிறார் சௌமியா.

ஒரு வருடதிற்கு பிறகு பல முயற்சிகளுக்கு பின்  டிசம்பர் 2017-ல் மானிஃபெஸ்டோ  அறிமுகப்படுத்தபட்டது.

மாற்று வழியில் அரசியல் மற்றும் உத்திகள் :

தற்போது கிடைத்துள்ள வெற்றிக்குக் காரணம் 24x7 மணிநேரமும் பொது விவகாரங்கள் பற்றியும், நாட்டை உருவாக்குதல் பற்றியும் சிந்தித்ததாகும்.

“இந்த விளையாட்டில் நீங்கள் ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்து, தேர்தலில் போட்டியிட்டு, கூட்டணி அமைத்து வெற்றி பெற வேண்டும். இதனை நீங்கள் உங்கள் குடும்பத்தோடு, நண்பர்களோடு எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் விளையாடலாம். மேலும் எளிதாக நாட்டின் கொள்கைகளை தெரிந்து கொள்ள வழியாகும்.”

ஆங்கிலத்தில் ’மானிஃபெஸ்டோ’ என்றால், கட்சியின் கொள்கைகள் என்று பொருள்படும். அதே தான் இதை விளையாடுபவரும் செய்ய முற்படுகிறார். தேர்தலில் வெற்றி பெற ஒரு திட்டம் வேண்டும். அவர்களிடம் உள்ள சீட்டுகள் மூலம் அந்த திட்டம் பாதிக்கப்படலாம், மாறுதலுக்கு உள்ளாகலாம். 2 முதல் 6 நபர்கள் வரை இந்த ஆட்டத்தில் ஆட இயலும். மக்கள் தொகை, கட்சியின் சித்தாந்தம், ஜாதி, மதம், சட்டம் ஒழுங்கு மற்றும் கட்டமைப்பு ஆகியவை இந்த ஆட்டத்தில், சரியான முறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஆட்டத்தில் ஆட்டக்காரரின் திட்டத்தை மாற்றும் வண்ணம் தேர்தல் நடத்தை விதிகள், தவிர்க்க வேண்டிய ஊழல்கள் பற்றிய சீட்டுக்களும் உள்ளன.

தற்போது அமேசானில் ருபாய் 399-க்கு கிடைக்கிறது இந்த விளையாட்டு. மேலும் விரைவில் பல்வேறு புத்தகக்கடைகளிலும் கிடைக்கும். 

“அறிமுகப்படுத்தப் பட்டதில் இருந்து இதைப்பற்றிய விமர்சனம் நல்ல முறையில் தான் வந்த வண்ணம் உள்ளது. இது வரை 50 விற்றுள்ளோம். ஒவ்வொரு வாரமும் 2 அல்லது 3 விற்பனையாகின்றது,” என்கிறார் சௌமியா.

மாற்றத்திற்கான தலைவர்களை உருவாக்குதல் :

இந்த விளையாட்டு மட்டுமன்றி, VIF இளைஞர்களை சரியான தலைவர்களாக உருவாக்க பயிற்சி அளிக்க மேலும் பல நிகழ்வுகளை நடத்தியுள்ளது. 21 நாள் நடக்கும் “பாலிசி பூட்கேம்ப்”பில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வரும் 150 பிரதிநிதிகள் சந்தித்து ஒவ்வொருவரிடமும் பல்வேறு விஷயங்களை விவாதிக்கின்றனர். மேலும் 10 நாட்களுக்கு பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் “குட் கவர்ணனஸ் யாத்ரா”வும் உள்ளது. இதன் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, சரியான ஆட்சி முறை பற்றி அறிந்துகொள்கின்றனர்.

ஃபேஸ்புக்கில் இவர்களுக்கு ’Can என்ற பெயரில் ஒரு பக்கமும் உள்ளது. அதில் இவர்களது முன்னால் மாணவர்கள் மற்றும் இவர்களது கருத்தோடு ஒத்த கருத்துடைய நபர்கள் இணைந்து செயல்படுகின்றனர். எங்களது முன்னால் மாணவர்கள் மற்றும் பெல்லோக்கள் தற்போது பஞ்சாயத்துகளோடும், எம்.பி.களோடும் , எம்.எல்.ஏக்களோடும் பணிபுரிகின்றனர். சிலர் அதில் மதிய அரசு துறைகளிலும் பணிபுரிகின்றனர்.

2000திற்கும் மேற்பட்ட முன்னால் மாணவர்கள் மற்றும் பெல்லோக்களை கொண்டுள்ள இந்த பவுன்டேஷன் தற்போது ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரபிரதேஷ் மற்றும் கர்நாடகா அரசுகளோடு இணைந்து பல்வேறு துறைகளில் நாட்டினை கட்டமைப்பதற்காக பணியாற்றி வருகின்றனர். கல்லூரிகளில் மாணவர்களிடம் பேசுவதன் மூலமும், பயிற்சி வகுப்புகள் வைப்பதன் மூலம் மாணவர்களை சந்திகின்றது VIF.

மேலும் விக்காசா என்ற 7 நாட்கள் நடக்கும் தலைமைப் பண்புகளை வளர்க்கும் வகுப்பினையும் இமையமலையின் அடிவாரத்தில் நடத்துகின்றது. இதன் மூலம் இளைஞர்கள் தங்களுக்கு மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொணர தேவையான கருவிகளை, திறமைகளை பெற இயலும்.

“மக்களில் முதலீடு செய்து அவர்களிடம் மறைந்துள்ள திறமைகள் மற்றும் சக்திகளை வெளிக்கொணருவதில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். எங்கள் நெட்வொர்க் மூலம் அவர்களுக்கு தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அதன் மூலம் சரியான மாற்றத்தை உருவாக்கி, அதன் வழி நம் நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவதே எங்கள் நோக்கம்,” என்கிறார் சௌமியா.

தற்போது இந்த பவுண்டேஷன் மேலும் பல இளைஞர்களை வளர்த்தெடுக்கும் விதமாக ஒரு வளாகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  

ஆங்கில கட்டுரையாளர்: சானியா ரைஜா | தமிழில்: கவுதம்