கேரளாவில் பள்ளி மாணவர்களுடன் உணவைப் பகிர்ந்துகொண்ட மாவட்ட ஆட்சியர்!

ஆலப்புழா மாவட்ட ஆட்சியரான எஸ் சுஹாஸ் ஆலப்புழாவில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து பெற்றோர்கள் புகாரளித்த காரணத்தால் திடீர் சோதனை மேற்கொண்டார். 

1

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் ஒருவர் மக்களின் மனதை வெகுவாகக் கவர்ந்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரியான எஸ் சுஹாஸ் நீர்க்குன்னம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி விலாசம் அரசுப் பள்ளியின் மதிய உணவு வேளையின்போது அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை சோதனை செய்ய திடீரென்று அங்கு சென்றுள்ளார்.

மாணவர்கள் உண்ணும் உணவு சுகாதாரமான முறையில் சமைக்கப்படுகிறா என்பதையும் ஊட்டச்சத்து நிறைந்ததாக உள்ளதா என்பதையும் சோதிக்க ஆலப்புழா மாவட்டத்திற்கு சென்றார். அங்குள்ள குழந்தைகளுடன் அமர்ந்து அவரும் சாப்பிட்டார். சுஹாஸ் அந்தப் பள்ளியைப் பார்வையிட முன்னாள் கல்வித்துறை அதிகாரி கே பி லத்திகாவுடன் சென்றிருந்தார்.

”ஆலப்புழாவில் உள்ள நீர்க்குன்னம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி விலாசம் அரசுப் பள்ளியில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து எனக்குப் புகார்கள் வந்தன. எனவே அந்தப் பள்ளியில் திடீர் சோதனை மேற்கொள்ள தீர்மானித்தேன்,” என ’இண்டியா டுடே டிவி’-க்கு சுஹாஸ் தெரிவித்தார்.
நகரில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கொண்ட பள்ளியான எஸ்டிவி பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டே இந்தப் பள்ளியை பார்வையிடச் சென்றதாக இந்த அதிகாரி பின்னர் குறிப்பிட்டர்.

அவர் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட உணவில் சாதம், மோர், வெள்ளரிக்காய் கூட்டு, உருளைக்கிழங்கு பொறியல் ஆகியவை இருந்ததாக அவர் பகிர்ந்துகொண்டார்.

சுஹாஸ் அங்கு வழங்கப்பட்ட உணவின் தரத்தைக் கண்டு திருப்தியடைந்தார். பின்னர் அங்கு இடப்பற்றாக்குறை இருக்கும் பிரச்சனையை தலைமை ஆசிரியரும் பிடிஏ-வும் அவரது கவனத்திற்குக் கொண்டு சென்றதால் பள்ளியின் நூலகத்தையும் கம்ப்யூட்டர் லேப்பையும் பார்வையிட்டார்.

அப்போதிருந்து மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. முகநூல் பதிவும் அவர் பகிர்ந்துகொண்ட புகைப்படங்களும் வைரலாக பரவி அவரது முயற்சி வெகுவாகப் பாராட்டப்பட்டது.

அவர் மேற்கொண்ட இந்த முயற்சி வயநாடு பகுதியின் மாவட்ட ஆட்சியராக செய்து வந்த பணியின் தொடர்ச்சியே என்றார் சுஹாஸ்.

”அரசுப் பள்ளிகளில் படிப்பை இடை நிறுத்தம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதை முடிவிற்கு கொண்டு வர வயநாடு மாவட்ட ஆட்சியராக நாங்கள் ‘Zero dropout Wayanad’ என்கிற திட்டத்தை செயல்படுத்தினோம். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி இடை நிறுத்தம் செய்த 75 சதவீத மாணவர்களை திரும்ப பள்ளிக்கு வரவழைத்தோம்,” என சுஹாஸ் இண்டியா டுடே-க்கு தெரிவித்தார்.

சமீபத்தில் அரசுப் பள்ளியை பார்வையிடச் சென்றது குறித்து அவர் குறிப்பிடுகையில், “உணவில் எந்தவித பிரச்சனையும் இல்லை. பள்ளிக் குழந்தைகளுடன் உரையாடியது அருமையான அனுபவமாக இருந்தது,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA