2017 பிளேஷ்பேக்; இணையத்தை கலக்கிய முன்னணி ஹாஷ்டேகுகள்!

0

டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் என இணைய நிறுவனங்கள் இந்த ஆண்டு இணையத்தில் முன்னிலை வகித்த செய்திகளையும், நிகழ்வுகளையும், வைரலாக பரவிய சம்பங்களையும் பட்டியலிட்டு வருகின்றன. வைரலாக பரவிய வீடியோக்களில் எல்லோரையும் முணுமுணுக்க வைத்து ஆட்டம் போட வைத்த ’ஜிமிக்கி கம்மல்’ பாட்டும் இருக்கிறது, அமெரிக்க நடன இயக்குனர் கெய்லி ஹனாகமி, பாடகி ஈட் ஷீரான் பாடலுக்கு உருவாக்கிய ’ஷேப் ஆப் யூ’ நடன வீடியோவும் இருக்கிறது. மீம்களின் பட்டியலை பார்த்தால் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, வெகு நீளமான வால் இணைப்பு கொண்ட ஆடையை அணிந்திருந்ததை வைத்து பலவிதமாக உருவாக்கப்பட்ட மீம் உள்பட பல மீம்கள் கவனத்தை ஈர்க்கின்றன. இன்ஸ்டாகிராமும் அதிகம் பேசப்பட்ட ஹாஷ்டேக் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இப்படி இந்த ஆண்டு இணையத்தில் பல விஷயங்கள் டிரெண்ட் ஆனாலும், 2017-ம் ஆண்டை #ஹாஷ்டேக் ஆண்டு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் பலவிதமான ஹேஷ்டேகுகள் கவனத்தை ஈர்த்ததோடு, அமைதிக்கு ஆதாரவாகவும், அநீதிக்கு எதிராகவும் குரல் கொடுக்க வைத்தன. ஒரு சில ஹாஷ்டேகுகள் இணையவாசிகளை ஓரணியில் திரள வைத்ததோடு, சக்தி வாயந்த ஹாஷ்டேகுகள் சில சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி யோசிக்கவும் வைத்தன. உள்ளூர் முதல் உலகம் வரை இந்த போக்கை பார்க்க முடிந்தது.

ஹாஷ்டேக் அறிமுகமான பத்தாவது ஆண்டாக 2017 அமைந்துள்ளது என்பதை மனதில் கொண்டு பார்க்கும் போது இது எத்தனை பொருத்தமானது என புரியும்.

#ஹாஷ்டேக் வரலாறு

இந்த ஆண்டு டிவிட்டரிலும் இன்னும் பிற இணைய சேவைகளிலும் எழுச்சி பெற்ற முக்கிய ஹாஷ்டேகுகள் பற்றி பார்க்கும் முன் இதன் வரலாறு பற்றி சில தகவல்களை பார்த்துவிடலாம். 2007-ல் தான் ஹாஷ்டேக் முதன் முதலில் டிவிட்டரில் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த சிறிஸ் மெஸினா என்பவர் தான் முதன் முதலில் ஹாஷ்டேகை  பயன்படுத்தினார். தொழில்நுட்ப மாநாடு ஒன்று தொடர்பான டிவிட்டர் செய்திகள் அனைத்தையும் # எனும் குறியீட்டுடன் மாநாடு தொடர்பான குறிச்சொல்லுடன் பகிர்ந்து கொண்டால், மாநாட்டு பதிவுகளை வரிசையாக பார்க்கலாமே என்று அவர் தெரிவித்தார். அதன் பிறகு இந்த கருத்தாக்கம் மெல்ல பிரபலமாகி, டிவிட்டரிலும் இன்னும் பிற சேவைகளிலும் ஒரே தலைப்பிலான பதிவுகளை ஒரே இடத்தில் தொகுப்பாக பின் தொடர வழி செய்கிறது. எகிப்தில் வெடித்த அரபு வசந்தம் இணைய புரட்சியிலும், 2015 வார்தா புயல் பாதிப்பின் போது மீட்பு மற்றும் நிவாரண பணிகளிலும், பின்னர் ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் ஹாஷ்டேகுகள் முக்கிய ஆயுதமாக விளங்கின.

இனி இந்த ஆண்டு கவனத்தை ஈர்த்த முன்னணி ஹாஷ்டேகுகளை பார்க்கலாம்:

#fontgate

கடந்த ஆண்டு வெடித்த பனமா பேப்பர்ஸ் விவகாரம் பல நாடுகளில் உள்ள பெரிய தலைகளை சிக்க வைத்தது. வரிச்சொர்கமாக கருதப்படும் நாடுகளில் பெருந்தலைகள் பதுக்கு வைத்திருப்பதாக கருதப்படும் பணம் மற்றும் சொத்துகளை இந்த ரகசிய ஆவணங்கள் அம்பலப்படுத்தின. இதில் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மகள் மரியம் ஷெரிப் பெயரும் பலமாக அடிபட்டது. இது தொடர்பான ஊழல் வழக்கில், லண்டனில் தான் வாங்கியதாக சொல்லப்படும் சொத்துக்கும் தனக்கும் நேரடி தொடர்பில்லை எனக் கூறும் ஆவணத்தை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த ஆவணம் கேலிபர் எனும் ஆங்கில எழுத்துருவில் அச்சிடப்பட்டிருந்தன. அதனால் என்ன என்று கேட்கலாம். இந்த ஆவணம் 2006-ல் தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அதில் பயன்படுத்தப்பட்ட காலிபர் எழுத்துரு அதற்கு அடுத்த ஆண்டு தான் வர்த்தக நோக்கில் அறிமுகமானது. இதனால் இந்த ஆவணம் போலியாக தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் எனும் கருதப்பட்டு பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இதனையடுத்து பாகிஸ்தான் இணையவாசிகள் பலரும், மரியம் ஷெரிப்பை கலாய்த்து தள்ளிவிட்டனர். இந்த சம்பவத்திற்கு பாட்ன்கேட் என பெயரிடப்பட்டு இதே ஹாஷ்டேகுடன் மரியம் ஷெரிப்பை கேலி செய்யும் குறும்பதிவுகள் வெளியாயின.

#WeStandTogether

நெருக்கடியான நேரங்களில், நாங்கள் உடன் இருக்கிறோம் என ஆதரவு தெரிவிப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை ஆறுதலாக இருக்கும். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் மே மாதம் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு 22 பேர் உயிரிழந்த சம்பவம் மான்செஸ்டர் மக்களை உலுக்கிய போது, இணையவாசிகள் டிவிட்டர் மூலம் இதை தான் செய்தனர். தாக்குதல் தொடர்பாக வேதனையையும், சோகத்தையும் வெளிப்படுத்தியவர்கள், நாங்கள் உங்கள் உடன் இருக்கிறோம் என உணர்த்தும் வகையில் தங்கள் பதிவுகளுடன் #WeStandTogether ஹாஷ்டேகையும் சேர்த்துக்கொண்டனர். அச்சத்திற்கும், துயருக்கும் மத்தியில் இந்த ஒருமித்த உணர்வு மான்செஸ்டர் மக்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது.

#NotInMyName

எந்த வடிவிலும் வன்முறையை பொறுத்துக்கொள்ள முடியாது. அதிலும் எங்கள் பெயரில் அதை மேற்கொள்வதை அனுமதிக்க மாட்டோம் – இந்த செய்தியை தான் இந்திய மக்கள் அழுத்தந்திருத்தமாக இணையம் மூலம் தெரிவித்தனர். நாட்டின் பல இடங்களில் கடந்த சில ஆண்டுகளாக சிறுபான்மையினர் மற்றும் தலித்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. 

இந்த கவலை தரும் போக்கிற்கு மத்தியில் ஜார்கண்ட் மாநிலத்தில் இஸ்லாமிய ஏழை விவசாயி ஒருவர் அடித்து உதைக்கப்பட்டு அவரது குடிசை தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் ஜூன் மாதம் அதிர்ச்சி அலையை உண்டாக்கியது. பசுவை கொன்றுவிட்டதாக கூறி அவர் மீது இந்த கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து தில்லி உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணாக்கானோர் திரண்டு எங்கள் பெயரில் வன்முறை வேண்டாம் என ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கான கோரிக்கை ஃபேஸ்புக் பதிவு மூலம் முன்வைக்கப்பட்டதை அடுத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதோடு, டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் பலரும் மதத்தின் பெயரால் நடத்தப்படும் தாக்குதலை ஏற்க முடியாது என தெரிவித்தனர். #NotInMyName எனும் ஹாஷ்டேகுடன் இந்த பதிவுகள் வெளியாகி ஒருமித்த கருத்தாக ஒலித்தது.

#MeToo

பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதே ஒரு அநீதி என்றால், அதுப்பற்றி அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் வாய்மூடி இருக்க நிர்பந்திக்கப்படுபது இன்னும் பெரிய அநீதி தான். ஆனால் இந்த சமூக மவுனத்தை உடைத்தெரியும் வகையில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த அவலத்தை துணிச்சலுடன் வெளிப்படுத்த #MeToo ஹாஷ்டேக் ஊக்குவித்தது. 

பாலியல் தாக்குதல் புகார் ஹாலிவுட்டை உலுக்கியதை அடுத்து அக்டோபர் மாதம் அலிசியா மினோ எனும் நடிகை இந்த ஹாஷ்டேகை பநிந்துரைத்து பெண்கள் தங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளக் கோரினார். இதையடுத்து பிரபங்கள் உள்பட பல பெண்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த மோசமான அனுபவங்களை வெளியிட்டு, ஆண்களின் மனசாட்சையை உலக்கினர். இந்த இணைய இயக்கத்தை முன்னின்று நடத்திய குழுவினர் அமெரிக்காவின் டைம் இதழ் சார்பில் ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்டனர். மவுனத்தை உடைத்தவர்கள் என டைம் இதழ் பாராட்டியிருந்தது.

#anitha

• மருத்துவம் பயின்று டாக்டராகும் கனவுடன் இருந்த தமிழக கிராமத்து மாணவி அனிதா, நீட் நுழைவுத்தேர்வால் அந்த கனவு கலைந்த திகைப்பில் தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த தமிழகத்தை உலுக்கியது. அனிதாவின் மரணம் ஏற்படுத்திய சோகத்திற்கு மத்தியில் இணையவாசிகள் சமூக ஊடகங்களில் கொந்தளிப்பை வெளிப்படுத்தி அவரது மரணத்திற்கு நியாயம் கேட்டனர். #anitha, #neetkillsanitha, RIPDrAnitha, #JusticeForAnitha உள்ளிட்ட பல ஹாஷ்டேகுகளுடன் தங்கள் உணர்வுகளை இணையவாசிகள் டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி இந்த பிரச்சனை பற்றி ஆழமான விவாதத்தை ஏற்படுத்தினர். இது போலவே நெடுவாசல் போராட்டத்திற்கும் #neduvasal என ஆதரவு தெரிவித்தனர்.

பட உதவி: ட்விட்டர்
பட உதவி: ட்விட்டர்

#maiamwhistle

அரசியல் பிரவேசத்தை உறுதி செய்த நடிகர் கமல் ஹாசன் அதற்கு முன்னோட்டமாக ஒரு செயலியை உருவாக்கி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிட்ட போதே, தனது இயக்கத்திற்காக #maiamwhistle உள்ளிட்ட ஹாஷ்டேகுகளையும் உருவாக்கி வெளியிட்டார். இவை டிவிட்டரில் டிரெண்டிங்காகி தாக்கத்தை ஏற்படுத்தின.

#HappyTeachersDay

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லி களத்தில் கலக்கியதோடு களத்திற்கு வெளியேவும் தன்னைப்பற்றி பேச வைத்தார். செப்டம்பர் 5 ம் தேதி ஆசிரியர் தினத்தின் போது கோஹ்லி தான் கிரிக்கெட் கற்றுக்கொண்ட சச்சின், ஷேவாக், திராவிட், கபில், கவாஸ்கர் உள்ளிட்ட முன்னோடிகள் பெயரை எல்லாம் குறிப்பிட்டு இந்த ஆசான்களுக்கு வணக்கம் என கூறியிருந்தார். #HappyTeachersDay எனும் குறிப்புடன் வெளியான இந்த பட்டியலில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்கள் இம்ரான், இன்சமாம் உல் ஹக்கையும் அவர் சேர்த்திருந்தால் பாகிஸ்தான் ரசிகர்கள் நெகிழந்து போய் அவரை வாழ்த்தி மகிழ்ந்தனர்.

#girlstakeover

இந்த ஆண்டு கிரிக்கெட் களத்தில் கலக்கியது இந்திய வீரர்கள் மட்டும் அல்ல. வீராங்கனைகளும் தான். மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் இங்கிலாந்தில் நடைபெற்ற பெண்கள் உலக கோப்பையில் இறுதிப்போட்டி வரை முன்னேறி சாதனை படைத்தது. இந்த சாதனைக்காக டிவிட்டர் அவரை #MithaliRaj எனும் ஹாஷ்டேகுடன் கொண்டாடியது. பின்னர் அவர் கவர்ச்சியாக ஆடை அணிந்து செல்பி வெளியிட்ட போது பழமைவாதிகள் அவரை விமர்சிக்க, இணையவாசிகள் பலரும் #girlstakeover என அவருக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையை அடக்கினர்.