குழந்தைகள் எதிரான வன்முறைகளை தடுத்து அவர்கள் பாதுகாப்பிற்கு செயல்படும் ’ஸ்வரக்‌ஷா’

ஸ்வரக்‌ஷாவில் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்ட தன்னார்வலர்கள் குழுவாக இயங்குகின்றனர். இக்குழுவினர் சிறிய அளவு நடவடிக்கையும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் நம்புகின்றனர்.

0

ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை படிக்கையில் சிறு குழந்தைகள் மீது வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவது உள்ளிட்ட எண்ணற்ற தகவல்கள் கண்களில் படுகின்றன. இது போன்ற சம்பவங்கள் வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக சமூக நலனில் மிகவும் அக்கறை கொண்ட குடிமக்கள்கூட இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிந்திப்பதில்லை.

கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான ’ஸ்வரக்‌ஷா’ நிறுவனத்தின் கல்வி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை நிறுவனரான அனு சூரஜ் கூறுகையில்,

”ஒரு குற்றம் நடக்கும்போது பெரும்பாலும் அனைவரும் சிறிது காலம் அது குறித்து விவாதித்துவிட்டு அதன் பிறகு மறந்துவிடுகிறோம். பலரும் ஏதும் செய்ய இயலாததுபோல் உணர்வார்கள். இரவு முழுவதும் உறங்காமல் தவிப்பார்கள். ஆனால் எந்தவித நடவடிக்கை எடுக்கவும் முன்வரமாட்டார்கள்,” என்றார்.

2014-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் எனது கணவர் சூரஜ் இந்த பிரச்சனைகளை சமாளிக்க அரசு சாரா நிறுவனம் ஒன்றை துவங்கும் திட்டத்தை முன்வைத்தார். பிரச்சனைகளை அடிமட்ட நிலையில் தீர்க்கவேண்டும் என்பதை உணர்ந்தேன். குழந்தைகள் சந்திக்கும் பல்வேறு ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். வெளிப்படையாக பேசுவதன் முக்கியத்துவத்தை குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் எடுத்துரைக்கவேண்டும். இதற்காகவே ஸ்வரக்‌ஷா நிறுவப்பட்டது.

நீங்களே உங்களது பாதுகாவலர்

அரசு சாரா நிறுவனமான ஸ்வரக்‌ஷா தொண்டு அறக்கட்டளை மூலம் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தியது. உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் குழந்தைகள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து குழந்தைகள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதே இந்த பிரச்சாரங்களின் நோக்கமாகும். தன்னார்வலர்கள் குறிப்பாக பெண்கள் ஒரு சிறு குழுவாக இணைந்து தங்களது பணத்தையும் நேரத்தையும் செலவிட்டு கடுமையாக உழைத்து பிரச்சாரத்திற்கு தேவையான மெட்டீரியல்களை உருவாக்கினர். பள்ளிகளில் பல்வேறு அமர்வுகளுக்காக இவர்களை அணுகியபோது விரிவடைவதற்கான தேவை இருப்பதை உணர்ந்தனர். இந்த முயற்சியின் நோக்கம் பலரை ஈர்த்ததால் அதிக எண்ணிக்கையிலான தன்னார்வலர்கள் இணைந்தனர். இன்று தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், உளவியலாளர்கள், வழக்கறிஞர்கள், சமூகப் பணியாளர்கள் போன்றோர் குழுவில் இணைந்துள்ளனர். 

பள்ளிகள், பெற்றோர் குழு, தேவாலயங்கள், குடியிருப்புப் பகுதிகள், ஸ்டூடண்ட் போலீஸ் முயற்சிகள், சம்மர் கேம்ப் போன்றவற்றில் பல்வேறு பிரச்சாரங்களை ஸ்வரக்‌ஷா மேற்கொண்டு 5,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறப்புப் பள்ளிகளிலும் இக்குழுவினர் அமர்வுகள் மேற்கொண்டனர்.

பாடதிட்டம் தாண்டிய கற்றல்

குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களை தடுப்பதற்காகவே ஸ்வரக்‌ஷா துவங்கப்பட்டாலும் இந்நிறுவனம் குழந்தைகள் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண குழு விரிவடைந்து செயல்படுகிறது.

நல்ல மற்றும் தீய தொடுதலை எவ்வாறு வேறுபடுத்திப் பார்ப்பது, எவ்வாறு ஆன்லைனில் இருப்பது, நம்பிக்கை மற்றும் வலிமையை எப்படி உருவாக்கிக் கொள்வது, எப்படி கவனமாக இருப்பது, எவ்வாறு சூழ்நிலைகளை முறையாக எதிர்கொள்வது உள்ளிட்ட அமசங்களை ஒலி மற்றும் ஒளி தொழில்நுட்பம் மற்றும் ஊடாடும் அமர்வுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அனு கூறுகையில்,

குழந்தைகளை துன்புறுத்துதல் மற்றும் அதன் விளைவுகள், சைபர்க்ரைம் மற்றும் அவற்றை தடுத்தல், போதைப்பொருள் போன்றவற்றின் பக்க விளைவுகள், தனிப்பட்ட சுகாதாரம், தனிப்பட்ட உரிமைகள், POCSO ஆக்ட் குறித்த தகவல்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்.

பேச்சுகள் அந்தந்த வயதினருக்கு ஏற்றவாறு திட்டமிடப்படும். முக்கிய கருத்துக்களை இளம் குழந்தைகளுக்கு வழங்குவதற்கு கதைகள் மற்றும் வேடிக்கையான வீடியோக்கள் பயன்படுத்தப்படுகிறது. சற்றே வளர்ந்த குழந்தைகளுக்கும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான அமர்வுகளுக்கும் ஆழ்ந்த விவாதங்கள் திட்டமிடப்படுகிறது. விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதிகாரமளிக்கவும் இந்தக் குழுவினர் ’மாயா’ என்கிற குறும்படத்தை தயாரித்தனர். 3-5, 6-8, 9-10 க்ரேடுகள் என வெவ்வேறு வயதினருக்கும் அமர்வுகள் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்றவாறு உள்ளடக்கம், ப்ரசெண்டேஷன்கள், AV மெட்டீரியல் போன்றவை தயாரிக்கப்படும்.

தாக்கம்

ஸ்வரக்‌ஷாவின் முக்கியக் குழுவில் ஏழு ட்ரஸ்டீக்களும் கிட்டத்தட்ட 10 நிர்வாக உறுப்பினர்களும் தன்னார்வலாக செயல்படுகிறனர். டாக்டர் ரெஞ்சிமா கமல், ஐடி துறையைச் சேர்ந்த நந்தினி கோபாலகிருஷ்ணன், டாக்டர் வினி விஜய், சட்டத்துறையைச் சேர்ந்த சஜினாள் அருண், சமூக ஆர்வலரான அனிதா ப்ரதீப், ஆசிரியரான ரம்யா துரைராஜ் ஆகியோருடன் அனு சூரஜ் இணைந்து முக்கியக் குழுவாக செயல்படுகின்றனர்.

ஸ்வரக்‌ஷாவின் மெட்டீரியல்கள் துறை சார்ந்த நிபுணர்களால் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த அரசு சாரா நிறுவனம் இதுவரை சின்மயா வித்யாலயா, கிட்சீ க்ரூப், நலந்தா பப்ளிக் பள்ளி, போல்கா டாட்ஸ் கிண்டர்கார்டன், செயிண்ட் ரஃபீல்ஸ் சர்ச், ஸ்மிரிதி சிறப்புப் பள்ளி, கொச்சின் பப்ளிக் பள்ளி ஆகிய பள்ளிகளில் அமர்வுகளை நிறைவு செய்துள்ளது. காவல் படை குறித்து ஒரு பொதுவான கண்ணோட்டம் இருக்கும். ஆனால் அதை தகர்க்கும் விதத்தில் கொச்சி சிட்டி போலீஸ் (SPC), குழுவுடன் இணைந்து செயல்பட்டது. பேக்யார்ட் அரேனா, ரோட்டரி கொச்சின் காஸ்மோஸ், SDKY குருகுல வித்யாலயா, கிட்ஸ்வேர்ல்ட் மரடு மற்றும் KIDS கோட்டூர்புரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரச்சாரங்களுக்கும் காவல் படையினர் இணைந்து செயல்பட்டனர்.

நந்தினி கோபாலகிருஷ்ணன் கூறுகையில்,

நம் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கும் இடமாக நான் நினைக்கும் வீடு, பள்ளி போன்ற இடங்களில்தான் பெரும்பாலான குழந்தைகள் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு துன்புறுத்துவோரில் பெரும்பாலானோர் குழந்தைகளிடம் நட்புடன் பழகுவது போல மிகவும் நெருக்கமாக பழகுவதும் தெரிகிறது. 
பெண் குழந்தைகள் மட்டுமே துன்புறுத்தப்படுவதாக நம்பப்படுகிறது. அதற்குச் சமமாக ஆண் குழந்தைகளும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். வக்கிர குணம் படைத்தவர்கள் கொடூரமான குற்றங்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காக நாங்கள் கடுமையாக உழைத்துவருகிறோம்.

குழந்தைகள் சுயமரியாதையை உருவாக்கிக்கொள்ளவும் மற்றவர்களுக்கு மரியாதை அளித்து மற்றவர்களின் உணர்வை புரிந்துகொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ளவும் பிரச்சாரங்கள் வாயிலாக ஊக்குவிக்கப்படுகின்றனர். பின் தொடர்வது, பயமுறுத்துதல் அல்லது கொடுமைப்படுத்துதல், சக வயதினரின் நடவடிக்கைகளை பின்பற்ற ஏற்படும் அழுத்தம், ராகிங் போன்ற சம்பவங்கள் கதைகளாக எடுத்துரைக்கபடுகிறது.

இந்த வருடம் ஊழியர்களுக்காக சம்மர் கேம்ப்பிலும் டே கேர் செண்டரிலும் இக்குழுவினர் முதல் முறையாக அமர்வுகள் ஏற்பாடு செய்தனர். ஒரு வெளிப்படையான முறை பள்ளிகளிலும் மற்ற கல்வி நிறுவனங்களிலும் பின்பற்றவேண்டிய அவசியம் இருப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பெற்றோர்களும் சூழ்நிலைகளை புரிந்துகொண்டு விளைவுகள் குறித்து முன்கூட்டியே சிந்தித்து செயல்பட்டால் குற்றங்களைத் தடுக்கமுடியும் என்பதையும் அறிவுறுத்தினர். குழந்தைகளின் நடத்தையை வலுப்படுத்த அவர்களை அச்சுறுத்துவது அடித்து தண்டனையளிப்பது போன்றவற்றை தவிர்க்க வலியுறுத்தினர். குழந்தைகளின் உணர்வுசார் தேவைகளை புரிந்துகொண்டு ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். இப்ப்படிப்பட்ட நடவடிக்கைகளை பின்பற்றி சிறப்பான குழந்தை வளர்ப்பு முறைகளை அமர்வுகள் விளக்கியது.

ஆங்கில கட்டுரையாளர் : ஷரிகா நாயர்