கடந்து போன கழிவறை தினமும் கவனிக்கத்தக்க 5 இயக்கங்களும்

0

"எந்தப் பிரச்சினையை சர்வதேச அளவில் கவனம் பெறச் செய்வது என்பதில் மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது. ஆனால், மனிதக்கழிவு குறித்து கவனம் ஈர்க்கச் செய்வது உண்மையில் மிகக் கடினமானது" என்று உலக கழிவறை நிறுவனத்தின் தலைவர் ஜாக் சிம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவில் கழிவறை வசதி உள்ளவர்களை விட கையில் மொபைல்போன் வசதியைப் பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். இந்தியாவில் சுமார் 60 கோடி பேருக்கு, அதாவது 53 சதவீத மக்களுக்கு கழிவறை வசதி இல்லை என்கிறது ஒரு புள்ளிவிவரம். இதனால், அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் உயிரிழக்கின்றன; ஊட்டக்குறைவு மற்றும் நோய்களாலும் பாதிக்கப்படுகின்றன. பெண் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலைக்கும், திறந்தவெளியையே கழிவகமாக பயன்படுத்த வேண்டியிருப்பதால், பெண்கள் வன்கொடுமைகளுக்கு ஆளாவதற்கும் இந்தப் பிரச்சினையே முக்கியக் காரணியாகிறது.

உலக கழிவறை தினம்

தண்ணீரால் பரவும் வயிற்றுப்போக்கு நோய்களால் மட்டும் இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 2,00,000 குழந்தைகள் உயிரிழக்கின்றன. இந்தக் குழந்தைகள் அனைவருமே நான்கு வயதுக்கு உட்பட்டவை. வெறும் 32 சதவீத அளவில் மட்டுமே கழிவறை வசதி உள்ள ஊரகப் பகுதிகளில் இந்த நிலைமை இன்னும் மிக மோசம் என்று 2012-ல் என்.எஸ்.எஸ்.ஓ. எனச் சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்ததும் கவனிக்கத்தக்கது.

இதோ... வழக்கம்போல் நவம்பர் 19-ல் வந்து - இருந்து - கடந்து சென்றுவிட்டது 'உலக கழிவறை தினம்.' அன்றைய தினத்திலாவது, உலக நாடுகள் முழுவதும் ஒருசேர தங்களது சுகாதார மற்றும் தூய்மை நிலை குறித்து விழிப்புணர்வு கொண்டது என்ற வகையில் போற்றத்தக்கது. இந்தச் சூழலில், அந்த ஒருநாள் மட்டுமின்றி, இந்தியாவின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து பாடுபடும் அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் அரசு முயற்சிகளில் முக்கியமானவற்றைப் பார்ப்போம்.

சுலப் இன்டர்நேஷனல்

துப்புரவாளர் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக டாக்டர் பிதேஷ்வர் பதக் முன்முயற்சியில் உருவாக்கி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது சுலப் இன்டர்நேஷனல் (Sulabh International). உலக அளவில் தனித்துவ திட்டத்தால் சுகாதார அலையை ஏற்படுத்தி கவனத்தை ஈர்த்தது. குழந்தைப் பருவத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளான டாக்டர் பதக், மனிதக் கழிவுகளை சக மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தொடங்கிய இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் 50,000 தன்னார்வலர்கள் இயங்குகின்றனர். இவர்களது 'சுலப் ஷவுச்சாலாஸ்' என்ற எளிய கழிவறைகள் திட்டம் மிகவும் பிரபலமானது. இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் 13 லட்சம் அளவில் திறந்தவெளி கழிவறைப் பயன்பாடு அகற்றப்பட்டிருக்கிறது. அதாவது, 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். குறிப்பாக, 640 சிறு நகரங்களில் துப்புரவாளர்கள் தங்கள் தொழிலையே மாற்றிக்கொள்ளவும் உறுதுணைபுரிந்துள்ளனர்.

உலக கழிவறை நிறுவனம்

சானிஷாப் (SaniShop) உருவாக்கத்தின் முன்னோடியாகத் திகழ்கிறது 'உலக கழிவறை நிறுவனம்' (World Toilet Organisation). சானிஷாப் சமூக நிறுவனம் மூலம் உள்ளூர் தொழில்முனைவர்களுக்கு அதிகாரமளித்து, உலக அளவில் சுகாதாரத்தை மேம்படுத்தும் முயற்சி வியக்கத்தக்கது. ஊரகப் பகுதிகளில் பாதுகாப்பாகவும், குறைந்த செலவிலும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு, இந்தியாவில் 2011-ல் சானிஷாப் மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டது. ஒடிஷாவைச் சேர்ந்த சமூக நிறுவனமான இ-குடிர் (eKutir) உடன் இணைந்து உள்ளூர் மக்கள் பயனடைய வழிவகுத்தது. இவர்கள் 2013-ல் இருந்து 2014-க்குள் 889 வீடுகளுக்கு கழிவறை வசதிகளை செய்து தந்தனர். அத்துடன், ஒடிஷாவிலும் மகாராஷ்டிராவிலும் 51 தொழில்முனைவர்களை தயார்படுத்தினர். இப்போது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கால்பதிக்க முடிவு செய்துள்ளது உலக கழிவறை நிறுவனம்.

பீபடி

இந்தியாவில் பெண்களின் அவசரத்துக்காக தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகளின் எண்ணிக்கை 1.3 கோடிக்கும் மேல். இந்த வசதியை சரியாக செய்துகொடுக்க முடியாத நிலைக்கு தங்கள் நடவடிக்கைகளால் பதில் சொல்கிறது பீபடி (PeeBuddy). "எனக்கு எந்த நேரத்தில் வந்தாலும் உடனே நின்றபடி சிறுநீர் கழித்திட விரும்புகிறேன்" என்ற பெண்களின் குரல்களைக் கேட்டு, மிகப் பெரிய முன்முயற்சியில் இறங்கினர், டெல்லியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள். பெண்கள் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய டிஸ்போஸபிள் - பேப்பர் யூரினேஷன் சாதனத்தை வடிவமைத்தனர். பெண்கள் நின்றபடி தங்கள் கால்களுக்கு இடையில் வைத்து இந்தச் சாதனத்தை சிறுநீர் கழிக்கப் பயன்படுத்தலாம். பெண்கள் சுகாதாரமற்ற கழிவறைகளில் சுகாதாரமான முறையில் சிறுநீர் கழிப்பதற்கு வழிவகுக்கிறது இந்த முயற்சி. நகர்ப் பகுதிகளில், பெண்கள் தங்கள் அருகிலுள்ள கழிவறைகளை கண்டறிய உதவும் செயலி ஒன்றையும் தயாரித்து அசத்தியிருக்கிறார்கள்.

தூய்மை இந்தியா திட்டம்

மத்திய அரசின் 'தூய்மை இந்தியா' இயக்கத் திட்டம் (Swacch Bharat Abhiyaan) தொடங்கப்பட்டபோது, எல்லா தரப்பினருக்கும் நம்பிக்கை வலுத்தது. மக்களின் பெரும்பகுதி நிதியை பிரச்சார இயக்கத்துக்காக செலவிடுவதால், கழிவுத் துறை உள்ளிட்ட கழிவுகளை அகற்றுதல் சார்ந்த பிரச்சினைகளுக்கு முழுமையானத் தீர்வு கிடைக்கப்போவதில்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விமர்சித்தனர். அதேவேளையில், அங்கிங்கெனாதபடி எங்கும் தூய்மை பற்றியே பேச்சு எழுந்த வகையில் பலரும் ஆதரித்தனர்.

திறந்தவெளி கழிவக முறையை ஒழிக்கும் நோக்கத்தை உள்ளடக்கிய தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 95 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக, மத்திய ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், துப்புரவு மற்றும் குடிநீர் துறை அமைச்சர் பிரேந்தர் சிங் சவுத்ரி தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், இந்த கழிவறைகள் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என்பது சவால் நிறைந்ததே. கடந்த ஆண்டுகளில் கட்டப்பட்ட 6 கோடி கழிவறைகளில் 1.3 கோடி கழிவறைகள் தற்போது பயன்படுத்தும் நிலையில் இல்லை என்கிறது ஓர் ஆய்வு. அங்கன்வாடி மையங்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் பாதி எண்ணிக்கையில் கழிவறை வசதி இல்லை .

அந்தமான் - நிகோபார், டாமன் - டையூ, தாத்ரா - நகர் ஹவேலி, கேரளம், புதுச்சேரி மற்றும் சிக்கிம் ஆகிய 100 சதவீத இலக்குகளுடன், ஸ்வச் வித்யாலயா இயக்கத்தின் கீழ் பள்ளிகளில் 2.86 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் இலக்குகள் சரியாக எட்டப்படவில்லை. ஆந்திராவில் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து 2018-க்குள் 6 லட்சம் கழிவறைகள் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது. பஞ்சாப் தமது மாநிலத்தின் சுகாதார வசதிகளுக்காக உலக வங்கியிடம் இருந்து ரூ.2,200 கோடி நிதி பெற்றுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்திய ரயில்வேயும் இணைந்துள்ளது. ரயில் தண்டவாளங்களின் இறு புறங்களிலும் மனிதக் கழிவுகள் வெளியேற்றப்படுவதை தவிர்க்கும் வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்த வழிமுறைகள் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காட்டகோ

நகரவாசிகள் வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், ரயில்வே நிலையங்கள், உணவகங்கள், அருங்காட்சியகங்கள் முதலான இடங்களில் அருகிலுள்ள கழிவறைகளைக் கண்டறிய உதவும் வகையில் குணால் ஷேத் என்பவரால் 2010-ல் உருவாக்கப்பட்ட இலவச செயலிதான் காட்டகோ (GottaGo). வரைபடங்கள், தூரங்கள், திசைகள் என அனைத்து விவரத்தையும் கொண்டு இந்தச் செயலி எளிதில் வழிகாட்டுகிறது. தன் குடும்பம், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நகரப் பகுதிகளுக்குச் செல்லும்போது, பொதுக் கழிப்பிடங்களைக் கண்டறிய பெரும் பாடுபட்டதன் விளைவாகவே இப்படி ஓர் அருமையான சேவையைத் தொடங்கினார் குணால். போக்குவரத்து நெரிசலும், தூய்மையான கட்டமைப்புகளும் இல்லாத நிலையில், பயணிகளுக்கு பெரும் துணையாகவே செயல்படுகிறது இந்த செயலி. இதைப்போலவே மூத்ராலயா (Mutralaya), ஃப்ளஷ் (Flush), ஸ்வச் பாரத் டாய்லெட் லொகேட்டர் (Swach Bharat Toilet Locator), டாய்லெட் ஃபர்ஸ்ட் (ToiletFirst), மற்றும் சுசுவிதா (Susuvida) ஆகிய செயலிகளும் இத்தகைய சேவையைச் செய்கின்றன.

ஆக்கம்: சவுரவ் ராய் | தமிழில்: கீட்சவன்

Stories by YS TEAM TAMIL