சென்னையை மீட்கும் அசுரர் படை !

0

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் - வள்ளலார்.

'சென்னை மாநகரம் துண்டிக்கப்பட்டது’-என்ற தலைப்புச் செய்தியை மிரட்சியுடனும், நடுக்கத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தனர் தமிழக மக்கள். நொடிக்கு நொடி கூடும் நீரின் அளவு எல்லாரையுமே கலங்கச் செய்திருந்தது. இருப்பிடங்களை இழந்து, அத்தியாவசிய தேவைகள் இல்லாத நிலையில், ஹெலிகாப்டரில் இருந்து போடப்படும் உணவுப் பொட்டலங்களைத் முட்டி மோதி, தாவிப் பிடித்தவர்களுடைய மனநிலை என்னவாய் இருந்திருக்கும்?

சென்னை வெள்ளம் வரலாறு காணாத பேரிடர் தான். நாம் இதற்கு தயராக இருந்திருக்கவில்லை. ஆனாலும்,ஒரு நொடி தாமதிக்காமல், தயங்காமல் களத்தில் இறங்கியது மனிதம். சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என மிகப் பெரிய பட்டாளம் ஒன்று, எவரையும் எதிர்பார்க்காமல், மீட்புப் பணிக்கு தயாரானது. சமூக தளங்கள் முழுவதும் விநியோகிப்பவர்களின் விபரங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களால் நிறைந்து வழிந்தது.

ஒரு புறம் உணவுகள் தயாரானது; மறுபுறம், பாய்கள், போர்வைகள், மெழுகுவர்த்திகள், அடிப்படை மருத்துவ சாதனங்கள், நாப்கின்கள் உட்பட பல பொருட்களும் சேகரிக்கப் பட்டது; சிலர், நிதி திரட்டினர் . இப்படிப் சென்னை மற்றும் பிற மாவட்டங்களையும் சேர்ந்தக் குழுக்கள், பாதிக்கப்பட்டப் பல பகுதிகளை நோக்கிப் பயணித்தனர்.

நவம்பர் மாதம் முழுவதும், மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியிடம் பேசினேன்,

“இப்போது மணலியில் இருக்கிறோம். இன்று கார் கிடைத்ததனால் இப்போது பேச முடிகிறது. மற்ற நாட்களைப் போல பைக்கில் சென்றுக் கொண்டிருந்தால் பேசியிருக்க கூட முடியாது”, என்கிறார்.

“இப்படி ஒரு மாபெரும் சேவை சாத்தியப்படக் காரணம், சமூக வலைதளங்கள் என்று தான் நினைக்கிறேன். ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் பல பேர், தனித் தனிக் குழுவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறனர். மீட்புப் பணிக்கான பாராட்டு நிச்சயம் ஒருவரை மட்டுமே சென்று சேரக் கூடாது. ஏனெனில், ஒரு குழுவிற்கு பின் பலரின் தன்னலமற்ற உழைப்பு இருக்கிறது".

மற்றொருபுறம் ஷா ஜஹான் அண்ணன் செய்தது மிகப் பெரிய காரியம். பிரதமர் மற்றும் அரசுக்கு கடிதம் எழுதி இலவச டோல் கேட்கள், ரயில்வேயிலிருந்து ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்கள் என அவர் எறிந்த கற்கள் ‘ஹிட்’ அடித்தது, இன்று அனைத்துத் தரப்பினருக்கும் உதவியிருக்கிறது. வெளியூரிலிருந்து வண்டி ஏற்பாடு செய்து, மற்றவர்களிடம் இருந்துப் பொருட்கள் திரட்டி, வேலையை விட்டு, ஒரு நாள் சம்பளத்தை விட்டு, உதவுவதற்காக சென்னையை நோக்கி வருகிறவர்களுக்கு உதவி செய்ய வழி காட்டினார். அவர்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும். அதிகாரம் செய்யாததை, அவர் செய்திருக்கிறார்.

நடுத்தர மக்கள், ‘பசிக்குது’னு யார்ட்டயும் கேட்க முடியாமல் இருக்கின்றனர். ஏழைகளுக்கு, பசியை மட்டும் போக்க முடிகிறது, ஆனால், அவர்களுடைய வீடு வாசல் என எல்லாம் பறி போயிருக்கிறது. இதிலிருந்து முற்றிலுமாக எல்லாம் நிவர்த்தியாக, அரசின் உதவி நிச்சயம் தேவைப்படும். சென்னை இயல்பு நிலைக்கு திரும்பும் போது, புயலுக்கு பின் உருவாகும் அமைதிப் போல இருக்கும் என நினைக்கிறேன்.” என்கிறார்.

புதிய புதிய நண்பர்க் கூட்டத்தையும், புதிய புதிய உறவுமுறைகளையும் உருவாக்கிக் கொடுத்த இந்த மழை, வாழ்க்கையின் அர்த்தத்தை அடித்துரைத்திருக்கிறது.

தன்னார்வலர், மொஹமத் யூனஸ், பிரசவ வலியில் இருந்த சித்ராவைக் காப்பாற்றியதால், அவரது நினைவாக, பிறந்த பெண் குழந்தைக்கு ‘யூனஸ்’ என்றே பெயரிட்டிருக்கின்றனர் மோஹன் - சித்ரா தம்பதியினர். மொத்த சென்னையின் வாழ்த்தோடும், மிகப் பெரிய சாகசத்தோடும், யூனஸ், தன் புவி வாழ்வைத் தொடங்கியிருக்கிறாள்.

சென்னைக்கு அனுப்புவதற்காக சப்பாத்தி உருட்டிய சிறு குழந்தைகள், கண் அயராமல் ‘தேவைகளையும்’, ‘பொருட்களையும்’ இணைத்த வலைஞர்கள், ஒகனேக்கலில் இருந்து பரிசல் கொண்டு வந்தவர், இலவசமாக படகுகளைக் கொண்டு வந்து உதவிய மீனவர்கள், தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தவர்களின் நலன் அறிய விரைந்த உள்ளங்கள், இடுப்பு வரை இருந்த மழை வெள்ளத்திலும் பால் விநியோகம் செய்த பாட்டி, அறிமுகமே இல்லாத பலருக்கு ரீ-சார்ஜ் செய்தவர்கள், இலவச சேவை செய்த மருத்துவர்கள், சுயநலமே இல்லாமல் கோடி உயிர்களுக்காக பிரார்த்தித்த நெஞ்சங்கள், கால்களில் சேற்றுப் புண்ணுக்கு மருந்துக் கூடத் தடவாமல் இன்னும் களத்தில் இருக்கும் மனிதம் ஓங்கிய ஆயிரமாயிரம் மாமனிதர்களுக்கு, மனம் நெகிழ்ந்த சல்யூட்!

நாங்கள் உங்களுக்கு தீராக்கடன் பட்டிருக்கிறோம்; அது நம் உறவை தொடரவும் வளர்க்கவும் செய்யும்.