சக்கர நாற்காலி உலக அழகு போட்டி 2017-க்கு தேர்வாகியுள்ள பல் மருத்துவர்!

1

31 வயதான ராஜலஷ்மி பல வேலைகளை சுலபமாக செய்யும் ஒரு சிறந்த பெண்மணியாக இருக்கிறார். பல் மருத்துவர், ஆர்தாண்டிஸ்ட் மற்றும் துணை பேராசிரியராகவும் இருக்கிறார். இயற்கையாகவே அவர் எல்லா வேலைகளையும் திட்டமிட்டு கையாளுகிறார். பெங்களுருவை சேர்ந்த இவர் தற்போது மிஸ் வீல்சேர் வோர்ல்ட் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொள்ள உள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. இதற்காக இவர் இம்மாதம் 7-ம் தேதி போலாந்து செல்லவுள்ளார். 

கனவுகளை சுமந்து வளர்ந்த ராஜலஷ்மியின் வாழ்வில் 2007-ம் ஆண்டு திடிரென விதி விளையாடியது. அவரின் பிடிஎஸ் தேர்ச்சிக்கு பின்னர், சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கில் பங்குபெற காரில் பெங்களுருவில் இருந்து பயணித்தார் ராஜலஷ்மி. ஓட்டுனரின் தவறால், விபத்து ஏற்பட்டு, அவரின் ஸ்பைனல் கார்டில் அடிபட்டு, இடுப்புப் பகுதிக்கு கீழ் முழுதும் செயலிழந்து போனது. தி நியூஸ் மினிட் பேட்டியில் பகிர்ந்த ராஜலஷ்மி,

“ஒரு புதிய உடலோடு நான் வாழவேண்டி இருந்தது. நான் ஒரு புது மனுஷியாக உணர்ந்தேன்.”

தன் மனதை திடப்படுத்திக் கொண்டு, தன் முயற்சியை பல விஷயங்களில் செலுத்தினார். எம்டிஎஸ் முடித்தார், பேஷனில் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டார். சக்கர நாற்காலியில் உள்ளோருக்கான அழகு போட்டி பற்றி இண்டெர்நெட்டில் படித்துவிட்டு தானும் அதில் கலந்து கொள்ள ஆயத்தமானார். முதலில் 2014-ல் இந்திய அளவில் வீல்சேர் அழகு போட்டியில் வெற்றி பெற்றார். அது அவர் கனவு நினைவான தருணமாக நினைப்பதாக சொல்கிறார். 

எஸ்ஜே பவுண்டேஷன் என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பின் தலைமைப் பொறுப்பிலும் இருக்கிறார் ராஜலஷ்மி. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நாடாக தற்போது மெல்ல இந்தியா முயற்சித்து வருகிறது என்கிறார். 

”என் குறைபாடு உடலளவில் உள்ளதால் வெளியில் தெரிகிறது. ஆனால் பலரது குறைபாடுகள் தெரிவதில்லை. குறைபாடுகளில் பலவகைகள் உண்டு. உடலளவில், நடத்தையில், மனதளவில், என்று பிரிக்கலாம். ஒருவரை அவரின் குறைபாடை வைத்து எடைப் போட முடியாது,” என்கிறார்.

மிஸ் வீல்சேர் உலக அழகி போட்டி 2017-ல் பிரபலமாக தேர்வாக ராஜலஷ்மிக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் இங்கே வோட்டு அளிக்கலாம். 


Related Stories

Stories by YS TEAM TAMIL