சிறப்புக் குழந்தையை தத்தெடுத்த இந்தியாவின் இளம் தாயுமானவன்!

0

ஓர் ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு, டவுண்ஸ் சிண்ட்ரோம் (Down’s syndrome) பாதிப்புள்ள சிறப்புக் குழந்தையை தத்தெடுத்திருக்கிறார் மத்தியப் பிரதேச- இந்தூரைச் சேர்ந்த ஆதித்யா திவாரி. 28 வயது இளைஞரான ஆதித்யா திருமணம் ஆகாதவர். இந்த இளம் வயதில், அதுவும் இந்தியாவில் ஒற்றைப் பெற்றோர் (Single Parent) ஆக ஒரு சிறப்புக் குழந்தையை தத்தெடுப்பது என்பதே வியத்தக்கு முடிவு.


ஒன்றரை வயது குழந்தையான பின்னியை தத்தெடுப்பதற்காக, 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்தே ஆதித்யா முயன்று வந்தார். 30 வயதுக்கு உட்பட்ட ஒற்றைப் பெற்றோருக்கு தத்தெடுக்கும் தகுதி இல்லை என்று மறுத்த அதிகாரிகளிடம் கடுமையாகப் போராடினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ல் தத்தெடுப்புச் சட்ட விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதனால், ஆதித்யாவுக்கும் பின்னிக்கும் இடையிலான பிணைப்புக்கான நம்பிக்கைக் கதவு திறக்கப்பட்டது. எனினும், புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த ஓர் அண்டு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடைசியில், தாயுமானவன் ஆனார் ஆதித்யா.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு ஆதித்யா அளித்த பேட்டியில் "அவனுக்கு நாங்கள் அவினிஷ் திவாரி என்று பெயரிட்டுள்ளோம். புனேவில் உள்ள இல்லத்தில்தான் நாங்கள் இப்போது வசிக்கிறோம்" என்று இந்தப் புத்தாண்டில் தன் குடும்பத்துக்கு சிறப்பு மிக்கதாகப் பிறந்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஆக்கம்: திங்க் சேஞ்ச் இந்தியா | தமிழில்: கீட்சவன்