கடவுளின் குழந்தைகளை கரம் பிடித்து வழிநடத்தும் மஞ்சுப்ரியா!

பள்ளிகள் வியாபாரக் கூடாரங்களாகி காசை கறந்து வரும் நிலையில் திருமணத்திற்குப் பிறகு வீட்டிலேயே முடங்கி விடக்கூடாது என்று மழலையர் பள்ளி தொடங்கப் போய் இன்று சிறப்பு குழந்தைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் சென்னையை சேர்ந்த மஞ்சுப்ரியா.

0

சுற்றுச்சூழல் பாதிப்புகள், உணவு முறை மாற்றம், மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளுதல், உயிர்ச்சத்துக்கள் குறைபாடு, பரம்பரை மற்றும் மரபணு காரணமாக இந்தியாவில் பிறக்கும்போதே குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடவுளின் இந்தக் குழந்தைகள் சொல்லிக் கொடுக்கும் எதையும் எளிதில் புரிந்து கொள்ள மாட்டார்கள், அடம்பிடித்தல், சொல்பேச்சு கேளாமைக்கு காரணம் இவர்கள் சாதாரண குழந்தைகளைப் போல அல்ல. இவர்களை வேடிக்கை பார்க்கும் ஒரு சிலரால் குறைபாடுள்ள சிறப்பு குழந்தைகளும், பெற்றோரும் அடையும் வேதனை சொல்லிமாளாது.

சிறப்புக் குழந்தைகளின் குறைபாடுகளை சிறு வயதிலேயே கண்டறிந்தால் எளிதில் சரிசெய்துவிட முடியும். இவர்களுக்கு தனியான சிகிச்சையோ மருந்து, மாத்திரைகளோ தேவையில்லை. முறையான பயிற்சிகள், தனிமையில் அவர்களை விடாமல் இருத்தல் போன்ற விஷயங்கள் இவர்களின் மனநிலையை மாற்றும். சிறப்புக் குழந்தைகளை அவர்களுக்கான பிரத்யேக பள்ளிகளில் சேர்ப்பது சரியானதாக இருக்கும் என்று நினைத்து அவர்களை அத்தகைய பள்ளிகளில் சேர்த்துவிடுகின்றனர் பெற்றோர். இதற்கு மற்றொரு காரணமும் உள்ளது சாதாரணப் பள்ளிகளில் இந்த சிறப்புக் குழந்தைகளை சேர்த்துக் கொள்ள பல கல்வி நிலையங்கள் ஒத்துழைப்பு தருவதில்லை.

கடவுள் படைப்பில் உருவான அனைத்து குழந்தைகளும் சமமே என்று சிறப்பு குழந்தைகளின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் எஸ்கேபி வித்யாஸ்ரம் பள்ளி இதற்கு விதிவிலக்கு. அதன் நிறுவனர் மஞ்சுப்ரியா இந்த பள்ளிக்கான விதை எங்கிருந்து தோன்றியது என்பதை தமிழ் யுவர் ஸ்டோரியிடம் பகிர்ந்து கொண்டார்.

மஞ்சுப்ரியா
மஞ்சுப்ரியா

செங்கல்பட்டைச் சேர்ந்த மஞ்சுப்ரியா, எம்இ படித்து முடித்த கையோடு பெற்றோர் திருமணம் முடித்து வைக்க, 25 வயதில் சென்னைக்கு இடம்பெயர்ந்துள்ளார். திருமண வாழ்க்கை, ஒரு குழந்தைக்குத் தாய் என வாழ்க்கை ஓடிய சமயத்தில் ஒரு நாள் மஞ்சுப்ரியாவை ஏதேனும் தொழில் தொடங்குமாறு அவருடைய கணவர் ஊக்கம் தந்துள்ளார். அப்போது மஞ்சுவின் மனதில் பட்டது, தான் தொடங்கப் போவது வெறும் பணம் சம்பாதிக்கும் தொழிலாக இல்லாமல் அதில் நல்ல சமுதாயத்திற்கான ஊக்கமும் இருக்க வேண்டும் என்ற நினைப்பு. அப்போது ப்ளே ஸ்கூல் தொடங்குவது ட்ரெண்டாக இருந்ததால் மான்டிசோரி பற்றி படித்து தெரிந்து கொண்டு அதையே தொடங்கலாம் என முடிவு செய்திருக்கிறார்.

“ப்ளே ஸ்கூல் தொடங்குவதென்றால் அதற்காக தனியான முதலீடு தேவை. தாம்பரத்தில் உள்ள என் மாமனார் வீட்டையே பயன்படுத்தலாம் என்றாலும் அதனை சீரமைப்பு செய்ய வேண்டும். ஒரு பள்ளியை நடத்துவதென்றால் எடுத்தஎடுப்பில் எதையும் தனியாக செய்து விட முடியாது என்பதால் ப்ரான்சைஸ் வாங்கி பள்ளியை நடத்த முடிவு செய்தேன். பள்ளி நடத்த இடம் தேவை என்பதால் என்னுடைய நகைகளை அடகு வைத்து வீட்டை சீரமைத்து 2013ம் ஆண்டில் ஒரு ப்ளேஸ்கூலைத் தொடங்கினேன்,” என்கிறார் மஞ்சுப்ரியா.

இத்தனை கஷ்டப்பட்டு பள்ளியை தொடங்கியாச்சு ஆனால் ஒரே ஒரு குழந்தை மட்டுமே பள்ளியில் சேர்ந்ததைப் பார்த்து மிகவும் கஷ்டமாக இருந்தது. 3-4 மாதங்கள் இப்படியே ஒரே குழந்தையை வைத்தே பள்ளியை நடத்தினேன், அதற்குப் பிறகு இது சரிவராது என்று நினைத்து ப்ளே ஸ்கூல் பற்றி கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். செங்கல்பட்டு முதல் சென்னை வரை சுமார் 250 ப்ளேஸ்கூல்களை நேரில் சென்று விசாரிக்கத் தொடங்கினேன். என் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதாகச் சொல்லித் தான் அங்கெல்லாம் விசாரிக்கத் தொடங்கினேன். 

”நிர்வாகம் பெற்றோரை அணுகும் விதம், எப்படி பேச வேண்டும் என்பன உள்ளிட்ட பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு நானே முயற்சித்து குழந்தைகளுக்கு கற்றல் தொடர்பான வொர்க் ஷீட்டுகளை தயாரிப்பது, குழு முயற்சிகளை மேற்கொள்வது உள்ளிட்டவற்றை என்னுடைய பள்ளியில் அறிமுகம் செய்தேன். இது போன்ற தொடர் முயற்சிகளால் ஓராண்டில் 58 குழந்தைகள் என் பள்ளியில் சேர்ந்தனர்,”

என்று தான் பார்த்து பார்த்து பள்ளியை உருவாக்கிய விதத்தை விவரிக்கிறார் மஞ்சுப்ரியா.   ப்ரான்சைஸ் விதிகளை மீறி பள்ளியில் சிலவற்றை செய்ய முடியாத நிலை இருந்ததால் அதில் இருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறார் மஞ்சு. இதனிடையே நான் ப்ரான்சைஸ் பெயரை தவறாக பயன்படுத்தியதாகக் கூறி அவர் மீது வழக்கு போட்டு ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடும் கேட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த கஷ்டங்களையெல்லாம் நினைத்து சோர்ந்து போகாமல் தனித்து எஸ்கேபி வித்யாஸ்ரம் என்ற பெயரில் பள்ளியை தொடர்ந்து நடத்த முடிவு செய்திருக்கிறார். 

வழக்கு, நஷ்டஈடு என்பதைக் கண்டு சுணங்கிவிடக்கூடாது மழலையர் பள்ளியை தொடக்கப் பள்ளி அளவிற்கு உயர்த்த வேண்டும் என்று மஞ்சுவின் கணவர் அவருக்கு ஊக்கமளித்துள்ளார். தொடக்கப் பள்ளி தொடங்க வேண்டுமென்றால் பெரிய இடம் தேவை, நிதியும் அதிக அளவில் தேவை என்று நினைத்து தவித்துக் கொண்டிருந்த போது தான் மஞ்சுப்ரியா தொடர்ந்து செயல்படுவதற்கான அடுத்த வழி கிடைத்திருக்கிறது. 

“எங்கள் வீட்டிற்கு அருகிலேயே செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு பள்ளி அந்த இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு இடம்பெயர்ந்தது. உடனே அந்த இடத்தை வாடகைக்கு எடுத்து பள்ளியை விரிவாக்கம் செய்து தொடக்கப்பள்ளியை தொடங்குவதற்கான அனுமதி வாங்கும் வேலைகளில் இறங்கினேன். என்னை தொடர்ந்து இயங்க வைத்த விஷயம் 2வது ஆண்டிலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தது, அப்போது தான் நான் ஏதோ உருப்படியான விஷயத்தை செய்கிறேன் என்ற நம்பிக்கை வந்ததாகக் கூறுகிறார் மஞ்சுப்ரியா. கேஜி, ஒன்றாம் வகுப்பு, என படிப்படியாக உயர்ந்து இன்று எஸ்கேபி பள்ளியில் 5ம் வகுப்புகள் வரை நடத்தப்படுகின்றன.

பள்ளி சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருத் போது 2வது ஆண்டில் மஞ்சுவின் பள்ளிக்கு 3 சிறப்புக் குழந்தைகள் சேர்க்கைக்காக வந்துள்ளனர். நாளடைவில் ஒரு நாளைக்கு 5 சிறப்புக் குழந்தைகள் கூட சேர்க்கைக்காக வரத் தொடங்கியுள்ளனர். இந்தக் குழந்தைகளுக்கென சரியான பள்ளி இல்லை என்பதை அப்போது தான் உணர்ந்துள்ளார் மஞ்சு. 

“எங்கள் பகுதிக்கு அருகில் இருந்த தெரபி மையங்களுக்கு நேரில் சென்று பார்த்தால் அங்கு 50க்கும் மேற்பட்ட சிறப்புக் குழந்தைகள் இருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் உடனடியாக என்னுடைய பள்ளியில் முதலில் 3 சிறப்புக் குழந்தைகளுக்கு சேர்க்கை அளித்தேன். அவர்களின் குறைபாடுகள் என்ன அதற்கு என்ன பயிற்சி கொடுத்து அவர்களை நல்வழிபடுத்த வேண்டும் என்பதை படித்தும், கேட்டும் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன்,” என்கிறார் மஞ்சுப்ரியா.

சிறப்புக் குழந்தைகளுக்கு சேர்க்கை அளித்தேன் என்று திருப்தியடைவதற்குள் சில சவால்களும் அவருக்கு காத்திருந்துள்ளது. சாதாரண குழந்தைகளின் பெற்றோர் டிசி வாங்கிவிட்டு சென்றனர். சிறப்புக் குழந்தைகளைப் பார்த்து தங்கள் பிள்ளைகளும் அடம்பிடிப்பதாக சில பெற்றோர் புகார் தெரிவித்தனர், எனினும் எத்தனை தடைகள் வந்தாலும் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கல்வி வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து தொடர்ந்து அவர்களுக்கு ஊக்கமளித்து வந்துள்ளார் மஞ்சு. 

இந்தக் குழந்தைகளுக்கு குறைபாடு மட்டுமே உள்ளது அதனை சரிசெய்ய முடியும், அவர்களை ஒதுக்கி வைக்கக் கூடாது என்று பெற்றோரை புரிந்து கொள்ளச் செய்யும் பணியைத் தான் முதலில் மஞ்சு செய்துள்ளார்.

ஆட்டிசம், ஹைபர் ஆக்டிவ், மூளை முடக்குவாதம், கற்றல் குறைபாடு, பேச்சுத்திறன் குறைபாடு, காது கேளாமை என பலவகையான குறைபாடுள்ள குழந்தைகள் என்னுடைய பள்ளியில் சேர்ந்தனர். இவர்களால் 15 நிமிடம் ஒரு இடத்தில் உட்கார்ந்திருக்க முடியாது, படிப்பு சொல்லிக் கொடுப்பது மிகவும் கஷ்டம். எனவே அவர்களுக்கு ஏற்றாற்போல கல்வி திட்டத்தை வகுத்தோம். 

தெரபி பயிற்சி இவர்களுக்கு அவசியம் என்பதால் தெரபிஸ்ட் ஒருவரை நியமனம் செய்தேன், ஆனால் அவர்களின் கட்டணம் கூடிக்கொண்டே போனதால் அதை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. மற்றொரு புறம் ஒரு குழந்தை ஒரு தெரபிஸ்டுடன் பழகவே குறைந்தது 3 ஆண்டுகள் தேவைப்படும், வாராவாரம் கட்டணத்தை ஏற்றும் தெரபிஸ்டுகளை வைத்து இது சாத்தியமாகாது என்று தவித்த சமயத்தில் என்னுடைய பள்ளி ஆசிரியர்களே தெரபிஸ்ட்க்கான பயிற்சியை மேற்கொண்டு எனக்கு உதவி செய்தார்கள் என்கிறார் மஞ்சுப்ரியா.

எஸ்கேபி வித்யாஸ்ரம் பள்ளி ஆசிரியர்களுடன் மஞ்சுப்ரியா
எஸ்கேபி வித்யாஸ்ரம் பள்ளி ஆசிரியர்களுடன் மஞ்சுப்ரியா

சிறப்புக் குழந்தைகளுக்கு நான் சேர்க்கை கொடுத்துவிட்டாலும் அவர்களை பயிற்றுவிப்பது ஆசிரியர்கள் தான். இந்தக் குழந்தைகளுக்கென பிரத்யேகமாக கல்வித் திட்டங்கள், செயல்வழியில் பாடத்தை புரிய வைப்பதற்கான சார்ட், கிராப்ட்ஸ் உள்ளிட்டவற்றை ஆசிரியர்கள் உருவாக்கினார்கள். இந்த மாற்றங்கள் சிறப்பு குழந்தைகளுக்குப் பிடித்துப் போக உட்காராத குழந்தை உட்காரவும், பேசாத குழந்தை பேசவும் தொடங்கியது குழந்தைகளின் செயல்களில் முன்னேற்றம் இருப்பதைப் பார்த்து பெற்றோரும் சந்தோஷமடைந்தனர்.

ஒவ்வொரு முறை பெற்றோருடனான சந்திப்பு கூட்டத்தின் போதும் தன்னுடைய முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுங்கள், சாதாரண குழந்தைகளுடன் பழகும் போது தான் சிறப்புக் குழந்தைகளின் உலகிலும் மாற்றம் வரும் என்று சொல்லிக்கொண்டே இருந்ததன் பலனாக மஞ்சுப்ரியாவிற்கு தொடக்கத்தில் இருந்த சவால்கள் மறைந்துபோனதாகக் கூறுகிறார். 

எஸ்கேபி பள்ளியில் சுமார் 20 குழந்தைகளாவது குறைபாடுள்ள குழந்தைகள் இருந்த போதும் எங்குமே அவர்கள் குறைபாடுள்ள குழந்தைகள் என்பதை விளம்பரப்படுத்தாமல் ஏன் அவர்களை பிரித்து அடையாளம் காண முடியாத அனைத்து குழந்தைகளும் கற்றல் மற்றும் கலைநிகழ்ச்சி அனைத்திலும் ஒன்றுபட்டே இருப்பதாகக் கூறுகிறார். இதனால் சிறப்புக்க குழந்தைகளின் செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டது 95 சதவீதம் கூட சில குழந்தைகள் முன்னேற்றம் கண்டன என்கிறார் மஞ்சுப்ரியா.

சிறப்புக் குழந்தைகளை தனிமையில் விட்டுவிடுவோமா என்ற அச்சம் பெற்றோருக்கு இருக்கிறது, ஆனால் நான் எந்த இடத்திலுமே அவர்களை தனிமைபடுத்திக் காட்டவில்லை. அதுவே என்னுடைய வெற்றிக்கு காரணம் என்கிறார் மஞ்சுப்ரியா. 

தமிழகத்தில் 2002 முதல் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் இயலாக் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களுக்கு சிறப்பு கவனம் தேவை என்பதால் யாரும் இவர்களை பள்ளியில் சேர்ப்பதில்லை, அதனால் என்னிடம் சேர்க்கைக்காக வரும் மாணவர்களை தவிர்க்கவும் முடியவில்லை. சிறப்புக் குழந்தைகளை அதிக அளவில் சேர்த்தால் அவர்களை வைத்து பராமரிக்க போதுமான இடவசதி இல்லை எனவே வங்கியில் இருந்து கடன் பெற்று தற்போது பெரிய அளவில் பள்ளியை மாற்றலாம் என்ற முடிவில் 1 ஏக்கர் நிலத்தை வாடகைக்குப் பெற்று கட்டுமான பணியைத் தொடங்கியுள்ளார் இவர்.

பெரிய அளவில் நிதிவசதி இல்லாவிட்டாலும் இந்தப் பள்ளியின் சேவையை சென்னையின் பிற பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யும் தொழில் விஸ்திகரிப்பும் செய்து வருகிறார் மஞ்சுப்ரியா. எஸ்கேபி பள்ளியின் பெயரில் சென்னையில் கிழக்கு தாம்பரம், முடிச்சூர், கிருஷ்ணாநகர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் franchisee பள்ளிகளை திறந்துள்ளார். குரோம்பேட்டை, ராஜகீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் ப்ரன்சைஸ் கொடுப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளார்.

எஸ்கேபி பள்ளியை 12ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற எதிர்கால திட்டத்தோடு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் மஞ்சுப்ரியா. மேலும் சிறப்புக் குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கம், தொழிற்பயிற்சி கூடம் உள்ளிட்டவற்றை கொண்டு அவர்களுக்கான வாய்ப்புகளை கடலென அள்ளி வழங்க வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளார். 

“தற்போது எங்கள் பள்ளியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அனைத்து மாணவர்களுக்கும் கராத்தே, யோகா. பரதநாட்டியம், ஆர்ட் & கிராப்ட்ஸ் உள்ளிட்டவை கற்றுக் கொடுக்கப்படுகிறது, இதனை ஒவ்வொருவரும் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லா மாணவர்களையும் அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்கச் செய்கிறோம்.” 

அக்டோபர் மாதத்தில் லூதியானாவில் நடைபெறும் இளைஞர்களுக்கான விழாவில் பங்கேற்பதற்காக சிறப்புக் குழந்தை ஒருவரை அழைத்து செல்கிறேன். அந்தக் குழந்தை என்ன செய்யப் போகிறது என்பதைவிட நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான மேடையில் ஏறி நின்றாலே அது எனக்கு மிகப்பெரிய சாதனை தான் என்று எதிர்பார்ப்புடன் கூறுகிறார் மஞ்சுப்ரியா.

பழைய இரும்பு வாங்கி விற்கும் தொழிலில் இருந்த தந்தை, கணவருக்கு தனியார் நிறுவனத்தில் பணி, மாமனார் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் இருக்க பள்ளி நடத்துவது பற்றிய பின்புலமோ பொருளாதார பலமோ இல்லாமல் இன்று அதனை சாதித்து காட்டி இருக்கிறார் மஞ்சுப்ரியா. பள்ளி நடத்த நிதிபலம், பிரம்மாண்ட கட்டிடங்கள் வேண்டும் என்ற விதிகளை உடைத்து நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண், எளிமையான கட்டிடத்தில் தரமான கல்வியை வழங்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார். 

200 மாணவர்களே இருந்தாலும் இந்தப் பள்ளிக்கு அருகில் இருக்கும் பிரபல பள்ளி உரிமையாளர்கள் வந்து மிரட்டிப் பார்த்தும் அசராமல் தனது பாதையில் இருக்கும் நெரிஞ்சி முட்களை களையெடுத்து விட்டு சிறப்புக் குழந்தைகளுக்கு மலர்பாதை அமைத்து தருகிறார் மஞ்சுப்ரியா.

ஒரு சாதாரண குழந்தையையும், சிறப்புக் குழந்தையையும் ஒன்றாக அமர வைக்கும் போது அவர்களுக்கு உதவும் மனப்பாங்கு தானாகவே வந்துவிடும். இதே போன்று சாதாரண குழந்தையை பார்த்து சிரிப்பு, அழுகை என எது எதற்கு என்னென்ன வினையாற்ற வேண்டும் என்பதையும் இவர்கள் கற்றுக்கொள்வார்கள். இவர்கள் மட்டுமல்ல வெளியில் வேறு எங்கு வேண்டுமானாலும் மாற்றுத்திறன் மற்றும் குறைபாடுள்ள குழந்தைகளைப் பார்த்தால் சாதாரண குழந்தைகள் ஒதுங்கிச் செல்லாமல் தானாக முன்வந்து உதவி செய்வார்கள் இதைத் தான் நான் என்னுடைய பள்ளியின் மூலம் விதைக்கிறேன் என பெருமைப்படுகிறார் மஞ்சுப்ரியா.

குழந்தைகள் தான் என்னுடைய முன்மாதிரிகள். எத்தனையோ மேடைகள் ஏறி நான் பேசினாலும் கிடைக்காத கைதட்டல்கள் ஒரு சிறப்புக்குழந்தை மேடையேறி பேசும்போது கிடைக்கிறதென்றால் நான் பேசுவதெல்லாம் பெரிய விஷயமல்ல. ஆனால் அந்த கைதட்டல்களுக்கு காரணமாக நான் இருந்தேன் என்ற எண்ணமே எனது ஊக்கமாகக் கருதுகிறேன். 

Small Key is to open the big door என்பதே எஸ்கேபி பள்ளியின் தாரக மந்திரம், பெரிதாக சாதிக்க வேண்டும் என்று நினைப்பதற்கான தொடக்கம் ஒரு சிறிய புள்ளியில் தான் தொடங்குகிறது அந்த வகையில் இப்பள்ளி குழந்தைகளின் பெரிய கனவுகளை திறக்கும் சாவியாக இருக்கும் என உறுதியளிக்கிறார் மஞ்சுப்ரியா. Determination, Development, Dedication என்ற 3Dகள் இருந்தால் நிச்சயமாக வாழ்வில் சாதிக்க முடியும் என்கிறார் மஞ்சுப்ரியா. 

Related Stories

Stories by Priyadarshini