அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ரோபாடிக்ஸ் கற்றுக்கொடுத்து அசத்தும் இளைஞர்கள்!

0

வெங்கடேஷ் திரைப்படங்களில் மட்டுமே ரோபோக்களை பார்த்திருக்கிறார். “அது எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வது அற்புதமாக உள்ளது,” என்று உற்சாகமாக கூறினார் இந்த பத்தாம் வகுப்பு மாணவர். இவர் தற்போது ரோபாடிக்ஸ் அறிமுக பாடத்தில் முதல் நிலையை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

ரோபாடிக்ஸ் பல்துறைமை பிரிவைச் சார்ந்ததாகும். இதன் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட சிக்கலான தலைப்புகள் குறித்த புரிதல் அவசியம். பொதுவாக மேம்பட்ட நிலைகளில்தான் இந்தப் பாடம் படிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இதற்கு மாறாக இந்த மூன்று இளைஞர்களும் ரோபாடிக்ஸ் குறித்த அறிமுகத்தை பெங்களூருவின் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குகின்றனர்.

திட்டத்தின் ஆரம்பகட்டம்

23 வயதான தீரஜ் திவாரி, 20 வயதான வினோத்குமார், 24 வயதான சாலமன் சுரேஷ் ஆகியோர் அனன்யா ராஜகோபாலை சந்தித்ததுதான் துவக்கப்புள்ளியாக அமைந்தது. அனன்யா ராஜகோபால் ஈடுபட்டிருந்த செயல்முறைக்கு காப்புரிமை பெற்றிருந்தார். அதன் கீழ் அமெரிக்காவிலுள்ள அடிநிலை பள்ளிகளுக்கு பயன்பாட்டில் இல்லாத லீகோ மைண்ட்ஸ்டார்ம் ரோபோடிக் செட்களை விநியோகித்தார். 

தொழிலதிபர் மற்றும் தற்காப்புக் கலை ஆலோசகரான அஸ்வின் நாயுடுவின் உறவினர்தான் அனன்யா. அவர் ஒருமுறை இந்தியா வந்தபோது இந்த திட்டம் குறித்து பகிர்ந்துகொண்டு அதேபோன்ற முயற்சியில் இங்கும் ஈடுபட உந்துதலளித்தார்,” என்றார் தீரஜ்.

எனினும் லீகோ ரோபாடிக் செட்ஸ் விலையை கருத்தில் கொண்டு இந்த முயற்சி இந்தியாவில் வெற்றியடையுமா என்பது குறித்து தீரஜ் மற்றும் அவரது நண்பர்கள் யோசித்தனர். இந்த செட்களை இந்தியாவிற்கு அனுப்பி விநியோகிக்கலாம் என்று முதலில் திட்டமினிட்டனர். ஆனால் தீரஜ் மற்றும் அவரது குழுவினர் அந்த திட்டத்தை மாற்றி இந்திய சூழலுக்கு ஏற்றவாறான பாடதிட்டத்தை சொந்தமான உருவாக்கத் தீர்மானித்தனர்.

ஏன் ரோபாடிக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது?

வருங்காலத்தில் ஆட்டோமேஷன் தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரிக்கும் என்பது இந்தத் துறையைச் சேர்ந்த அனைவரும் அறிந்த ஒன்றாகும். தொழிற்சாலைகளில் தொழிலாளிகளுக்கான செலவு குறைப்பதற்கு பயன்படுவது முதல் நுகர்வோர் தரப்பில் ஓட்டுநர் இல்லாத கார் அறிமுகமானது வரை ஆட்டோமேஷன் பயன்பாடு பெருகி வருகிறது. ஆட்டோமேஷன் அலுவலகப்பணியல்லாத உடலுழைப்பு சார்ந்த பணிகள் மட்டுமல்லாது அலுவலகப் பணிகளையும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும் நலிந்த பிரிவினைச் சேர்ந்த குழந்தைகள் இத்தகைய தொழில்நுட்பம் குறித்து தெரிந்துகொள்வது அவசியம் என்றும் விவரித்தார் தீரஜ்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய நான்கு பாடங்கள் அடங்கிய ஸ்டெம் (STEM) கல்வி முறையைச் சார்ந்த ஒரு சில பிரிவுகளில் ரோபாடிக்ஸ் பிரிவும் ஒன்றாகும் என்றார் தீரஜ்.

”இதில் மின்னணு, அசைவு சார்ந்த இயக்கவியல் (motion dynamics) போன்ற வடிவில் இயற்பியல் கருத்துக்கள் உள்ளடங்கியிருக்கும். இதனால் மாணவர்கள் வருங்காலத்தில் பல்வேறு மேம்பட்ட அறிவியல் மற்றும் பொறியியல் பாடங்களைப் படிக்க தயார்படுத்திக்கொள்ள உதவுவதும் பள்ளி பாடங்களையும் சிறப்பாக புரிந்துகொள்ள உதவும்,” என்றார் தீரஜ். 

பயன்பாட்டிற்கு தயாராக இருக்கும் உள்ளூர் மின்னணு, ஹார்ட்வேர் போன்றவற்றை சிறப்பாக பயன்படுத்தி அடிநிலை பள்ளி மாணவர்களுக்கு ரோபாடிக்ஸ் அடிப்படைகளை கற்றும்கொடுக்கும் விதத்தில் பாடதிட்டத்தை நான்கு முதல் ஐந்து மாதங்கள் செலவிட்டு வடிவமைத்தார் தீரஜ்.

பள்ளிகளை அணுகுதல்

தீரஜ் அரசுப்பள்ளிகளை இலக்காகக் கொண்டு இந்த முயற்சியை மேற்கொள்ள விரும்பினாலும் அவர்களை அணுகுவதும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள சம்மதிக்க வைப்பதும் பயிற்சிக்கான மாணவர்களை தேர்ந்தெடுப்பதும் கடினமாகவே இருந்தது. வினோத் அகரா அரசு உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதால் இக்குழுவினர் அவரது புரிதலையும் தொடர்புகளையும் பெற்றுக்கொண்டனர். 

”எங்களுடன் ஒருங்கிணைய முன்வந்து கம்ப்யூட்டர்களை வழங்கி ரோபாடிக் வகுப்புகளுக்காக மாணவர்கள் பள்ளியில் ஒன்றிரண்டு மணி நேரம் கூடுதலாக செலவிட அனுமதிக்கக்கூடிய சுற்றுவட்டார அரசு உயர்நிலைப் பள்ளிகளை இலக்காகக் கொண்டோம்.”

என்றார் தீரஜ்.

இவர்களது முயற்சியின் பெயர் ப்ராஜெக்ட் என்எக்ஸ்ஜி. இந்த முயற்சி பெங்களூவின் அகரா, குட்லூ, தோம்லூர், அடோகுடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு அரசு உயர்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கப்பட்டது. இதன் மூலம் முதல் பிரிவு பயிற்சிக்காக இலவச வாராந்திர வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டது. எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் திறமை அடிப்படையில் வகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ப்ராஜெக்ட் என்எக்ஸ்ஜி ஆரம்ப கட்டமைப்பு செலவுகளை அஷ்வின் நாயுடு, அவரது மனைவி மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இவர்கள் பாடதிட்டம் வடிவமைப்பதிலும் உதவியுள்ளனர்.

சந்தித்த சவால்கள்

வகுப்புகளில் மாணவிகள் எண்ணிக்கையை தக்கவைப்பது மிகப்பெரிய சவாலாக அமைந்தது.

”தொழில்நுட்பமும் பொறியியலும் ஆண்களுக்கானது என்கிற எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டியிருந்தது. இரண்டாவதாக மாணவிகள் பள்ளி நேரம் கடந்தும் அங்கேயே இருந்து பாடம் படிப்பதற்கு அவர்களது பெற்றோர் அனுமதிப்பதில்லை,” என விவரித்தார் தீரஜ். 

வகுப்பு நேரத்தை சரிப்படுத்துவது, பெற்றோர்களை சம்மதிக்கவைப்பது, வகுப்புகளில் உதவுவதற்காக பெண் தன்னார்வலர்களை இணைத்துக்கொள்வது என இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பல்வேறு வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறார் தீரஜ். 

வகுப்பு துவங்கப்பட்ட ஆரம்ப நாட்களில் மின்னணு குறித்த கோட்பாடுகளை விவரிக்கையில் மாணவர்களின் கவனத்தை தக்கவைப்பது மற்றொரு சவாலாக அமைந்தது. எனினும் இது குறித்து கற்றுக்கொடுத்த பிறகு மாணவர்கள் சர்க்யூட் போன்ற மின்னணு பாகங்களை பழுது பார்க்க ஊக்குவிக்கிறார் தீரஜ். இதனால் வகுப்புகள் சலிப்பூட்டும் விதத்தில் இல்லாமல் உற்சாகமாக மாறும் என்கிறார்.

சுயமாக உருவாக்குதல்

மாணவர்கள் தாங்கள் வடிவமைக்கும் ரிமோட் கண்ட்ரோல் கார்களுக்கான அடிச்சட்டத்தை வடிவமைக்கின்றனர். இவ்வாறு முழுமையாக ஒரு ரோபோவை உருவாக்கி ப்ரோக்ராம் செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர் என்பதே ப்ராஜெக்ட் என்எக்ஸ்ஜி-ன் சிறப்பம்சமாகும்.

”இதில் பற்றவைத்தல், செதுக்குதல், உறுதியான தகடுகளைக் கொண்டு ரோபோவின் சில உடல் பாகங்களை உருவாக்குதல் போன்றவை இடம்பெற்றிருக்கும்,” என்றார் வினோத். இவர் பெங்களூருவில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் கல்லூரியில் மின் பொறியியல் பயின்று வருகிறார்.

தீரஜ் மற்றும் அவரது மாணவர்கள் பெரும்பாலும் செய்முறை கற்றலுக்கும் இறுதி ப்ராஜெக்டிற்கும் ஆர்டினோ நுண்கட்டுப்படுத்தி க்ளோன்ஸ் (Arduino microcontroller clones), மோட்டார் டிரைவர்ஸ், டிசி பேட்டரிக்கள், வயர்கள் போன்ற விலை மலிவான ஹார்ட்வேர் பொருட்களையே பயன்படுத்துகின்றனர்.

”முன்னரே வடிவமைக்கப்பட்ட அடிசட்டத்தை வழங்கும் லீகோ செட்ஸ் போலல்லாமல் மாணவர்கள் தாங்களாகவே உருவாக்குவதை உறுதிசெய்கிறோம். அவர்கள் எந்த அகல உயர அளவீடுகளில் உறுதியான தகடுகளை வெட்டவேண்டும் என்றும் பல்வேறு பாகங்களை எங்கே பொருத்தவேண்டும் என்பதையும் துல்லியமாக கற்றனர்.”

என்றார் தீரஜ்.

வெற்றிக்கதை மற்றும் அடுத்தகட்ட திட்டங்கள்

முதலில் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அகரா அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பயிற்சியானது ஏற்கெனவே மூன்று பள்ளிகளில் 40-45 மணி நேர பாடத்தை முடித்துவிட்டது. ப்ராஜெக்ட் என்எக்ஸ்ஜி சமீபத்தில் பட்டமளிப்பு விழாவை நடத்தியுள்ளது. இதில் மாணவர்களுக்கு பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

ரோபோடிக் வகுப்பில் பங்கேற்ற 14 வயது பல்வீரஜஹா வகுப்பை முழுமையாக ரசித்ததாக தெரிவிக்கிறார். மேலும் இவர் வருங்காலத்தில் மெக்கானிக்கல் பொறியாளர் ஆக விரும்புகிறார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இந்த மாணவர் பயிற்சியின் இரண்டாம் பிரிவு முடிவடைகையில் சிசிடிவி காட்சிகளை பதிவு செய்யும் ஒரு மலிவு விலை ட்ரோன் காப்டரை வடிவமைக்க திட்டமிட்டுள்ளார்.

ஐஆர் மற்றும் ப்ளூடூத் சென்சார்கள் பொருத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் கார் வடிவமைத்த குழுவில் குட்லூ அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த வெங்கடேஷ் இடம்பெற்றிருந்தார்.

விவசாயத் துறையில் ஆட்டோமேஷன் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதால் வருங்காலத்தில் விவசாயத்திற்கு உதவக்கூடிய ரோபோக்களை உருவாக்க விரும்புகிறோம்.

வெங்கடேஷ், பல்வீரஜஹா போன்ற நம்பிக்கை நிறைந்த மாணவர்களுக்கு பயிற்சியளித்து முடித்த தீரஜ் தற்போது இந்த மாதிரியை ஒரு தொடர்ச்சியான நிதி ரீதியாக நிலையான ஒன்றாக மாற்றும் முயற்சியில் உள்ளார்.

தொண்டு நோக்கோட உதவவேண்டும் என்று விரும்பியே ஒரு சிறிய முயற்சியாக துவங்கினோம். ஆனால் மாணவர்களிடையே காணப்படும் ஆர்வமும் வரவேற்பும் சென்சார்கள் மற்றும் ஆட்டோமேஷன் பிரிவு சார்ந்த பயிற்சியின் இரண்டாம் நிலையை விரைவில் அறிமுகப்படுத்தும் அளவிற்கு ஊக்கமளித்துள்ளது.

என்றார் தீரஜ்.

ஆங்கில கட்டுரையாளர் : அமூல்யா ராஜப்பா

Related Stories

Stories by YS TEAM TAMIL