ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டமும், இளைஞர்களின் கோரிக்கையும்...

1

பீட்டா விலங்கு ஆர்வல அமைப்பு தொடர்ந்த வழக்கை அடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இருந்துவருவதை தொடர்ந்து அத்தடையை நீக்கக் கோரி, தமிழகமெங்கும் மாணவர்களும், இளைஞர்களும் ஒன்றிணைந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பொங்கல் தினத்துக்கு முன்பு தொடங்கிய இந்த அமைதிப் போராட்டம், மதுரை, கோவை, சென்னை, நெல்லை என்று அனைத்து இடத்திலும் நடந்து வருகிறது. திறளெண திரண்டு வந்துள்ள கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர். கோவையைச் சேர்ந்த ஜானி ஜான்பால் என்ற இளைஞரும் கடந்த சில தினங்களாக இவர்களுடன் இணைந்து ஜல்லிகட்டு தடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் தனது முகநூல் பக்கத்தில் சில முக்கிய கோரிக்கைகளை பதிவிட்டிருக்கிறார். அதிலிருந்து ஒரு தொகுப்பு இதோ... 

இது காளைகளுக்கான போராட்டமாக மட்டும் பார்க்கப்படவில்லை மாறாக ஒடுங்கிக்கிடந்த மக்களின் ஓயாத வழியின் வெளிப்பாடாகவே தெரிகிறது. இந்நிலையில் நம் தேவைகள் என்னவாக இருக்கும் என்பதில் ஓர் தெளிவு வேண்டுமென நினைக்கிறேன். இந்தியாவின் உயிர்மூச்சு கிராமம் அதன் உயிர்நாடி விவசாயம் அதன்மீதே இந்தியா கட்டமைக்கப்பட வேண்டும். அத்தகைய உயிர்தொழில் வாழ என்னவெல்லாம் வேண்டும் என தோன்றுகிறதை பகிருங்கள் அதிலிருந்தே நம் தேவைகளை பட்டியலிடுவோம்... குறைந்தபட்ச செயல்திட்டத்தை கேட்டுப்பெறுவோம்.

#TN_Demands என்ற ஹேஷ்டேக் பயன்படத்தி அவர் பட்டியலிட்டுள்ளதில் இருந்து சில கோரிக்கைகள்:

TN_Demands #No1 : சல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ஏறுதழுவல், சேவல் சண்டை, ரேக்ளா போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் தொடர்ந்து நடைபெற போலி விலங்குநல ஆர்வலர்கள் அல்லாமல் குறைந்தபட்ச தகுதியடைய கண்டிப்பாய் தமிழ்நாட்டின் பிரதிநிதிகள் மட்டும் கொண்ட குழுக்களே கண்காணிப்பினையும் மேற்பார்வையும் செய்யவேண்டும். வளர்ப்பு முதல் களம் வரை அனைத்தும் ஆவணப்படுத்தல் வேண்டும் பின்வரும் சந்ததிக்காக....

#TN_Demands #No2 : பாரம்பரிய விளையாட்டுக்கள் விவசாய முறைகள் மற்றும் நமது மருத்துவ முறைகளைப்பற்றிய ஆராய்ச்சி நிறுவனம் ஒருங்கினைக்கப்பட்டு அதன் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். புராதன மற்றும் ஆராய்ச்சி விளைவுகள் ஆவணப்படுத்தல் முழு வீச்சில் செயல்படுவது உறுதிபடுத்தப்படவேண்டும்.

#TN_Demands #No3 : கலப்பின மற்றும் இறக்குமதி வகை விலங்கினங்களை கட்டுப்படுத்தி நம் மண் சார்ந்த இனங்களை அழிவிலிருந்து காத்தல் மற்றும் விவசாயத்துறையில் விளைவிக்கப்படுபவையிலும் மண் சார்ந்த பயிர்களை அதன் தன்மை மாறாமல் விளைச்சலை பெறுக்கும் முயற்சியினையும் அரசே தொடர்ந்து கொண்டு செல்லவும் இத்துறையில் தனியார் பங்களிப்பை நிறுத்த வேண்டும்.

#TN_Demands #No4 : ஊடுபயிர் விவசாயம் மற்றும் மாற்று செலவில்லா விவசாயமுறைகளை ஒழுங்குபடுத்தி ஊக்கமளித்து விவசாயிகளை தன்னிறைவு அடையச்செய்ய அரசு தனியார் கூட்டுத்திட்டம் கொண்டுவர வேண்டும்.

#TN_Demands #No5 : நீர்நிலை நிர்வாகம் மற்றும் மறு கட்டமைப்பிற்கான ஐந்தாண்டு திட்டம் அமைத்து துரிதப்படுத்த தனி துறை, அமைச்சர் மற்றும் செயலாரை நியமிக்கவேண்டும்.

#TN_Demands #No6 : Sustainable Agriculture முறைகளை அரசே பகுதி வாரியாக கண்டுணர்ந்து விவசாயிகளிடம் கொண்டுசெல்ல தற்சமயம் இருக்கும் விவசாய பட்டதாரிகளை தொகுப்பூதிய முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும், பப்ளிக் சர்வீஸ் தேர்வுகள் வடிவில் விவசாய மாணவர் சேர்க்கைத்திட்டத்தை மாற்றியமைத்து விவசாயம் கற்பவருக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்தல் மற்றும் அப்படிப்புக்கான தேவையையும் சிறந்த அறிவுசார் மாணவர்கள் கவனத்திற்கு விவசாயத்தை கொண்டு செல்ல வேண்டும். விவசாய பல்கலைக்கழகம் இ.ஆ.ப தலைமையில் செயல் அலுவலராகவும் துணை வேந்தராக முழுவதும் விவசாயம் சார்ந்தே செயல்பட்ட இருபது ஆண்டுகள் பயிற்றுவித்தல் பணிபுரிந்தோரை மட்டுமே நியமிக்க சட்டம் வேண்டும்.

#TN_Demands #No7 : நிலச்சீர்திருத்தத்தினை ஏற்படுத்தி பயனற்ற நிலங்களை பயன் பாட்டுக்கு கொண்டு வருதல் அரசு நில மீட்பு மற்றும் குத்தகை விவசாயம் போன்றவற்றில் திட்டங்களை கொண்டுவருதல், இதற்கான ஒழுங்குமுறை ஆணையத்தினை அமைத்து திட்டத்தினையும் செயல்பாட்டினையும் துரிதப்படுத்து வேண்டும்.

#TN_Demands #No8 : விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்துதலில் தகவல் தொழில்நுட்பத்தை கொண்டு கட்டமைக்க விற்பனைகூடம், கிட்டங்கி, குளிர்பதனக்கூடம், மண்டி, தகவல் மையங்களை ஒருங்கிணைக்க தேவைகளை புரிந்துகொள்ள ஆராய்ச்சிகளுக்கு என தனி நிறுவனம் மூலம் விலை நிர்ணயித்தலை விவசாயிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவருதல் வேண்டும்.

(பொறுப்புத்துறப்பு:  இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள். இதற்கு யுவர்ஸ்டோரி பொறுப்பேற்காது.)