எம்டிஆர் நிறுவனத்திடன் இருந்து ஸ்டார்ட்-அப்'கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்  

0

100 ஆண்டு பாரம்பரியம் கொண்ட ரெஸ்டாரண்ட்கள் மற்றும் சங்கிலித்தொடர் உணவகங்கள் இந்தியாவில் அதிகம் இல்லை. இத்தகைய நிறுவனங்களில் ஒன்றான, எம்டிஆர் என அழைக்கப்படும் ’மாவல்லி டிபன் ரூம்ஸ்’ அரிய உதாராணமாகும்.

சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பெங்களூருவில் சிறிய ரெஸ்டாரண்டாக துவக்கப்பட்ட எம்டிஆர் இன்று நாட்டில் நன்கறியப்பட்ட பிராண்டாக இருக்கிறது. இதன் ரெஸ்டாரண்ட் பெங்களூருவின் அடையாளச்சின்னங்களில் ஒன்றாக விளங்கும் நிலையில், அதன் உணவு பதப்படுத்தும் பிரிவு நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு சேவை அளிக்கிறது.

நாம் இன்று ஸ்டார்ட் அப் யுகத்தில் வசித்தாலும், காலத்தை வென்று நிற்கும் எம்டிஆர் போன்ற நிறுவனங்களிடம் இருந்து தொழில்முனைவோர்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. இதன் வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் வரத்தூண்டுபவை எவை? இதன் மீதான நம்பிக்கை மற்றும் விசுவாசத்திற்கான அடிப்படை என்ன?

எம்டிஆர் நிறுவன சி.இ.ஓ சஞ்சய் சர்மாவுடனான சமீபத்திய நேர்க்காணலில் யுவர்ஸ்டோரி இவரிடம் இருந்து அடுத்த தலைமுறைக்கான குறிப்புகளை வழங்குகிறது.

1. சரியான நேரத்தில் மாற்றம்

எம்டிஆர் ரெஸ்டாரண்ட்கள், அவசர நிலை காலத்தில், விலைக்குறைப்பால் நஷ்டம் ஈட்டியதால், 1976 ல் மூடப்பட்டன. அதன் ஏழைத்தொழிலாளர்கள் நிலையை மனதில் கொண்டு எம்டிஆர் நிறுவனம், தனது பிராண்ட் பெயரில் பெங்களூரு மளிகைக்கடைகளுக்கு பேக் செய்த பொருட்களை விற்பனை செய்யத்துவங்கியது. அவசர நிலைக்குப்பிறகு ரெஸ்டாரண்ட்கள் மீண்டும் செயல்படத்துவங்கிய போது, எம்டிஆர் தனது பொருட்களை மேலும் விரிவாக்கி விற்பனையை விரிவாக்கியது. இதன் காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவு தொழில் ரெஸ்டாரண்ட் தொழிலை விட பெரிதாக வளர்ந்தது.

2. கையகப்படுத்தல்

வளர்ச்சியை மனதில் கொண்டு, 2000 மற்றும் 2003 ல் எம்டிஆருக்கு தனியார் சமபங்கு நிதி தேவைபப்ட்டது. வர்த்தகம் வளர்ந்ததும் முதலீட்டாளர்கள் வெளியேறலாம். 2007 ல் நார்வே நிறுவனம் ஆர்க்லா 100 மில்லியன் டாலருக்கு எம்டிஆர் நிறுவனத்தை வாங்கியது. இந்த கையகப்படுத்தல் அப்போது பெரிதாக பேசப்ப்பட்டது. அமைப்பு நோக்கிலான மாற்றங்கள் வந்தன. 

“ஒரு குறிப்பிட்ட அளவை அடைந்தது, ஒருவர் அல்லது ஒரு சிலர் நிறுவனத்தை நடத்த முடியாது. வளர்ச்சி பெருகும் போது, அதிக நபர்களை நியமித்து முடிவு எடுப்பதை பரவலாக்க வேண்டும். 2009 ல் பொறுப்பேற்ற போது நிறுவனத்தை மாற்றி அமைப்பதே என் வேலையாக இருந்தது,” என்கிறார் சஞ்சய்.

3. பெரும் மாற்றம் 101

இதே துறையில் உள்ள எவரெஸ்ட், ஆச்சி, சக்தி மற்றும் ஈஸ்டர்ன் போன்ற நிறுவனங்கள் ஒற்றை பிரிவில் செயல்படுகின்றன. எம்டிஆர் பல பிரிவு நிறுவனமாக இருப்பதால் அதை நிர்வகிப்பது சிக்கலானதாகிறது. எம்டிஆர் இன்று காலை உணவு முதல் இரவு டெஸர்ட் வரை லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதோடு, ஒவ்வொரு தயாரிப்பும் நிறுவனம் அளிக்க விரும்பும் தரத்துடன் இருக்கிறது. உணவுக்கு மையமாக இல்லாத ஐஸ்கீரிம் மற்றும் அப்பளம் பிரிவுகளை நிறுத்திவிட்டு மற்ற பிரிவுகளில் கவனம் செலுத்துகிறது.

4. வாடிக்கையாளருடன் தொடர்பு

வாடிக்கையாளருடனான ஒரு பிராண்டின் உறவு தொடர்ந்து பரிசீலிக்கப்பட வேண்டும். முந்தைய தலைமுறை வாடிக்கையாளருடன் தொடர்பு கொள்ள பயன்பட்ட உத்தி இப்போது பயன் தராது. அதற்கேற்ப எம்டிஆர் பெரிய அளவில் விளம்பரத்தில் முதலீடு செய்து, பேக்கேஜிங்கையும் மாற்றி அமைத்தது. கையக்கப்படுத்தலுக்குப்பிறகு 3 முதல் 4 சதவீத செலவு விளம்பரத்திற்காக அமைந்தது. 2009 ல் சஞ்சய் பொறுப்பேற்ற பிறகு நிறுவன செயல்பாட்டை மாற்றினார். 2011ல் நிறுவனம் விளம்பரத்திற்காக 11 முதல் 16 சதவீதம் செலவிடத்துவங்கியது.

5. தெளிவான கவனம்

1924 ல் எம்டிஆர் துவங்கிய போது, அதன் கவனம் கர்நாடக மக்களின் சுவையில் தான் இருந்தது. அதன் வர்த்தக நோக்கம், வாடிக்கையாளர்களுக்கு பாரம்பரிய இந்திய சுவையை அளிப்பதாகவே இருந்தது. மேலும் உணவு சுவைக்கு பொருத்தமாகவும் இருக்க முற்பட்டது. இதற்காக காலத்திற்கு ஏற்ப மாறி வருகிறது. கூடுதல் திறனுக்காக, உற்பத்தியில் ரூ.250 கோடி முதலீடு செய்யப்பட்டது. உணவு தர கட்டுப்பாடுகளிடம் உயர்த்தப்பட்டன. பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் இதில் அதிக கவனம் செலுத்துவதில்லை.

6. இந்திய தன்மை

பல இந்திய உணவு நிறுவனங்கள் மேற்கத்திய மற்றும் சீன உணவுகளை மையமாக கொண்டு அமைந்துள்ளன. உணவு பதப்படுத்தல் துறையில் பாஸ்டா மற்றும் நூடுல் பற்றி தான் அதிகம் பேசுகின்றனர். காலை உணவு பிரிவில் கெல்லாக்ஸ் மற்றும் ஓட்ஸ் இருக்கின்றனர். ஆனால் எம்டிஆர் இட்லி, உப்புமா போன்ற இந்திய உணவுகளில் கவனம் செலுத்துகிறது. வட இந்திய உணவு பிரிவில் ஹால்டிராம்ஸ் பிரபலமாக இருந்தாலும் தென்னிந்திய உணவுகளில் அதிக பிராண்ட்கள் இல்லை. எம்டிஆர் இந்த பிரிவில் சிறந்து விளங்குகிறது. நேந்திராங்காய் வறுவல் முதல் கான்பிளேக்ஸ் வரை வழங்குகிறது.

7. அதிகார பரவலாக்கம்

ஒரு தொழில்முனைவோர் நிறுவனத்தை நடத்தும் போது அவரே எல்லாவிதமான முடிவுகளையும் மேற்கொள்வார். ஆனால் வளர்ச்சிக்கு ஏற்ப எம்டிஆர் முடிவு எடுப்பதை பரவலாக்க வேண்டியிருக்கிறது. பலரை முடிவெடுக்க ஊக்குவிப்பதோடு, பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. 

“அணுகுமுறை, மனநிலை மற்றும் பழக்க வழக்கங்கள் தான் வெற்றிக்கு தேவை. இன்று எங்களிடம் 70 சதவீத தக்கவைக்கும் தன்மை இருக்கிறது. ஒவ்வொரு ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் ஐந்து ஆண்டுகளுக்கு 10 நாள் பயிற்சி பெறுகின்றனர்,’’ என்கிறார் சஞ்சய்.

8. வாடிக்கையாளர் திருப்தி

இன்றைய வாடிக்கையாளர்களுக்கு நேரம் மட்டும் தான் குறைவாக இருக்கிறது. மெட்ரோ நகரங்களில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் அலுவலகம் செல்லும் வழியில் காலை உணவை உட்கொள்ள வேண்டியிருக்கிறது. இதை தான் எம்டிஆர் வாய்ப்பாக கருதுகிறது. “தங்கள் தேவைக்கு ஏற்ப மாறாவிட்டால் இக்கால வாடிக்கையாளர்கள் இந்திய உணவு இல்லாமல் இருக்கவும் தயாராக உள்ளனர். எனவே சுவையான இந்திய உணவை ஏற்ற முறையில் வழங்குவதற்காக எங்கள் தயாரிப்புகளை மாற்றி அமைத்திருக்கிறோம்,” என்கிறார் சஞ்சய். இருவருக்கான உணவை 20 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம். காலை உணவை 3 நிமிடத்தில் தயாரித்துவிடலாம். ஒரு பேக்கில் இனிப்புகளை தயார் செய்யலாம்.

9. உணவு சிந்தனை

ஆழமான ஆய்வு மூலம் நம்பிக்கையை உருவாக்கலாம். எம்டிஆர் சமையல் கலைஞர்கள் வாடிக்கையாளர்கள் இல்லங்களுக்குச் சென்று அவர்களுடன் சமைத்து அவர்கள் தேவைகளை அறிந்து கொள்கின்றனர். 

“எங்களுக்கு 100 வருட பாரம்பரியம் இருக்கிறது. உணவை அறிந்தவர்களாக அறியப்படுகிறோம். ஆனால் இந்த பெருமையில் திளைத்திருக்க விரும்பவில்லை. ஐந்து அல்லது ஆறு சமையல் கலைஞர்கள் உணவு பொருட்களை உருவாக்குவதில் பிரத்யேகமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சாம்பாருக்கு அனைத்துவிதமான வீடுகளுக்கும் ஏற்ற பொருட்களை கண்டறிய நான்கு ஆண்டுகள் ஆனது. இந்த உணவு குறிப்பை உருவாக்க 3,500 வாடிக்கையாளர் வீடுகளுக்குச் சென்றோம்,” என்கிறார் சஞ்சய்.

ரோம் ஒரு நாளில் உருவாக்கப்படவில்லை. எந்த நிறுவனமும் ஓரிரவில் உருவாகி விடவில்லை. பெரிய நிதி திரட்டும் வசதி மற்றும் தொழில்நுட்பப் புதுமை காரணமாக புதுயுக தொழில்முனைவோருக்கு பல விஷயங்கள் எளிதாக இருக்கின்றன. எனினும் உணவு ஸ்டார்ட் அப்களேனும் எம்டிஆரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். பெரும்பாலான உணவு ஸ்டார்ட் அப்கள் ஒரு சில சமையல் கலைஞர்களை கொண்டு வேகமாக இயங்குகின்றன. ஆனால் நம்பகத்தனை தொடர்பான கேள்விகள் இருக்கின்றன. 

சமையல் குறிப்புகள் எங்கிருந்த வருகின்றன போன்ற கேள்விகளுக்கான பதில் மேலும் பல உணவு ஸ்டார்ட் அப்களை உருவாக்கலாம். இதுவரை பெரும்பாலான உணவு ஸ்டார்ட் அப்கள், வெளிநாட்டு உணவு குறிப்புகளை இந்திய உணவுகளோடு வழங்கு வருகின்றன. (பிரெஷ் மெனு, இன்னர்செப், ஹோலசெப்). ஆனால் பரந்து விரிந்த இந்திய உணவு வகைகளில் வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கின்றன.

ஆங்கிலத்தில்: ஆதிரா நாயர் | தமிழில்; சைபர்சிம்மன்