ரயில்வே வைஃபை வசதியைப் பயன்படுத்தி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற கூலித் தொழிலாளி!

10

இந்திய ரயில்வே கூகுள் நிறுவனத்துடன் இணைந்து 2016-ம் ஆண்டு பயணிகளுக்காக ரயில் நிலையங்களில் வைஃபை வசதியை அறிமுகப்படுத்தியது. இரண்டாண்டுகள் கழித்து இந்திய ரயில்வேயின் இலவச வைஃபை வசதியின் உதவியுடன் எர்ணாகுளத்தின் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் கூலித் தொழிலாளியாக பணியாற்றும் ஒருவர் கேரள சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார்.

கே ஸ்ரீநாத் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலில் ஏறும்போதும் இறங்கும்போதும் அவர்கள் கொண்டு வந்துள்ள சுமைகளைத் தூக்கும் தொழிலாளி ஆவார். இதுவே அவரது வாழ்வாதாரமாகும். சுமை தூக்கும் பணி இல்லாத நேரத்தில் ஸ்ரீநாத் ஒரு மூலையில் அமர்ந்து தனது ஃபோன் மற்றும் இயர்ஃபோன் உதவியுடன் சிவில் சர்வீஸ் தேர்விற்குத் தேவையான குறிப்புகளை எடுத்தார். சுமைகளைச் சுமந்துகொண்டு செல்லும்போது ஆடியோ புத்தகங்களையும் டிஜிட்டல் வகுப்புகளையும் இயர்ஃபோன் வாயிலாகக் கேட்டார். 

பள்ளிப்படிப்பை முடித்த இவரது வாழ்க்கைப் பயணம் அப்பகுதியைச் சேர்ந்த பலருக்கு உந்துலளித்துள்ளது.

”நான் KPSC தேர்வை மூன்று முறை எழுதியுள்ளேன். ரயில் நிலையத்தில் உள்ள வைஃபை வசதியைப் பயன்படுத்தியது இதுவே முதல் முறை. சுமைகளைத் தூக்கியவாறே இயர்ஃபோன் வழியாகப் பாடங்களைக் கேட்பேன். மனதிற்குள்ளேயே கேள்விகளுக்கான தீர்வை முயற்சிப்பேன். இவ்வாறு பணியையும் படிப்பையும் ஒருசேர மேற்கொண்டேன். இரவில் ஓய்வு நேரம் கிடைக்கும்போது அனைத்து பாடங்களையும் ஒரு முறை நினைவுகூர்ந்து பார்ப்பேன்,” என்று பிடிஐ-இடம் ஸ்ரீநாத் குறிப்பிட்டார்.

ரயில் நிலையத்தில் உள்ள வைஃபை வசதி புத்தகங்கள், வினாத்தாள்கள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்ய உதவியதாக தெரிவிக்கிறார் மூணார் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத். ரயில் நிலையத்தின் 20-40 mbps இருந்த இணைய இணைப்பின் வேகம் ஆச்சரியப்பட வைத்தது என்கிறார். தற்சமயம் KPSC எழுத்துத் தேர்விற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் தனது கிராமத்தில் முதலில் பணிபுரிய விரும்புவதாகவும் WION news தெரிவிக்கிறது.

”நான் தொடர்ந்து படிப்பேன். என் குடும்பத்தை பராமரிக்கவேண்டும் என்பதால் நான் கூலித் தொழிலாளியாக இருக்கிறேன். ஆனால் நான் தொடர்ந்து படித்துத் தேர்வுகளை எழுதுவேன். அடுத்தடுத்த தேர்வுகளை நான் எழுதினால் எனக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது,” என்றார் ஸ்ரீநாத். 

கட்டுரை : THINK CHANGE INDIA