அடுத்த தலைமுறைக்கு கல்வி வழங்க ஓயாமல் உழைத்த பழ வியாபாரியின் கதை!

0

கல்வியின் முக்கியத்துவத்தை படித்தவர்களை விட கல்வி கிடைக்காமல் படிக்க முடியாமல் போனவர்களே நன்கு அறிவார்கள் என்பதற்கு சான்றாய் வாழ்கிறார் மங்களூரைச் சேர்ந்த ஹரேகலா ஹஜாபா. தனக்கு கல்வி கிடைக்கவில்லை என்றாலும் வரும் தலைமுனையினர் படிக்க வேண்டும் என்று 90ல் இருந்து அயராது முயற்சி செய்து ஓர் பள்ளிக்கூடத்தை கட்டியுள்ளார் இந்த பழ வியாபாரி.

பட உதவி: முக நூல் 
பட உதவி: முக நூல் 

ஹரேகலா ஹஜாபா, பெங்களூரூ நகரத்தில் இருந்து 350கிமீ தொலைவில் உள்ள நியுபடு என்னும் சிறிய கிராமத்தில் வசிக்கும் பழ வியாபாரி. தினக் கூலியில் தனது வாழ்க்கையை நடத்திய இவர், கிராமத்தில் வசிக்கும் ஏழைகளுக்காக ஓர் பள்ளியை கட்டியுள்ளார். 2000 ஆண்டு வரை அவரது கிராமத்தில் பள்ளி கிடையாது; எனவே தனது கிராமத்திற்காக பள்ளி கட்ட வேண்டும் என முடிவு செய்து ஓர் மேல்நிலை பள்ளியை கட்டியுள்ளார். ஒரு நாளுக்கு 150 ரூபாய் மட்டுமே கூலி பெரும் இவர் தனது குடும்பத்தை பார்த்ததோடு கிராமத்திற்காக பள்ளியையும் கட்டியுள்ளார்.

“நான் ஆரஞ்சு பழம் விற்றபோது அயல்நாட்டுக்காரர்கள் ஆங்கிலத்தில் பழத்தின் விலையை கேட்டு வாங்க முயன்றனர், எனக்கு படிப்பு இல்லாததால் அவர்களிடம் பேசி பழத்தை விற்கமுடியவில்லை. இதுவே கல்வியின் முக்கியத்துவத்தை எனக்கு புரிய வைத்தது,” என்கிறார் ஹஜாபா.

இந்த சம்பவத்திற்கு பிறகு தனது கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்காக ஓர் ஆரம்ப பள்ளிக்கூடத்தை கட்ட வேண்டும் என்று முடிவு செய்ததாக தெரிவிக்கிறார் ஹஜாபா. இதனால் 1999 தனது கிராம மக்களிடம் பேசி மசூதி ஒன்றில் 27 மாணவர்களுடன் ஓர் பள்ளியை துவங்கினார். அதன் பிறகு மெதுவாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தனியாக பள்ளிக்கூடம் எழுப்ப வேண்டும் என முடிவு செய்து பல அரசு அதிகாரிகளை சந்தித்து சிறிய இடத்தை பள்ளிக்காக வாங்கினார்.

அதன் பின் தான் சேர்த்து வைத்த பணம், கடன்கள் மற்றும் நிதி உதவி பெற்று நவம்பர் 2004ல் தக்ஷினா கன்னட ஜில்லா பஞ்சாயத்து ஆரம்பப் பள்ளியை கட்டத் துவங்கினார் ஹஜாபா. 4 ஆசிரியர்கள் மற்றும் 125 மாணவர்கள் மட்டுமே கொண்டு துவங்கப்பட்ட இப்பள்ளியில் இப்பொழுது தலைமை ஆசிரியர், விளையாட்டு ஆசிரியர் என வளர்ச்சி அடைந்துள்ளது.

இப்பள்ளியை கட்ட தேவையான நிதி உதவி பெற பல அதிகாரிகள், தொழில்முனைவர்கள், பணக்காரர்கள் என பலரின் வீடுகளை ஏறி இறங்கியுள்ளார் ஹஜாபா.

“நிதி உதவிகேட்டு பணக்காரர் ஒருவரின் வீட்டுக்கு சென்று இருந்தேன் அப்பொழுது பணத்தை தருவதற்கு பதிலாக என்னைத் துரத்த நாயை அவிழ்த்து விட்டார்கள்...,” என தான் சந்தித்த சவால்கள் தெரிவிக்கிறார்.

இதற்கிடையில் ஹஜாபாவின் முயற்சிகள் வெளியே தெரியவர பல ஊடகங்கள் இவரை பற்றி பேசத் துவங்கியது. அதன் விளைவாக CNN IBN ’ரியல் ஹீரோ’ விருதுக்கு இவரை நியமிக்க, அந்த வருடத்தின் அவ்விருதை பெற்றார். விருதுக்காக கிடைத்த 5 லட்ச பரிசுத் தொகையையும் பள்ளி கட்டமைப்புக்காக வழங்கியுள்ளார். துவக்கத்தில் தனது 3 பிள்ளைகளுக்காக செலவு செய்யாமல் பள்ளிக்கு செலவிடுவதை விரும்பாத இவரது மனைவி ஹஜாபாவின் எண்ணத்தை கண்டு பள்ளியின் முக்கியத்துவத்தை அறிந்துக் கொண்டார்.

இதனை தொடர்ந்து பல இடங்களில் இருந்து நிதி உதவிகள் பெற இன்று ஒன்றரை ஏக்கரில் மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்துள்ளது. மங்களூரில் உள்ள மற்ற பள்ளிகள் போலவே கணினி, அறிவியல் என அனைத்தையும் மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர். மேலும் பள்ளிக்கான விளையாட்டு திடலை விரிவாக்கவும் முயற்சி செய்து வருகிறார், அதோடு இல்லாமல் பல்கலைக்கழகம், கல்லூரி கட்டும் எண்ணம் இருப்பதாக தெரிவிக்கிறார் ஹஜாபா.

“பள்ளியை எழுப்புவதே எனது கடைமையாக இருந்தது. இப்பொழுது அரசிடம் பள்ளியை ஒப்படைத்துவிட்டேன், அரசாங்கம் தான் பள்ளியை நடத்தி வருகின்றது,” என்கிறார்.

தனது கிராமத்திற்காக உழைத்த இவர் மீது மிகுந்த மரியாதைக் கொண்டுள்ளனர் இவரது கிராமத்து மக்கள். பள்ளி கட்டி முடித்தப்பின் இவரது பேரை வைக்க மக்கள் முன்வந்தப்போது கண்ணியமாக அதை தவிர்த்துவிட்டார். சேர்மேன் பதவியில் இருந்தாலும் பள்ளியை சுத்தம் செய்யும் வேலையைக் கூட சற்றும் தயங்காமல் செய்கிறார் இவர். கிராமத்திற்காக உழைத்த இவர் வசிக்க தலைக்கு மேல் சரியான கூரை கூட இல்லாமல் சிரமப்பட்டுள்ளர். இவரது நிலையை அறிந்த ஓர் அமைப்பின் நிறுவனர் நிதி திரட்டி மக்களுடன் சேர்ந்து 2015ல் அவருக்காக ஓர் வீட்டைக் கட்டி தந்துள்ளனர்.

பட உதவி பெட்டர் இந்தியா 
பட உதவி பெட்டர் இந்தியா 

இவரது தன்னிகரற்ற செயலுக்காக எண்ணிலடங்கா பல விருதுகளை பெற்றுள்ளார் ஹிஜாபா. மேலும் பள்ளிக்கூடம் செல்லாத இவரின் வாழ்க்கைக்கதை மங்களூர் பல்கலைக்கழகத்தின் எம் ஏ படிப்பில் ஓர் பாடமாக வருகிறது. சமுதாயத்திற்கு நல்லது செய்ய பணமும் படிப்பும் தேவை இல்லை என்பதற்கு சான்றாய் வாழ்ந்து வருகிறார் ஹஜாபா.

தகவல் உதவி: டெக்கன் கிரானிக்கல் மற்றும் பெட்டர் இந்தியா

Related Stories

Stories by Mahmoodha Nowshin