தோல்வியை தோற்கடித்த ஐவர் கூறும் வெற்றியின் ரகசியங்கள்... 

2

வாழக்கை எப்போதும் நேர்கோடுகள் போல தோன்றும். நம் பிறப்பு அந்த கோடுகளின் ஆரம்பப் புள்ளியாகவும், நம் இறப்போடு அந்த கோடுகளும் முடிந்துவிடுகின்றன எனவும் தோன்றும். ஆனால் வெளித்தோற்றத்தில் அப்படி தெரிந்தாலும் பல திருப்பங்களும் மாற்றங்களும் இருக்கத்தான் செய்கின்றன. சில சமயங்களில் சில சூழ்நிலைகள், நமக்கு மிகப்பெரிய தடைக்கற்களாக மாறி நம்மை நகர விடாது தடுக்கின்றன.

அப்படிப்பட்ட தருணங்களில் மனதை தளரவிடாது, மீண்டும் முயற்சிகளை துவங்க மிகஅதிக மனோதைரியமும், நம்பிக்கையும் அவசியம். அப்படிப்பட்ட தருணங்களை சந்தித்து, அதில் இருந்து மீண்டு வந்த பிரபலங்கள் கூறிய கருத்துகளின் தொகுப்பு இது.

அமிதாப்பச்சன், இந்திய நடிகர் :

"நாளை எனக்கு மற்றொரு சவாலாக இருக்கும் என நம்புகின்றேன். எப்போதும் நான் செய்து முடிக்கவும், அறிந்து புரிந்து கொள்ளவும் அதிக விஷயங்கள் இருப்பதாகவும் கருதுகிறேன்".

அமிதாப்பச்சன் மெகா ஸ்டாராக ஆகும் முன்பு, அவருக்கும் அதிக சறுக்கல்கள் வாழ்வில் இருந்தன. 1960-களில் அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகும் கனவோடு அணுகியபோது, அவருக்கு அப்போதிருந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கூட மறுக்கப்பட்டது. ஆனால் அந்நிகழ்ச்சி அவரை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. தனது கவனத்தை திரைபடங்கள் பக்கம் திருப்பி முயற்சிகளை துவக்கி இன்று தனது வானொலி கனவை விடவும் மிக அதிக உயரங்களை தொட்டுள்ளார்.

மார்க் க்யூபன், அமெரிக்கா தொழிலதிபர் :

"நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், எத்தனை முறை தோற்கின்றோம் என்பது முக்கியமில்லை. ஒரு முறை நமது முயற்சி சரியானதாக இருந்தால் போதும். நான் பால் தூளினை விற்க முயற்சித்தேன். பல முறை மூடன் போல தவறான முடிவுகள் எடுத்துள்ளேன். ஆனால் அவற்றில் இருந்து கற்றுக்கொள்ளவும் நான் தவறவில்லை".

இப்போது மார்க் க்யூபன் வெற்றியின் சின்னமாக இருந்தாலும், ஒரு காலத்தில் தனது வீட்டின் மின்சாரக் கட்டணத்தை கூட கட்டும் அளவு கூட அவரிடம் பணம் இல்லை. ஆனால் தான் நினைத்ததை நடத்தி முடிப்பவன் என்பதை தனது 12-வது வயதிலேயே நிரூபித்தார் மார்க். மென்பொருள் நிறுவனத்தில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டது போன்ற சோதனை காலங்கள் இருந்தாலும், அவற்றில் இருந்து மீண்டு வந்து, தன்னை விமர்சித்தவர்கள் வாயை அடைத்தார். தற்போது டல்லாஸ் மாவரிக்க என்ற என்பிஏ அணியிலும், அமேசான், நெட் ஃப்லிக்ஸ் போன்ற மென்பொருள் நிறுவனங்களிலும் தற்போது அவர் முதலீடு செய்துள்ளார். இது போன்ற தோல்விகளே தன்னை மீண்டும் முயற்சிக்க வைத்து வெற்றி பெற வைத்ததாக கூறுகின்றார்.

ரிச்சர்ட் ப்ரான்ஸன், ஆங்கிலேய தொழில்அதிபர் :

"தோல்விகளை கண்டு மனம் கலங்காதீர்கள். அவற்றில் இருந்து கற்றுக்கொண்டு மீண்டும் முதலில் இருந்து துவங்குங்கள்."
"விதிகளை பின்பற்றி நடக்க கற்றுக்கொள்ளவில்லை. கீழே விழுந்து எழுந்து, மீண்டும் விழுந்து மீண்டும் எழுந்து கற்றுக்கொள்கின்றோம்."

தோல்விகள் தான் ரிச்சர்ட் ப்ரான்ஸனின் ஏணிப்படிகளாக இருந்துள்ளது. தனது வாழ்விலும் தொழிலிலும், புதிய முயற்சிகளை எடுக்க அவருக்கு இருந்த துணிவு, அவரை போன்று வாழ்வில் இன்னல்களை சந்திக்கும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருந்துள்ளது. அவர் துவங்கிய விர்ஜின் அட்லாண்டிக் என்ற நிறுவனம் மிகப்பெரிய தடங்களை சந்தித்தது. சில பறவைகள் சோதனை ஓட்டத்தின் போது அவரது விமானத்தின் என்ஜினில் புகுந்ததால் அதிகமான சேதாரம் ஏற்பட்டது. மேலும் இந்த நிகழ்வு அதன் பின் தேவையான அனுமதிகள் அவர் பெறுவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. அடுத்தாக சேதாரங்களை சரி செய்ய அவரிடம் பணமும் இருக்கவில்லை. ஆனால் மீண்டும் அந்த விமானத்தை ஆகாயத்தில் பறக்க விடும்வரை அவர் ஓயவில்லை.

ஹெண்டிரி ஃபோர்ட், ஃபோர்ட் மோட்டாரின் நிறுவனர் :

"தோல்விகள் நாம் மீண்டும் புத்திசாலித்தனமாக யோசித்து துவங்க நமக்கு கிடைக்கும் வாய்ப்புகள்."

ஹென்றி ஃபோர்ட் அவர்களின் முதல் கண்டுபிடிப்பு- நான்கு சக்கர மிதிவண்டி- மற்றவர்கள் அறியாமலே அழிந்தது. 1900-களில் வாகனத்துறையில் இரண்டாவது வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதான ஒன்று. அவரது முயற்சி தோல்வியுற்றதால் அவருக்கு முதலீட்டாளர்களும் கிடைக்கவில்லை. அதையும் மீறி கிடைத்த முதலீட்டாளர்கள், டெட்ராயிட் ஆட்டோ மொபைல் நிறுவனம் மீது நம்பிக்கை இழந்தனர். அதனால் 1901-இல் மூடப்பட்டது.

இருப்பினும், ஹென்றி ஃபோர்ட் தனது கனவுகள் இந்த தடைகள் மூலம் முடங்கிப் போக அனுமதிக்கவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்து, 1908-இல் வாகனத்துறையை புரட்டிபோட்ட மாடல் டீ வடிவமைத்தார். அது ஃபோர்ட் மோட்டார் நிறுவனத்திற்கும், ஹென்றி போர்டிற்கும் வாழ்வை மாற்றியமைத்தது. அவரது கனவு மெய்ப்பட சிறிது காலம் எடுத்தாலும், அது மெய்ப்படுவதை உறுதி செய்தார் ஹென்றி போர்ட்.

சில்வெஸ்டர் ஸ்டாலோன், அமெரிக்க நடிகர் :

"ஒவ்வொரு முறை நான் தோற்றபோதும், அத்தோடு முடிந்ததாக மக்கள் நினைத்தனர், ஆனால் எப்போதும் நான் மீண்டு வந்துள்ளேன்."

எழுபதுகளில், அவரது திரைப்படமான ’ராக்கி’ மிகப்பெரிய வெற்றி பெரும் முன்பு, சில்வெஸ்டர் ஸ்டாலோனை எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவரது திரைப்படம் ஆஸ்கர் விருது பெரும் முன்பு சில ஆபாசபடங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு அவர் நடித்தது அனைத்தும் மிகவும் சிறிய பாத்திரங்கள் ஆகும். ஆனால் இவை அனைத்தும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் செய்தார்.

ராக்கி திரைப்படம் உருவான கதையை திரைப்படமாக எடுத்தால் அதுவும் மாபெரும் வெற்றியடையும். அவ்வளவு சுவாரஸ்யம் நிறைந்த கதை அது. ராக்கி திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியபோது, ஸ்டாலோன் அனைத்தையும் இழந்திருந்தார். தனது நாயை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு தேவைகளை பூர்த்தி செய்தார். அவரது வாழ்க்கையின் மூலம், நமது கனவுகள் மெய்ப்பட நாம் கொடுக்க வேண்டிய உழைப்பை பற்றி கற்றுக்கொள்ள இயலும்.

சூழ்நிலை சாதகமாக இல்லாதபோது, சாதிக்க பிறந்தவர்கள் சோர்ந்து போவதில்லை. சோதனைகள் இல்லையென்றால், வாழ்க்கையே சுவையற்று போய்விடும். தடங்கல் நம்மை முடுக்கும்போது, நமக்கு முன்னர் சாதித்தவர்கள் வாழ்வில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு நாளையும் புதிய துவக்கமாகவும், வாழ்வில் புதிய திருப்பமாகவும் பார்த்தால் வெற்றி நிச்சயம்.  

ஆங்கில கட்டுரையாளர்: திஷா கதூரியா

Related Stories

Stories by YS TEAM TAMIL