1 கோடி மரக் கன்றுகளை நட்டதற்காக பத்மஸ்ரீ விருது பெற்ற ராமையா! 

1

மனநலம் சரியில்லாதவர் என்று பலரும் அவரை அழைத்தனர். அவர் கையில் எப்பொழுதும் மரக்கன்றுகளும், விதைகளும் இருக்கும். அதை தனது சைக்கிளில் எடுத்துக்கொண்டு பல இடங்களில் கன்றுகளை நடுவதை தன் பணியாக கொண்டிருந்தார். இன்று அவர் நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை பெற்று பெருமைப்படுத்தப் பட்டுள்ளார். தெலுங்கானாவை சேர்ந்த ராமையா தரிப்பள்ளி என்ற இவரது கதை மிகுந்த ஊக்கமிக்கது.

கம்மம் மாவட்டத்தில் உள்ள ரெட்டிப்பள்ளி என்ற கிராமவாசியான ராமையா, செல்லும் இடங்களில் எல்லாம் மரக்கன்று நடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். காலியான நிலம் இருக்கும் இடங்கள் எத்தனை தூரம் இருந்தாலும் அங்கே பயணித்து தன்னிடம் உள்ள மரக் கன்றை நடுவார். இது பல வருடங்களாக தொடர்ந்து லட்சக்கணக்கான கன்றுகளை நட்டுள்ளார். 

“பிறருக்கு போதிப்பதை விட அதை செயலில் காண்பிக்கவே விரும்புவேன். இதுவரை எத்தனை மரக்கன்று நட்டுள்ளேன் என்று நான் சரியாக கணக்கு வைத்துக் கொள்ளவில்லை,” 

என்று தி ஹிந்து பேட்டியில் கூறினார். மேலும் பேசிய அவர் இதுவரை நிச்சயம் 1 கோடி மரக்கன்றுகளுக்கு மேல் நட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.  

70 வயது ராமையா தனக்கு இந்த பழக்கம் வந்ததை பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் இடம் கூறுகையில்,

“மரக்கன்று நடுவது எனக்கு பொழுது போக்கு மட்டுமல்ல அதை நான் விரும்பி செய்கிறேன். எங்கெல்லாம் காலி நிலங்கள் இருக்கிறதோ அங்கே நான் மரத்தை நடுவேன். நான் நடும் ஒவ்வொரு கன்றும் அழியாமல் வளர்வதை நான் உறுதிப்படுத்திக்கொள்வேன். அதில் ஒன்று அழிந்தாலும் என் உயிரே போனது போல் இருக்கும்,” என்றார். 

ரெட்டிப்பள்ளியில் உள்ள அவரது இரண்டு படுக்கையறை வீடு முழுதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பதாகைகளும், பொன்மொழிகளும் நிறைந்திருக்கும். அவரின் மனைவி ஜனம்மா தரிப்பள்ளி தன் கணவரை எப்படி எல்லாரும் கேலி செய்தனர் என்பது பற்றி குறிப்பிடுகையில்,

“அவர் சைக்கிளில் பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து காலி நிலத்தை அடைந்து அங்கே மரக்கன்றை நடுவார். அந்த இடமே விரைவில் பசுமை நிறைந்து விடும் என்பதில் நம்பிக்கையாக இருப்பார்.” 

’மரத்தை காப்போம், அது உங்களை காக்கும்’ என்ற வார்த்தைகள் அடங்கிய துணியை கையில் எப்பொழுதும் எடுத்துச்செல்வார் என்றார் அவர். தங்களிடம் இருந்த 3 ஏக்கர் நிலத்தை விற்று விதைகள் வாங்க தேவையான நிதியை சேர்த்தார். அதே போல் இவர்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் பிறந்தநாள், குடும்ப விழாக்களின் போது மரக்கன்றை பரிசாக கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். 

ராமையா பத்தாவது வரை மட்டுமே படித்துள்ளார் ஆனால் புத்தகம் வாசிப்பதை அவர் பெரிதும் விரும்பினார். குறிப்பாக மரம், செடிகள் தொடர்பான புத்தகங்களை தொடர்ந்து வாசிப்பார். அதில் உள்ள படங்களை எடுத்து சுவர்கள், போர்டுகளில் ஒட்டி வைப்பார்.

தனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது பற்றி பேசிய அவர்,

“இந்த விருது கிடைத்துள்ளதால் எனக்கான பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளது. என் கடைசி மூச்சு இருக்கும் வரை பசுமை பாதுகாப்பிற்கான பிரச்சாரத்தை தொடர்வேன். என்னால் ஒரு கோடி மக்களை ஊக்கப்படுத்தி அவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு மரம் நட வைக்க முடிந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்,” என்றார்.

கடந்த ஆண்டு தெலுங்கானா உருவான போது அந்த அரசு அவருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசளித்து கெளரவித்தது.

கட்டுரை: Think Change India