'பர்மாவிற்கு எங்களை திருப்பி அனுப்புவதைவிட இந்தியாவிலேயே கொன்றுவிடுங்கள்'– ரோஹிங்கியா அகதிகள்...

0

சென்னை கேளம்பாக்கத்திலுள்ள அகதிகள் நிவாரண மையத்தில் இருந்த ரோஹிங்கியா மக்களை பார்க்கச் சென்றபோது அங்கிருந்த இளைஞர்கள் கேரம் விளையாடிக்கொண்டே என்னை வரவேற்றனர். கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்த ஒரு இரண்டு மாடி கட்டிடம்தான் இவர்கள் வீடு.

ரோஹிங்கியா முஸ்லீம்களின் இனத்தை ஒழிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. 2011-ம் ஆண்டு மியான்மரில் வன்முறை ஏற்பட்டது. இதிலிருந்து பலர் தப்பித்து வெளியேறினர். மொஹமத் சலீம் போன்ற பல அகதிகளுக்கு நிரந்தர தங்குமிடம் இல்லாமல் அவதிபட்டனர்.

மியான்மரின் வடக்கு ராகைன் மாநிலத்தில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட ரோஹிங்கியாஸ் என்கிற இனத்தைச் சேர்ந்த சுன்னி முஸ்லீம்கள் வசித்து வருகின்றனர். இவர்கள்தான் உலகிலேயே மிகவும் துன்புறுத்தப்பட்ட சமூகத்தினர் என்று ஐக்கிய நாடுகள் 2013-ம் ஆண்டு தெரிவித்தது. பர்மீஸ் அரசாங்கம் 1982 பர்மீஸ் குடியுரிமை சட்டத்தின்கீழ் ரோஹிங்கியா மக்களுக்கு குடியுரிமை வழங்க மறுத்தது. கடந்த பத்தாண்டுகளில் இந்த அரசாங்கத்தின் தொடர் இன வன்முறையிலிருந்து எண்ணற்ற ரோஹிங்கியா குடும்பங்கள் தப்பித்துள்ளன.

26 வயதான சலீம் மொபைல் ஃபோன் பயன்படுத்தியதற்காக பர்மீஸ் சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதை நினைவுகூர்ந்தார். சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வெளியே வந்த பிறகு மியான்மரின் மௌங்டா மாவட்டத்திலுள்ள தனது கிராமத்திலிருந்து தப்பியோட தீர்மானித்தார்.

”கல்வி பயின்றுள்ளபோதும் ரோஹிங்கியா மக்களுக்கு அவர்களது வாழ்வாதராத்திற்கு ஒரு சாதாரண பணிகூட கிடைப்பதில்லை. மேலும் மதராசாஸ் எனப்படும் எங்களின் மதக் கல்வி மையங்கள் அரசாங்கத்தாலும் காவலர்களாலும் எரிக்கப்படுகிறது,” என்றார் சலீம்.

இவர் தற்போது தன் குடும்பத்தைக் காப்பாற்ற தெருக்களில் குப்பை பொறுக்குகிறார்.  அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் உயர் ஆணையாளர் (UNHCR) தலையிட்டு தமிழக அரசாங்கத்திடம் அனுமதி பெற்ற பிறகு கிட்டத்தட்ட 20 ரோஹிங்கியா குடும்பங்களுக்கு சென்னையின் புறநகரில் உள்ள இடிந்து விழும் நிலையில் இருக்கும் சுனாமி நிவாரண மையங்களில் இடமளிக்கப்பட்டுள்ளது. தற்போது அகதிகள் அட்டை மற்றும் ஆதார் ஆவணங்கள் வைத்துள்ளனர். இறைச்சி கடைகள், ரெஸ்டாரண்டுகள் ஆகியவற்றில் பணிபுரிகிறார்கள். மறுசுழற்சி கழிவுகளை விற்பனை செய்கின்றனர்.

இந்தியா வந்தடைவதற்கு முன்பு இவர்கள் செல்லுமிடங்கள் கண்காணிக்கப்படுதல், இஸ்லாமிய மத சம்பிரதாயங்கள் பின்பற்றப்படுவதைத் தடுத்தல், பெரும்பான்மையானவர்களான ராகைன் புத்த மதத்தினரின் கொடுமைகள் போன்றவற்றால் ரோஹிங்கியா அகதிகளின் வாழ்க்கை நிரம்பியிருந்தது.

”பல ரோஹிங்கியா மக்கள் முஸ்லீம்கள் என்பதற்காகவே கொல்லப்பட்டனர்,” என்று ஹிந்தியில் கடுமையாக கூறினார் ஹாஃபிஸ் மொஹமத் உஸ்மான்.

25 வயதான உஸ்மான் மியான்மரின் புதிடவுங்க்-ல் ஒரு  கிராமத்தைச் சேர்ந்தவர். 2011-ம் ஆண்டு எல்லையைத் தாண்டியதிலிருந்து இந்திய மண்ணில் வசித்து வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னால் தனது சகோதரியுடன் இணைவதற்காக சென்னை முகாமிற்கு வந்தார். அதற்கு முன்பு குழந்தைகளை மதராஸாவில் படிக்க வைத்தார்.

2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ராகைனில் துவங்கப்பட்ட சமீபத்திய வன்முறை மற்றும் துன்புறுத்தல்களிலிருந்து பல்வேறு குடும்பங்கள் தப்பித்தனர். அராகன் ரோஹிங்கியா சால்வேஷன் ஆர்மியின் (ARSA) சிறு கிளர்ச்சிக்கு பர்மீஸ் ராணுவத்தின் பதில் தாக்குதல் நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான பர்மீஸ் ரோஹிங்கியாஸ் பட்டினியாகவும், வீடின்றியும் அவதிப்படும் நிலையும் ஏற்பட்டது.

”ரோஹிங்கியாவினரின் உரிமைகளுக்காக ஆயுதமேந்தி போராடும் மக்கள் அடங்கிய குழுதான் ARSA. இவர்கள் இராணுவத்தினரைப் போல முறையாக பயிற்சி பெற்றவர்கள் அல்ல. இராணுவத்தினர் எங்களது அனைத்து கல்வி நிறுவனங்களையும் கொளுத்தினர். பெண்களை பாலியம் பலாத்காரம் செய்தனர். கிராமத்தையே கொடுமைப்படுத்தினர். மியான்மர் ராணுவத்திற்கு ஒரு துளியும் மனிதாபிமானம் என்பது கிடையாது,” என்றார் உஸ்மான்.

சமீபத்திய ராணுவ தாக்குதல் காரணமாக பல ரோஹிங்கியா மக்கள் அருகாமையிலுள்ள பங்களாதேஷுக்கு அகதிகளாக சென்றனர். அங்கு பலருக்கு அடைக்கலம் வழங்கப்பட்டது. சலீமின் அம்மா மற்றும் சகோதர் போன்ற லட்சக்கணக்கானோர் ஆபத்தான காட்டுப் பாதையைக் கடந்து பங்களாதேஷை தஞ்சம் அடைந்தனர். 

“நேற்று அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அங்குள்ள தெருக்களில் ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக நிறைந்திருப்பது குறித்து விவரித்தனர். கடும்பயணம் மேற்கொண்டதன் காரணமாக சிலர் உயிரிழந்தனர். அதிர்ஷ்ட்டவசமாக என்னுடைய குடும்பத்தினர் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் தற்போது பட்டினியில் தவிக்கின்றனர்,” என்று விவரித்தார்.

கடந்த 15 நாட்களில் கிட்டத்தட்ட 1.5 லட்சம் ரோஹிங்கியாஸ் பங்களாதேஷில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதாக உஸ்மானும் மற்றவர்களும் தெரிவித்தனர். எனினும் உண்மையான எண்ணிக்கை இதைக்காட்டிலும் இரட்டிப்பானதாகும். வடக்கு ராகைனில் பல்வேறு ரோஹிங்கியா கிராமங்கள் தீக்கு இரையானதை படம்பிடித்து காட்டுகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம். பர்மீஸ் அரசாங்கம் தப்பித்து செல்பவர்களை தாக்குவதற்காக எல்லைப்பகுதிகளில் கண்ணிவெடிகள் வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

”அவர்கள் கிராமங்களை தீயிட்டு கொளுத்துகின்றனர். தப்பிக்க முயல்பவர்கள் மீது ஹெலிகாப்டரிலிருந்து புல்லட்களை வீசினர். அவர்களிடமிருந்து தப்பித்து அருகிலிருந்த மலைகளில் ஒளிந்திருப்பவர்களை கொல்வதற்காக மலைஅடிவாரங்களில் காத்திருக்கும் அளவிற்கு ராணுவத்தினருக்கு ரோஹிங்கியாஸ் மீது வெறுப்பு காணப்பட்டது. அவர்கள் எங்களை குற்றவாளிகள் என்று நினைக்கின்றனர். ஆனால் அப்பாவியான பச்சிளம் குழந்தைகளை எதற்காக இரக்கமின்றி தீக்கு இரையாக்குகின்றனர்?” என்று கொடூரமான படுகொலைகளின் படங்களை வாட்ஸ் அப் வாயிலாக காட்டியவாறே கோபமாக கேள்வியெழுப்பினார் உஸ்மான்.

தமிழகம் முழுவதும் பல்வேறு முகாம்களில் ரோஹிங்கியாஸ் மக்களை தங்கவைத்ததற்காக இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறார் உஸ்மான். ”உங்களது ராணுவம் உங்களை துன்புறுத்தாமல் பாதுகாப்பதால் நீங்கள் மிகுந்த அதிர்ஷ்ட்டசாலிகள்,” என்றார். இங்குள்ள சிறப்பான பாதுகாப்பான நிலை தன்னை ஒரு ஹிந்துஸ்தானியாகவே உணரவைத்ததாக தெரிவித்தார் தில் முகமது.

”எங்களை கொல்லாமல் இருப்பதால் இந்த நாட்டிற்கு நாங்கள் கடமைப்பட்டவர்களாக உணர்கிறோம்,” என்றார். 

சென்னை முகாமில் உள்ள அகதிகளை நாடு கடத்தி திரும்ப மியான்மருக்கே அனுப்பும் திட்டம் இந்திய அரசாங்கத்திற்கு இருப்பது குறித்து அறிவார்களா என்று கேட்டதற்கு, ”நாங்கள் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என இந்திய அரசாங்கம் சந்தேகிப்பதாக தொடர்ந்து செய்திகளைக் கேட்டு வருகிறோம். எனினும் நாங்கள் இங்கே தங்கியிருப்பதற்கு எந்த நோக்கமும் இல்லை. யாரையும் துன்புறுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. நாங்கள் எந்தவித உரிமையையும் கோரவில்லை. எங்களை நிச்சயம் கொன்றுவிடுவார்கள் என்று தெரிந்தும் எதற்காக எங்களை பர்மாவிற்கு நாடு கடத்தவேண்டும். அதற்கு பதிலாக இங்கேயே எங்களை கொன்றுவிடுங்கள்,” என்றார்.

கேளம்பாக்கம் முகாமில் இருந்த வயதான பெண்களில் ஒருவர் 50 வயதான சிராஜ் பேகம். இவர் பர்மீஸ் சிறையில் செய்யாத குற்றத்திற்காக அடைக்கப்பட்டிருக்கும் தனது சகோதரர்கள் குறித்து தயக்கத்துடன் பேசத் துவங்கினார். 

”அவர்கள் தவறு செய்யவில்லை. இருந்தும் பௌத்த துறவிகள் உள்ளூர் காவலர்களின் துணையுடன் அவர்கள் மீது வீண் பழி சுமத்தியுள்ளனர்.” திரும்பச் செல்ல விரும்புகிறாரா என்று கேட்டதற்கு பெரும்பாலான ரோஹிங்கியாக்களைப் போலவே, “ஆமாம். ஆனால் அங்கு அமைதி திரும்பவேண்டும்,” என்றார்.

இளம் தௌசலீமாவின் கதையும் பரிதாபமானது. அவர் தப்பிக்க நேர்ந்த சூழல் குறித்து பகிர்ந்துகொள்ளத் துவங்கினார். அவருக்கு திருமணம் நடக்க இருந்தது. மியான்மரில் ரோஹிங்கியா மக்கள் தகுந்த ஆவணங்களை சமர்பிப்பது கட்டாயமான ஒன்றாகும். அதைச் சரிசெய்ய உள்ளூர் அதிகாரிகளுக்கு மிகப்பெரிய தொகையை அளித்துள்ளார். “எனினும் ஆவணங்களை வழங்கவில்லை. கூடுதல் தொகையை கேட்டனர். அப்போதுதான் வெளியேற முடிவெடுத்தோம்,” என்று பகிர்ந்துகொண்டார் இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர்.

என்னுடைய நேர்காணலை முடித்துக்கொண்டிருந்த சமயம் பராமரிப்பற்ற கட்டிடத்தின் ஒரு பகுதி அங்கு அமர்ந்திருந்த சுபைதா என்கிற ஒரு இளம் ரோஹிங்கியா பெண் மீது விழுந்து அவருக்கு காயமேற்பட்டது. ஆரம்ப சுகாதார மையத்திற்கு சிலர் அவரை அழைத்துச் சென்றனர். மற்றவர்கள் பல ஆண்டுகளாக பராமரிப்பற்று கிடக்கும் நிவாரண மையங்களில் மோசமான நிலையை எனக்குக் காட்டினர்.

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையிலிருக்கும் கட்டிடம், சிறிய சமையலறை, ஒரே ஒரு கழிப்பறை ஆகியவற்றைக் கொண்டதே சென்னையின் புறநகரில் அமைந்திருக்கும் ரோஹிங்கியா முகாம். இவர்களில் வாழ்க்கைமுறை குப்பைகளை சேகரிப்பது, கேரம் விளையாடுவது, நம்பிக்கையுடன் இருப்பது ஆகியவை நிறைந்ததாகும்.

இந்தியாவில் பிறக்கும் அவர்களது குழந்தைகளுக்கு என்ன கற்றுக்கொடுப்பார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். அவர்களுக்கு தாங்கள் ரோஹிங்கியா என்கிற அடையாளம் தெரியுமா? மியான்மர் குறித்து அவர்களுக்கு தெரியுமா? ”அவர்கள் ரோஹிங்கியா பிரிவினர் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் நாங்கள் ரோஹிங்கியா முஸ்லீம்கள் என்பதால் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து அரிதாகவே அவர்களுடன் பகிர்ந்துகொள்வோம்,” என்றார் உஸ்மான். பெற்றோர்களின் குடியுரிமை இல்லாத நிலை அவர்களை எவ்வளவு துன்பத்திற்கு ஆழ்த்துயுள்ளது என்பதை அறியாத ரோஹிங்கியா குழந்தைகள் கேரம் போர்டின் பக்கங்களில் அமர்ந்து விளையாட ஆயத்தமானார்கள்.

”நாங்கள் பங்களாதேஷி என்கிறது மியான்மர். நாங்கள் பர்மீஸ் ரோஹிங்கியா என்கிறது பங்களாதேஷ். பாகிஸ்தானும் எங்களை புறக்கணிக்கிறது. மலேசியாவும் எங்களை புறக்கணிக்கிறது. நாங்கள் வானத்திலிருந்து திடீரென்று குதித்துவிடவில்லை. ஆகவே மனிதாபிமானமுள்ள மக்களிடம் எங்களுக்கு இடமளிக்க வேண்டுகிறோம்,” என்றார் உஸ்மான்.

தங்களது சொந்த பகுதியிலிருந்து தூக்கியெறியப்பட்டு, இழப்பை சந்தித்து, காயப்பட்டு, விதியை நொந்துகொண்டு வாழவேண்டிய இவர்களது நிலையை நினைத்து நான் வருந்தினேன்.

ரோஹிங்கியா மக்களின் மீது யாரும் பரிதாபப்படவில்லை. இன அழிப்புத் தாக்குதலிலிருந்து தப்பித்த ரோஹிங்கியா மக்கள் அடைக்கலம் தேடி பல்வேறு நாடுகளுக்குச் செல்கையில் அந்த நாடுகள் தங்களது நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதால் ஆதரவளிக்க மறுக்கின்றனர். மியான்மரின் ஜனநாயகத் தலைவரான ஆங் சான் சூ கீ அவர்களும் அப்பாவி ரோஹிங்கியா முஸ்லீம்களை பாதுகாக்க முன்வராத நிலையில் புது டெல்லி அரசாங்கம் ஒரு நிலையை எடுக்கத் தயங்குகிறது.

பங்களாதேஷ் ரோஹிங்கியா முஸ்லீம்களை வெளியேற்றிய பர்மாவின் நடவடிக்கை குறித்து கண்டனம் தெரிவித்தது. இந்திய அரசாங்கம் இன ஒழிப்பு குறித்த எந்தவித கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மியான்மர் சென்றது குறித்த அறிக்கையில் ராகைன் பகுதியில் அரங்கேறிய வன்முறை குறித்து மட்டுமே சுட்டிக்காட்டப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்ற தலைவர் Zeid Ra’ad Al Hussein ரோஹிங்கியா மக்களை நாடு கடத்துவது குறித்து இந்தியா திட்டமிட்டு வருவது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியப் பிரதிநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் தற்போதைய அரசை ஆதரித்து ஜெனீவாவின் ஐக்கிய நாடுகளின் நிரந்தர இந்தியப் பிரதிநிதியான ராஜீவ் சந்தர் ”சட்டங்களை செயல்படுத்துவதை இரக்கமின்றி நடந்துகொள்வதாக தவறாக புரிந்துகொள்ளக்கூடாது.” என்று குறிப்பிட்டார்.

அப்படியானால் சட்டத்தை முறையாக பின்பற்றுதல் என்றால் மக்களை தங்களது சொந்த மண்ணிலேயே உயிரை விட விரட்டியடிப்பதுதான் என்று பொருள்படுமா?

ஆங்கில கட்டுரையாளர் : அமூல்யா ராஜப்பா