கைலாஷ் ஹரித்: தகவல் தொழில்நுட்பத் துறையை துறந்து சினிமாவை கையிலெடுத்தவர்!

0

கைலாஷ் ஹரித் - சென்னையில் பிறந்து, திருவையாறு, தஞ்சாவூரில் படித்து முடித்து, தகவல் தொழில்நுட்பத் துறையை தேர்வு செய்து, பல தேசங்கள் கண்டுக் கொண்ட பின் காட்சி ஊடகம் மீது ஆர்வம் தோன்ற, அதையே பின் தொடர்ந்து, இன்று, தன் இரண்டாவது குறும்படத்தின் பணிகளை செய்துக் கொண்டிருக்கும் தமிழர். கைலாஷின் இரண்டாவது குறுப்படமான 11 : 11 -ன் ட்ரெயிலரை நடிகர் மாதவன், ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். 

அவரோடான தமிழ் யுவர்ஸ்டோரியின் நேர்காணல் 

”திருச்சியில் கல்லூரிப் படிப்பை முடித்தப் பிறகு, 2003 ல் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யத் தொடங்கினேன். கூடவே, இண்டிபண்டண்ட் கன்சல்டிங்கும் செய்துக் கொண்டிருந்தேன்.

அடிப்படையில் அவர்கள் கோர் பேங்கிங்கில் ஈடுபட்டிருந்த நிறுவனமான, ஆரக்கல் ஐஃப்லெக்சில் வேலை செய்துக் கொண்டிருந்த போது, அதற்காக அமெரிக்கா, ரஷ்யா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய பல நாடுகளுக்கு பயணித்து இருக்கிறேன். தகவல் தொழில்நுட்பத்துறை என்னும் போது, எனக்கு மிகத் தெளிவான ஒரு பாதை இருந்தது. இப்போ புராஜெக்ட் மானேஜர், இன்னும் சில நாட்களில் டெலிவரி மேனேஜர் என்று நான் உற்சாகமாய் தான் வேலை செய்தேன்.

ஆனால், ஒன்பதிலிருந்து ஐந்து மணி வேலை எனக்கு அவ்வளவு விருப்பமாய் இல்லை. அதனால், ஏன் எனக்கு ஆர்வம் இருக்கும் துறையில் முயற்சி செய்யக் கூடாது? ஏன் க்ரியேட்டிவ் வேலை செய்யக் கூடாது என 2010-ன் பாதியில் தோன்றியது.  

புகைப்படத் துறையில் எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்தது. அப்போது தான் டி எஸ் எல் ஆர் கேமராவும் வாங்கியிருந்தேன். பள்ளிக் காலத்தில் சினிமா பார்ப்பேன். ஆனால், இப்போது நான் எப்படி பார்க்கிறேனோ அப்படியில்லாமல், மிகச் சாதாரண பர்வையாளனாகத் தான் பார்த்திருக்கிறேன். விமர்சன ரீதியாக பார்த்ததே இல்லை. 2012 ஃபிப்ரவரியில், ராஜீவ் மேனன் சார் இண்ஸ்டிட்யூட்ல ஆறு மாத ஒளிப்பதிவு கோர்ஸ் ஒன்று படித்தேன். 

அங்கே உலக சினிமா எல்லாம் பார்க்கத் தொடங்கிய பிறகு தான், சினிமாவை உருவாக்குவது பற்றி ஒரு தெளிவான புரிதல் ஏற்பட்டது. அதற்கு முன் நான் ஒளிப்பதிவு செய்யலாம் என்றுத் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். திரைக்கதை எழுதுவது, கதாபாத்திரத் தேர்வு, கதை சொல்வதற்கு பின் என்னென்ன இருக்கிறது, பார்வையாளர்களோடு எப்படி தொடர்பு கொள்கிறார்கள் என்பதெல்லாம் தான் என்னை திரைப்படம் இயக்குவதற்கு எனக்கான வாயிலை திறந்து வைத்தது. என்ன மனநிலைக்கு எப்படியான ஒளி இருக்க வேண்டும், என்ன லென்ஸ் உபயோகிக்க வேண்டும் போன்ற ஒளிப்பதிவாளரின் மொழியைக் கற்றதனால் எனக்கு அது எளிமையாகிப் போனது. 

11:11 குறும்படம்

ஒளிப்பதிவிற்கு கற்றதற்கு பிறகான அனுபவத்தைப் பற்றிப் பேசிய போது, “முதல் குறும்படம், “எனக்கே எனக்காக”, முப்பது நிமிட குறும்படம். அதற்கு நாங்கள் நிறைய நேரம் செலவழித்தோம்

இரண்டாவதாய் 11:11, முப்பது நிமிட குறும்படம். கடந்த ஏழு மாதங்களாக இதில் வேலை செய்துக் கொண்டிருக்கிறோம். த்ரில்லர் படம். தற்போது, போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலை செய்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் இருபது நாட்களில் முடிந்து விடும்.செப்டம்பர், அக்டோபரிலேயே படப்பிடிப்பு முடிந்தது. பிறகு, மழை வெள்ளம் வந்த காரணத்தால், கொஞ்சம் தாமதம் ஆனது. 
11:11 ட்ரெய்லர்
11:11 ட்ரெய்லர்

ட்ரெயிலரை மாதவன் வெளியிட்டது குறித்துக் கேட்ட போது, படத்தில் ஏகப்பட்ட தியரிக்களும், கருத்துக்களும் இருக்கின்றன. இப்படியான ஒரு படத்தை புரிந்துக் கொள்ள நடிகர் மாதவனால் முடியும். பின், அவருக்கு சமூக வலைதளத்தில் நிறைய ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். அதன் வழியே படம் மக்களை சென்றடையும். அது தான் காரணம்”

சினிமா மீதான புரிதல்

 “முதலில், அதிக அளவிலான மக்களை சென்றடைந்து தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமை சினிமாவிற்கு இருக்கிறது. அதை ஒழுங்காக பயன்படுத்தப்படவில்லை என்பது தான் கஷ்டமான விஷயமாக இருக்கிது. வழக்கு எண் 18/9 , காக்கா முட்டை, விசாரணை போன்ற படங்கள் எல்லாம் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதைப் போன்ற படங்கள் எல்லாம் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தது என்றால், மக்கள் மனதில் மாற்றத்தை கொண்டு வர முடியும். சில விஷயங்கள் சினிமாவில் தவிர்க்க வேண்டும் என நான் நினைக்கிறேன். மக்களுடைய நேரத்தை வீணாக்காமல், அதே நேரத்தில், எனக்கு ஏற்ற மாதிரியான படங்கள் செய்ய வேண்டும். தமிழில் தான் படம் பண்ணத் தொடங்க வேண்டும். ஆனால், தமிழில் தான் பண்ணுவேன் என்கிற பிடிவாதம் கிடையாது. 

பார்வையாளர்களை அழ வைப்பது, சிரிக்க வைப்பது என நேரடியாக அவர்களுடைய இதயத்தை சென்று பிடிக்க சினிமாவில் வழி இருக்கிறது. எனக்கு அதனால் தான் சினிமா பிடிக்கும். சினிமாவில் நிலைத்திருக்க எதாவதொன்றை புதிதாய் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். முழு நீளப்படத்திற்கான திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதை படமாக்குவதற்கான வாய்ப்பு கூடிய விரைவில் வரும். இப்போது வரை எனக்கு இது பரிசோதனை தான். ஆனால், பொறுமையாக, திடமாக முன்னேறுவேன்.” 

”எனக்கே எனக்காக” படத்திற்கான லிங்க்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

'புதுமையே எனது விருப்பம்'- அண்டர்வாட்டர் புகைப்படக் கலைஞர் சுபாஷினி வணங்காமுடி 

'ஜல்லிக்கட்டு நடத்த தனி ஸ்டேடியம் கட்ட வேண்டும்'- புகைப்படக் கலைஞர் சுரேஷின் ஆசை!

 

வெகுஜன ஊடக மாணவி; பயணங்கள், சினிமா,காதல் மீதெல்லாம் வற்றாத நம்பிக்கை கொண்ட சின்னப் பெண்.

Stories by Sneha