’பயணம் வாழ்க்கையை எளிமை ஆக்கிவிடும்’- மூகாம்பிகா ரத்தினம்

இருபதற்கும் மேற்பட்ட நாடுகளில் கல்வியின் முக்கியத்துவம், பெண் வலிமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காகவும் சாலைப் பயணம் மேற்கொண்டு, சாதித்திருக்கும் பொள்ளாச்சியைச் சேர்ந்த பயண ஆர்வலர் மூகாம்பிகா ரத்தினம். 

1

நம்மில் பலருக்கு பயணங்கள் என்றாலே அச்சத்தையும், அலுப்பையும் உண்டாக்கும் அனுபவமாகவே தோன்றலாம். பயணக்கதைகளை சொல்பவர்கள் எல்லாரும் நல்ல நினைவுகளை பகிரும் போது கூட, ட்ரெயின், ஆம்னி வேன், அல்லது கவர்மெண்ட் பஸ்ஸில் பயணித்த எரிச்சலை மட்டுமே நாம் நினைவில் வைத்துக் கொண்டிருக்கலாம். இந்த வழக்கம் தடாலடியாக மாறிவிடாது என்றாலும் கூட, அசௌகரியமும் பயணத்தின் ஒரு பங்கு தான், ஒரு பயணத்தை சிறப்பாக்குவதே அதன் போராட்டங்கள் தான் என்பதை அழுத்தமாய் உணர வைக்கும் மூகாம்பிகாவின் வாழ்க்கை கதை நம்மில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். 

பொள்ளாச்சியில் பிறந்து வளர்ந்த மூகாம்பிகா, பனிரெண்டு வயதிலேயே கார் ஓட்ட கற்றுக் கொண்டார். அதற்கு முழு காரணமும் அவருடைய அப்பா தான் என நெகிழ்ந்து பகிர்கிறார். மூகாம்பிகாவின் அப்பா அரசியல் பின்புலத்தோடு இருந்ததனால், அப்பாவோடு சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பு அந்த வயதிலேயே அவருக்கு கிடைத்திருக்கிறது. இதனால் அந்த வயதிலேயே தமிழ்நாட்டின் புவியியல் பற்றி தெளிவாய் தெரிந்து கொண்டார்.

“எங்களுடையது விவசாயக் குடும்பமாக இருப்பதனால், அடிப்படையிலேயே பருவநிலை மாற்றங்கள் பற்றியும் தெரிந்திருந்தது. இதனாலேயே ஜியாகிரஃபி பாடத்தில் 99 மார்க்குகள் வாங்கிவிடுவேன்,” என்கிறார்.

அதே 12-ம் வயதில் தான் அவருடைய அப்பாவையும் இழந்தார் மூகாம்பிகா. அம்மாவின் வளர்ப்பில் ஆரோக்கியமாகவே வளர்ந்ததாக சொல்லும் அவர், கல்லூரி முடித்து ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மாற்றங்கள் வந்தது. ஒருக்கட்டத்தில், தனக்கென தனியாக நேரம் வேண்டும் என முடிவு செய்த போது, பயணம் தான் அதற்கான வழி என தீர்மானித்தார். 

2011, 2012 ஆம் ஆண்டுகளில் தனியே பயணிக்கவும் தொடங்கியிருக்கிறார். பயணம் என்றதுமே, உடனடியாக வெளிநாடுகளுக்கு பறக்கக் கூடாது என்பதில் உறுதியாகவே இருந்தார்.

“இந்தியாவில் இருக்கும் அதிசயங்களை எல்லாம் நாம் இன்னும் முழுமையாக பார்க்கவே இல்லை. அதனால், முழுமையாக இந்தியாவை பார்த்து முடித்த பிறகு தான், வெளிநாடுகளுக்கு போக வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்படி, ஒவ்வொரு மாநிலமாக பயணித்தேன்.”

அவருடைய வாழ்க்கையையே மாற்றியதாக அவர் சொல்லும் பயணம், நான்கு வருடங்களுக்கு முன்னர் இமயமலையில் இருக்கும் ரிஷிகேஷுக்கு, யோகா பயிற்சிக்காக சென்றதை, அந்த பயிற்சிக்கு பிறகு, மீண்டும் இமயமலையில் இருக்கும் உத்தர்காஷியில் ஒரு மாதம் தங்கியிருந்த அனுபவம் பெரிய தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது என்றார். மலையில் இருந்த மக்களும், அவர்களுடைய கலாச்சாரமும், சுற்றுலாப்பயணிகளால் பெருமளவு பாதிக்கப்படாத அந்த நிலத்தின் தன்மையும் ஒரு ரோடு ட்ரிப் பண்ண வேண்டும் என்றொரு உந்துதலை முகாம்பிகைக்கு உண்டாக்கியிருக்கிறது.

“இந்தியாவில் ரோடு ட்ரிப் என்றாலே லே, லடாக் தான். ஆனால், எனக்கு தனியே பைக்கில் போக விருப்பமில்லை. யாரோடு போவது, எப்படி போவது என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், நான் வாழ்க்கையில் எதற்கெல்லாம் ஆசைப்படுகிறேனோ, அதை விட பலமடங்கு எனக்குக் கிடைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.”

ஒரு ரோடு ட்ரிப் போக மூகாம்பிகா பார்த்துக் கொண்டிருந்த போது தான், ஃபேஸ்புக்கில் மீனாட்சி அரவிந்த் ஒரு பயணத்திற்கு துணை வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

“அப்போது தான் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயாவுக்கு எல்லாம் தனியாக பயணித்து திரும்பியிருந்தேன். அது ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நேரம். ஒரு பதட்ட சூழல் உருவாகியிருந்தது. இனி சில நாட்களுக்கு பயணிக்கப் போவதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தேன்,”

ஆனால், ஃபேஸ்புக்கில் ‘லண்டன் வரை காரில் பயணிக்க கார் ஓட்டத் தெரிந்த பெண் துணை வேண்டும்’ என்ற மீனாட்சியின் பதிவை பார்த்ததுமே தான் அந்த பயணத்தில் இணையப்போவது மூகாம்பிகைக்கு உறுதியாக தெரிந்துவிட்டது. லண்டன் வரை காரில் செல்வதை பற்றி எந்தக் கேள்வியும் அவருக்கு இல்லை - ஏனென்றால், எந்த மாதிரியான சூழல்களை சந்திக்கப் போகிறோம் என்பதை அவர் தெரிந்திருக்கவில்லை. உடனேயே, மீனாட்சியை தொடர்பு கொண்டார். அந்த இணைப்பு எளிதில் நடந்துவிட்டது என்றாலும், அந்த பயணம் அவ்வளவு எளிதாக தொடங்கவில்லை.

“அது டிமானடைசேஷன் நேரம். எங்களுக்கு ஸ்பான்சர் பண்ண யாரும் தயாரா இல்லை. எனக்கு இரண்டு தடவை விசா ரிஜெக்ட் ஆனது. அந்த பயணத்திற்கான திட்டமிடலே ஆறு மாதங்கள் நடந்தது. ஒருவழியாக ரூட்ஸ், சி.ஆர்.ஐ பம்ப்ஸ், அரைஸ் ஸ்டீல் மாதிரியான ஸ்பான்சர்கள் ரோட்டரி இந்தியாவின் வழியே எங்களுக்கு கிடைத்தார்கள். கார் கிடைப்பது பெரிய பிரச்சினையாக இருந்தது, டாட்டா மோட்டர்ஸ் கார் கொடுத்தார்கள். இப்படி எல்லாம் சரியாக நடந்தது. கல்வி மற்றும் பெண் வலிமை குறித்து விழிப்புணர்வு உண்டாக்க, எழுபது நாள் பயணம் செய்துவிட்டு வந்தேன். 2016 செப்டம்பரில் இருந்து இப்போது வரை, வாழ்க்கை அருமையாக போய்க் கொண்டிருக்கிறது,” என்கிறார் புன்னகையுடன்.

தான் இத்தனை பேருக்கு முன்னுதாரணமாக இருக்கப் போவதையோ, பயணங்களின் வழியே இவ்வளவு ஆட்களை சந்திக்கப் போவதையோ, இவ்வளவு அனுபவங்களை பெறப்போவதையும் முன்னர் அறிந்திருக்கவில்லை என உற்சாகமாக சொல்கிறார்.

இரானில், எம் 2, எம் 3 சாலைகளும், ஷாபகார் துறைமுகம் அமைக்க, இந்திய அரசு இரான் அரசுக்கு நிதியுதவி செய்தது. இதையொட்டி, சமீபத்தில் இந்திய அரசு, ரஷ்ய அரசு, ஈரான் அரசு மற்றும் அசர்பைஜான் அரசு இணைந்து நடத்திய ஐ.என்.எஸ்.டி.சி கார் பேரணியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கவே அதிலும் கலந்து கொண்டார் மூகாம்பிகா. ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க்கில் தொடங்கிய இருபது நாள் கார் பேரணியில் ஆறாயிரம் கிலோமீட்டர் கார் ஓட்டியிருக்கிறார்.

இந்தியா, ரஷ்யா, ஈரான் மற்றும் அசர்பைஜான் அரசுகள் இணைந்து நடத்திய ஐ.என்.எஸ்.டி.சி கார் பேரணி
இந்தியா, ரஷ்யா, ஈரான் மற்றும் அசர்பைஜான் அரசுகள் இணைந்து நடத்திய ஐ.என்.எஸ்.டி.சி கார் பேரணி
“பதினெட்டு கார்களில் 40-க்கும் மேற்பட்டோர் பயணித்தோம். இந்தியா முழுவதிலும் இருந்து ஆட்கள் வந்திருந்தார்கள். ரஷ்யாவை, இரானை சேர்ந்தவர்களும் இருந்தார்கள். அசர்பைஜான் என்றொரு நாடு இருப்பதே அங்கு போகும் வரை எனக்கு தெரியாது. அவ்வளவு அழகான நாடு அது. இரானுக்கு இருக்கும் கலாச்சாரமும், வரலாறும் எல்லாம் பிரமிப்பை உண்டாக்குவதாகவே இருந்தது. ஒவ்வொரு காரும் ரேடியோவில் கனெக்ட் ஆகியிருந்தது. இப்படி ஒரு பேரணியை நடத்துவது எளிதான காரியம் இல்லை.”

பீட்டஸ்பர்க்கில் இருந்த தட்பவெப்பத்தை விட முற்றிலும் மாறுபட்டதாக இருந்திருக்கிறது இரானின் தட்பவெப்பம். காரில் இருந்து இறங்கி சில நொடிகள் நின்றாலே நா வறண்டு போகும் அளவு வெப்பம். இந்த கார் பேரணியை முடித்துவிட்டு வந்த ஒரு வாரம் ஆன பிறகும் கூட, பயணித்த அத்தனை பேரும் உடல் அழன்று இருப்பதை உணர்வதாக வாட்ஸப்பில் பகிர்ந்து கொண்டார்கள் என்கிறார் மூகாம்பிகா.

உடல் அழற்சியையும் கடந்து பயணத்தின் போது நிறைய சிக்கல்கள் உண்டாகும். பெண்கள் பயணிக்கும் போது என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எல்லாம் எடுக்க வேண்டும் என கேட்டதற்கு,

“பெண்கள் நாங்கள் போன போது, இரவு நேரங்களில் பயணிக்கவில்லை. தேவையில்லாத ரிஸ்குகள் எடுக்கவில்லை. போதுமான எச்சரிக்கைகள் எடுத்தாலே எந்த பிரச்சினையும் வராது என்றே நினைக்கிறேன்,” என்றார்.

கூடவே, சிங்கிள் மதராக தன் குழந்தையை வளர்ப்பது பற்றி பேசிய போது, மூகாம்பிகாவின் பயணங்களின் வழியே அவருடைய மகள் எப்படி வலிமையாகிறாள் என்பது புரிந்தது. முதல் பயணத்திற்கான திட்டமிடலின் போதே மூகாம்பிகா பல தடவை சென்னை பயணமாக வேண்டியிருக்கிறது. அப்போது மூகாம்பிகாவின் அம்மா அவரின் மகளை பார்த்துக் கொண்டார். குடும்பத்தில் இருந்து வரும் ஆதரவு இல்லாமல் தன்னால் பயணிக்க முடியாது என மூகாம்பிகா நம்புகிறார்.

“லண்டன் ட்ரிப் முடிஞ்சு திருப்பி வந்த போதே, எல்லா வேலையையுமே அவளே செய்து கொண்டாள். கொஞ்சம் மனசு கவலையாகத் தான் இருந்தது. அப்புறம், அதுவும் நல்லதுக்கு தான் என நினைத்துக் கொண்டேன்,” என்கிறார்.

மூகாம்பிகாவின் மகளுமே பயணங்களில் ஆர்வத்தோடு தான் வளர்கிறாள். இரானில் நுழைந்த போது தலையை மூடிக்கொள்ள வேண்டியது கட்டாயமானது என மூகாம்பிகா விவரிக்கும் போது, “ஏம்மா அப்படி எல்லாம் சொல்றாங்க?” என கேள்வி கேட்கிறாள். அம்மாவோடு கூட சேர்ந்து, நான்கு வருடங்களுக்கு முன்னரே குரங்கனி ட்ரெக்கிங் எல்லாம் செய்திருக்கிறாளாம்.

தேனிலவுக்கோ, கோடை விடுமுறைக்கோ ஸ்விட்சர்லாந்து, துபாய் என பறப்பவர்கள், மூகாம்பிகாவின் பயணக்கதைகளை கேட்ட பிறகு, உஸ்பெக்கிஸ்தான், கிரிக்கிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் பயணிக்கிறார்கள். ஆல்-இண்டியா ரைடு போகும் இளம் பெண்களும், கிலிமஞ்சாரோ ஏற ஆசைப்படும் ஆண்களும் பொள்ளாச்சிக்கு வந்து மூகாம்பிகாவிடம் கலந்தாலோசிக்கிறார்கள்.

“அதுவும், பொள்ளாச்சியில இப்போ என்னைக் கேட்காம யாரும் எங்கயும் ட்ரிப் போக மாட்டாங்க போல இருக்கு,” என்று சிரிக்கிறார்.

நிறைய தூரம் பயணித்து, இயற்கையின் பிரம்மாண்டத்திற்கு முன் நாம் ஒரு சிறு உயிராக தெரியும் போது உண்டாகும் பணிவை அனுபவிப்பது ஆனந்தம். மேலும் பயணிக்கும் போது வாழ்க்கையே எளிமையாகிவிடுகிறது என்கிறார் மூகாம்பிகா. 

“ஒரு டீ கையில் கொஞ்சம் பணம் இருக்கும். நான் டீ பேக்குகள் கையிலேயே வைத்துக் கொள்வேன். எங்காவது ஒரு இடத்தில் கொஞ்சம் வெந்நீர் பிடித்து டீ வைப்பேன். வாழ்க்கை முறையிலேயே நல்ல மாற்றம் உண்டானது,” என்கிறார்.

லண்டன் கார் பயணம்
லண்டன் கார் பயணம்

முதல் பயணத்தில், இருபத்து நான்கு நாடுகளை கடந்த போது ஆச்சரியமளிப்பதாக இருந்தது, ஒவ்வொரு ஐம்பது கிலோமீட்டருக்கும் மாறுபடும் கலாச்சாரம், உணவுமுறை, பணம் மற்றும் மொழி. அதற்கு ஏற்றது போல நம்மை நாமே மாற்றிக் கொள்வதும் அதிசயமாகவே இருந்தது என்றும் சொல்கிறார்.

சமூக அக்கறையோடு இயங்குவதை விரும்பும் மூகாம்பிகா, அவருடைய அப்பா பெயரில் இயங்கும் ரத்தினம் அறக்கட்டளையை கவனித்துக் கொண்டிருக்கிறார். மேலும், நலிந்த கலைகளை ஊக்குவிக்க வெவ்வேறு முனைவுகளை முன்னெடுக்கிறார். சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி, அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு நட்டு வளர்க்க செடிகள் கொடுத்தல் போன்ற முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார்.

அடுத்தடுத்த பயணங்கள் பற்றிக் கேட்ட போது, 

‘இந்தியாவில் இன்னும் பார்க்க வேண்டியது நிறைய இருக்கிறது...’ என்கிறார்.

ஒரு மணி நேரம் மூகாம்பிகாவோடு உட்கார்ந்து பேசினாலே போதும், பயணத்திற்கு முன் வரும் நடுக்கமோ, அச்சமோ அடுத்த சில மாதங்களுக்கு எட்டியே பார்க்காது. துணிச்சலும், நம்பிக்கையும், வலிமையும் நிறைந்த பயணக்கதைகளை சொல்ல இன்னும் நிறைய நிறைய பெண்கள் வேண்டும் என நினைப்பது பேராசை கிடையாது. அதை சாத்தியப்படுத்த முயற்சிக்கும் மூகாம்பிகாவிற்கு மரியாதைகளும், வாழ்த்துக்களும் தெரிவிக்கிறோம். 

வெகுஜன ஊடக மாணவி; பயணங்கள், சினிமா,காதல் மீதெல்லாம் வற்றாத நம்பிக்கை கொண்ட சின்னப் பெண்.

Related Stories

Stories by Sneha