ருபாய் நோட்டுகளை பரிசாக கொடுத்தால் எப்படி இருக்கும்?

0

தொலைகாட்சியில் மில்கா சிங்க் அவர்களின் நேர்காணலை பார்த்த சமயம் தான் நீருவிற்கு இந்த எண்ணம் தோன்றியது. தன்னுடைய பிறந்த தேதியை ரூபாய் நோட்டின் எண்களாக கிடைக்கப் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக தனக்கு கிடைத்த அன்பளிப்பை பற்றி பகிர்ந்திருந்தார்.

இப்படி தொடங்கியது தான் அன்மோல் உப்கார். "உங்கள் பிறந்த நாள், திருமண நாள், கிரஹப்பிரவேசம், முக்கியமான தருணங்கள் என எதுவாக இருப்பினும் அந்நாளை நாங்கள் சிறப்பித்து தருகிறோம். உதாரணமாக உங்களுடைய திருமண நாள் 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி என்றால், உங்கள் மனைவிக்கு 010190 என்ற எண்கள் கொண்ட ரூபாய் நோட்டை பரிசாக அளிக்கலாம். இந்த வரிசையில் உள்ள ரூபாய் நோட்டை தேடித் பிடித்து, உங்களுக்கு பிடித்தமான டிசைன் கொண்டு வடிவமைத்து கொடுக்க முடியும்" என்கிறார் நீரு.

58 வயதில் தொழில்முனை பயணம்

உத்தரபிரதேஷில் உள்ள புலண்ட்ஷஹ்ர் என்ற சிறிய ஊரில் தான் பிறந்து வளர்ந்தார், தன் பட்டப்படிப்பை முடித்து அங்கேயே தற்பொழுதும் வசிக்கிறார்.

மூன்று குழந்தைகளுக்கு தாயான அவர், அவ்வப்போது தன் கணவரின் வணிகத்திலும் உதவி புரிந்ததால், புது நிறுவனம் தொடங்குவது புதிதாக தெரியவில்லை. அன்மோல் உப்கார் தொடங்கும் எண்ணம் வந்த பொழுது மிகுந்த உற்சாகம் கொண்டதாக கூறுகிறார்.

"என் குழந்தைகள் வளர்ந்த பிறகு நிறைய நேரம் இருந்தது, சொந்தமாக தொழில் முனையும் எண்ணம் இருந்ததால் இந்த எண்ணத்தை முன்னெடுத்து செல்ல முடிவெடுத்தேன்" என்று கூறும் நீரு அவரின் கணவர் இதற்கு முழு அதரவு தந்ததாக கூறுகிறார்.

அன்மோல் உப்கார் (Anmol Uphar)

எட்டு மாதம் முன்பு தொடங்கிய இந்நிறுவனத்திற்கு மிகுந்த வரவேற்பு உள்ளது என்கிறார்.

வாடிக்கையாளரிடமிருந்து ஆர்டர் வந்ததும் தகுந்த ரூபாய் நோட்டுகளை கண்டெடுப்பது மிகவும் சுவாரசியமானது என்கிறார். வழக்கமாக நீரு அவரின் நட்பு வட்டத்திலிருந்து தேவையான ரூபாய் நோட்டுகளை கண்டெடுத்துவிடுவாராம். "ஒரு வார அவகாசம் போதும்" என்கிறார்.

சில சமயம் தேவையான எண்கள் உள்ள நோட்டுகளை கண்டெடுப்பது சவால் தான். 

"ஒவ்வொரு நாளும் சவால்கள் நிறைந்தது. தேவையான எண்கள் கொண்ட நோட்டுகளை தேடுவது மட்டுமின்றி, அது கிடைக்காமல் போனால் வாடிக்கையாளரிடம் இல்லை என்று சொல்வது மிகவும் கடினமாக இருக்கும்" என்கிறார்.

வாடிக்கையாளர் விரும்பும் படியான டிசைனில் கொடுப்பது மற்றொரு சவால். இதை எதிர்கொள்ள மேலும் சில டிசைனர்களை சேர்க்கவுள்ளார்.

சந்தைபடுத்தும் பொறுப்பையும் நீருவே கவனிக்கிறார். டெல்லியில் உள்ள மால்களில் ஸ்டால் அமைத்து சந்தைபடுத்தும் முயற்சி அவருக்கு வாடிக்கையாளர்களை பெற்றுத்தந்துள்ளது.

பெரும்பாலான ஆர்டர்கள் டெல்லியிலுருந்து வந்தாலும், சென்னையிலும் அவருக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

பெண் தொழில்முனைவராக...

"இந்த வயதில் தொழில் முனைவது பற்றி நிறைய பேர் என்னிடம் வினவினாலும் எனது கணவர் எனக்கு ஊக்கம் அளிக்கிறார்."என்கிறார் நீரு.

பல பொறுப்புகளை சமாளிப்பது பெண் தொழில் முனைவர்களுக்கு சவால் தான் எனக் கூறுகிறார் நீரு.

உந்தும் சக்தி

அவர் குடும்பம் அவருக்கும் அளிக்கும் ஊக்கமே அவரை உந்தி செலுத்துவதாக கூறுகிறார். அதே போல் வாடிக்கையாளரிடமிருந்து வரும் பாராட்டுதலும் ஊகம்மளிப்பதாக கூறுகிறார். 

"ஒவ்வொரு முறையும் கிடைக்கும் பாராட்டுதலும், வாடிக்கையாளர் மீண்டும் ஆர்டர் அளிப்பதும் உற்சாகம் அளிக்கிறது. இது திருப்தி தருவதாக இருக்கிறது" என்கிறார்.

தன் கணவரை போன்றே அவரும் கடின உழைப்பின் மேல் நம்பிக்கை இருப்பதாக கூறுகிறார்.

ஆக்கம் : தன்வி துபே | தமிழில் : சந்தியா ராஜு