உடற்பயிற்சி சைக்கிளில் மின் உற்பத்தி: இந்திய அமெரிக்க கோடீஸ்வரர் அசத்தல்

1

தன் தேவைகளுக்கு அதிகமாகவே தன்னிடம் பணம் இருப்பதாகச் சொல்லும் இந்திய அமெரிக்க செல்வந்தர் மனோஜ் பார்கவா, தனது 4 பில்லியன் டாலர்கள் சொத்துகளில் 99%-ஐ உலக மக்கள் பலனடையக் கூடிய திட்டங்களுக்காக உயில் எழுதி வைத்துள்ளார். உலகம் இன்று எதிர்கொண்டுள்ள மின்சாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதே தனது வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டுள்ளார்.

மின் பற்றாக்குறை உள்ள வீடுகளின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இவரும், இவரது கண்டுபிடிப்பாளர் குழுவும் 'நிலை வாகனம்' (சைக்கிள் அல்லது பைக் போன்றது) ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த சைக்கிளை உடற்பயிற்சி செய்வதற்கும் மின் உற்பத்திக்கும் பயன்படுத்தலாம். ஒரு மணி நேரம் இந்த சைக்கிளை இயக்கி உடற்பயிற்சி செய்தால், ஒரு வீட்டுக்கு 24 மணி நேரத்துக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியுமாம். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு இவர் அளித்த பேட்டியில், இந்தியாவில் உள்ள மின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, முதற்கட்டமாக 10,000 வாகனங்களை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக மனோஜ் கூறியிருக்கிறார்.

இந்த உடற்பயிற்சி சைக்கிள் ஒன்றின் விலை மதிப்பு ரூ.12,000-ல் இருந்து ரூ.15,000 வரை இருக்கலாம் என்றும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கிடைக்கும் என்றும் சொல்கிறார் மனோஜ் பார்கவா.

இந்தியாவில் இருந்து தன்னை அழைத்துக்கொண்டு தன் பெற்றோர் அமெரிக்காவில் குடிபெயர்ந்தபோது மனோஜுக்கு வயது 14. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஓரே ஆண்டுடன் படிப்பை நிறுத்திவிட்டார். கல்லூரிப் படிப்பில் நாட்டம் இல்லாத அவர், இந்திய ஆசிரமங்களில் 12 ஆண்டுகள் வலம் வந்தார். அமெரிக்காவில் மிகவும் பிரபலமான 'லிவிங் எஷன்ஷியல்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சொந்தக்காரரான இவர் கோடீஸ்வர தொழிலதிபர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆனார். இவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்பது துல்லியமாக தெரியவில்லை என வாய்ப்பிளக்க வைக்கும் இவரது வாழ்க்கை வரலாற்றை நேஷனல் ஜியாகரபிக் விரிவாகப் பதிவு செய்துள்ளது.

பெரிய பிரச்சினைகளுக்கு எளிய தீர்வு காண்பதில் நம்பிக்கைக் கொண்டுள்ள இவரும், இவரது அறிவியல் அறிஞர்கள் குழுவும் இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, தற்போது உப்புத் தண்ணீரைக் குடிநீராக்குதல், உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குதல், எல்லையில்லா தூய்மையான புவிவெப்ப மின்சார உற்பத்தி முதலான செயல்திட்டங்களில் முனைப்பு காட்டப்பட்டு வருகிறது. ஒரு மணி நேரத்தில் 1,000 கேலன்கள் அளவில், எந்த வகையான தண்ணீரையும் குடிநீராக மாற்றும் தொழில்நுட்பத்தைக் கண்டறியும் பணியும் தொடர்கிறது. நம் உலகில் வறட்சியை எதிர்கொள்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்கிறார்கள்.

ஆக்கம்: திங்க் சேஞ்ச் இந்தியா குழு