வால்மார்ட் கைக்கு மாறும் ஃபிளிப்கார்ட்; உறுதி செய்தது சாப்ட்பேங்க்!

0

இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட் அமெரிக்க சில்லறை வர்த்தக ஜாம்பவான் ’வால்மார்ட்’ நிறுவனத்தின் கைக்கு மாறுகிறது. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வால்மார்ட் வாங்குவது தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக முக்கிய முதலீட்டு நிறுவனமான சாப்ட்பேங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய இளம் பொறியியல் பட்டதாரிகள் சச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சல் இணைந்து மின்வணிக நிறுவனமான ஃபிளிப்கார்ட்டை துவக்கினர். துவக்கத்தில் இணையம் மூலம் புத்தகங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இருந்த ஃபிளிப்கார்ட் மெல்ல மற்ற பிரிவுகளிலும் விரிவாக்கம் செய்து, மாபெரும் இ-காமர்ஸ் நிறுவனமாக வளர்ந்தது.

ஃபிளிப்கார்ட் வளர்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் நிறுவனத்தில் முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்தன. அமெரிக்காவின் முதலீட்டு நிறுவனமான டைகர் குலோபல் உள்ளிட்ட நிறுவனம் ஃபிளிப்கார்ட்டில் முதலீடு செய்து அதற்கு ஈடான பங்குகளை பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு முதலீடு உலகின் ஜாம்பவனான ஜப்பானின் சாப்ட் பேங்க் நிறுவனம், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் கணிசமான தொகையை முதலீடு செய்து 20 சதவீத பங்குகளை பெற்றது.

ஃபிளிப்கார்ட் அதிரடி விற்பனை, தள்ளுபடி உத்திகள் மூலம் வேகமான வளர்ச்சியை பெற்று வந்த நிலையில், இந்திய மின்வணிகச்சந்தையில் அமெரிக்க மின்வணிக ஜாம்பவானான அமேசான் நுழைந்தது இச்சந்தையில் கடும் போட்டியை உண்டாக்கியது.

இதனிடையே, ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை வாங்க அமெரிக்க சில்லறை வர்த்தக ஜாம்பவான் வால்மார்ட் முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இதன் பிறகு போட்டி நிறுவனமான அமேசானும் இதற்கான முயற்சியில் இருப்பதாக செய்தி வெளியானது.

கடந்த சில மாதங்களாக இது தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், வால்மார்ட் நிறுவனம் ஃபிளிப்கார்ட்டை நிறுவனத்தை வாங்குவது உறுதியானதாக பேசப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஃபிளிப்கார்ட் நிறுவனம் வால்மார்ட் வசம் மாறுவது உறுதியாகியுள்ளது. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் 20 சதவீத பங்குகளை வைத்துள்ள சாப்ட்பேங் முதலீட்டு நிறுவனம், இதை உறுதிப்படுத்தியுள்ளது. ஃபிளிப்கார்ட்- வால்மார்ட் பங்கு விற்பனை தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக சாப்ட்பேங்க் தலைமை அதிகாரி மசாயோஷி சென் அறிவித்துள்ளார்.

சாப்ட்பேங்க் வசம் உள்ள பங்குகளும் முழுமையாக விற்கப்பட உள்ளது. அந்நிறுவனம் 4 பில்லியன் டாலர் பெற்று வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. துவக்கத்தில் சாப்ட்பேங்க் நிறுவனம் வால்மார்ட் விற்பனையில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் பின்னர் மாறியதாக தெரிகிறது.

ஃபிளிப்கார்ட் சந்தை மூலதன மதிப்பு 21 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட்டின் இணை நிறுவனரான சச்சின் பன்சல் தனது 5.5 சதவீத பங்குகளை விற்றுவிட்டு வெளியேறுவார் என கூறப்படுகிறது.

வால்மார்ட் நிறுவனம் கிட்டத்தட்ட 70 சதவீத பங்குகளை வாங்கும் என எதிர்பார்க்கப்படுறது. இதன மூலம் ஃபிளிப்கார்ட் அதன் வசமாகும். இந்த விற்பனை தொடர்பான முறையான அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய இ-காமர்ஸ் துறையில் இந்த அறிவிப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் அமேசான் மற்றும் வால்மார்ட் இடையிலான போட்டியை இது உண்டாக்கும் என கருதப்படுகிறது.

வால்மார்ட் நிறுவனம் ஃபிளிப்கார்ட்டில் தொடர்ந்து முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமேசான் நிறுவனமும் இந்திய செயல்பாடுகளில் அதிக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இது போட்டியை மேலும் கடுமையாக்கும் என கருதப்படுகிறது.

இதனிடையே வால்மார்ட்டின் இந்த நடவடிக்கை, சிறு வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் அஞ்சப்படுகிறது. வால்மார்ட் குறைந்த விலை உத்தியை அதிரடியாக கடைபிடிக்கும் நிறுவனமாக அறியப்படுகிறது. இதன் காரணமாக அது விற்பனை நிறுவனங்களை தனது விதிமுறைகளுக்கு ஏற்ப கசக்கி பிழியும் பழக்கம் கொண்டதாகவும் அஞ்சப்படுகிறது.

இந்திய சந்தை மீது ஆர்வம் கொண்டிருந்த வால்மார்ட் தற்போது ஃபிளிப்கார்ட் நிறுவனம் மூலம் தீர்மானமாக அடியெடுத்து வைத்துள்ளது. அமேசான் நிறுவனம் இதை எதிர்கொள்ள தயாராக இருக்க, இந்திய மின்வணிகத்துறையில் வரும் ஆண்டுகளில் பெரும் மாற்றம் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.