கேரள பழங்குடி குடியேற்ற இடத்தில் 500 கழிப்பறைகள் கட்ட தனது சம்பளத்தை செலவிட்ட வன அதிகாரி!

1

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தின் குட்டம்புழா காட்டில் உள்ள பழங்குடி குடியேற்றங்களில் திறந்தவெளி கழிப்பிடம் என்பதே இல்லாமல் போய்விட்டது. 2016-ம் ஆண்டு கேரள மாநிலம் நாட்டின் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மூன்றாவது மாநிலமாக அறிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரியான 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டது குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்கிறார்.

இந்தப் பழங்குடிப் பகுதியில் வெற்றிகரமாக கழிப்பறைகள் உருவானதன் பின்னணியில் தனி நபராக செயல்பட்டவர் பி ஜி சுதா. 2016-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி இவர் கேரள முதலமைச்சரின் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதிக்கான பிரச்சாரத்திற்காக வழங்கப்படும் விருதினை வென்றார். மேலும் 2006-ம் ஆண்டு சிறந்த வன காவலர் விருதினையும் வென்றுள்ளார்.

ஒரு வன அதிகாரியாக செயல்பட்டு மாநிலத்தை புதிய பாதைக்கு இட்டுச் சென்ற சுதாவின் பயணம் எங்கும் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பங்களிக்கவேண்டும் என்கிற அவரது நோக்கமே இத்தகைய முயற்சியை மேற்கொள்ளக் காரணம்.

திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவது எளிதான தேர்வு என்றபோதும் சுகாதாரமும் பெண்களின் பாதுகாப்பும் சிக்கலாகிறது. பழங்குடிப் பகுதிகளில் போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இத்தகைய எளிதான வாய்ப்பையே பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றார் சுதா. 

இந்தப் பகுதிகளில் சாலைகள், போக்குவரத்து, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. எனவே கழிப்பறையை கட்டுவதே கற்பனைக்கும் எட்டாத விஷயமாக இருந்து வந்தது. இதையும் மீறி ஒருவர் இது குறித்து சிந்தித்தாலும் இந்தப் பகுதியின் நிலப்பரப்பானது கட்டுமானப் பொருட்களை எடுத்து வருவதைக் கடினமாக்குகிறது,

இந்தக் கழிப்பறைகளை கட்டுவதற்கான கற்கள் வாங்குவதற்கு உள்ளூர் மக்கள் உதவ முன்வந்தனர். இந்தக் கழிப்பறைகளைக் கட்டுவதில் சந்தித்த சிக்கல்கள் குறித்து அவர் என்டிடிவி-க்கு தெரிவிக்கையில்,

”கட்டுமானத்தைக் காட்டிலும் அதற்கான பொருட்களைக் கொண்டு வந்து சேர்ப்பதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்தக் காரணத்தினாலேயே இந்தப் பணியை மேற்கொள்வதற்கு அனைவரும் தயக்கம் காட்டினர். இந்தப் பழங்குடி குடியிருப்புகள் தொலைதூரத்தில் இருப்பதால் இந்தப் பகுதியைச் சென்றடைய சரியான சாலைகள் இல்லை. இங்குள்ள சில குடியிருப்புகளைச் சென்றடைய வேறு வழி ஏதும் இல்லாததால் 15 முதல் 20 கிலோமீட்டர் வரை நடந்து சென்றடைய வேண்டியிருக்கும்.”

இந்த பழங்குடிப் பகுதிகளில் பல்வேறு வன விலங்குகளும் காட்டு யானை போன்ற அச்சுறுத்தும் விலங்குகளும் காணப்படும். வன அதிகாரி குறிப்பிடுகையில்,

”இதனால் நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் சிக்கல்களின்றி நடந்து முடிவதை உறுதிசெய்ய மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டிய அவசியம் ஏற்பட்டது,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL