வாழ்க்கை அனுபவங்களின் தாக்கமே என் வடிவமைப்பிற்கு உத்வேகம் அளிக்கிறது: பல்லவி ஃபோலே

0

"தொழிலதிபர்களின் வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளும் சவால்கள் நிறைந்தன. தினசரி சவால்களை சரியாக எதிர் கொள்வதே, பின்னாட்களில் பெரிய சவால்களை எதிர்க்கொள்ள வழி வகுக்கும்" என்கிறார் நகை அமைப்பு நிறுவனர், பல்லவி ஃபோலே .

பெங்களுருவில் அமைந்துள்ள அவரின் வடிவமைப்பு ஸ்டுடியோவில் தனது சகாக்களுடன் இணைந்து அவர்களுடைய வடிவமைப்பு திறனுக்கு செயல் வடிவம் கொடுக்கிறார். வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்தல், பன்னாட்டு வணிக திட்டத்தை கையாளுதல் தவிர தேசிய மற்றும் பன்னாட்டு ப்ராண்ட்களுக்கும் நகை வடிவமைத்து கொடுக்கிறார்கள்.

வேலை பளு இல்லாத நேரத்தில் NIFT , GIA போன்ற வடிவமைப்பு கல்லூரிகளில் நடுவர் குழுவில் அல்லது பாடம் கற்பிப்பதில் பல்லவி ஈடுபடுகிறார். பன்னாட்டு வடிவமைப்பு கல்லூரிகளுக்கு பாடத்திட்டத்தையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். " எந்த ஒரு வர்த்தகமானாலும் வடிவமைப்பு மிக முக்கியமாகும். நான் ஏற்படுத்தியுள்ள பாடத்திட்டத்தில் கூட, சிந்திக்கும் திறனை முன்னிலை படுத்தி, அதை ஊக்குவிக்கும் விதமாகவே முயற்சித்திருக்கிறேன்"

குழந்தை பருவம் முதல்...

நான்கு வயது சிறுமியாக இருந்தபோதே பல்லவிக்கு வரைதலில் பேரார்வம் இருந்தது. நிறைய போட்டிகளிலும் பரிசு வென்றுள்ளார். அவருடைய சிறப்பான நினைவாக அவர் கருதுவது "தனது தந்தை வழி பாட்டி, மூன்றாம் நிலை புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், தன் பள்ளிக்கு வந்து, அவர் என் சார்பில் விருதினை பெற்றது பெரும் ஊக்கத்தை தந்ததாகவும், இந்நாள் வரை அது பசுமரத்தாணி போல் தன் நினைவில் நின்று விட்டது" என்கிறார் பல்லவி உணர்ச்சி பொங்க .

நைனிடாலில் ஷெர்வூட் கல்லூரியில் பயிலும் போது தான் கலை மீது தனக்குள் இருந்த ஆர்வத்தை அறிந்து கொண்டார். "மலைகளின் நடுவே நடை மேற்கொள்ளும் சமயங்களில், இயற்கையை ரசித்து படம் வரைய முனைவேன். இயற்கை சூழ்நிலை எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தது". நிஃப்ட் (NIFT) கல்லூரியில் (1997-2000) துணை வடிவமைப்பில் தேர்ச்சி பெற்றதும் தனிஷ்க் நிறுவனத்தில் பத்து வருடம் பணி புரிந்தார்.

வடிவமைப்புக்கு உந்துதல்...

அனுபவமே அவரின் வேலைக்கான பிரதான உத்வேகம் என கருதுகிறார் பல்லவி. 

"வடிவமைப்பு என்பது உந்துதலாகவும் அதுவே நம்மின் வெளிப்பாடக இருப்பதாக என் அனுபவம் மூலமாக உணர்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஆதியும் அந்தமும் அதுவே."

புது வடிவமைப்பு என்பது முற்றிலும் புதிதான களத்தில் இறங்குவதற்கு சமம். "ஒரு புது உலகிற்கு சென்று, ஆத்மார்த்தமான அனுபவத்தின் மூலம் உருவாக்குவது. ஆதலால் என்னுடைய வேலைப்பாடுகள் அனைத்திலும் என்னுடைய அனுபவங்களின் சாராம்சம் இடம்பெற்றிருக்கும். பயணம் மேற்கொள்ளுவது, புதிய கலாச்சாரம் அறிவது, படிப்பது, இயற்கையை ரசிப்பது, கலை போன்ற செயல்களால் என்னுடைய வாழ்க்கை தரத்தை நான் மேம்படுத்திக் கொள்கிறேன். இதன் மூலம் என்னுடைய படைப்புகளை மேலும் மெருகேற்றுகிறேன்"

அவருடைய இந்த முயற்சி அவரின் படைப்புகளுக்கு எண்ணற்ற விருதுகளை அள்ளித் தந்துள்ளது. "சிறந்த துணை வடிவமைப்பு" என்ற பகுதியில் அவரின் "அமரா" என்ற படைப்புக்கு என்.ஐ.டி (NID) உலக வர்த்தக வடிவமைப்பு விருதை பெற்றுள்ளார். நவீன பெண்களின் விருப்பத்திற்கேற்ப மாம்பழத்தை மையக்கருத்தாக கொண்டு, நவீன வடிவமைப்பை மேற்கொண்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

ஆண் பெண் பாகுபாடு கொண்டு கலையை அடையாளப்படுத்த கூடாது என்கிறார் பல்லவி. "நம் வேலையில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டால் அற்புதங்கள் தானாக நிகழும். நான் முழு கவனத்துடன் செயல்பட்டதால் பணி புரிந்த அனைத்து நகரங்களில் எனக்கு மிகுந்த மரியாதை கிடைத்ததை கண்கூடாக பார்த்திருக்கிறேன். "

ஒர்லாண்டோவின் "ஒர்லாண்டினியின்" வேலைப்பாடுகள் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், தன்னுடைய பெரும்பாலான நேரத்தை அவருடைய வடிவமைப்பை முன்மாதிரியாக கொண்டு செயல்படுவதாக கூறுகிறார் பல்லவி.

பல்லவியின் உத்வேகம்...

பெண் தொழிலதிபர்கள் நிறைய சவால்களை எதிர் கொள்ளும் அதே சமயம் அவர்களுக்கு பல நன்மைகளும் உண்டு. எல்லாவற்றையும் கடந்து, நம் வேலையில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் தடைகளை உடைத்தெறிய முடியும் என்றும் எதிர்மறை திருப்பங்களை சாதகமாக திருப்பிக் கொள்ள முடியும் என்று தீர்க்கமாக நம்புகிறார் பல்லவி.

தன் வாழ்கையில் மூன்று முக்கிய கூற்றுகளை கடைப்பிடிக்கிறார்.

முதலாவதாக "இதுவும் கடந்து செல்லும்" என்ற நம்பிக்கை. அடுத்து ஒழுக்கம். தனது போர்டிங் பள்ளிக் காலம் ஒழுக்கத்தை கடைப் பிடிக்க கற்று கொடுத்தது என்கிறார். உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு பழக்கத்தை கடைப்பிடிக்கிறார். "எனது 63 வயது அப்பா இப்பொழுதும் தினமும் ஒரு மணி நேரம் ஓடுகிறார். அவர் மரத்தான் ஓட்டபந்தய வீரர். அவர் எனக்கு சொல்வதெல்லாம் "தினமும் நாம் கடைப்பிடிக்கும் ஒழுக்கச் செயல்கள், வாழ்கையில் எந்த வயதிலும் தொடர்ந்து எளிதாக கடைப்பிடிக்க வழி வகுக்கும், "அவர் எனக்கு ஒரு முன்மாதிரி. மூன்றாவதாக தன் குடும்பம் மற்றும் நண்பர்களின் அரவணைப்பு. "எனது கணவர் நீல் எனக்கு மிகப் பெரிய பலம். அவரின் பணிவு மற்றும் வேலைத்திறனை நான் மிகவும் ரசிப்பேன். என் மகள் நியா எப்பொழுதும் என்னுடைய ஸ்டுடியோவில் இருக்கவே விரும்புவார். வார விடுமுறையில் என்னுடன் இணைந்து பணியாற்றுவார்"

பல்லவியின் வேலையில் உள்ள ஈடுபாடு மற்றும் வடிவமைப்பில் உள்ள தீராத காதல் தான் அவரை எந்நேரமும் உத்வேகத்துடன் செயல்பட வைக்கிறது. பல்லவியுடனான காணொளி உரையாடலின் சில துளிகள் இதோ உங்கள் பார்வைக்கு...