20 கிராம பெண்களுக்கு ஊக்கத்தொகை திட்டம்: ‘ஸ்வயம் சிக்‌ஷான் பிரயோக்’ அறிமுகம்!

0

அண்மையில் நடந்து முடிந்த உன்னாத்தி குளோபல் பாரம் நிகழ்சியில், புனேவைச்சேர்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனமான ’ஸ்வயம் சிக்‌ஷான் பிரயோக்’, 20 கிராமப்புற பெண்களுக்கான ஊக்கத்தொகை (ஃபெலோஷிப்) திட்டத்தை அறிமுகம் செய்தது. பெண்கள் தங்கள் சமூகத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை செயல்படுத்த இந்த திட்டம் ஊக்கம் அளிக்கிறது.

இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் மகராஷ்டிராவின் வறட்சி மாவட்டங்களான ஆஸ்மனாபாத், சோல்னாபூர், லத்தூர் மற்றும் வாஷிம் ஆகிய பகுதிகளைச்சேர்ந்தவர்கள்.

உன்னாத்தி பெலோஷிப் பெற தேர்வு செய்யப்பட்ட பெண்கள், சிறப்பு விருந்திரன் பத்ம விபூஷன் டாக்டர்.ஆர்.மாஸ்லேகர் மற்றும் பிற விருந்தினர்களுன். 
உன்னாத்தி பெலோஷிப் பெற தேர்வு செய்யப்பட்ட பெண்கள், சிறப்பு விருந்திரன் பத்ம விபூஷன் டாக்டர்.ஆர்.மாஸ்லேகர் மற்றும் பிற விருந்தினர்களுன். 

இந்த திட்டம் பெண்களுக்கு ஓராண்டு கால நிதியுதவி அளிப்பதோடு, பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் பெண் தலைவர்களின் ஆதரவு ஆகியவற்றையும் அளிக்கும். இதன் கீழ் வழங்கப்படும் ஒரு லட்சம் நிதியில் ஆண்டு ஊக்கத்தொகையாக ரூ.60,000 வழங்கப்படும். ரூ.15,000 வழிகாட்டுதல் தொகையாகவும், ரூ25,000 சோதனைக்கான தொகையாகவும் அமையும். கிராமப்புற அளவில் பெண் தலைவர்கள் மத்தியில் இணைந்து கற்றலுக்கான மேடையை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. அறிமுக விழாவில், பத்ம விபூஷன் டாக்டர். ஆர்.மாஸ்லேகர் பேசும் போது, 

”முன் எப்போதும் இல்லாத வகையில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கக் கூடியதாக டிஜிட்டல் தொழில்நுட்பம் இருக்கிறது. கிராமப்புற பெண்கள் கூட, மொபைல் போன் போன்ற எங்கும் நிறைந்துள்ள நுட்பம் மூலம் தகவல் தொடர்பில் ஈடுபட அறிந்திருக்கின்றனர்,” என்று குறிப்பிட்டார்.

பெண்களை தொழில்முனைவில் ஈடுபட ஊக்குவிப்பது பொருளாதார சுதந்திரம் மற்றும் தன்னம்பிக்கையை அளிக்கும் என்றும் கூறியவர், சிக்கல்கள் மற்றும் லட்சியம் ஆகிய இரண்டும் வெற்றிக்கான சரியான கலவை என தெரிவித்தார். ஸ்வயம் சிக்‌ஷான் பிரயாக் நிறுவனர் பிரேமா கோபாலன், 

“உன்னாதி உதவித்தொகை திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 20 பெண் தலைவர்கள் அனைவரும், கிராமப்புற அளவில் வாழ்ந்து கொண்டு, அங்கே பணியாற்றியபடி, தங்கள் வாழ்க்கையை மட்டும் அல்லாமல் மொத்த சமூகத்தையும் மாற்றக்கூடிய வகையில், சொந்த பிரச்சனைகள் மற்றும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு செயல்படும், ஒவ்வொரு பெண்களின் பயணத்தை பிரதிபலிக்கின்றனர் என தெரிவித்தார்.

அவர்கள் கனவுகளுக்கு நிதி உதவி அளித்து வழிகாட்டி உதவ இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இது ஒரு ஆரம்பம் தான். எங்களுக்கு மேலும் ஆதரவு கிடைக்கும் போது, மேலும் பல பெண்கள் தங்கள் உள் ஆற்றலை கண்டறிந்து (ஸ்வயம்) பருவநிலை மாற்றம், பெண் கல்வி, மற்றும் சுகாதாரம் போன்ற கடினமான சவால்களை எதிர்கொள்வதன் மூலம் தங்கள் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பரிசோதனையில் (பிரயோக்) ஈடுபட உதவ முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

நடிகர்கள் மிருனால் குல்கர்னி, சதியா சித்திக், கிளினிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூத்த தலைவர் பிரதீப் நாயக், எழுத்தாளர் யசோதரா கத்கர், விவசாயத்துறை திட்ட துணைத்தலவர் சுபாஷ் சோலே, மஹாகிரேப்ஸ் செயல் இயக்குனர் சோபன் காஞ்சன், எஸ்.எஸ்.பி வாரிய உறுப்பினர் வி.சி.நடராஜன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

ஸ்வயம் சிக்‌ஷான் பிரயோக், பின் தங்கிய சமூகத்தில் உள்ள பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடும் வளர்ச்சியை மையமாகக் கொண்ட அமைப்பாகும். ஐந்து பெண்களுக்கு செயல் நிதியாக ரூ..25 லட்சம் வரை வழங்குகிறது.

மகாராஷ்டிரா, குஜராத், அசாம், பிகார், ஒடிஷா ஆகிய மாநிலங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட சமூகத்தினர் மத்தியில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றம், உணவு பாதுகாப்பு, தூய்மை எரிபொருள், சுகாதாரம், பெண் தொழில்முனைவு மற்றும் தலைமை ஆகிய பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு யூனிசெப், யு.ன்.டி.பி, உலக வங்கி, ஏபிபிஐ, சிட்பி மற்றும், நபார்டு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

 ஆங்கில கட்டுரையாளர்: ஸ்ருதி மோகன் | தமிழில்: சைபர்சிம்மன்